புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எழுதிச் செல்லும் கரங்கள் 7

எழுதிச் செல்லும் கரங்கள் 7
ராஜாவின் காதலி

எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமான ஒன்று எனத் தோன்றுகிறது.உற்றமும் சுற்றமும் எழுதுகிறவனைத் தனக்கு எந்தவிதத்திலும் பயனற்ற பழைய எந்திரம் ஒன்றைப் போல இடத்தை அடைப்பவனாகத் தான் பார்க்கிறார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கானதல்ல இந்தப் புலம்பல்.என் போலத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிற எண்ணற்றவர்களில் என் போன்ற என்னைப் பற்றியதாக இருக்கக் கூடும்

எழுதுகிறவனை எப்படியெல்லாம் நடத்தினார்கள் என்பதை அறிய நேர்கையில் பொறாமையாக இருக்கிறது.எப்படி எல்லாம் நடத்துகிறார்கள் என்பதை உணர்கையி லெல்லாம் கோபமாக வருகிறது.எத்தனை வழிகளிலெல்லாம் சின்னதும் பெரியதுமான சீண்டல்களும் புறக்கணித்தல்களும் நிராகரித்தலும் எள்ளலும் என மற்ற எந்தத் துறையிலும் சக ஓட்டக்காரர்கள் எனக் கொஞ்சமே கொஞ்சம் பேர் இப்படி இருப்பார்கள் என்பது இயல்பு.இங்கே மாத்திரம் தான் எழுதுகிற அனேகர் வாசிக்கிற எல்லாரும் என நீக்கமற நிறைந்து நஞ்சுபகிர்தல் நடக்கிறது.

தாம்பாளத்தில் தாங்க வேண்டும் என்பதல்ல விஷயம்.எழுத்தும் புத்தகங்களும் தருகிற போதை தனியானது.அதனை ருசித்துப் பழகியவர்கள் காலத்தை மாற்றி அமைத்துக் கொள்கிற வேறொரு கடிகாரம் வாய்க்கப் பெறுகிறார்கள்.அதைவிட காலத்தை முன்பின் அதிகரித்தும் குறைத்தும் தருகிற ஞாபகத்துக்கு வணங்குகிற கண்ணாடி ஒன்று அவர்கள் முன்பாகத் தொங்குகிறது.நினைத்த மாத்திரத்தில் வேறொரு காலத்தில் உலாவ அவர்களால் முடிகிறது.இதற்கான விலையாகக் கூட இயல்பில் நிகழ்காலம் என்பதாக மற்றவர்களுக்கு வாய்க்கப் பெறுகிற ஒரு காலத்தில் சக பிறர்களால் முரண்நகையோடு உற்றுப் பார்க்கப் படுவதும் எள்ளித் தீர்க்கப்படுவதும் நடப்பதை உண்மையில் அப்படி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது

இறந்தவர்கள் எத்தனை நல்லவர்கள் என்றோர் வாக்கியம் தனிக்கிறது.இறத்தல் என்பது வேறொன்றாதல் என்று தான் புரிகிறது.வெண்பா கீதாயன் எழுதி இருந்த சமீபத்திய முகப்புத்தகப் பதிவு அசத்திற்று.

https://www.facebook.com/venba.geethayan/posts/875399382584931

நான் இறந்தபிறகு நான்கு பேர் வந்து தூக்க வேண்டும்; கொள்ளிவைக்க ஆள்வேண்டும் போன்ற sentiments கூட கிடையாது; உயிரில்லை என்றால் அது நானே கிடையாது; வெற்றுடல்; அது எரிந்தால் என்ன? அழுகினால் என்ன? சுற்றியிருப்பவர் கவலை. இப்படி எளிமையாக யோசிப்பதால் நூறுவயது வாழ்க்கைமுறையை romanticizing contentஆகவே பார்க்கின்றேன்

இதை எழுதுவதற்குத் தேவையான ஞானத்தை இந்தப் பெண்ணுக்கு அவளுடைய வாழ்க்கை அவளது 22 வயதில் தந்திருக்கிறது என்பதை எண்ணும் போது பொறாமையாகக் கூட இல்லை.அதைத் தாண்டி அயர்கிறது மனசு.

