புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காதலின் உபபொருட்கள்


இதை மட்டுமா இழந்தோம்: 11. காதலின் உபபொருட்கள்


“பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு” பாடலை கேட்டாலே வெறியாகிவிடுவார் முத்தண்ணன். மதுரையே வேண்டாம் என்று வட இந்தியாவில் வேலைக்கு சென்று விட்ட முத்தண்ணன் ஒரு அபூர்வப்பிறவி.வெளியில் தன்னைத் தெரிவித்துக்கொள்வதை விரும்பாதவர்.இந்த இரண்டு முன் தகவல்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால்,அவர் ஒரு சண்டைச்சேவல்.மணி கேட்பவரிடம் கூட சண்டைக்கு போய்விடும் அபாயன்.அடிப்படையில் அவரது மேதமையே  இந்தக் குணவிலக்கிற்கும் காரணமாகி விட்டிருக்கக் கூடும்.

“பொத்திவெச்ச மல்லிகை மொட்டு பாடல்” அப்படியொன்றும் சோகத்தைத் தூண்டுவதில்லையே என்று யோசிக்கிறவர்களுக்கு,காரணம் பாடலில் வருகிற ஒரு பேர். மல்லிகா.அந்தப் பேரை மறப்பதற்காகவும் அந்தப் பாடலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவும் முத்தண்ணன் செய்தது தான் தொலைதூரத் தொலைதல். வேலையை மாற்றிக்கொண்டு இந்திய வரைபடத்தின் பாதநிலத்தில் இருந்து தன்னை வேரறுத்துக்கொண்டு வேறொரு இடத்தில் தொட்டிச்செடியாய்த் தன்னை மாற்றிக்கொண்டது.

ஒரு பாடலும் ஒரு பெயரும் தான் அவரை எப்போதும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. காரணம்…நட்பிற்குப் பின்னதான காதல்.மல்லிகாவுக்கும் முத்தண்ணனுக்கும் ஸ்னானப் ப்ராப்தி ஏதும் இல்லை.அவர் மதுரை.மல்லிகா பிறந்து வளர்ந்ததெல்லாம் தேனிப்பக்கம் ஒரு கண்மறைவுக் கிராமம்.ஒரு புத்தகக் கடையில் சந்தித்தது விபத்து.அப்போதைக்கு இனிமையாய்த் தொடங்கிய விபத்து உணர்வுநரம்புகளை முறித்துப் போட்டது.

கடித நட்புக்காலம் அவர்கள் இரண்டு பேரையும் வளர்த்தது.காதல் கோட்டைக்கெல்லாம் முன்னால் கட்டப்பட்ட களிமண் கோட்டை அவர்களுடையது.முத்தண்ணன் ஒரு பரிபூரண ஜீனியஸ்.அவரை எல்லாருக்கும் பிடிக்கும்.பிடித்தே தீரும்.கர்நாடக சங்கீதம் தொட்டு கலைப் படங்கள் வரை,செஸ் துவங்கி ஷேடோ ப்ளே வரை.உலக இலக்கியங்களில் ஞானமும் இசையில் அபாரப்ரியமும் மனித நேயமும் கர்வமற்ற தன்னிகரில்லா அன்பும் அவர் ஒரு கதாநாயகன்.

அவர்கள் இருவரிடையே கடித நட்புக்காலம் மொத்தம் 9 மாதங்கள்.நான் அவரது சிஷ்யன் என்றே அறியபட்டவன்.நான் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி முதல் வருடம் படித்த இரண்டு ஆண்டுகள் அவருடன் கழித்தேன்.அவர் தான் என்னை செப்பனிட்ட செம்மல்.தனக்குத் தெரிந்ததனைத்தையும் எனக்குள் உள்ளீடு செய்துவிடும் அவசர அவசியத்தை எதனாலேயோ அவர் உணர்ந்தே இருந்தார்.அந்த இரண்டு  வருட காலத்துக்குள் நான் நானாகி இருந்தேன்.அந்த நான் தான் இன்றுவரையிலான எனது நீட்சி என்று பெருமையாகச்சொல்லலாம்.

