புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

உடல் மனம் பிரபஞ்சம்

உடல் மனம் பிரபஞ்சம்

சக்திஜோதியின் வெள்ளி வீதி கவிதைத் தொகுதியை முன்வைத்து

வெள்ளிவீதி கவிதைகள் டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடு

நான் எழுத வந்த நேரம் எழுத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்களில் எனக்கு அறிமுகம் கிடைத்த வெகு சிலரில் சக்தி ஜோதி ஒருவர்.நட்பு கொண்டாடுகிற வாக்கியம் மாத்திரம் அல்ல.மூன்று தொகுதிகளை வெளியிட்டிருந்த ஒரு கவிஞராக எனக்குக் கிடைத்த அவரது அறிமுகத் தோற்றம் இப்போது இந்த எட்டு ஆண்டுகளில் அவருடைய பதினோராவது கவிதைத் தொகுப்பு வெள்ளி வீதி வெளிவந்திருக்கிறது.அவருடைய கவிதைகளைப் பற்றிய என் அபிப்ராயங்களை இங்கே முன் வைக்கிறேன்.

உலக மயமாக்கல் நிலங்களின் நான்கு மால்களை எல்லாம் பாவனைக் கோடுகளாக்கித் தந்திருக்கிறது.வித்யாசத்தின் சுவர்கள் தகர்த்தெறியப்பட்டிருக்கின்றன.நாமெல்லாரும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.நம்மை எல்லாம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது யார் என்பது அவ்வப்போது அனுமானிக்கப் படுகிறது.வாழ்வெங்கும் இப்படியான அனுமானங்கள் ததும்புகின்றன.சர்வ வல்லமை உள்ள யாரையும் நம்மால் சந்திக்க முடியாமலே போவதன் பேராக வாழ்க்கை மீண்டும் எஞ்சுகிறது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியை வாழ்ந்து முடித்ததே தெரியாமல் திகைக்க வேண்டி இருக்கிறது.மதிப்பீடுகள் சிதறி அடிக்கப் பட்டதாகவும் எப்போதும் பின்னணியில் ஒரு எள்ளலோசை ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்சம் வெகு இயல்பான ஒரு எதிர்பார்ப்பாக மாற்றித் தரப்பட்ட பிற்பாடு செறிவூட்டப்பட்ட 2.0 வாழ்க்கை சர்க்கரைக்கு பதிலாக சுகர்ஃப்ரீ சுவையோடு தித்திக்க முயலுகிறது.பழைய எல்லாமும் அற்றுப் போய் எல்லாவற்றின் அடுத்தடுத்த பாகங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.எதன் பொருட்டும் கலங்க வேண்டியதில்லை.செய்ய வேண்டியதெல்லாம் அப்படிக் கலங்க வைக்கும் என்று அனுமானிக்கக் கூடியவற்றுக்கான செய்முறைக் குறிப்புகள் அவற்றை வடிப்பதற்கான வார்ப்புகள் மேலும் கொஞ்சம் அவற்றைப் போலவே மற்ற சிலதுகள்.இவற்றை ஏற்பாடு செய்து விட்டால் எதை வேண்டுமானாலும் உருவாக்கி விட முடியும் என்கிற தைர்யத்தை உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுங்கள்.இரண்டே இரண்டு நற்செய்திகள் தான் அன்பானவர்களே.இப்போது எஞ்சுகிற வாழ்வில் முதல் நற்செய்தி எதுவுமே நிசமில்லை என்பது.இரண்டாவது நற்செய்தி.எதையும் நிசமில்லை என்று நிரூபித்துவிட முடியாது என்பதும்.