இங்கே வேறொரு மரணத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.அவர் பெயர் என்ன என்பது முக்கியமல்ல.அவர் முக்கியமான ஒருவர்.எனக்கு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இல்லாவிட்டாலும் நாலைந்து முறைகள் நடந்திருக்கின்றன.ஒருவரது வாழ்காலம் முடிவடைகிறது.அவர் அதுவரைக்கும் சேகரித்து வைத்த புத்தகங்களை அவர் இறந்த ஒரு வாரம் அல்லது பத்து தினங்களுக்குள் விற்றுவிடுகிறார்கள்.அதுவும் ஒரு வாசகனை அல்லது அந்தப் புத்தகத்துக்கு உரிய கரங்களைத் தேடி எதுவும் நிகழ்வது கிடையாது.,முழுவதுமாக இது ஒரு ஈரமற்ற வியாபாரமாக நடக்கிறது.எப்படியோ மதுரை என்றால் ந்யூ சினிமாவை சுற்றி உள்ள பத்து வியாபாரிகளில் ஒருவரை அல்லது தங்கரீகல் தியேட்டர் அருகே ரெண்டே பேர்கள் ஆக எஞ்சி இருக்கிற பத்துப் பன்னிரெண்டு மனிதர்களில் ஒருவரை அணுகி ஒரு சனி அல்லது ஞாயிறு வரச்சொல்கிறார்கள்.

ஒரு மனிதனது புத்தகங்களை அவன் இறப்பின் போது அவனோடு சேர்த்து எரித்தால் எப்படி இருக்கும்..?இது ஒரு கற்பனை அல்லது காட்சி போலத் தோன்றினாலும் அதன் அபத்தத்தை மீறிய ப்ரியம் என்ற இன்னொன்றையும் கழித்துவிட்டுப் பார்த்தால் தன்னுடைய புத்தகங்களை இங்கே இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போவதற்கு மனமற்ற ஒருவன் அப்படிச் செய்வானே ஆனால் அது ஒன்றும் பெரிய குற்றமாக எனக்குத் தோன்றவில்லை.புத்தகங்களை அழிப்பதற்குச் சற்றும் சம்மதிக்காத நான் தான் இதனை எழுதுகிறேன்.இன்னமும் கதை இருக்கிறது.ஒரு மனிதனை எரிக்கும் போது அவனது ஞானம் பலவர்ணத் தெறலாகத் தனிக்கும் என்று ஒரு எண்ணம் மின்னுகிறது.

ஏன் இத்தனை அவசரமாக அந்தப் புத்தகங்களை விற்கிறார்கள்..?அவர்களுக்கு முக்கியமான அல்லது முன்னோடிய ஒருவனது சேகரிப்பின் மீது ஏன் இத்தனை வன்மத்தையும் வெறுப்பையும் காட்ட விழைகிறார்கள்..?இறந்த மனிதன் எங்கேயோ ஸ்தூலமாக இன்றி அரூபமாக விம்மிக் கொண்டே பின் செல்வானே என்ற ஒரு மூட நம்பிக்கையினுள்ளான பரிவைக் கூட அவன் வாழ்காலம் எல்லாம் சேகரித்த பொருள் மீது அவனைச் சேர்ந்தவர்களால் காட்ட முடியாமற் போகிறதா.?ஏன் புத்தகங்களின் மீது இத்தனை வன்மம்.?

அரச குடும்பத்தார் அத்தனை பேரும் ராஜமரணத்துக்கு அடுத்த காட்சியில் துரத்தி அடிக்க முற்படுகிற ராஜாவின் காதலி போலத் தான் ஒவ்வொரு மனிதனின் புத்தக சேகரிப்புக்களும் அவன் மரணித்த உடனே அவன் வீட்டிலிருந்து அடித்துத் துரத்தப் படுகின்றன.அவன் உயிரோடு இருந்திருந்தால் அப்படி அனுப்பச் சம்மதிக்கவே மாட்டான் என்பது தெரிந்த போதும் அவர்கள் அந்த மனிதன் வாழும் போது நினைத்துப் பார்க்கக் கூட உரிமையற்றவர்களாகத் தம்மை உணர்ந்திருந்த போதிலும் அவன் இல்லாமற் போனதை அவன் புத்தகங்களுக்குச் சொல்வதன் மூலம் தங்களுக்கே அவனது மரணத்தைப் பரிச்சயம் செய்து கொள்ளப் ப்ரியப்படுகிறார்கள்.அப்படியான நகர்தலின் முதல் அடியாகவே அவனது புத்தகங்கள் விலைக்கு வீசப்படுகின்றன.

இதென்ன குற்றமா என்று தோன்றும்.;இன்னொரு புறம் சொன்னால் அப்படி இறந்தவர்களின் கைவிடப்பட்ட புத்தகங்கள் பலவற்றை நான் என் இளமைக் காலம் முதற்கொண்டே வாங்கி என் சேகரத்தினுள் உட்படுத்தி இருக்கிறேன்.இப்போது பெருங்கூச்சல் போடுகிற எனக்கு அப்படி விற்பதனால் தான் அவை கிடைத்தன என்பதும் அவ்வாறு விற்காமற் போனால் அவற்றில் ஒன்றைக் கூட வெளியே அல்லது புதுப் புத்தகச் சந்தையில் வாங்கிட முடியாது என்பதும் அவைகளில் பலவும் அரிதினும் அரிதான பிரதிகள் என்பதெல்லாமும் மெய் தான்.நான் இப்படிப் பேச வேண்டியதில்லை என்பதைக் காட்டிலும் நான் என் தரப்புக்கு எதிர்த் தரப்பைச் சேர்ந்தவன் என்பது தான் ருசிகரம்.

