புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மெர்க்குரி

மெர்க்குரி

 

இதனை ஒரு மௌனப்படமாக எடுத்ததற்கு எடைக்கு எடை வாழ்த்துகளையும் கண்டனங்களையும் சேர்த்தே சேர்ப்பிக்கலாம் இயக்குனருக்கு.ஜோக்ஸ் அபார்ட்...தமிழின் மிக முக்கியமான படங்களில் ஒன்று மெர்க்குரி.எத்தனை பேருக்குப் படமாக பிடித்தது புரிந்தது என்பதெல்லாம் அர்த்தமற்ற வினவுதல்கள்.ஆழ்ந்து பார்த்தால் புரிவதற்குப் பெயர் தான் சினிமா.வசனம் இல்லாமல் ஒரு படம் என்பது காட்சிகளாகவும் மௌனங்களாகவும் படர்க்கை அனுபவத்தை மனங்களில் ஆழச் செலுத்த முயலுகிறது.அந்த முயல்வில் மெர்க்குரி நல்ல அனுபவமாகவே வந்திருக்கிறது.

படத்தின் கதை நாலு வரிதான்.திரைக்கதை மற்றும் அதனைப் படமாக்கிய விதம் இவற்றில் தான் விஷயமே இருக்கிறது.கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படங்களின் வரிசையில் பேருருவாய் இந்தப் படம் நிற்பதன் காரணமும் இந்தக் கதையைத் திரைப்படுத்திய விதம் தான்.

தெர்மாமீட்டர் என்பதன் முக்கியத்துவம் என்ன.?நம் வாழ்வுகளில் தெர்மாமீட்டர்களின் பங்கு என்ன.?ஒவ்வொருவரும் பல்லுக்கும் நாவிற்கும் இடையில் சின்னதொரு கண்ணாடி உருளையைக் கடித்துக் கொண்டிருந்து விட்டு எடுத்து உதறி நம் உடலின் சூட்டை எத்தனை டிகிரி என்று பார்த்துச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தில் நாமெல்லாரும் தெர்மாமீட்டரை சந்தித்து புழங்கி இருப்பவர்கள் தானே..?

அந்தச் சின்ன விஷயம் தான் இந்தப் படத்தின் ஆணி வேர்.நடு நரம்பு என்றால் தகும்.தெர்மா மீட்டர் தயாரிக்கிற ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டு 84 பள்ளிக்குழந்தைகள் மரித்துப் போவதும்.அதனை ஒட்டி ஒரே இடத்தில் அவர்களது நினைவிடம் அமைந்திருப்பதும் அதற்கப்பால் அந்தத் தயாரிப்பு ஆலை முடக்கப்படுவதும் அவர்களைத் தாண்டிப் பலரும் மெர்க்குரி எனப்படுகிற பாதரசவிஷத்தாக்குதலால் பேச்சு முடக்கப்பட்டு பார்வை இழந்து காது கேளாமற் போய் இன்னும் பல குறைகளோடு ஒரு தலைமுறையே வளர்ந்து வாழ்ந்து வருவதும் சின்னதொரு இழையாகத் தான் இந்தப் படத்தில் தோற்றமளிக்கிறது.

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான ஒரு போரை முன்னர்ப் பரபரப்பாக இயங்கிய தொழிற்சாலை தற்போது யாருமே வரவோ நுழையவோ விரும்பாத நரகநிகர்ப் பாழிடமாய்த் தோன்றுகிற கைவிடப் பட்ட மெர்க்குரி தொழிற்சாலையின் உள்ளே படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் நடக்கிறது.

படத்தின் இறுதி பத்து நிமிடங்கள் கவிதையாய் மலர்கிறது.மௌனம் என்பது நிசப்தமல்ல.அது பல சொற்களைத் தன்னகத்தே கொண்ட அகராதி என்பதை அழுத்தமாய் முன்வைக்கிறது மெர்க்குரி.

மனிதகுலத்தின் வரலாற்றில் அறிவியல் ஆராய்ச்சிகளும் தொழில் அபிவிருத்திகளும் கொண்டிருக்கும் பங்கு அளப்பரியது என்பதை பறை சாற்றும் முகமாக ஆயியரமாயிரம் கலைப்படைப்புகள் வந்து உள்ள அதே சமயத்தில் அழிவின் கோரத்தை அதற்கான விலையாக மனித குலம் இதுவரைக்கும் தந்திருக்கிற உயிர்களை மேலும் குறைபாடடைந்த உடல்களை அவற்றுடனான நாளுக்கு நாள் சமராகவே எஞ்சி விடுகிற வாழ்க்கைகளை எல்லாம் சாட்சியப்படுத்துகிற ஒரு படைப்பு இல்லவே இல்லை என்றால் அப்படியான முதற்படம் மெர்க்குரி

அழிவுக்கு எதிரான படமாக இதை உருவாக்கி விட வேண்டுமென்ற எத்தனமே பாராட்டுக்குரியது.எத்தனையோ சின்னச்சின்ன விசயங்களின் மூலமாக பசுமை தளிர்க்கும் ஒரு சோலையில் தொடங்குகிற கதை சட்டென்று அழிவின் நரகத்திற்குள் பெயர்கிறது.அங்கே இருந்து மறுபடி நம் மனங்கள் வெளியேறும் போது அழிவுக்கெதிரான கொடியைப் பற்றிக் கொண்டு தான் வெளிவர முடிகிறது.எப்போதும் என்றென்றைக்கும் அறிவியலின் அசுரப்பசியைக் கட்டுப்படுத்துகிற கடிவாளமாக அன்பு என்கிற அரதப்பழைய இன்னொன்றைத் தான் கைக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தீர்க்கமாக முன்வைக்கிறது மெர்க்குரி.

இந்தப் படம் பிரபுதேவாவின் வாழ்க்கையில் ஒரு அழகான கவிதை.இதற்கு முந்தைய ஆட்டம் பாட்டம் நகைச்சுவை எல்லாவற்றையும் அற்றுப் போகச் செய்யும் இந்த மௌனியின் அபாரமான நடிப்பு காலம் கடந்து நிற்கும்.சின்னச்சின்னக் குறைகள் இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் புறந்தள்ளி படத்தின் வடிவமைப்பும் ஒளிப்பதிவும் சீரான எடிட்டிங்கும் தடதடக்கும் இசையும் படத்தை வேறொரு சீராய் மிளிரச் செய்கின்றன.

தனியே சென்று பாருங்கள்.தமிழில் எப்போதாவது தான் இப்படியான படங்கள் நிகழும்.

மெர்க்குரி

அனிச்சமலர்

Last Updated (Monday, 23 April 2018 03:28)