வாழ்வியல் மதிப்பீடுகள் திரும்பப் பெறப்பட்ட பிற்பாடு இப்போது வாழக் கிடைத்திருக்கிற வாழ்க்கை 2.0வில் முன் பழைய சொற்களுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. என்றாலும் சில சொற்களின் செல்வாக்கு அபரிமிதமானதாகத் தொடர்கிறது..மொழி மாற்றேதும் அற்ற பற்றுதலாகவே இன்னும் அதிகதிகம் நீடிக்கும் என்பது ஆறுதல் அளிக்கிறது.மொழியைப் பற்றிக் கொள்பவகளை ஒருபோதும் கைவிடுவதில்லை அது.கவிதைகள் எண்ணிக்கைகளின் மூலமாக அளவெடுக்கப் படுவது உவப்பதற்கில்லை. என்றாலும் தொடர்ந்த நம்பகமாகக் கவிதைகளின் மீதாக மாறாப் பற்றுதலோடு தன் வாழ்காலத்தின் வகுப்பானாகக் கவிதைகளைக் கைக்கொள்வதென்பது யாதொரு பந்தமுமற்ற அன்னிய தெய்வம் ஒன்றை மெல்லப் பழக்கி அதன் மனோபாவத்தில் செல்வாக்குப் பெறுகிற காலகால சூட்சுமத்தை ஒத்திருக்கிறது.அந்தக் கலை சக்திஜோதிக்கு நன்கு கைவரப் பெற்றிருக்கிறது.

ஜோதியின் கவிதைகள் உடல் மனம் பிரபஞ்சம் ஆகியவற்றிற்கிடையிலான மின்பாய்ச்சலாகத் திகழ்வது யதார்த்தமான ஒன்று.யூகத்திற்கு அப்பாற்பட்ட காலம் அறிந்த காலம் கடந்த காலம் தற்காலம் மற்றும் இல்லாக் காலம் எனப் பல படிநிலைகளின் உறைதல்களை எடுத்து தன் மனதின் கூறலுக்கு ஏற்றாற் போல அவற்றை அடுக்கியும் கலைத்தும் பார்க்கும் கவிதாயினி அவை சொல்ல முயலும் கவிதைகளில் தான் இடம்பெறுவதன் மற்றும் நீங்குவதன் மூலமாகவும் பகுதித் தோற்றம்  கொள்வதன் அடிப்படையிலும் ஒரே சித்திரத்தின் பல்வேறு குறுக்கு வெட்டுத் தோற்றங்களை உருவாக்கிப் பார்க்கிறார்.சர்வ காலமும் தன் அகத்தின் எதாவதொரு வீதியில் அலைந்து கொண்டே இருக்கிற ஆறாமனம் அவருக்கான வெள்ளிவீதியைத் திறந்து தந்திருக்கிறது.

காலத்தை அற்றுப் போகச் செய்வது மாயம்.அதற்கு முன்னும் பின்னுமாய் நம்பகத்திலிருந்து எதையும் மறுதலிக்கத் தலைப்படுகிற அறிவுமனத்தின் அகமயக்கம் சின்னஞ்சிறிய சலனமாகவோ மாபெரும் வெடிப்பாகவோ நிகழக் கூடும்.தன்னை அகழ்வது குருதிக் கொடை போன்று ஒழுங்கமைந்ததல்ல.அது ஒழுங்கறுதலின் தானம்.ஆரவாரத்தின் ஆழத்திலிருந்து கவிதைகளைக் கண்டடைவது வரைக்குமான சஞ்சாரத்தில் சொற்களில் வார்த்திட இயலாத அலுப்பில் ஒரு அபத்தத்தின் இருளாய்ப் பெருகிச் சிதறிவிடுகிற அபாயத்தின் தொடுபுள்ளியாய்த் தொடர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களை லாவகமாகக் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.மொழி யாவர்க்கும் பொதுவான ஒலித்தலைக் கொண்டிருந்த போதும் அவரவர் மோனத்தில் வெவ்வேறாக விரிய வல்ல மந்திரமலர்.

அவரது சொற்களிலேயே சொல்வதானால்

மாயத்தாமரை என்றொரு கவிதை

அவனுக்கும் அவளுக்குமிடையே/தூரம் பலகாதம் // காலமோ / சிறுகணம் தான் // நினைவுகள் ஏங்கி / நிரம்பும் குளத்தில். மெல்லிய சல்லாத்துணியென/ அசைந்திறங்கும் வெயில்/பூக்கச் செய்கிறது/மாயத்தாமரையை.

