புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எழுதிச் செல்லும் கரங்கள் 8

எழுதிச் செல்லும் கரங்கள்

8 எழுத்தின் லட்சணங்கள்

கவிதை என்பது உண்மையில் என்ன..?நான் கவிதை எப்போது எழுதினேன் என்ற ஒரு வினா எல்லோரையும் குறைந்த பட்சம் இரண்டாகப் பகுக்க வல்லது.எனக்கெல்லாம் கவிதை வாசிக்கத் தெரியுமே தவிர எழுதல்லாம் வராது என்று ஒதுங்கிக் கொள்வோர் அனேகர் என்றால் நான் என்னுடைய இரண்டாவது வயதில் நேரடியாக எழுத ஆரம்பித்ததே கவிதையில் இருந்து தான் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வரும்.ஒரு பக்கம் கலர் கலர் பக்கங்களில் கலரழகிகள் மாடல்கள் உலகின் எந்தப் பிரச்சினையும் இல்லைல்ல என்று கேட்காமல் நிரூபிக்கும் அதிகதிக அழகோடு புன்னகைத்தபடி காதல் கவிதைப் புத்தகங்கள் புத்தக நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றை எளிதில் அடைவதற்காக தனித்த இட ஒதுக்கீடு தந்து அவற்றின் வாழ்விடத்தை அலங்கரித்து வைக்கப் புத்தக நிலையத்தார் பிரியப்படுகிறார்கள்.

""காதல் கவிதைகள்"" என்று சேர்த்துப் பேசியே அவை எதுவும் கவிதைகள் இல்லை என்ற பதத்தில் சமைத்துத் தின்று விடுகிற விமர்சனாவேசத்தோடு சீரியஸ் லிட்ரேச்சர்ல லவ்வுங்குறதும் பெய்ங்குறதும் வெவ்வேறயா இருக்க முடியாது.இட் இஸ் ஆல்சோ அனதர் பெய்ன்.அவ்ளோ தான்.அதைத் தாண்டி காதல் உணர்த்தப்படணும்.சொல்லப்படக் கூடாது.பேசுறதுக்கு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கு.இதுல இன்னமும் காதல் கவிதைகளை எழுதிட்டிருந்தா எப்படி விளங்கும் என்று சூடான தேநீரைத் தன் உதடுதாண்டுகிற சொற்களால் இன்னமும் சூடாக்கிப் பார்க்கும் தீவிர இலக்கியர்கள் மறுபுறத்தில் உக்கிரம் காட்டுகிறார்கள்.

வார இறுதி நாளிதழ் இணைப்பில் தருகிற ஞாயிறுகளின் மேல் பூச்சொரிவதற்காகவே தனியே தயாராகிற ஒல்லிப்பிச்சான் இணைப்பிதழ்களின் பின் அட்டையில் அல்லது உள்ளே வண்ண ஓவியங்களோடு எழுதப்படுகிற நியாயங்கேட்கிற காதல் கவிதைகள் சுமார் ரைட்டிங் குமார்களை வளப்படுத்துவதற்கான வாரியம் போலச் செயல்படுகின்றன.என்ன ஸார் பண்றது.மக்கள் விரும்புறாங்கள்ல என்று ஒரு இதழின் உப பொறுப்பாள நண்பர் ஒருத்தர் அலுத்துக் கொண்டார்.

காதல் கவிதைகள் என்றுமே தீர்வதும் தீர்ப்பதும் இல்லை.என்றும் விருப்பமும் தேவையும் இருந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.சர்வதேச கவிதைக்கடவுள் மிக நிச்சயமாகக் காதல் தான்.தன் பதின்மத்தை உணர்வதில் ஒரு மனம் காதலை சார்ந்து கொள்ளத் தலைப்படுவது துவங்குகிறது.தனக்கென்று ஒரு தனித்த மனம் இருப்பதாகவும் அதன் தேவநிச்சயத் தேவை காதல் மாத்திரம் என்றும் உணரும் போது காதல் சார்ந்த தனித்த ஆல்பம் ஒன்றாகத் தன் மனதை மறு நிர்மாணம் செய்து கொள்ள முனைகின்றனர்.இந்த இடத்தில் ஆண்மனமும் பெண்மனமும் வெவ்வேறு உள்ளீடுகளை எதிர்பார்ப்பதில் இருந்து தொடர்பற்ற வெவ்வேறு உணர்வு நதிகளாய்ப் பெருக்கெடுக்கத் தொடங்குகின்றன.காதல் வலுவானதொரு ஒற்றை.