அந்த 9 மாத கடித நட்புக்காலத்தில் எழுதப்பெற்ற இரண்டு முனை கடிதங்களை தொகுத்து இன்றைக்கு ஒரு புத்தகமாக ஆக்கினால் ஹாரிபாட்டர் அளவுக்கு விற்கும் என்று சொன்னால் அது அதீதமல்ல.இன்றைக்கு செல்ஃபோனின் வளர்ச்சி நிலங்களுக்கிடையிலான கண்தெரியாச்சுவர்களை வெடிவைத்துத் தகர்க்கின்றன என்றால் இணையமும் இன்னபிறவும் யாரையும் யாருடனும் நட்புக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இறுக்கமாகவும் பிரிந்து செல்லவுமான மொத்த உச்ச சுதந்திரத்தை வாரி வாரி வழங்குகின்றன.ஆனால் அடுத்த தெருவில் இருக்கிற ஒருவர்  மாபெரிய நாயகனாகவோ மனநிறை நாயகியாகவோ இருந்தாலும் கூட அவர்கள் ஒருவருக்கொருவர் அறியாமலேயே ஆயுள் முடியும் இதற்கு முந்தைய காலகட்டத்தால் சபிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களில் வரம் வாங்கி வித்யாசப்பட்ட இருவர் தான் முத்து மற்றும் மல்லிகா.

மல்லிகாவின் ஞானத்தேடல் அளப்பரியது.அவர் கேட்டு அனுப்புகிற கேள்விகள் வியப்பை சந்தோஷத்தை மற்றும் பயத்தை கலந்த பிரமிப்பை ஏற்படுத்தும்.நானும் முத்தண்ணனும் சுப்ரமணிய புரத்தில் இருக்கிற அவரது மாடித்தனி மாளிகையில் அமர்ந்து இருக்கையில் முன் பகல்களில் கதவு தட்டப்பட்டால் தபாலில் அன்றைக்கு வந்த கடிதத்தை பிரித்து எனக்கு சப்தமாக வாசிப்பார்.பெர்சனல் என்றெல்லாம் எதுவும் அற்ற உண்மையான இரண்டு மனங்களுக்கிடையிலான கற்றலும் கேட்டலும் அந்த கடிதங்களில் மின்னிப்பூக்களாய் பிரகாசிக்கும்.

வாசித்துக்கொண்டே இருக்கையில் முத்தண்ணன் சொல்வார்…”எப்பிடி கேக்குறா பார்…இவ தாண்டா வாசகி….இது எவ்ளோ மைன்யூட் இடம் தெரியுமா..?மூணு தரம் வாசித்தால் தான் எனக்கே புரியும்.இன்னொண்ணு….இதை ஒரு கேள்வியாக்காம அனுபவ அவசரத்துல கடந்து போனவங்க தான் நிறைய்ய பேரு…ஷீ இஸ் வெரி க்ளெவர்..”என்பார்.

ஷீ இஸ் க்ளெவர் ஷீ இஸ் க்ளெவர் என்று அவர் அடிக்கடி வசீகரப்பிடிப்பில் உதிர்த்த வார்த்தைகள் மெல்ல வேகமெடுத்தன.ஒரு வாரத்துக்கு மூன்று கடிதங்கள் இங்கே இருந்து அங்கே அங்கே இருந்து இங்கே என மனசொற்றிப் பயணிக்கும் காகிதப் புறாக்களாயின. தி.ஜா, சுஜாதா, நா.பா, தஸ்தாயெவ்ஸ்கி, ந்யெட்ஷே,ஜேகே,என இனிஷியல் மன்னர்களும் இண்டர்னேஷனல் இறைவர்களும் மானசீக வெளியில் அந்த இரண்டு பேரின் கடிதநட்புக் காலத்தை ஆசீர்வதிக்கவே செய்திருப்பார்கள்.அந்த அறைக்கு வருகிற மகேஷ்,ராஜா,கல்யாணி என எல்லாரும் மல்லிகாவின் கடிதங்களைக் கையிலெடுத்து படிப்பது ஆனந்தவிகடன் இருந்தால் எடுத்துப் படிப்போமல்லவா… அந்த அளவுக்கு சகஜம்.இரண்டு பேருக்கு மட்டும் தனித்து இருந்தவை இரண்டு முகவரிகள் மட்டும் தான்.