மேலோட்டமாகப் பார்த்தால் இதுவும் ஒரு கவிதை என்று தோன்றக் கூடும்.மகாகவிகள் மன்னிக்க.இதில் வருகிற சல்லாத்துணி என்ற ஒரு சொல்லை மாத்திரம் எடுத்து வைத்துக் கொண்டு எப்போது ஈரம் காயும் என்று பார்த்தபடி ஜென்மாந்திரங்கள் கடந்து பார்த்தேன்.,அதன் ஈரம் ஒரு குறளி.அதன் ஈரம் பற்பல ஆறு.அதன் ஈரம் தீராக்கடல்.அதன் ஈரம் மாயத்தாமரை.இப்படி ஒரு கவிதையை எழுதுவதற்குப் பழகிப் பூத்துக் காய்ப்பேறிய கவிதாமனம் வேண்டும்.

ஒரு மலைஸ்தலக் கோயிலைச் சென்றடைவது வரையிலான பற்பல படியேற்ற காலத்தின் தனிமை நகர்தல்களாகவே சக்தி ஜோதியின் பெரும்பாலான கவிதைகளைக் கொள்ள முடிகிறது.தன் கவிதைகளை ஒன்று மற்றவற்றோடு சிடுக்கும் முடுக்குமாய்ப் பின்னிப் படர்வது பற்றி யாதொரு அசூசையும் கொள்ளாமலேயே தொடர்ந்து கவிதைகளை அணுகுகிறார் ஜோதி.அவருடைய கவிதைகள் ஒன்றோடொன்று நெருக்கமாய்ப் பற்றுதலும் படர்தலுமாய் இருப்பதைத் தனக்கு வெளியே தன் கவிதை நிகழ்த்துகிற அதன் இயக்கநீட்சியாகவே உணர்கிறார்.அதனாலேயே அவரது கவிதைகள் பெரும்பாலும் அதிகம் புழக்கத்திலாழ்கிற உணர்தல்களின் சின்னஞ்சிறு தரவுகளை மீண்டும் மீண்டும் அல்லது பற்பல முறை வாசிக்கிறவனுக்குள் நிகழ்த்தித் தருவது.66666அவள் அறிவாள் இது பூக்கிற பொழுதும் அல்ல உதிர்கிற காலமும் இல்லை. என்று ஆரம்பிக்கிற வேர் நிலம் என்ற கவிதை நம்மைக் கொண்டு சேர்ப்பிக்கிறது சிறு செடியென வேர் கொண்டிருக்கிற அவளது நிலத்தில்.,நாம் வேறாகிறோம்.

சக்தியின் பெண் மனம் ஒரே ஒரு பெண்ணின் தொடர்பொதுக்குரலாகத் தன் கவிதைகளை ஒருபோதும் உருவாக்கி விடுவதில்லை.பெருங்கூட்டச் சந்தையில் நடுவாந்திரக் கண்ணாடிக் கடையில் தெரிய வாய்க்கிற பற்பல முகங்களின் ஒருகாலத் தோற்றங்கள் அவருடைய கவிதைகள் அதன் முகங்கள் எல்லாமும் அவர்தான்.எந்த முகமும் அவரில்லை.மனதை வகுப்படு ஒரு உத்தி.சக்திஜோதி தன் மனதைக் கொண்டு பிற பெண் மனங்களைப் பெருக்கி விடையறிய முனைகிறார்.இதை அவரது பலமும் பலவீனமுமாய்க் கொள்வது  அவரவர் மனப் பாங்கு.சக்தி ஜோதி தான் கண்டறிந்த மொழியைத் தனியே உருவாக்குவதில் ஆழ்ந்த கவனத்தோடே இத்தனை தொகுதிகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.சன்னதத்திலிருந்தோ கனவின் இருளில் காண வாய்க்கிற சித்திரங்களின் உபவசனங்களிலிருந்தோ குறளியின் பித்துப் பகிர்தல்களைப் போலவோ எல்லாம் தன் கவிதைகளை உருவாக்குவதில்லை.மாறாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியில் நிகழ்ந்து கொண்டிருக்கிற கவிதையின் மூலமான நதியாட்டத்தில் தன் பங்கு என்ன என்று அவதானிக்கிற கவி சொல்லியாகவே சக்திஜோதி திகழ்கிறார். அப்படித் தொடர்வதற்கான பொறுப்பேற்றலின் தன்னாலான செயல்பூர்வப் பங்கேற்பாகவே ஜோதியின் கவிதைகளைப் பார்க்க முடிகிறது.

