புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எழுதிச் செல்லும் கரங்கள் 6


எழுதிச் செல்லும் கரங்கள்

6 அத்யந்தத்தின் ஞாபகங்கள்

கவிதை பற்றிய உரையாடல்கள் ஏன் இத்தனை இருண்டதாக இருக்கின்றன.?ஏன் கவிதைகளைப் பற்றிய பேச்சு வெளிப்படையானதாக இல்லை?கவிதையைப் பயிற்றுவிக்க முடியாதா.?பூக்களைச் சேகரித்து நீரால் அலம்பி மெலிதாக உலர்த்தி நார்கொண்டு அவற்றை மாலையாய்க் கோர்ப்பதன் பின்னே இருக்கக் கூடிய முறைமையை தேர்ந்த ஒருவர் புதிய இன்னொருவருக்குப் பயிற்றுவிக்கிறாற் போல கவிதை எழுதுவதைப் பயிற்றுவிக்க முடியுமா?சம உரிமைகளின் கீழே கற்றறிந்து தேர்கிற கலைகளின் வரிசையில் கவிதை எழுதுவது என்பது வராதா.?எனக்குள் உறங்கிக் கிடக்கும் கவிஞன் என்று எல்லோருமே சொல்லிக் கொள்ள முடியாதா?தனித்த ஆளுமை விகசிப்பா கவிதை?

மரபுக் கவிதை கோலோச்சிய காலம் என்று சொல்ல வந்தாலே அடிக்கிறாற் போல் பார்க்கிறவர்களும் உண்டென்றறிக.மதுரையில் ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தில் சில விழாக்களில் கலந்து கொள்ள நேரிட்டது.ஒரு ஹைகூ நூல் வெளியீட்டில் பேசினேன்.என் நம்பகத்துக்கு எதிரான எதுவும் இலக்கியமில்லை என்கிற பிடிவாதம் தேவையற்றது என்று பட்டதைச் சொன்னேன்.சிந்தித்தால் அது சரி என்றே தோன்றுகிறது.ஹைகூ எழுதுவதற்கு அடிமையாகவே ஆகிப்போன சிலபலரை எனக்குத் தெரியும்.சுஜாதா ஹைகூவை எளிமையாக தமிழ் சமூகத்தின் முன்பாக விவரித்தார்.அதற்கு முன்பை விட அவர் எடுத்தெழுதிய பிற்பாடு தமிழில் அதனை எழுதிப் பார்க்கிற ஆர்வம் பன்மடங்கு பெருகிற்று.சென்றியூ போன்ற பிற வடிவங்களும் இங்கே வந்தன.எல்லாமுமே மறுபடி ஹைகூ என்ற பெருந் தலைப்பின் கீழாக அணிவகுக்கப் பட்டன.

பாரதி தான் தமிழில் ஹைகூவை முயன்றார் என்பது சுவையான ஒரு வாதம்.தமிழின் அழகை நோக்குவதற்கான நல் ஆடிகளில் ஒன்றென இதனைப் புரிந்து கொள்ள முற்படுகிறேன்.வேறெதோ ஒரு அன்னிய மொழியின் கவிதாவடிவம் ஒன்று அதன் மைய உப அற்ப விதிகள் அத்தனைக்கும் வணக்கப் பிறழ்வேதுமின்றித் தமிழ் மொழியில் இத்தனை லட்சக்கணக்கில் எழுதப்படுகிறதென்றால் எங்கோ ஓரிடத்தின் தெய்வலட்சணம் இன்னுமோர் இடத்தில் தென்பட்டாற் போன்ற அரியதோர் மகிழ்கணமன்றி வேறென்ன?தமிழில் பல ஹைகூ புத்தகங்கள் வெளியாகி உள்ளன.இன்னமும் ஹைகூ என்பதன் மீதான புரிதலில் பலவகை ஏற்ற இறக்கங்க ளுடனேயே அவற்றை முயன்று கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது.வாழ்க ஹைகூ.