தன் வாழ்வு மொத்தமுமே இதே போன்ற பதின்மத்தின் தொடர்பிரதிகள் என நம்ப விரும்புகிற மனது தன் வயதை ஒத்த மற்ற மனங்களிலிருந்து தன்னை சிறப்பித்துக் கொள்வதற்கான தைர்யத்தின் காலடிகளை முன் வைப்பதாகவே தனக்குள் காதலை அறிவித்துக் கொள்கிறது.அதாவது நீ எப்படி வேண்டுமானாலும் இரு நீ வராமற் கூடப் போ.நானும் என் காதலும் தான் எனக்கு முக்கியம் என்று நட்பு மற்றும் அருகாமை நேர்பாலினத் தோழமைகளைத் தவிர்த்து விட்டுத் தன் காதல் இணை குறித்த எதிர்பார்த்தலை காத்திரமாக முன் வைப்பது முதலில் நிகழ்கிறது.பின்னர் தனக்குள் எதிர்பார்த்தலின் சித்திரத்தை முழுமையாக வரைந்து கொள்வது நேர்கிறது.தன் சுயத்தை அலங்கரித்துக் கொள்வதற்கான ஒப்பனை உபகரணங்களாகவே  காதல் பற்றிய நினைவுகளையும் அவற்றுக்கான சொற்களையும் நம்பத் தொடங்குவதும் அடுத்தடுத்த நகர்தல்களாக மாறுகின்றன.

பார்ப்பதற்கு முந்தைய பரவசம் ஒருவிதமான சுயவதை.காத்திருத்தல் காதலில் நிச்சயிக்கப் பட்ட கனம்.எடுத்த எடுப்பிலேயே அங்கீகரிக்கப் படுவது காதலுக்கு அழகல்ல.எத்தனை பெரிய மன்னமன்னர்களும் பேரழகிகளும் கூடக் காத்திருந்து இறைஞ்சுவதற்குப் பின்னதான ஏற்பாகவே தங்களது காதலைக் கொண்டு செலுத்த விரும்புவது சுவையான முரண்.மெல்ல மெல்ல இந்த நூற்றாண்டின் காதல் தன்னிடம் முன் மொழியப்படுவதற்காகக் காத்திருக்கும் பிரயத்தனத்தை சூசகமாய்த் தேர்வெடுக்கவே விரும்புகிறது.முன் பழைய காலத்தின் காதல் முன் கதைகளும் முகாந்திரங்களும் சர்வ முழுமையாக நிராகரிக்கப் பட்டு விட்டன.

இன்றைய காதல் கணித சூத்திரங்களுக்குப் பின்னதான விடையறிதலின் துல்லியத்தோடே நிகழ விரும்பப் படுகிறது.காதலின் தோல்வி முன் காலத்தில் நகர வழியற்ற உச்சிமலைப் பதற்றமாய் நிகழ்ந்தது இன்றைக்கு வழக்கில்லாத சமரசமான துண்டாட்டமாய் விலகித் தனித்த வழிகளில் பெருக்கெடுக்க முனைகிறது.இங்கே சொற்களுக்கான வருகை அவற்றின் நம்பகம் குறித்த ஐயமற்ற நிகழ்தலாக மாத்திரமே தோன்ற வாய்க்கிறது.மற்ற சொற்கள் எள்ளலுடன் புறந்தள்ளப்படுகின்றன.மொத்தத்தில் காதல் அதன் அடுத்தடுத்த வடிவங்களுக்குத் தன்னை மாற்றிக்கொண்டே தப்பிப் பிழைக்கிறது.

சென்னிமலை தண்டபாணி என்றொரு பெயர் காதல் கவிதைகளுக்கான தனித்த பெயர்களில் ஒன்று.எதையும் காதலாகப் பார்க்கிற கண்களும் சொற்களும் ஒருங்கே வாய்ப்பது அரிது.வழமையின் சாலையில் விரைந்தோடுகிற சாதாரணப் புரவிகளாகவே கருதிக் கடந்து கொண்டிருக்கையில் தடாலென்று ஒரு அபூர்வம் அப்படியான கவித்துவ அழகியல் அத்தனை சாட்டுதல்களையும் தாண்டி அவற்றினூடாக நான் இருக்கிறேன் என்னைப் பார் என்று கம்பீரமாக எழுந்து நிற்பது மாயக்கொடுப்பினை.எத்தனையோ அழகியல் மலர்சொரிதல்களுக்கு மத்தியில் அப்படியான அயர்தல்களுக்கு என்னை ஒப்புக் கொடுத்து விட்டு எத்தனையோ முறை ஆணி அடித்த சிலுவை போல அதே கணத்தில் உறைந்திருக்கிறேன்,சென்னிமலை தண்டபாணி தானும் தன் மொழியுமாய்க் காதல் செய்து கவிதை நெய்கிற சொல்நெசவாளி.

