புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மயூ மனோவின் நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திராத மழை கவிதைத் தொகுப்பை முன்வைத்து:

நிலத்தை இழத்தல் என்பது துன்பியல்.போர் என்பது வெவ்வேறு நிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மாந்தர்களின் இடையிலான மொழி, காலம்,தூரம், காரணம் எல்லாவற்றையும் அற்றுப்போகச் செய்துவிடக் கூடிய பொது அபத்தமாகத் தொடர்ந்து வினைபுரிகிறது.தற்கொலை முயல்வில் காப்பாற்றப்படுகிறவனுக்கு சட்டங்கள் முன்வைக்கும் தண்டனை போல நிலத்திலிருந்து வெளியேறிப் பல காததூரம் நகர்ந்துவிட்டவர்கள் அனைவருக்கும் நிகழ்கிறது. மரணத்தை விடக் கொடியதான இழத்தல் இன்னொரு முகந்தாங்கி வந்தேறிய பின்னதான வாழ்தலாகிறது.காலமும் கனவுகளும் எப்போதும் பதற்றத்தோடு கூடிய மனதும் எல்லா வெளிப்படுத்துதல் களிலும் கசிகிறது.குருதிகலந்த கண்ணீரின் பிசுக்கினை எங்கனம் மறைத்துக் கொள்வதெனத் தெரியாதவர்களின் நகர்தலுக்கு பற்றுக்கோலாய்க் கலையின் சகல சாத்தியங்களும் மாறுகின்றன.கவிதை ஒருமுகப்படுத்தப் பட்ட குரலாகிறது. ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தம்மை உணர்கிற அனைவரும் கேட்கும் வண்ணம் எப்போதைக்குமான எதிரொலிகளை ஒலிக்கச்செய்கிறது.

பிடுங்கி நடப்பட்ட மனித மனங்கள் பித்தாகித் தெளிகையில் வேறொன்றாகத் தம்மை உணர்த்துகின்றன.கூச்சலும் கோரிக்கைகளுமற்று தமக்கு நிகழ்ந்தவற்றை நிகழாத நிலங்களெங்கும் மொழியின் துணைகொண்டு சற்றும் சமரசமின்றி எடுத்துரைக்கின்றன.பெயர்க்கப்பட்ட வதங்கலை,பரிசளிக்கப்பட்ட நோய்மையை,தீர்வுக்கும் நகர்வுக்கும் சம்மந்தமற்று பித்தாக்கப்பட்ட துயரத்தை நிசப்தத்துக்கு அருகாமைக் குரலொன்றில் எந்தவித இறைஞ்சுதலுமின்றி பதிவு செய்கிற கவிதைகள் மயூமனோவினுடைய "நாம் பேசிக்கொண்டிராத போது பெய்திராத மழை." தொகுப்பினை முன்வைத்து               

மயூமனோ தனக்கு வழங்கப்பட்ட வாழ்தலின் மாற்றத்தை விரும்பாமல் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்.சப்தமாய் சிரிக்கவும் ஓங்கிக்குரலெடுத்து அழவும் தயாராக இல்லாத மிதமான மொழியைத் தேர்வு செய்கிறார்.உறுதியான குரலில் தன் கவிதைகளின் மூலமாய் எங்கனம் தான் வெளிப் படுகிறோம் என்பதைக் குறித்த கவனம் இழக்காத வண்ணம் தன் கவிதைகளைக் கட்டுகிறார்.சொல்லக் கேட்கையில் பேரதிர்ச்சிக்குண்டான எந்தவொரு செய்தியும் அவரிடத்தில் இல்லை.மாறாக மயூமனோ சின்னச்சின்ன கற்களை ஓயாது எறிந்து கொண்டே இருப்பதை விரும்பிச்செய்யும் பிடிவாதக் குழந்தை போல் வெளிப்படுகிறார்..

கவிதைகள் தம்மை எழுதுவதற்கான கருவிகளில் ஒன்றாக இயைந்து செல்கிற கவிமனம் வினையாடுகிறது என்ற போதும் மயூவின் கவிதைகளில் மேதமைத் தொனி,சிக்கலான பூடக மொழி இவ்விரண்டும் இன்றி வாசகனுக்கு அனுபவத்தை பெயர்த்திவிடுகையில் இருக்கிற முன் நோக்கம்  கட்டுப் பாடற்றுக் கலைந்து கிடக்கின்றது..விரித்தால் தன் குழந்தமையில் இருந்து வளர்கையிலெல்லாம் சிதைவதும் விதிக்கப்பட்டிருக்கிற வாழ்தலில் ஒரு சுழல் போல் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு புலம் மாறுதல் என்பது ஊடாடும் வெட்டுக் கத்தியாக நேர்ந்ததன் பின் அலட்சியத்தை தவிர்க்க இயலாத மிகுதிச்சொற்கள் தன்னுடையவை என்று உணர்த்துகிறார்.அவரது கவிதைகளெங்கும் பொங்கிப் பெருவூற்றேடுக்கிறது அலட்சியம்.