புதிய புத்தகங்களைக் கடந்து செல்வதென்பது புதிரான ஒன்று.யாரையோ தேடிக் கொண்டு ரங்கநாதன் தெருவில் அவசர நடைகளோடு பரபரக்கையில் கண்ணில் தென்படுகிற காட்சித் தோரணங்கள் தான் எத்தனை?அவற்றினின்றும் மனதுக்குள் தன்னிஷ்டத்துக்கு ஒட்டிக் கொள்கிற உப சித்திரத் தீற்றல்களின் உள்ளடக்கம் போன்றவை புதிய கவிதைகள் எதிர்பாராத கணங்களில் நமக்குள் ஏற்படுத்தித் தருகிற அனுபவம்.

தேனியில் நடைபெற்ற ஒரு விழாவில் கைவரப் பெற்ற பல புத்தகங்களில் பொள்ளாச்சி இலக்கியவட்டம் வெளியீடாக ஜெ நிஷாந்தினி எழுதிய ஆரஞ்சு வண்ணங்களாக நீளும் பாதை என்ற புத்தகம் வடிவத்தால் முதலில் ஈர்த்தது.வாசித்துக் கொண்டே வருகையில் இந்த வரிகளை எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்ல முடியவில்லை.ஒரு கவிதையின் அபூர்வம்  திட்டமிடவியலாத எதிர்பாராப் பொழுதில் நம்மைச் சுழன்றடிப்பது.இந்தக் கவிதையின் இவ்வரிகள் அப்படியான ட்விஸ்டிங்கை அனாயாசமாகச் செய்கிறது.
இதன் தலைப்பு

திகைப்பூட்டும் முகங்கள்.

ஏதுமற்றவர்கள் பெருந்தாகத்துடன்
கைகளை விரித்து
விரித்து நிற்க
விரல்களிலிருந்து
ஆயிரம் பறவைகள்
பசியுடன் பறக்கின்றன.

உலகை மாற்றிய புத்தகங்கள் என்று ஒரு வஸ்து.ரொம்ப நாட்களாகப் பல ரகசிய கனவான்கள் முணுமுணுத்துச் சொன்ன புத்தகம் என்பதால் தாகத்துடனான தேடலோடு அதற்காகக் காத்திருந்தேன்.சமீபத்தில் சொல்லி வைத்த ஸோர்ஸ்களில் ஒன்று அந்தப் பிரதியை கைகளில் தர கரங்களில் கனியை ஏந்தும் வன மந்தி போலாகி அதனை வாசித்தேன்.ராபர்ட் பி டவுன்ஸ் எழுதிய இதிலிருந்து சாம்பிளுக்கு ஒரு விள்ளல் சர் ஐசக் ந்யூட்டன் எழுதிய ப்ரின்ஸிபியா மாதமாடிகா எனும் லத்தீன் மொழி நூல் பற்றிய கட்டுரையில் ந்யூட்டனுக்கு ஐன்ஸ்டீன் வழங்கிய பாராட்டுரை பற்றி இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

"இயற்கையானது,அவருக்குக் கண்முன் திறந்து காட்சியளித்த ஒரு நூலாகத் திகழ்ந்தது.சிரமமின்றி அதை அவர் படித்தார். பரிசோதகர்,சித்தாந்தி,தொழில்துறை நிபுணர் தன்மையெல்லாம் அவரிடம் ஒன்றியிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக,அவருடைய விளக்கங்களில் கலைஞனின் குரல் பேசியது"
என்கிறார் ஐன்ஸ்டீன்.இதன் இறுதி வரியின் அர்த்தம் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு வெவ்வேறு முகடுகளுக்கு இட்டுச் செல்வது தான் மொழியின் வசீகரம்.

