புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

முகங்கள் பத்து

முகங்கள்  10

ய்யப்ப மாதவன்

ய்யப்ப மாதவனை நான் நண்பர் என எப்படிச் சொல்ல முடியும்..?அய்யப்பன்என் சகோதரன்.என்னைத் தன் கவிதைகளால் திணறடித்தவன். நான் நிமிர்ந்துநோக்கிய எழுத்தாளன்.அய்யப்பமாதவனின் கவிதைகளில் ஒன்றை முகப்புத்தகத்தில் ஒருமுறை வாசித்த போது நம்பாமல் அவரது சுவருக்குள் புகுந்தேன்.எழுத்தாளர்களில் பலரும் முகப்புத்தகத்தில் வெறுமனே தலைகாட்டுவதோடு சரி. கலாப்ரியா,வண்ணதாசன் போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் முகப்புத்தகத்திலும் இருக்கிறார்கள்.கோணங்கி என்னிடம் காகிதத்தில்மை படர்கையில் ஒரு மணம் எழும்.அது இல்லாத எழுத்தின் ப்ரேதங்கள் தான் இணையமும் கணிணியும் என்றார்.மனுஷ்யபுத்திரன் போன்றோர் இணையதளத்தை முக்கியமாக முகப்புத்தகத்தை தங்களது எழுத்து சார்ந்து உபயோகிப்பதில்லை.சுகுமாரன் முதல் சுரேஷ்குமார இந்தரஜித் வரை முகப் புத்தகத்தில் அவர்களுக்கென்றுகணக்கு இருந்தாலும் கூட அவர்களது எழுதுகளம் இங்கே அல்ல என்பது எல்லா வேற்றுமையாளர் களினி டையிலான ஒற்றுமை.என்றபோதும் நன்குஅறியப்பட்ட எழுத்தாளர்களில் எனக்குத் தெரிந்து தனி வலைதளம் என்று கூட ஒதுங்காமல் மக்களின் குழுமப் ப்ரதேசமான முகப்புத்தகத்தில்கோலோச்சுகிற ஒரு எழுத்தாளன் உண்டெனில் அவர் பேர் ஐய்யப்பமாதவன்.

ஐய்யப்ப மாதவன் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பர்.அப்புறம் தொலைபேசியில் பேசினோம்.அவரது சொல்விழுந்த கணம் நூல் விமர்சனக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ளவியலாமற் போனது.அதன் பின் அவரது ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் நூலுக்கான என் விமர்சனம் இந்தியாடுடேயில் வெளியானது.அதே உரையை சற்று நீட்டித்து அவரது நூல்விமர்சன அரங்கத்தில் நான் பேசினேன். ஐய்யப்பனின் புனைவுலகம் அபாரமானது.அவரதுமொழிச்செருக்கு யாருக்கும் குறையாதது.அவர் சொற்களை அடுக்குகிற வன்மை பலம் வாய்ந்தது.நகர வாழ்க்கை இன்னமும் சிதைத்துவிடாத மனம் வாய்த்த ஒரு மனிதர் ஐய்யப்பன்.நகரம் அவரைத் துரத்தத் துரத்த அவர் வேட்கை ததும்பும் கவிதைகளில் தன்னைத் தொடர்ந்து வழியச் செய்கிறார்.இயற்கையை அவர் தேர்ந்த ஒரு பாகனைப் போல் ஆட்டுவிக்கிறார்.அதுவோ யானையாக அல்லாது ஒரு பூனையாய் தன்னை மாற்றிக்கொண்டு சாகசம் புரிகின்றது. ஆறாக் கோபம் கொண்ட மானுடன் ஐய்யப்ப மாதவன்.தன்கவிதைகளைப் போலவே மனம் கொண்ட மனிதர்கள் அபூர்வம் தான்.அந்த வகையில் ஐய்யப்பன் குணமும் கோபமும் கலந்த கலவை.தன் மீது எறியப் படுகிற பூக்களையும் கற்களையும் பொருட்படுத்தாது தொடர்ந்து நடைபோடும் இலக்கற்ற நாடோடி அவர்.

உலகப் படங்களைக் குறித்த ஐய்யப்பனின் பார்வையும் புரிதலும் பிரமிக்கத் தக்கவை.குறும்படங்களில் வெளிப்படுகிற ஐய்யப்பன் வேறு விதமான படைப்பாளி.அவர் சிறுகதைகள் மெல்லிய அதிர்வை ஏற்படுத்துவன. அத்தோடு கூட அவர் தற்போது நாவலொன்றை எழுதிவருகிறார்.
ஐய்யப்பன் அன்பானவர்.முழு நிலவின் ஜ்வாலை போன்றதொரு நிறைவானது அவரது அன்பு.யார் மீதும் விரோதம் பாராட்டத் தெரியாத மனம்
குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடியது.அது ஐய்யப்பனுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டு இன்றைக்கு வரை அவர் மனம் மாறாக் குழந்தையாகத் திரிவது தன்னை ஒரு மனிதன் ஆசீர்வதித்துக் கொள்வதற்கான சூட்சுமம்.நான் ஐய்யப்பனின் நண்பனா எனத் தெரியாது.என் உடன்பிறவாத சகோதரனாக ஐய்யப்பனை நான் உணர்கிறேன்.சில விஷயங்கள் நாம் என்ன நிகழ்ந்தாலும் மாற்றிக்கொள்ளவே விரும்ப மாட்டோம்.அப்படிப் பட்ட ஒன்று நான் ஐய்யப்பன் மீது கொண்டிருக்கும் அன்பு.

அவன் இன்னும் தனக்கான உயரங்களில் பலவற்றை எட்ட வேண்டும் என்பது என் ஆவல்.ஐய்யப்பனுக்கும் எனக்கும் அவ்வப்பொழுது சில வார்த்தைகளில் முடிந்துவிடக் கூடியதான செல்பேசி உரையாடல்கள் தான் நிகழ்கின்றன.இன்னமும் என் சமீபத்திய இரண்டு புத்தகங்களை நான் அவருக்கு அனுப்பிவைக்கவில்லை.சமீபமாய் சிலமுறைகள் நான் சென்னை செல்கையில் அவரை சந்திக்கவுமில்லை. ஆனாலும் ஒரு வார்த்தை நிஜம்.இதெதும் பிரித்துவிடாத பேரன்பு எங்கள் இருவருக்குமிடையில் தீராநதியாய் நிகழ்கிறது.அவரும் நானும் அதன் இரு கரைகளாக அந்த நதிக்கான அர்த்தமாக விளங்குகின்றோம்.என் பாசத்திற்குரிய ஐய்யப்பன்,கவிதைகளின் மன்னன்.அவனை நான் அண்ணனாய்ப் பெற நண்பனாய் அடைய என்ன தவம் செய்தேனென்றறியேன்.

நட்பு போற்றுதும்.

அன்போடு

த்மார்த்தி