வென்றெடுத்த இன்பமெல்லாம் முடிவுக்கு வந்தது.1993ஆமாண்டு ஒரு மழைபொழியா மார்ச் மாத சனிக்கிழமை.அன்றைக்கு தான் முத்தண்ணன் தன் வாழ்க்கையில் முதன் முறையாக “மனசு சரியில்லடா ரவீ” என்றார்.நானும் ராஜாவும் அதிர்ந்தது அவருக்கு சரியில்லாமற் போகுமளவுக்கு ஒரு மனசு இருந்ததா என்பதே புதுமையாய் எண்ணி தான்.

அதற்குப் பிறகு மல்லிகாவிடமிருந்து கடிதமெதுவும் வரவில்லை முத்தண்ணனுக்கு. முத்தண்ணன் அதன் பின்னர் மெல்ல தனது பிம்பத்தில் இருந்து மாறினார்.எங்களிடம் இருந்து விலகவும் எங்களை விலக்கவும் முடிவுகள் எடுத்துச்செயல்படுத்தினார்.ராஜாவும் இன்னபிறரும் அவருடனான இறுக்கத்தை குறைத்துக்கொண்டனர் என்றே சொல்லலாம்.

என்னால் அப்படி மொத்தமாய் விலகி நிற்க இயலாமல் போனதற்கு காரணம் எடுத்தேறி ஏழு கிலோமீட்டர் பயணம் செய்தே அவரது அறையை என்னால் அடைய முடியும் என்பதால் அவர் முகத்துக்கு நேராய் என்னை புறக்கணிக்க வழியின்றி அனுமதித்தார் என்பதே நிஜம்.நானும் கேட்கவில்லை.தானும் சொல்லவில்லை.அதன் மௌன இடைவெளி காலம் இருள் நிறைந்த நிசப்தங்களால் மெல்ல நகர்ந்தது.

ராஜா சொன்னதன் படி “மல்லிகா இவரை லவ் பண்ணுதுடா…இவருக்கு அதை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.”என்றது நம்பமுடியவில்லை.மகேஷோ “ரெண்டு பேருமே லவ்பண்றாங்கய்யா.”என்றான்.கல்யாணி என்கிற கல்யாணராமன்..”அதெப்புடி..”?நம்மாளு வாங்காயிட்டாப்ள…அது வேணாங்குதுன்னு நினைக்கிறேன்.எப்பிடி கேக்குறது..?”என்றது தான் உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கச்செய்தது.

பிறகொரு தினம் .அன்றைக்கு அவர் பிறந்த நாள்.ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி.1993 ஆம் வருடம்.பிறந்த நாள் மற்றும் சில முக்கிய தினங்களில் மட்டும் தீர்த்த நீராடல் புரிவார் முத்தண்ணன். என் நண்பர்கள் ராஜா மகேஷ் இருவரும் மதுஞானிகள்.காரணமின்றிக்குடிப்பதையும் குடித்து விட்டுக்காரணம் காணத்துடிப்பதையும் தொழிலாய்கொண்டவர்கள்.கேட்கவா வேண்டும்…? அன்றைக்கு அலுவலகம் சென்று விட்டு வந்துவிடுவதாக சொல்லியிருந்த முத்தண்ணனுக்காக காத்திருக்கையில் போஸ்ட்மேன் வந்து ஒரு கல்யாணப் பத்திரிக்கை அஞ்சலில் வந்திருந்ததை கொடுத்துவிட்டு சென்றார்.கேஷுவலாக அதைப் பிரித்த மகேஷுக்கு குழப்பம்.எனக்கு குழப்பமே இல்லை.அதிர்ச்சி மட்டும் தான்.மல்லிகாவின் திருமணப் பத்திரிக்கை.