வாழ்தலில் என்ற கவிதையில் பெருந்தெருக்களின் கறுப்புகளைக் கழுவித் தோற்கும் மழைத்துளிகளின் மேல் வைத்த காதலில் கொஞ்சம் மீதமிருக்கிறது அதை நான் உனக்குத் தருவேன்.என்னும் மனோ வழுவிய கவிதை என்ற ஒன்றில் ////இயல்பிருத்தலுக்கு முயன்று தோற்பதும் வெல்வதுமாய் மயங்கிச்சாய்கிறது இன்றைய பொழுது/// என்று பொழுதின் மீது சாட்டுகிறார்.எதனையும் கவிப்பொருளாக மாற்றிக்கொள்வது லாவகமாகிறது.தரையில் பதித்த////மொசைக் கற்களின் கறுப்புப் புள்ளிகள் கலைந்து பிரிந்தன எழும்பிப் பறந்து காற்றுடன் கதைத்தன//// என்கையில்.

மழை என்பது மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றாகவும் புலம் பெயர்ந்தவர்களுக்கு வேறொன்றாகவும் இருப்பது பல கவிஞர்களின் பொதுமை. நிலத்தை வேறுபாட்டோடு விழுங்கலோடு ஏற்றுக்கொள்ளும் எவர்க்கும் வானம் அணுக்கமான வெளியாகிறது.திசைகளற்று தத்தமது வார்த்தைகளை வெளியில் பிதற்றுகிறவர்களுக்கு மழை மட்டுமே உதவிபுரிகிறது. அழுகிற குழந்தையின் பிடிவாதம் நகக்கீறல்களாய் மழையின் உடலெங்கும் பதிகின்றன.மயூ தலைப்பில் துவங்கி அனேகக் கவிதைகளில் மழை எட்டிப்பார்க்கிறது.///ஏமாற்றிய மழையை மழலையில் சபித்தபடி உறங்குகிற குழந்தை கையில் இன்னும் விழாதிருந்தது காகித ஓடம்.///தெரு கழுவிப்போன சாம மழையுடன் விழித்துக்கொண்டது அவளின் குறுங்கனவு.....என்ற கவிதையில் மழைக்கான சூழல் இருள் கவ்விக்கொள்கிறது.

இயற்கையை உற்று நோக்குகிற கவிதாமனம் அதிலிருந்து தானும் தனக்கும் உடன்படுகிற தருணங்களை விசாரணைக்கு உட்படுத்துவதில் அலாதி பிரியம்கொள்கிறார்.மேலும் பின்னுமாய் மிஞ்சியிருக்கிறவற்றை வனங்களினூடான தரிசனத்தில் தேடவிழைகிறார்.காட்சிப்படுத்துகையில் மயூவின் மன சிதிலமும் பாதுகாப்பற்ற எப்போதும் அதிர்ந்துகொண்டே இருக்கிற இயைபும் குழைந்து கொள்கின்றன.அடர்மரக்காடுகளின் இடையில் சூரியன் விழுந்தும் குதித்தும் தற்கொலைக்கு முயல்கிறான்.உதிரச்சொட்டுகளில் கசிகின்றன நினைவுகள்.அர்த்தமற்ற நாட்களின் எதிரொலியில் நடுங்குகிறது காடு.இத்தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்று ஓர் இரவுசுடலை மரங்களின் அமைதி அமானுஷ்ய மானதாயிருக்கிறது.அதில் அசைய மறந்து தூங்குகின்றன இலைகள்.நிலமொட்டப் பறந்து தன்னிருப்பை தீனமாய் இசைக்கிறது  பறவை. என்றெல்லாம் அடுக்கிவருகிற மயூ மனோ ஒரு விடுதலைப் போரின் நியாயமற்ற தீர்வை அசரீரியில் சொல்லி நத்தை வேகத்தில் நகர்கிறதாக காற்றை முன் நிறுத்துகிறார்..