ஆனால் விஷயம் அதுவல்ல.அன்பானவர்களே....ஒவ்வொரு மனிதனின் அறிவுசார் சொத்துரிமைக்கு ஒரு பணமதிப்பு உண்டென்கையில் அவனது மரணத்துக்கு அப்பால் அது யாரைச் சென்று சேரவேண்டும் என்பது எழுதி வைக்கப் படவேண்டிய சொத்துக்களின் வரிசையில் இடம்பெறுகிறதல்லவா..?அப்படித் தான் அவன் சேர்க்கிற புத்தகங்களை ஏன் அவனது காலத்திற்குப் பிற்பாடு எங்கே யாரைச் சென்று அவனது புத்தகங்கள் அடைய வேண்டும் என்பதும் அந்த மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையிலேயே அவன் மனப்பூர்வத்தின் நீட்சியாகவே அவனால் சுட்டப்பெற்ற வழியில் அல்லது திசையில் அவனது புத்தகங்கள் சென்றடையவேண்டிய இடம் அல்லது கரம் தீர்மானிக்கப் படவேண்டும் என்பது தான் விஷயம்.

எல்லாருடைய சேகரங்களும் ஒருமித்தவை ஆகாது.இத்தனை அழுத்தத்தை எனக்குள் நேர்த்திய ஒரு மனிதனின் மரணம் இந்த ஆண்டு சனவரி மத்திமத்தில் நடந்து அவரது சேகரிப்புகள் அனைத்தும் அதே சனவரி முற்றுக்குள் விற்பனை செய்யப் பட்டன.அதை என் பார்வைக்கு கொணர்ந்த போது சென்ற மாதத்தின் பத்தாம் தேதி.அவற்றை வாங்கியதும் அப்படியே அங்கிருந்தே சீர்பிரித்து பழைய பைண்டிங் அட்டைகளை எல்லாம் களைந்து நேராக புதிய பைண்டிங்குக்கு அனுப்பினேன்.நேற்று மார்ச் ஒன்றாம் தேதி அத்தனையும் புத்தாடை தரித்து என் அலமாரிகளுக்குள் தஞ்சம்புகுந்தன.

வரலாறு தொல்லியல் மொழி செப்பேடுகள் சிற்பம் கல்வெட்டுக்கள் ஓவியம் என முக்கியத்திலும் முக்கியமான அரிதினும் அரிய புத்தகங்கள் அவை.சென்ற நூற்றாண்டின் அறிவுப்பரப்பின் திசைகளில் ஒன்றிரண்டினை அதன் ஆழத்தை நுட்பத்தை துல்லியத்தை உறுதிசெய்த புத்தகங்களின் பட்டியலில் இவை இடம்பெறும்.எப்படியோ என் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

என் திருமணத்தை ஒட்டி வாழ்வெனும் காப்பியத்தில் ஒட்டியிருந்த இரண்டு பக்கங்களைப் பிரிக்கும் போது யூகிக்க முடியாத ஒரு தேவசெய்தி போல அது சொல்லப்பட்டது.இத்தனை புத்தகங்களா..?சிரமம் அன்பே விற்றுவிடேன் என்ற அந்த வாக்கியத்தை என் வாழ்வின் சர்வபலம் கொண்டு வெறுத்தேன் என்றபோதும் என் அது வரையிலான சேகரிப்பின் பெரும்பகுதியை உடைத்து விற்றேன்.கிட்டத் தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு நூல்களை திருச்சியிலிருந்து ஒருவர் வந்து வேனில் எடுத்துச் சென்றார்.அவர் அதற்கீடாகத் தந்த பணத்தில் என்னைத் திட்டிக் கொண்டே வேறு புதிய நூல்களை வாங்கினேன்.அதன் பின் இடமில்லை என்ற காரணத்தால் அவ்வப்போது புத்த்தகங்களை கழித்திருக்கிறேன்.நான் வாசித்தவற்றில் நண்பர்கள் புதிய வாசிப்பாளர்கள் சிலருக்கு அன்பளித்ததும் உண்டு.

புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம்.வாழ்தல் இனிது.

