புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

முகங்கள் 9

முகங்கள் 9
பிஜி சரவணன்
பிஜி சரவணன் எனக்கு முகப்புத்தக நண்பர் அல்ல.எனக்கும் அவருக்கும் பொது நண்பர் முத்துக்கிருஷ்ணன் அவர் மூலமாக அறிமுகமானது நாலு வருடங்களுக்கு மேல் இருக்கும்..ஒரே நேரத்தில் பெரியசாமி ராஜாவையும்சரவணனையும் ஒரு இருள்மாலை நேரம் யோகலக்ஷ்மி டிராவல்ஸ் வாசலில் பார்த்தது தான் முதல் சந்திப்பு.அதற்குப் பிறகு நான் எழுதத்துவங்குகிற நேரத்தில் நிறைய முறைகள் மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரேஇருக்கும் ஜம்ஜம் டீக்கடையின் வாசலில் சந்தித்து இலக்கியம் பொது நிகழ்வுகள் என்றெல்லாம் நிறைய்ய
கதைத்திருக்கிறோம்.சரவணன் நான் தேடிப் பிடித்த என் நண்பர்.என் குறைகளுடனேயே என்னை ஏற்றுக்கொள்வதில்எந்தத் தயக்கமும் இல்லாதவர்.மெல்லிய குரலில் ஆனால் தன் கைவிடமுடியாத கருத்துக்களை அவர்வைப்பதே ஓரழகு.முகப்புத்தகத்தில் எனக்கு ஆரம்ப கட்டத்தில் நிறைய்ய ஆலோசனைகளை வழங்கியவர் சரவணன் தான்.சரவணன் நேற்றைக்கு முன் தினம் வரைக்கும் எனக்கு அறிவுரை என்றால் அறிவுரை தான்,அதனை வேறெப்படி சொல்வது அறிவுரைகளை வழங்குபவர்.சரவணனுக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள்.நாடே அவர் வீடு.அவர் வீடு ஒரு காடு.அந்தக்காட்டிற்குள் ஒரு முறை மட்டும் சென்றுவந்திருக்கிறேன்.வீட்டின் மற்ற பகுதிகளெல்லாம் வீடு போலத் தான்
இருக்கும்.அவரது அறை மட்டும் எப்போதும் கலவரத்தில் கைவிடப் பட்ட மக்களின் தங்குமிடம் போலக் காட்சிஅளிக்கும்.எல்லாம் எல்லாம் எல்லாம் புத்தகங்கள்.கிட்டத்தட்ட 10000 ஆமாங்க பத்தாயிரம் புத்தகங்களாவது இருக்கும் என்பது என் உத்தேசம்.சற்றுக் கூடலாம்.புத்தகத் திருடர்கள் அலர்ட் ஆகவும்.சரவணனுக்கு எது பிடிக்கும்..?ரசனைகளின் ராஜகுமாரன் சரவணன்.தன்னை விட மெல்லிய மழை கவிதைகளை சரவணன் எழுதுவது பேரழகு.அவரும் நானும் பேசிக்கொள்ளாமலேயே பலமுறை ஒருவரை ஒருவர் வம்புக்கிழுத்திருக்கிறோம்.எப்படி என்றால் அவர் மழை பற்றிய ஒரு கவிதையை பதிவிட்டால்நான் என் சுவரில் இரண்டு கவிதைகளை ஏற்றியிருப்பேன்.இது ஒரு நாள் இரண்டு நாள்அல்ல ,பல நாள் ஓடியது

சரவணன் அனேக கலைகளின் காதலர்.மிக முக்கியமாக என்னையும் சரவணனையும்ஒருங்கிணைத்தது இளையராஜா மற்றும் 70-80 களின் இசையில் எங்களிருவரின் அலைதல் ஒருமித்தது என்பதால் தான்.சரவணன் வெகு நாட்களாக தனது அழைப்பொலியாக வைத்திருக்கும் சிறுபொன்மணி அசையும் என்றபாடலைக் கூட வேறெங்கேயாவது கேட்டால் அது பிஜி நினைவைக் கிளறும்.சரவணனின் முதல் தொகுப்பு
முகில் பூக்கள்.தனித்த மழை குறித்த கவிதைகளின் திரட்டு.,அதனை குறித்த என் வாசகப் பார்வையை முதன்முதலில் கீற்று தளத்தில் நான் எழுதினேன்.முகப்புத்தகத்தில் எனக்கு கிடைத்திருக்கிற ஆரம்ப நண்பர்களில் தோழிகளில் பலர் எனக்கு சரவணன் நட்பு வட்டாரத்திலிருந்து கிடைத்தவர்களாக இருப்பது தற்செயலன்று.