அந்தப் பத்திரிக்கையை அண்ணனிடம் மறைத்துவிட்டோம்.ஜாலியாக குடித்துவிட்டு ஒரே கும்மாளம் தான்.அன்றைக்கு போல் முத்தண்ணன் அவ்வளவு சிரித்து நான் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியுமாக கழிந்த அற்புதமான தினப்பொழுது. வரவழைத்து உணவுண்டு விட்டு அனைவரும் லேசான கிறக்கத்தில்; இருக்கையில் அண்ணனே தான் ஆரம்பித்தார்.


அவரது டேப்ரிக்கார்டரில் தனக்கு விருப்பமான இளையராஜா ஹிட்ஸ் கேசட்டை போட்டார்.முதல் பாட்டே பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு தான்…ஹிந்தோளத்தில் ராஜா உருக்க எஸ்.பீ.பி ஜானகி இருவரும் உருக…கேட்கையிலெல்லாம் கிறுகிறுக்கும்..எனக்கும்…

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு

பூத்திருச்சி வெக்கத்த விட்டு…

பேசிப்பேசி ராசியானதே..

மாமன் பேரச்சொல்லி சொல்லி ஆளானதே…      ரொம்ப நாளானதே….

கூடவே பாடிக்கொண்டிருந்த முத்தண்ணன்…”தம்பிகளா…உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம்டா….மல்லிகாவை நான் விரும்புறேன்.அவ கிட்டே சொன்னேன்.முதல்ல மறுத்தா… அப்புறம் கொஞ்சம் பொறுங்க எங்கப்பாரு கிட்டே பொறுமையா சொல்லி புரியவெக்கிறேன்’நு டைம் கேட்டுருக்கா…”

இந்த வாடைக்காத்து சூடை ஏத்துது…பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு..

“ரவி…மல்லிகாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்டா…ரெண்டு மூணு முறை மதுரைக்கு வந்துருக்கா…நாங்க ரெண்டு பேரும் படத்துக்கெல்லாம் போயிருக்கோம்.அப்பல்லாம் வெறும் நட்பா தாண்டா இருந்துச்சி…காதல் பைத்தியக்காரத்தனமானது டா..அதெப்படி அவ என்னைய வேணாம்னு சொல்லுவா..?” உள்ளே இறங்கிய பீர் தந்த தைர்ய உற்சாகத்தில் அழுத்தம் திருத்தமான குரலில் பேசிக்கொண்டிருந்த அண்ணனை பார்க்கையில் ஆறாக்கோபம் வந்தது எனக்கு.மஹேஷும் ராஜாவும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே நான் ஒன்றும் பேசாமல் “அண்ணே..இந்தாங்க…இப்ப தான் போஸ்ட்மேன் குடுத்தார்…”என்று நீட்டினேன்.

அது கூடாது இது தாங்காது

சின்ன காம்புதானே பூவத் தாங்குது

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு

என்று கடைசி முறையாக எஸ்.பீ.பி இழுக்க அதற்கு முந்தைய கணத்தில் இருந்து வெளியேற முடியாமல் வெளியேற விரும்பாமல் முத்தண்ணனின் கண்கள் நடந்துகொண்டிருப்பது ஒரு கனவு என்று நிறுவ முயன்று தோற்றன.நான் வக்கிரமான அமைதியாய் இருந்தேன்.வாழ்வில் அதன் பின் எனக்கே எனக்கென்று எத்தனையோ தனித்த துக்கப் பொழுதுகளைச் சந்தித்து உள்வாங்கி அதில் இருந்து வெளியேறி வந்திருக்கிறேன்.ஆனால் அது என் வாலிபத்தில் என் கண்ணெதிரே ஒரு மனிதன் மனம் சிதைந்து நொறுங்குவதை சந்தித்துக்கொண்டிருந்தேன்.