அமெரிக்க நிகழ்த்து கவியான கர்யானா மெக்ளின் www.karynamcglynn.com கவிதையைப் பயிற்றுவிக்கிற ஆசிரியையாகப் பணியாற்றுகிற கொடுப்பினை பெற்ற கவிதாயினி.மற்றவை கூகுளில் காண்க அல்லாவிடில் அவரது வலைமனையில் நோக்குக.அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான 1994 இங்கே தமிழில் வழங்கப்படுகிறது.

I Have to Go Back to 1994 and Kill a Girl

Poem by Karyna McGlynn


It's no wonder I'm always tired with all these tract houses
It's night & cold
on my belly in the undeveloped field now
I have to bury her
clothing inside a black garbage bag in plot D
police cars roll past but continue down the treeless parkway
even after shining
their lights on me in my freshman sundress
I can only assume
they don't see the significance of my presence
but I must say 1994 is a simpler time-not everyone is suspect
I crawl up next to
my old house & look through a lit window
my mother reads
a book in bed I want to knock on the glass, there's something
I need to tell her

1994க்குத் திரும்பிச் சென்று நான் ஒரு பெண்ணைக் கொல்ல வேண்டும்
கரைனா மெக்ளின்
தமிழில் தென்றல் சிவக்குமார்

இந்தத் தொகுப்பு வீடுகள் எனக்கு எப்போதும்
சலிப்பைத் தருவதில் அதிசயம் ஒன்றுமில்லை
குளிரும் இவ்விரவு
பண்படுத்தப்படாத இந்நிலத்தில் வயிறு அழுந்தக் கவிழ்ந்து
நான் அவளைப் புதைக்க வேண்டும்
உடைகள் டி ப்ளாக்கின் கருநிற நெகிழிப்பையில் இருக்கின்றன
புதியவர்களுக்கான வேனிற்கால உடையிலிருக்கும் என்மேல்
தங்கள் விளக்குகள் ஒளிர்ந்தபின்னும்
கடந்து செல்லும் காவல் வாகனங்கள்
மரங்களற்ற வாகன நிறுத்துமிடத்துக்கு விரைகின்றன
என் இருப்பு அவர்களுக்குப் பொருட்படுத்தத் தக்கதாயில்லை
என்று மட்டும் நான் கணிக்கிறேன்
ஆனாலும் 1994 எளிய காலமாகத்தான் இருக்கிறது
எல்லாரையும் சந்தேகிப்பதில்லை
என்பதைச் சொல்லத்தான் வேண்டும்
என் பழைய வீட்டின் அருகில்
ஊர்ந்து சென்று வெளிச்சமிருக்கும் சாளரத்தின் வழியே பார்க்கிறேன்
என் அம்மா ஒரு புத்தகத்தைப்
படுக்கையில் வாசித்துக் கொண்டிருக்கிறாள்
நான் அந்தக் கண்ணாடியைத் தட்ட விரும்புகிறேன்.
அவளிடம் சொல்ல ஒன்று இருக்கிறது.

இக்கவிதை முற்றுப்பெறுகையில் ஒரு சின்ன திறப்பை வாசிக்கிறவர்களின் அகத்தினுள் ஆழப் பதிப்பிக்கிறது.அந்தத் திறப்பைப் பின் தொடர்கிறவர்கள் கடக்க வாய்க்கிற மௌனத்தின் பின்னதான நீட்சி கட்டுப்பாடற்ற கவிதாவெளியில் அலைவது அனுபவசவுகரியம்.