தமிழின் மீது மாறாப் பற்றுக் கொண்டிருக்கிற ஜோதி அவரது வாழ்வின் மாபெரிய ஒப்புக் கொடுத்தலாகவே தனது கவிதைகளை ஆர்ப்பரிப்பு மிக்க கடல்முகம் போலவே முன்வைக்கிறார் எனத் தோன்றுகிறது.அவரது கவிதைகள் தான் அவர் என்று கொள்வதானால் அந்தக் கூற்றை மறுக்கப் போவதில்லை அவர்.மேலும் அவரது பொதுப்பொருட்தேர்வுகளில் ஒளியும் இருளும் கடலும் ம்ழையும் தன்னந்தனிமையும் பேரண்டமும் ஆழமும் மாசிகரங்களும் என அளவற்றுதளும் அளவிடற்கரியதுகளும் நிரம்பித் ததும்புகின்றன.தன் கவிதைகளின் வாயிலாக சின்னஞ்சிறு கண்களுக்கு அகப்படாத மாவுரு ஒன்றை சித்தரிக்க நாளும் முயல்கிறார் ஜோதி.காதலின் சொல்லாத சின்னஞ்சிறிய தருணங்களைப் போகிற போக்கில் எழுதிச் செல்கிற ஜோதியின் இப்படியான கவிதைகள் எனக்கு மிகவும் இணக்கமாய் இருக்கின்றன.888888 சுவை என்ற ஒன்று இப்படி இருக்கிறது...இனித்த முத்தம் எதுவும் செய்யவில்லை துளிக் கண்ணீர் விழுந்து கரித்த ஒன்றோ இன்னும் எரிக்கிறது இருதயத்தை999999மாபெரிய ஆறுதல் தேவையில்லை.தேவை கரம்பற்றி ஒரு சிறு அழுத்தம்.பெரும் எண்ணிக்கையிலான சொற்களை விடவும் நானிருக்கிறேன் என்ற சொல் போதுஅமன பெரியது./அந்த அளவில் சின்னஞ்சிறிய காதல் கவிதைகள் காதலின் ராஜவாயில் சாவிகள்.சக்தி ஜோதி காதலை எழுதுவது எளிதாய்க் கைவருகிறது.

இன்னும் நிறையக் கவிதைகள் இந்தத் தொகுதியெங்கும் என்னைக் கவர்ந்தன.சக்தி ஜோதி கவிதைக்கானவர்.அவருடைய கவிதைகள் எளியவை.இனித்தாலும் கசந்தாலும் நிசமானவை.

ஒளி மூலம் என்ற ஒரு கவிதை என்னை மிகவும் கவர்கி'றது.எண்ணையைக் கொண்டு எரிவதாக நீங்கள் நம்பும் இந்ததீபம் நிஜத்தில் அதனை விழுங்கக் காத்திருக்கும் அந்த இருட்டுக்கு முன் தோற்றுவிடக் கூடாதே என்ற வைராக்கியத்தில் தான் அதிகமாய் ஒளிர்கிறது என்பதான இந்தக் கவிதையின் ஒளித் தெறல் தான் சக்திஜோதி நான் நீங்கள் யாவருமே.வாழ்தல் இனிது நன்றி

அன்போடு
ஆத்மார்த்தி

(தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் இலக்கிய சந்திப்பில் 10.06.2018 அன்று மதுரையில் வாசித்த கட்டுரை)