புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

அய்யப்ப மாதவனின் ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்

அய்யப்ப மாதவனின் ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் முதல் அணுகலில் மற்றேதுமற்ற காதல் கவிதைகள் போல் தோற்றமளிப்பவை..உள்ளார்ந்த வாசிப்பில் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும் அடக்குழந்தைகளாய்த் தன் கவிதைகளை நிறுத்துவது அவரது சாமர்த்தியம்.காதல் என்றென்றும் இலகுவான கவிதைப்பொருள்.வலியும் வேதனையும் ஒருபுறம் மகிழ்ச்சிக் கணங்கள் இன்னொரு தளம் அப்படியல்ல ஆப்பிளுக்குள் ஓடுகிற இந்த ரயில்.

அகமனதின் சிதிலங்களும் அடக்கிவைக்கப்பட்ட புறக்கணிப்பும் அவமானமும் கொப்புளங்களாய் வெடிக்கிற கணத்திற்கு முந்தைய சிதைவும் கவிதைகளாக மாறுகின்றன,.அவற்றுக்கான ஒரு வெடிப்புத் துளையாக காதல் உருக்கொள்கிறது.பெருவாரிக் கவிதைகளில் சுட்டப்படுகிற அவள் என்பவள் பெயரற்ற பலராக வடிவெடுக்கிறாள்.கூடுகளாய் கவிதைவிட்டுக் கவிதைக்குத் தாவுகிறாள். கோரம் வழியும் வாஞ்சை கவிதைகளெங்கும் பிசுபிசுக்கிறது. வெற்றுக் காதல் கவிதைகளாக அல்ல. சட்டென்று கடந்து விடக்கூடிய,சாமானியர் எவரும் சந்திக்க விரும்பாத,ஒரு மென்மனம் கொண்டவனுக்கு வாழ்க்கை அள்ளியள்ளி வழங்குகிற சாபத்தின் மீது படரும் ஒளிக்கற்றைகளாக பேருருக்கொள்கின்றன.

தானும் தன் காதலுமாய் கலைந்து விரிகிற கவிஞர் முத்தங்களை ஆலிங்கனம் செய்கிறார்.தன் பேரன்பை எங்கும் வியாபகம் செய்கிறார் ."அவளற்றுப் போகிறது யுகங்கள்" என்னும் கற்பனாவசீகரத்தில் வாசிக்கிறவனைக் கிளர்த்துகிறார்.அவளைக் கற்பனித்த ஓவியமாகக் காண்பது சுவை.பொழுதுகளின் அழகைத் தான் செதுக்குகையில் "உன்னிடமே நீயாகிறேன்" என்று ததும்புகிறார்.அவளிடத்தில் ஒற்றைக் கோரிக்கையாய் "எப்போதுமே பேசிக்கொண்டிருப்பாயா?" எனக் கேட்பது ஒரு பலவீனத்தின் பேரோவியமாகிறது.தன்னையும் அவளையும் பிரித்தாடிய காலத்தின் சதி இருவரின் பிணைப்பின் இடையில் இறந்து தொங்குகிறது என விவரிக்கையில் காதலின் உறைநிலை தெளிவாகிறது.இயற்கையைக் கொண்டாடுகிற மனோபாவமும் முதுகுத்தண்டு பிசகிய வதங்கலும் கலந்த பேரோசையாய் கட்டமைகிற கவிதைகள் அபூர்வம்.பொழியும் முகில்கள் இருக்கிற வரை மழை நின்றுவிடப்போவதில்லை என்ற வாக்கியத்தின் மேலோட்டம் தகர்கையில் காதல் நோய்மையில் பொசுங்குகிறது.

யாரிடமும் பேசாத பித்து நிலையும் தனிமையும் ஒன்றல்ல.செயலற்றவனை வார்த்தைகள் நடுக்கமுறச் செய்கின்றன.ஓடத்துவங்குகிற அவனை நிசப்தம் துரத்துகிறது.அதனிடமே மண்டியிட்டு மீளவேண்டிய நிர்பந்தத்தில் புனையப்படுகின்றன கவிதைகள்.அதன் குருதிப்பிசுக்கு அவனன்றி வேறாருடையதும் அல்ல. இரவு பகல் குதிரை மழை தனிமை,ரயில், காதல் அவள் என தன்னை மீவுருச் செய்துகொள்கிற வார்த்தைகளைக் குறித்து எத்தனம் ஏதுமின்றிக் கவிதைகள் நிகழ்ந்திருக்கின்றன.

ஜெமினி பாலத்தடியில் "கல்லில் ஒளிந்திருந்த குதிரை நின்றபடி மரித்திருக்கிறது" எனும் வரிகள் வாசிப்பனுபவத்தை சிலையாக்கி விடுகிறது.."நதியோடிய கவிதாவின் முகம்" என்னும் கவிதை, தற்கொலைக்கு முன் அழுகிற கவிதா குடி மயக்கத்தில் சரிந்து கிடக்கிற பாபு,தூக்கில் தொங்குகிற கவிதா,தாய் இறந்ததை அறியாத குழந்தை என அடுத்தடுத்த காட்சிகளை மனதுக்குள் பெயர்த்துகிறது வலிமிக்கது.நாற்காலி மரணித்த மரவுடலாகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிளொன்றை கத்தி கொண்டு பிளக்கையில் ஆப்பிள் மேற்கொண்ட பயண ரயில் வீடுமுழுக்க வெடித்து சிதறுகிறது.மொசார்ட்டின் வயலின் இசை சொல்பேச்சுக் கேட்கிறது.குழந்தைப் பேறு இல்லாதவள் மழைச்சித்திரத்தில் முத்தம் பெறுகிறாள். அவளுக்குத் திரும்பக் கிடைக்காத முத்தங்களுக்காக உடைத்தெறிகிற பொம்மைகளாய்ப் பெய்து தீர்கின்றன பலமழைகள்.

சிதைந்த மனதொன்றின் வார்த்தைகளாக, மைய இழை மனிதனுக்கு மட்டுமே வாய்த்திருக்கக் கூடிய வாழ்வின் கொண்டாட்டத்தையும், வாழ்வின் நிராசைகளையும் கைவிடுதல்களையும் சபித்துக் கொண்டிருக்கக் கூடியதுமான பிறழ்நிலையின் சாட்சிகளாக இத்தொகுப்பின் கவிதைகள் விரிகின்றன. இவை மாயக்கண்ணாடி ஒன்றின் முன் நின்று கொண்டு தன் பல முகங்களால் அதனை ஏமாற்றிவிடுகிற கோமாளியொருவனின் ஆருடங்கள்,