சரவணன் ஒரு நாடோடி.தன்னையும்தன் மனதையும் காலி செய்து வைத்துக்கொண்டு அலைகிற மனது எல்லோர்க்குமா வாய்க்கும்..?மனிதர் எங்கேஇருக்கிறார் எனக் கேட்டால் திடீரென்று எதாவதொரு இடம் சொல்வார்.அந்த இடத்தை நான் வரைபடத்தில்பார்த்து விட்டுக் காஃபி குடித்துக் கொள்வதோடு சரி.சரவணன் ஒரு போர்க்குணம் நிரம்பிய மானுடன்.அவர் மனம் ஒத்துக்கொள்ளவியலாதகொடுமைகள் எங்கே நிகழ்ந்தாலும் அவர் விகசித்து எப்படி மறுமை மொழிவது என்பதறியாது கலங்குவார்.அந்த மெல்லிய இதயத்தினுள் இதுவொரு மாறுபட்ட ஆனால் விரும்பத்தக்க குணமே.சரவணன் நடனம் மற்றும்புகைப்படக் கலைகளில் சிற்பங்களில் ஓவியங்களில் இசையில் என பல்கலைரசனைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே செல்வது அவரது சிறப்பு.

சரி..இப்போது ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்:-சரவணன் என்றால் அவர் வேலை பார்ப்பது இரயில்வேயில் என்ற அளவில் தான் ஒருபெயராக எனக்கு அறிமுகம்.வேறெந்தத் தகவலும் தெரியாது.எனக்கும் அவருக்கும் இடையிலான முதல் நிகழ்வைஎன்றென்றும் மறக்க முடியாது.என் மனைவி ஒரு மருத்துவர்.அவரையும் சேர்த்து அவரது வீட்டில் மொத்தம் 4 டாக்டர்கள்.என் மாமனாரும்மாமியாரும் மட்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்றுஎன் மாமனார்க்கு உடலெல்லாம் வியர்த்து வியர்த்துக் கொட்டி மூச்சு விட சிரமப் படத் துவங்குகிறார்.அப்போதுரயில் விருத்தாசலத்தை தாண்டுகிறது.சரியாக மாலை 5.40க்கு வைகை ரயில் திருச்சி வரும்.என் மனைவி பதறியபடி என்னை அழைத்து தன் தந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சைசெய்திருப்பதை நினைவூட்டி உடனடியாக ஒரு சில மாத்திரைகளைக் கொடுத்தாக வேண்டும் என சொன்னார்.எனக்கும்சரவணனுக்குமான பொது நண்பரிடம் நான் சொல்லிப் பதறினேன்.அவர் சரவணனைத் தொடர்பு கொண்டார்.

சரவணன் அப்போது இருந்தது வேறேதோ ஊரில்.அந்த ரயில் திருச்சி வந்து சேர்வதற்குள் ரயிலில் இருந்து மருத்துவர் உடனடியாக சென்று என் மனைவியின் தந்தையைப் பரிசோதிக்கிறார்.சரவணனின் நண்பர்கள் திருச்சியில்வேகவேகமாக மருந்துக்கடைக்கு சென்று நாங்கள் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கிக்கொண்டு ஓட்டமாக ஓடிரயில் நிலையத்தில் நுழைந்து வைகை ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் என் மனைவியின் அம்மாவிடம் அந்த மருந்துகளைகொடுத்தும் விட்....இது இன்றைக்கு நினைத்தால் சாதாரணமாகக் கூடத் தெரியலாம்.செல்பேசி என்ற ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதால் தகவல் தொடர்பு எளிதானதும் இன்னபிறவெல்லாமும் ஒத்துக்கொள்ளக்கூடியவையே. ஆனால் சரவணனுக்குக் அவரது நண்பர்களுக்கும் யார் அந்த முதியவர் என்றோ யாருக்காகத் தான் ஓடுகிறோம் என்றோ தெரியாமல் ஓடி உதவியது அவர்களுக்குசாதாரணமாக இருக்கலாம்.நேரத்துக்கு மருந்து கிடைத்ததால் என் மனைவியின் தகப்பனார் அதன் பின் நிம்மதியாக உறங்கியபடிமதுரை வந்து சேர்ந்தார்.

அதன் பின் ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை முடிந்தது.இவையெல்லாம் நடந்து மூன்று நான்கு வருடங்களாயிற்று.முதியவர் நன்றாக இருக்கிறார்.ஒரு விருப்பமில்லாத குறுக்கு வெட்டு நிகழ்வாக அன்றைக்கு நாங்கள் இழந்திருந்தால் அதுவார்த்தைகளில் சொல்லக் கூடிய ஒன்றா..?இன்னமும் இதனை வெளியே சொல்லக் கூடாது என்று என்னை அன்பாக நேற்றைக்கு கூட மிரட்டுகிறானேஅந்த நண்பன் சரவணன்...அவனை என்ன வார்த்தை சொல்லி வாழ்த்துவது..?அந்த சம்பவமும் அந்த உதவியும் சற்றும் தொடர்பற்றஒரு நிகழ்வு தான் நான் ஆத்மார்த்தி என்ற பெயரில் ஒரு எழுத்தாளனாக மெல்ல மெல்ல உருவெடுத்தது என்பது.அதே சரவணன்எனக்கு மிக நெருக்கமாக ஆனதற்கும் அதை விட நெருக்கமாக நான் அவரை உணர்வதற்கும் மேற்சொன்ன நிகழ்விற்கும் எந்தநேரடி தொடர்பும் இல்லை என்றாலும் கூட...காலத்தினால் செய்த உதவிக்கு மாறாக எதைக் கொடுத்தாலும் ஈடாகுமா..?

சரவணன்...ஒப்பிடற்கரிய நன்னெஞ்சன்.

அன்போ"டு
ஆத்மார்த்தி