கவிதை என்பதை சட்ட திட்டங்களுக்குள் அடக்கி வைக்க முயல்வதும் அது மீறித் திமிறிக் கொண்டு விடுபடுவதும் பின்னதான விடுதலை வெளியெங்கும் தன்விருப்பத்துக்கு கவிதையின் சிறகுகள் அலைவதும் மீண்டும் மீண்டும் இந்த இருவேறு முனைகளிடையிலான பரிவர்த்தனை நடந்து கொண்டே இருப்பதும் மொழியின் தனித்த குணாம்சங்களில் ஒன்று.மேலும் கவிதை என்பது சொல்வழி முரண்களுக்கு அப்பால் காணக்கிடைக்கிற சின்னஞ்சிறிய ஒளித்தெறல்.அது முழுவதுமாக அனுபவம் சார்ந்த நம்பகமாக விரியவல்லது.மாறாக கணித சூத்திரங்களைப் பிரார்த்தித்தவாறே ஒற்றை முடிவை சென்றடைகிற வழிபாடல்ல கவிதை.அங்கே எதுவும் நிகழக் கூடும்.ஒரு வாக்கியத்தின் பாதியில் வெடித்துச் சிதறி என்கிற இரண்டு சொற்களுக்குள்ளாக பிரபஞ்ச பேரண்டம் எல்லாமே வெடித்துச் சிதறிய பிறகு  மறுபடியும் பூர்ணமாய் மலர்ந்துகொள்கிறது.என்ன ஒன்று இதை நிறுவவும் முடியாது காணச் செய்வதும் ஆகாது.மாறாக இதனை சொல்வழி வாசித்துக் கடக்கையில் பற்றிக் கொள்கிற எல்லார்க்கும் சத்தியத்தின் மீவருகையாகவே இது நிகழ்கிறது என்பது தான் மொழியின் ஆச்சர்யம்.எல்லாம் வல்லது மொழி.

அனார் நான் வாசித்த கவிஞர்களில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிற ஒருவர்.இவரது சமீபத்தியக் கவிதைகள் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜின்னின் இரு தோகை என்ற தலைப்பில் வந்திருக்கிறது.எண்ணிக்கையில் குறைவான கவிதைகளே கொண்டிருந்தாலும் கவிதைகளின் வீர்யத்தாலும் அவை அழைத்துச் சென்று ஆட்படுத்துகிற அனுபவவெளியின் ஒளிர்விலகல்களாலும் முக்கியமான தொகுதியாகிறது.அனாரின் பலம் சொல்ல வருவதை மிக உறுதியாக சொல்ல முனைகிறார்.மேலும் அனாரின் கவிதைப் பொருட்கள் அலாதியானவையாக இருக்கின்றன. இயல்பின் சொல் மலர்களை எடுப்பதிலும் கோர்ப்பதிலும் அனாயாசம் காட்டுகிற அனார் அவற்றின் மீது பரபரப்பேதுமின்றிக் கவிதை செய்வதையே விரும்புகிறார்.இன்னும் சொல்வதானால் ஒருவகையில் தன் சொந்த மொழியின் அருகாமையும் ஆன்ம உறவாடலும் கைவரப் பெற்ற அனார் அனிச்சையாகவே தன் கவிதை நிகழ்ந்து நிறைவதை எப்போதும் உறுதி செய்கிறார்.ஒரு சொல்லை அதன் பகுதியைக் கூடத் தீர்மானிப்பதோ நிர்ப்பந்திப்பதோ இல்லாமல் மிக எளிமையான அதே நேரத்தில் தன்னியல்பின் பெருக்கத்தில் வந்து நிறைகின்றன அனாரின் கவிதைகள்.மேலோட்டம் என்று கடக்கவே முடியாத ஆழ்கவனப் பார்வையை ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய் எதிர் நோக்குகின்றன இக்கவிதைகள்.மாற்றாக முடிந்து வெளியேறும் போழ்துகளில் சன்னவொலித்தலில் விருப்பப் பாடலின் வார்த்தைகளை மாற்றியும் தத்தகாரம் கொண்டு நிரப்பியும் தனிமையும் தானுமாய் விளையாடிப் பார்க்கிற அத்யந்தத்தின் ஞாபகங்களாக இக்கவிதைகள் வாசகனுக்குள் நிரம்புகின்றன.

இந்தத் தொகுதியில் அனார் எழுதி இருக்கிற கால்களால் ருசியறியும் நடனம் என்ற கவிதை என் கண்டறிதலில் சமீபத்தில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று.இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.இப்போது தமிழில் அனார் எழுதிய கவிதை.

