புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

உன் பெயர் அந்தக் கண்களைப் பார்த்திருக்கக் கூடாது.
வளர்ப்புச்சர்ப்பங்களாய்
இரு காதுகளிலும் சதா
கர்வநடனம் ஆடும் தோடுகளுக்கு
என் கண்களைத் தின்னக் கொடுத்திருக்கக் கூடாது.

தேன் தேக்கு பாக்கு குங்குமம் என
சேராக்கலவையொன்றின் நிறத்தாலான
அந்த முகத்தில் லயித்திருக்கக் கூடாது.
பரிசுத்தமான விஷத்தை உற்பத்தி செய்யும்
அந்த உதடுகளுக்கு என் பார்வையைப் பரிசளித்திருக்கக் கூடாது.
மூக்குத்தியின் மீது தீண்டாமை பாராட்டும்
மேட்டிமைத்தனத்தின் சின்னமாய்த் திகழும்
அந்த நாசியின் கூர்மையில்
என் மனசைக்கிழித்திருக்கக் கூடாது.உன் உதடுகளிலிருந்து பிறக்கும் சிரிப்புக்கென ஒருமுறை
வார்த்தைகளுக்கென இன்னொரு முறை
குணமாகாத நனவிலி நிலையொன்றை
காதல்தேவதையிடத்தில்
நான் இறைஞ்சியிருக்கக் கூடாது.
அந்தக் குரலுக்கு என்ன ஒப்புக்கொடுத்திருக்கக் கூடாது.
அந்தக் குரலை என் மௌனத்தின் எல்லாச்சாலைகளிலும்
சித்திரத்தீற்றலாய் அனுமதித்திருக்கக் கூடாது.
ஒரு வெப்காம் தினத்தில்
எனக்கே எனக்கென்று சொந்தமாயிருந்த என் மனசை
மெல்ல மிக வேகமாய் உன்னிடம் இழந்திருக்கக் கூடாது.

நீயற்றதெது என்றறியாது என் நினைவுகளை
என் பொழுதுகளை
என் இரவுகளை
என் தனிமைகளை
என் புன்னகையை
என் வார்த்தைகளை
என் பின்னிசையை
என் மௌனங்களை
என் அடிமனதை
என் ஆழ்கனவை
என் சகலங்களை
உன்னை விசுவாசிக்கச் சொல்லி அனுப்பி இருக்கக் கூடாது.

ஒற்றை நொடியில் பிறந்து
அடுத்தடுத்துத் தன்னை இரட்டித்துக்கொள்ளுகிற
ராட்சசம் என்றறியாமல் காதல்தானே
என்ற அலட்சியத்துடன் கதவு திறந்து
அனுமதித்திருக்கக் கூடாது.

இது நல்லது.
நித்தியமும்
இனி இழப்பதற்கொன்றும் இல்லை.
இது நீ தந்தது.
நித்தியமும் இனிக் கலைவதற்கொன்றும் இல்லை.
இது உன்னாலானது.
நித்தியமும் இனிக் கண்ணீரற்றிருக்கத் தேவையில்லை.
இது நீ விரும்புவது.
மொத்தமாகவும் சிறுபகுதிகளாகவும் நான் சிதைவது குற்றமில்லை.
இது உன் கரப்பொருள்.
என் பேரமைதியின் வசனஓசை அறுத்தெறியப்பட்ட
ஊமைக்கேவல்களின் ஒற்றைவார்த்தையாய் நித்தியமும் ததும்புவது.
இது உன் பெயர்.
நித்தியமும்
என் உடல்தானத்துக்கான அனுமதிச்சான்றிதழில்
உயிராலிட்ட கையொப்பம்.
இது காதல்.