புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நாச்சியார்

நாச்சியார் படம் பார்த்தேன்.இளையராஜாவின் பின்னணி இசை முழுப் படத்தோடும் ஒன்றி நம் மனசின் அடிவாரத்தில் ஒரு பூவாய் மலர்கிறது.ஈஸ்வரின் ஒளிப்பதிவு அபாரம்.சமீப நாட்களில் இத்தனை அழகான சட்டகங்களுடன் ஒரு படம் பார்த்ததில்லை.இவானா தமிழ்த் திரைவானில் அடுத்த கவிதை  இவானாவின் கண்கள் பட்டாம்பூச்சிகள் மிகுவனத்தில் விளையாடுகிற பிள்ளைப் பிராயத்தை வழிமொழிகின்றன.பாணா காத்தாடி படத்திலிருந்து வெளிப்பட்டு பரதேசியில் வேறொருவராகத் தோற்றமளித்த அதர்வா முரளியின் குரல் உடல்மொழி ஆகியவற்றை எல்லாம் பிரதிபலித்தாலும் கூட ஜீவீ ப்ரகாஷ் குமாரின் வாழ்வில் ஒரு நற்படம் நாச்சியார்.

அலுவலகச் சூழலில் மலர வாய்க்கிற நல்லதொரு புரிதலுடன் கூடிய நட்பை ஃபெரோஸ் மற்றும் நாச்சியார் இருவரிடையே தோன்றச் செய்திருப்பது கதையுள் கவிதையாக மலர்கிறது.அதிகாரம் என்பதும் பணம் என்பதும் ஒரே நடிகர் ஏற்று நடிக்கிற இருவேட பாத்திரங்கள் என்பதை எத்தனையோ படங்களில் பார்த்த பிற்பாடும் இன்னொரு முறை ரசிக்க முடிகிறது.பாலா வெகு காலத்துக்கு அப்பால் ஒரு நல்ல படம் பார்க்கிற அனுபவத்தை நல்குகிறார்.இது அவரது தி பெஸ்ட் இல்லவே இல்லை.ஆனாலும் ஆறுதலான மாறுதல் இது.

கும்பீபாகம் பீம்கபம்கூ ஆகி நெடுநாட்கள் ஆகிறது.மனிதத்தை முன்வைக்கிற படங்கள் தான் என்றாலும் அவை பயணிக்கிற வழிகள் தான் பிரச்சினை என்கையில் அடுத்த வழிகளில் பயணிப்பது ஒன்றும், தவறில்லை பாலா படைத்திருக்கிற காதல் அத்தனை இயல்பாகவும் மாண்போடும் இருப்பது அபாரம். அவரால் மாத்திரமே இனங்கண்டு உருவாக்க முடிகிற நிசத்தில் வேறாரும் கவனிக்க மறந்துவிடுகிற இயல்பின் சாமான்யர்களைக் கொண்டு ஒரு முழுமையான மாபெரிய திரைப்படத்தை அவரால் உருவாக்க முடியும்.அதற்கான நெட் ப்ராக்டீஸ் ஆகவே இதனைக் கொள்ளலாம்.

உங்கள் ரத்தகூடாரத்திலிருந்து வெளியே வந்ததற்கும் அழகான ஒரு காதலை முன் வைத்ததற்கும்...

வெல்டன் பாலா.

Last Updated (Sunday, 18 February 2018 04:53)