சமீபத்தில் தி இந்து இணையதளத்தில் தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு எனும் தலைப்பில் சென்னிமலை தண்டபாணி எழுதி வருகிற கவிதைச் சங்கிலியில் இந்தக் கீழ்க்கண்ட வரிகளில் அப்படியே திகைத்தபடி நெடுநேரம் இருந்தேன். http://tamil.thehindu.com/opinion/blogs/article21043408.eceசென்னிமலை தண்டபாணி பல ஆண்டுகளாகக் கவிதைப்பரப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.எந்தக் கோரலும் இன்றித் தானும் தன் கவிமனசுமாய் எழுத்தில் தன்னை அகழ்ந்தாலன்றி மேற்காணுகிற வரிகளை ஒருபோதும் கற்பனை செய்ய இயலாது.இப்படியான பல ஐஸிங் சாக்லேட் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பவர் தண்டபாணி.சாதாரணம் போலத் தோன்றினாலும் மேலே காணப்படுகிற 4 வரிகள் எத்தனை அபாயகரமானவை என்பது அவற்றை மறுபடி மறுபடி வாசிக்கும் போது புரியக் கூடும்.

கவிக்கோ அப்துல் ரகுமான்  தமிழின் கவிதைப் பேருருக்களில் முதன்மையானவர்.வானம்பாடி சார்பும் அதற்குப் பின்னதான நவீனத்துவப் பார்வையும் எதையும் பரிசோதிக்கிற விழைதலும் கொண்ட கவிக்கோ தன் வாழ்காலத்தில் தமிழில் ஆகச்சிறந்த கவிதைகள் பலவற்றை எழுதினார்.தன் எழுத்துக்காகத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டாடப்படுகிற கவிக்கோ சிலபல கொள்கைப் பிடிவாதங்களுக்காகவும் உச்சத்தில் நிறுத்தப்படுகிறார்.இவரது வார்த்தைகள் வசீகரத்தில் குளித்தெழுந்து வலம் வருபவை.இவரது வாக்கியங்கள் சொற்கள் வழி மனக்களவு புரிபவை.எதையும் தன் பாடுதிறன் மூலமாக மாபெரிய கவிதைகளாக உருவாக்கித் தருவது கவிக்கோவின் சிறப்பு.எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழில் தத்துவார்த்தக் கவிதை சொலல் முறையைத் தன் கவிதைகளில் பரீட்சித்துப் பார்த்ததோடன்றி அதனை வெற்றிகரமாக உருவாக்கியவராகவும் அறியப்பட வேண்டியவர் கவிக்கோ.இவரது பித்தன் காலங்கடக்கும் கவிதைப்பேழை.காகித கனம் கொண்ட தலையணையை ஒத்த பெரும்புத்தகம் அல்ல பித்தன்.மெலிந்த மேனியோடு காணப்படுபவன் தான்.ஆனால் அவனைத் திறந்தால் தன் ஒவ்வொரு சொல்லையும் உளியாக்கித் திறப்புக்களுக்கு வழியாக்கி சித்து வேலை பார்ப்பவன்.என் கல்லூரிக் காலத்தில் மூடிய கண்களில் நீர் வழிய வழிய அப்துல் ரகுமானின் கவிதை வரிகளைத் தன் வெண்கலயக் குரலால் வாசித்துக் காட்டுவார் நண்பர் மதுசூதனன்.அந்த ஞாபகத்தை மறுபடி திறந்து அதே காலத்தினுள் புகுந்து கொள்ள முடியுமானால் எத்தனை இன்பம்.பித்தனை வாசிப்பதும் அத்தனை இன்பம்

இருள் என்றொரு கவிதை.பித்தன் கவிதை வரிசையில் இதுவும் ஒன்று.வாசித்தால் எழுதியவன் மீது பைத்தியப்ரியம் நேர்த்தவல்ல கவிதை.


அப்துல்ரகுமான் காலமான அன்று அந்தச் செய்தி கேட்டவுடன் முகப்புத்தகத்திலிருந்து உடனே வெளியேறினேன்.அவரது பித்தன் பால்வீதி ஆலாபனை மூன்று நூல்களையும் அடுத்தடுத்து வாசித்தேன்.முன்னர் அறிய நேர்ந்த செய்தி பொய் என்ற முடிவுக்கு வந்தேன்.இத்தனை சொற்களை அர்த்தப்படுத்தியவருக்கு மரணம் என்பது நிகழாநிகழ்வு.