எந்த ஒரு துக்கமும் அது அறிமுகமாகும் நிமிடம் மட்டும் தான் அதிபயங்கரமானது. அதற்கடுத்த நிமிடங்களிலேயே அதைப் பழகி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனிதனுக்கு வாய்த்துவிடுகிறது.இதனை  யார் சொல்லும் பொழுதும் நம்பிக்கை வராத அதிசயம் தனக்கு நிகழும் பொழுது மட்டும் அந்த மனிதன் உணர்கிறான்.எனக்கிருந்த துக்கத்தைக் கூடப் பிரதிபலிக்காமல் உடனே அதில் இருந்து தன்னைப் போலியாகவாவது வெளியேற்றிக்கொண்டார் முத்தண்ணன்.

“பைத்தியக்காரி டா…என் கிட்டே எவ்வளவு பேசுனா…?சரி விடு.”என்று எழுந்து படியிறங்கி எதிர்ப்புறம் சற்று தள்ளி இருந்த டீக்கடைக்கு சென்றார்.உடன் சென்றோம்.அவர் கையோடு எடுத்து வந்த மல்லிகாவின் திருமணப் பத்திரிக்கை டீக்கடையை ஒட்டி ஓடிய சாக்கடையில் எறிந்து விட்டு தம்மைப் பற்றவைத்தார்.

அதன் பின் தான் அவரது வட இந்திய வாசம்.ஒரு பொட்டுக்கண்ணீர் இல்லை.ஒரு புலம்பல் இல்லை.எந்த விதத்திலும் ஒரு பெண்ணை குறை சொல்லியோ அவமானப்படுத்தியோ மறுத்தோ திரித்தோ எதையும் இன்றைக்கு வரை சொல்லாதவர் முத்து.மேலும் காதல் என்றும் தோல்வி என்றும் இன்றைக்கு வரை திரையிலும் பொதுவிலும் ஏகப்பட்ட கொனஷ்டைகள் அரங்கேறி சலிப்பை ஏற்படுத்தி இருக்கையில் ஒரு நிராகரிப்பை தனக்குள் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு அதனை தானாகவே அனுபவித்து செரிமானம் செய்துகொண்ட பேராண்மை அவருடையது.

அவரது கோபமொத்தமும் “பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு” பாடல் மீது திரும்பியது என்று தான் சொல்லவேண்டும்.அது ஒரு பாவனை.போலிக்கோபம்.வெறு வழியின்றி தனக்குத் தானே செய்துகொண்ட விடுதலை ஏற்பாடு.அன்றி தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை வெறுப்பதாய்க் காட்டிக்கொள்வதன் மூலமாய் வேறொரு துரத்தும் நிஜத்தின் கண்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சூட்சுமம்.அந்தப் பாடல் அதன் பின் இன்றைக்கு வரை எங்கே ஒலித்தாலும் அவர் கேட்க மாட்டார்.ஒன்று நிறுத்த சொல்லுவார்.அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச்செல்வார்.

முத்தண்ணனை இரண்டாண்டுகளுக்கு முன்னால் சென்னை ஏர்போர்ட்டில் சந்தித்தேன்.என் சகோதரி இங்கிலாந்தில் இருந்து வரும்பொழுது வரவேற்பதற்காக காத்திருக்கையில்.அவர் கையைப் பிடித்துக்கொண்டு அவரது மனைவியும் மகளுமாய் வந்துகொண்டிருந்தனர்.என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டேன்.”போடா லூசு…தூரத்திலேயே பார்த்திட்டேன்.நீ என்ன மாறுவேசத்துலயா வந்துருக்கே..?”என்று அவரது பஞ்சாபி மனைவியிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.எல்லா மொழிகளுக்கும் பொதுவான சிரிப்பொன்றை சிரித்தது அவரது குழந்தை.