"என் மனதிற்கு வெள்ளையடிக்கும் செலவை நீ ஏற்றுக்கொள்ளாதே" என்பன போன்ற பலவீன வரிகளின் மூலமாக உரையாடலொன்று அற்றுப்போகிற அழுகைக்கணத்தின் கைவிடுதலை அழகுறப் பதிவு செய்கிறார் மனோ வா பிரிவோம் போ என்னும் கவிதையில்.இங்கு வாழ்வதற்குக் காரணங்கள் எனக்குப் படவேயில்லை என்ற நேரடிச்சொல்லாடலின் பின்னால் மாயக் கூட்டினுள் மல்லாந்து கிடக்கும் பொய் உடம்பில் ஊறிக்கிடக்கிறது நேற்றைய கழிவு என்று பலமான சமராய் தன் மொழியை மாற்றுகிறார்.லேசாய் நினைத்து அணுகினால் வாசிக்கிறவனைக் குப்புற வீழ்த்திவிடுகிற மெய்ம்மையின் பலத்தை தாயமாடும் கட்டங்களாக்கி வீசுகிறார்.////உயிரின் சாறு என்ன நிறத்தில் இருந்தால் எனக்கென்ன..?இரவுகளை ஒரு கோப்பை கறுப்புக் கோப்பிக்கும் கனவுகளைச் சுவையூட்டிகளுக்குமாக விற்றுவிட்டுப் போகலாம் என்றிருக்கிறேன்  நான்;ஆமாம் இந்தப் பகலைப் போல...//////

போகிற போக்கில் சில சொற்களைச்சுருட்டி வீசுவதை இக்கவிதைகளின் தன்னியல்பாகவும் முன் சொன்ன அலட்சியத்தின் கூட்டுச் செயலாகவும் நம்மால் உணரமுடியும்."சாப்பிட்டாயா" வினவ என் வாசனைகள் தடுத்தன//ஆடை உள்ளுடம்பு//அதனுள் ஒரு உடம்பு//நிரம்பாத பள்ளங்களுடன் மணக்கத் தொடங்கியிருந்தது மறுதலிக்கப்பட்ட ஆத்மா அவனுள் ஒளிர்வதாகப்பட்டது பிரம்மை///அவன் சாக்கடை.சுதந்திரப்பட்ட ஆறாவது என்னும் இக்கவிதை வாசகனுடைய மனங்களில் அப்பிக்கொண்டு நகரமறுக்கிற பிறழ் மனதினன் ஒருவனைப் பற்றிப் பேசுகிறது.

மயூமனோ நிலம்பெயர்ந்தவர்.இழத்தலுக்கும் அடைதலுக்குமான பொதுக் கேள்விகள் ஏதும் இல்லாது தன் துயரத்தை தன் பிரிதலை பிறரெவர்க்கும் கண்ணீர்த்துளிகளாய் மாற்றித்தருகிற எந்தவொரு எத்தனமும் அவர்க்கில்லை.காலமும் சூழலும் புரட்டி எங்கோ எறிந்துவிட்ட வாழ்க்கையில் தன் கவிதைகளில் எவர் மீதும் குற்றஞ்சாட்டுகிற தொனியில் இல்லை மயூவின் கவிதைகள்.மாறாக தன் ரணத்தை இன்னமும் கெட்டித்துவிடாது பீய்ச்சி அடிக்கிற குருதியை பிறரின் கரிசனங்களைப் பெறுவதற்கான முகாந்திரங்களாக மாற்றிக் கொள்வதை சற்றும் விரும்பாத இக்கவிதைகள் பெரும்பாலும் சிக்கலற்ற மொழி கொண்டு தன்னைக் கட்டிக்கொள்கின்றன.

மயூமனோவின் "கவிதைத் தொகுப்பு இழத்தலை கம்பீரத்தோடு முன் வைத்துவிட்டு ஏதும் பேசாத மௌனத்தை சாத்தியப்படுத்துகிறது.அரசியல் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் இத்தொகுப்பின் கவிதைகள் ஈழம் என்ற நிலத்தின் போருக்கு முன்னதும் பின்னதுமாய் நிலத்துக்கும் மக்களுக்கும் பறிக்கப்பட்டவைகளையும் இழைக்கப்பட்டவைகளையும் சொற்ப அளவே பதிவு செய்திருக்கிறது என்ற கூற்று கவனிக்கத்தகுந்தது.

பெயர்த்தெடுக்கப் பட்ட வாழ்க்கையை தன் அளவில் பேசுகிற மனோவின் கவிதைகளில் அலட்சியம் தொனிக்கிறது.எவ்வகையிலும் புறக்கணித்துவிட முடியாத மயூமனோவின் கவிதைகள்,பெண்ணின் உலகத்தில் காதலும் தனிமையும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் சார்ந்திருத்தலும் பிரிவும் நிலையாமையும் சுமத்தலும் ஏமாற்றமும் தோல்வியும் புனரமைத்தலும் அலாதி அன்பும் இன்னபிறவும் மைய இழையோடும் மயூவின் அலட்சியத்தை இயைந்தே ஒலிக்கின்றன.கோரவும் பெறவும் ஏதுமற்ற தூர வனவனாந்திரத்தில் நின்றுகொண்டு அழுகுரல்களுக்கும--திசை நோக்கிச் சபிக்கிறவர்களுக்கும் மத்தியில் அவிழ்ந்த கூந்தலை முடிந்துகொண்டு முணு முணுத்தபடி முன் நடக்கிற முதலாமவளின் வார்த்தைகள் இவை.