முகப்புத்தகத்தில் தேடியபோது ஒரு தோழியின் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த பத்தி ஒன்றின் தலைப்பு ஈர்த்தது,

என்னைப் பொறுத்தவரை பத்தி எழுத்தின் இலக்கண லட்சணங்கள்:-

மறுபடி மேலே இருக்கும் வாக்கியத்துக்கு திரும்பலாம்.சமீபத்தில் நான் வாசித்த எழுத்துகளில் மேற்காண்கிற நாலு பாயிண்டையும் பிடிவாதமாய்ப் பூர்த்தி செய்து ஒரு அத்தியாயத்தைப் பின் தொடர்ந்து முந்தைய எட்டு அத்தியாயங்களை வாசிக்க வைத்தது முகப்புத்தகத்தில் சுட்டி ஒன்றைக் கண்டு தொடர்ந்து ந்யூஸ்டீஎம்.இன் என்ற தளத்தில்  நான் வாசித்த
http://www.newstm.in/DidYouKnow/1522059229617?Psychological-Benefits-Of-Cooking-

கார்தும்பி எழுதுகிற கடைசி பெஞ்சுக்காரி என்ற தொடர்பத்தி.அதன் 7ஆவது அத்தியாயம் சமைத்துத் தீருங்கள் வாசிப்பவர்களோடு மெல்லிய குரலில் அடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறவரிடம் அன்னியம் உடைக்கிற லாவகத்துடனான மொழிதலில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பத்தி தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த பத்திகளில் ஒன்று என்றால் தகும்.

உதாரண விள்ளலாக சமைத்துத் தீருங்கள் அத்தியாயத்தின் கடைசிப் பத்தி இங்கே:

""""""""""""""இனி ஒரு முறை காதலில் விழ நேர்ந்தால், அது ஒரு சமையல் கலை நிபுணரோடாக இருக்க வேண்டும் என்பது நீண்ட கால பிரார்த்தனை. இதை படிப்பவர்கள் எல்லாரையும் சமையலறைக்குள் அனுப்ப வேண்டும் என்ற கிறுக்குத்தனமான நம்பிக்கையோடு எழுதப்பட்ட பத்தி இது. இறுதி முயற்சியாக இதைச் சொல்கிறேன் - சமையல் செய்வது மனநோய்களுக்கு தீர்வளிக்கும். நம்ப முடியாதவர்கள் எனக்கு கால் செய்யலாம்.""""""""""""""""""

சன்னதத்திலிருந்து நேரே பெயர்ந்து எழுகிற மொழியாகட்டும் சமரசம் ஏதுமில்லாத வெட்டுக்கத்திக் கூர்மையோடு வாக்கியங்களைப் பூர்த்தி செய்வதாகட்டும்.தொடர்பற்ற தொடர்புகளை மாயத்தில் பிணைத்தபடி வெவ்வேறு சம்பவங்களை ஒரே இடத்தில் அடுக்கித் தருவதிலாகட்டும் அத்தியாயத்தின் தனித் தலைப்பு மற்றும் கருப்பொருள் தொடங்கி உள்விவரணை வடிவம் நகர்தல் மற்றும் முடிவு வரைக்கும் புத்தம் புதிய மலர்ச்சியை உறுதி செய்தபடி எழுதக் கைவருவது சிறப்பு.கார்தும்பி என்ற பெயரிலான இந்தப் புதியவருக்குள் ஒரு இதழியலாளரைத் தாண்டிய எழுத்தாளுமையை தரிசிக்க முடிகிறது.இந்த உட்கனலைத் தக்க வைத்தபடி அடுத்த உயரங்களைத் தொட்டால் தும்பியல்ல இவர் தமிழின் ராஜாளிப் பறவை.

இந்திய லக்னோவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் பெயர்ந்து வாழும் இஃப்திகான் ஆரிஃப் பாகிஸ்தானின் கொண்டாட்டப் பெருங்கவி.உருதுக் கவிதாவுலகில் தகர்க்க முடியாத பெரும்பெயர் ஆரிஃப் உடையது.பல கௌரவ உயரங்களை அடைந்திருக்கும் ஆரிஃப் தன் கவிதைகளில் அற்புதங்களையும் அபத்தங்களையும் ஒருங்கே வியப்பதும் மறுதலிப்பதுமான கவிதைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருபவர்.அவரது மேற்காணும் கவிதை மேலோட்டமாய் ஒரு பிரார்த்தனை போலத் தோன்றினாலும் ஊடுபாவுகளும் மௌனங்களும் ஏற்படுத்தித் தருகிற மதிப்புகள் அபாரமானவை.

தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி 

Last Updated (Tuesday, 10 April 2018 20:52)