அழுவது என் பழக்கம்
இதற்கெல்லாம்
ஆறுதல் சொல்ல
வந்துவிடாதீர்கள்

தொலைவிலிருந்து மீன்
தூண்டிலை
நீந்த அழைக்கிறது

மீனுக்கு 
நீரெல்லாம்
பாதைகள்

இம்மூன்றும் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கக் கூடிய குறுங்கவிதைகளின் பெருந்தொகுதியான மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் தொகுதியில் இருந்து எடுத்தது.இவற்றை எழுதியவர் ராஜா சந்திரசேகர்..சின்னஞ்சிறு கவிதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட சவால்களைக் கொண்டவை.அவற்றின் சொல்சிக்கனம் தாண்டி அவை கவிதையாகத் தழைப்பது மேலதிக சவால்.இந்த வித்தை கைவரப் பெறுவது பெருவரம்.எழுதி எழுதிக் கண்டடையலாம் ஒவ்வொரு சிறந்த கவிதையாய் எடுத்துக் கோர்ப்பது இன்னும் வேறொரு அனுபவமாய்த் தனிக்கும்.எதிர்காலத்தில் தமிழ்க் கவிதை மாத்திரமல்ல கவிதை உலகமே இப்படியான சின்னஞ்சிறிய கவிதைகளுடைய செல்வாக்கில் தான் அதிகதிகம் இருக்கப் போகிறது என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.புத்திசாலிகள் மடைமாற்றம் கொள்ளட்டும்.

பழைய டைரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு பெயரை சரிபார்ப்பதற்காக.அந்த வேலை முற்றுப் பெற்ற பின்னரும் டைரிகளை முழுவதுமாகப் புரட்டி முடித்தபின்பே அவற்றை மறுபடி அமைதிகொள்ளச் செய்யவேண்டும் என்று மனதினுள் ஒரு தீர்மானம்.1994ஆமாண்டு டைரி அதாவது என் கல்லூரி முதலாமாண்டு அனுபவங்களை நான் எழுதி வைத்திருந்த அந்த வருடத்தின் டைரியில் அப்போது வரைக்கும் நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகள் இரண்டை எழுதி வைத்திருக்கிறேன்.

கலாப்ரியா எழுதிய

காயங்களுடனும்
கதறல்களுடனும்
ஓடி ஒளியுமொரு
பன்றியைக் கொத்தும்
பசியற்ற காகங்கள்
உன் பார்வைகள்

இது முதலாவது

அடுத்தது

உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் //போகிறாய்..
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப்
பற்றி எரிகிறது

உனக்கென்ன
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய்..
என் உயிரல்லவா
மெழுகாய்
உருகி 
விழுகிறது

உனக்கென்ன

போகிறாய்... போகிறாய்...

என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது

இது மீரா எழுதியது.மீரா என்ற பேரையே கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற தொகுப்பின் வசீகரமான பேர் தந்த கிறக்கத்தைத் தொடர்ந்தே அறிய நேர்ந்தேன்.தமிழில் காதலைக் குழைத்தெழுதியவர்களில் மீராவின் இடம் தனித்தது.அது ஒரு சிம்மாசனம் என்றால் தகும்.மீரா காதல்ராஜா.

காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆண் நோக்கிலேயே ஆடவச்சொற்களால் எழுதப்படுகின்றன.பெண் என்பவள் இங்கே போற்றவும் ஆட்சேபிக்கவும் படுகிறவளாக தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறாள்.என் ஆவலெல்லாம் பெண் நோக்கில் காதல் கவிதைகள் அதிகதிகம் எழுதப்பட வேண்டும்.அப்படியான கவிதைகள் ஆணைப் படர்க்கையில் கோட்டுச் சித்திரமாக நேர்த்துகிற அழகு சொல்லித் தீராத மொழிமழை

நிகழத்துக் கலைகளில் தன்னைத் தயாரித்துக் கொள்கிறவர்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறாற் போன்ற கீழ்க்கண்ட ஃபியோனா கிங் எழுதிய கவிதையை முடித்து விட்டுத் திரும்பும் போது இக்கவிதையின் இருளாய் மனதுள் நீள்கிற உணர்வு எல்லையற்றுப் பெருகுகிறது.


ஒரு சூழலின் பல்வேறுபட்ட மனோ நிலை மாறுபாடுகளை அவற்றின் தோற்றுவாயிலிருந்து அவற்றின் சாத்திய வரிசைப்படி அடுக்கித் தருவது இக்கவிதையின் வசீகரம்,

அழிதல் அவலம் அவமானம் ஆகியவற்றின் தனி மனித அனுபவத் தோன்றல்களைக் கூட்டு நம்பகத்தினுள் ஊசிமருந்தைப் போலச் செலுத்தி விடுவதில் கவிதையின் நுட்பமான தோற்றம் வசீகரிக்கிறது மேலும் இப்படியான அபூர்வமான அனுபவத் தீற்றல்கள் மற்ற கலைவடிவங்களை விடவும் கவிதையை பலமுள்ளதாக முன்வைக்கிறது.

தொடரலாம்

அன்போடு
ஆத்மார்த்தி

Last Updated (Friday, 02 March 2018 17:13)