கால்களால் ருசியறியும் நடனம்

அந்திப்பூச்சியின் மந்திரம்
பலிக்கத் தொடங்குகையில்
கோடை நடனம் செக்கச் செவேலென 
கரைந்துருகுகின்ற்து

உருவம்
பொன்னொளி உருக்கென வியாபித்த
வெள்ளை ஆடை அகன்று குடைவிரிய
உயிர் எனும் வெள்ளிப்பூச்சியே
ஜோதியை மொய்த்திடு

உருக்கொண்டு முற்றி வெடிக்கின்ற
நிறச்சுளைகளின் மீது/
கால்களால் ருசியறியும் நடனம் சுழலட்டும்

ஆவி கவ்விடும் பார்வையில்
நிசப்தவெளி விரிய
மஞ்சள் புல்வெளியாளின்
சிறகுகள் படபடக்கின்றன

களிநடனமிடும் நர்த்தகியின்
தெய்வீகப் பனிமுத்துக்கள் உறிஞ்சி
மஞ்சள் சிறகன் உணர்வின் ஆழத்திற்கு
நித்தியத்தின் கிருபையைக் கொண்டு செல்கிறான்.


இதன் தலைப்பில் தொடங்குகிற தனித்துவத்தின் வசீகரம் ஒரு பெருமலைப் பாதையின் மழைச்சாரல் பொழிவின் பொழுது நிகழ்கிற கண்ணறியா நகர்தலின் போது ஒவ்வொரு வளைவிலும் உயிர் போய் உயிர் வருகிற நிச்சயமின்மையின் பொழுதான மிதமான அலறலுடன் நிகழ்கிற பெயரற்ற மகிழ்வொன்றிற்குச் சற்றும் குறைவற்றது.இந்தக் கவிதையின் சொற்களை அவற்றின் வழமையிலிருந்து பெற்றுக் கொள்கிற மன அருகாமை ஒன்று நிகழ்வதன் வாயிலாகவே இக்கவிதையின் முழுமை வரைக்கும் பிரயாணிக்க முடியும்.இதன் உருவகங்கள் பன்முக சாத்திய வெளிகளில் நம்மைத் தள்ளுகின்றன. ஒவ்வொரு சொல்லும் பேயுருக் கொள்வது மொழியின் நன்கு ஒத்திகை செய்த பிற்பாடு நிகழ்த்தப் படுகிற நடனம் போன்ற லாவகம்

முற்றி வெடிக்கின்ற நிறச்சுளைகளின் மீது/கால்களால் ருசியறியும் நடனம் சுழலட்டும் என்பது அபாரமாய் வெடிப்புறுகிறது.மஞ்சள் புல்வெளியாளும் மஞ்சள் சிறகனும் நம்முள் நாளும் நிதானத்தில் பெருக்கெடுக்கிற மஞ்சளின் அத்தனை நிகழ்தகவுகளையும் அறுத்தெறிந்து வேறொரு ஒற்றையாகத் தன்னை நேர்த்துகிறது.நித்தியத்தின் கிருபை உணரப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.உயிர் எனும் வெள்ளிப்பூச்சியை எங்கனம் எப்படி ஜோதியோடு சேர்ப்பிப்பது என்பது தான் சூட்சுமத்தின் முன் கோரல் ஞானம் என்பதாகிறது.

சொற்களுக்கு ஒப்புக் கொடுப்பதென்பது இப்படித் தான் சுயம் அழித்துக் கரைத்து விடுவதற்கான நிகழ்சாத்தியம் என்பது.இன்னொரு சொல்லாய்ச் சொல்வதானால் சுயம் அழிதலின் பெயர் தான் மாயமாதல் என்பது.இக்கவிதை மொழிவழி மாயமாதலை சாத்தியமாக்குகிறது.

தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி

Last Updated (Tuesday, 13 February 2018 19:21)