“அண்ணே…கல்யாணமே வேண்டாம்னீங்க…உங்களை இப்பிடி பார்க்க சந்தோஷமா இருக்குண்ணே….”என்றேன்.என் குடும்பத்தாரிடம் ஒருசில நிமிடங்கள் இரவலாய் பெற்றுவிட்டு வெளியே வந்தோம்.,அவரை வரவேற்க கார் வந்திருந்தது.அதில் அவரது மனைவி மகளிருவரையும் ஏற்றிவிட்டு தானொரு சிகரெட்டைப் பற்றவைத்து எனக்கொன்றை நீட்டினார்..

புகை சூழ் நெருக்கத்தில் நின்ற என் தோளைத் தட்டினார்.ராஜா மகேஷ் மற்றும் எல்லாரைப் பற்றியும் விசாரித்துவிட்டு போன் நம்பர்களைப் பறிமாறிக்கொண்டு அந்த சிகரட் கரைந்து முடிக்கும் வரை எதையெதையோ பேசினோம்.கடைசி இழுப்பை இழுத்து விட்டு சொன்னார்.

“ரவீ…ஆஃபீஸ்ல என் கூட வேலை பார்த்தவன் என்னோட நல்ல நண்பன் மனைவி இவ.அவன் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்.ரொம்ப கன்வின்ஸ் பண்ணி இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.கைக்குழந்தையா இருந்த பாப்பாவுக்கு தகப்பன்னு என்னை தான் தெரியும்.யார்ட்டயும் சொன்னதில்லை…உங்கிட்டே மறைக்க தோணலை…சந்திக்கலாம்…”என்றவர் கிளம்பி சென்றபின்னும் அதே இடத்தில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தேன்.

(முத்தண்ணன் என்பது கற்பனைப் பெயர்.அவர் பேர் வேறு..சம்பவங்களின் சத்தியம் கருதி.)

இதை மட்டுமா இழந்தோம்…?

இரண்டு பேருக்கான நட்பில் காதலில் தரப்பட்ட மற்றும் பெறப்பட்ட உபபொருட்கள் தனித்த பரிசுகள்,பிரத்யேக இடங்கள்,சில தினங்கள்,சில அன்பு வார்த்தைகள்,செல்லப் பெயர்கள்,சில நிகழ்வுகள்,பரிசுப்பொட்டலத்தின் மேற்சுற்றப்பட்ட வண்ணக் காகிதங்களாகப் பொதுவெளியில் மற்ற எல்லாருக்கும் ஒன்றாகவும் குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் பிரத்யேக வலிகளாகவும் கழற்றி எறிய முடியாத நிழலாடைகளாக நினைவுகளாக தொடர்ந்து வருவதையும்,சம்மந்தப்பட்ட மனிதர்களிடம் இருந்து வெகுதொலைவு சென்ற பின்னரும் கூட காதலின் உபபொருட்கள் அவர்களை சுழற்றி சுழற்றி அடிப்பதையும் எண்ணுகையில் இன்றைக்கு சமூகம் கலாச்சாரம் பொது வாழ்வியல் ஆகியனவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் முந்தைய காலகட்டத்தில் ஒன்றாகவும் இன்றைக்கு வேறொன்றாகவும் இருக்கிறதையும், காதல் தோல்வி மட்டும் மாறாமல் தொடர்வதையும் வியக்காமல் இருக்க முடிவதில்லை.

உரையாடுவோம்

தொடர்ந்து…

அன்போடு

ஆத்மார்த்தி