புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 1வாக்குமூலம்

////////முன் இரவில் இரயில் நிலையச்சாலையில்  லட்சம் பேர்களைப் புறக்கணித்துவிட்டு நாலைந்து பார்வையாளர்களுக்காகத் தன் ஒழுங்கற்ற நடனத்தை நிகழ்த்திக்காட்டிய பெயரில்லாப்பைத்தியக்காரியின் சாபங்கள் மதுரை நகரமெங்கும் இன்றைக்கு மழையாய்ப் பொழிய
விருப்பதை தன் முக இருளால் கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறது வானம்..எழுத்துக்காரன் ஒருவனின்  சாட்சிய கர்வத்தின் குறுக்குச்
சந்துகளில் அவள் உயிருடன் இருக்கவும் இறந்துபோயிருக்கவும் கூடிய சாத்தியங்களைத் தன் கலைடாஸ்கோப்பில் குலுக்கி
ரசிக்கிறது காலம்
.///////

வாழ்தல் இனிது 1.யாருடைய நதி


வாழ்விடத்தில் இருந்து வெளிப்படுகிறவர்களுக்கு எப்போதும் சில நிறுத்தங்கள் தேவைப்படுகின்றன.ஒரே குறிப்பிட்ட இடத்துக்கு தினமும் பணி அல்லது பிற நிமித்தங்களுடன் சென்று வருகிறவர்களுக்குதிரும்பத் திரும்ப ஏற்படக் கூடிய அலுப்பை குறைக்கும் நெகிழிகள் சில. வீடு மீளும் வழியில் இருக்கிற ஏதாவதொரு இடம் அனேகமாக அது ஒரு கடையாக இருக்கலாம்.அங்கே செலவழிக்கிற பணம் மற்றும் நேரம் என்பன இரண்டு நேர்புள்ளிகளுக்கு இடையிலான அலுப்பை இல்லாமற் செய்வதற்குத் தான்.

முன்பெல்லாம் திருநகர் என்னும் நான் வசிக்கிற பிரதேசத்தில் இருந்து 10கிமி தூரம் தினமும் 2 முறை சென்றுவருவேன்.அப்போதெல்லாம் நடுவாந்திரத்தில் ஒன்று நான் படித்த மன்னர் கல்லூரி இருக்கும் மூலக்கரை என்ற இடத்திலோ அல்லது நகரத்தின் மூக்குபோன்ற பழங்காநத்தத்திலோ டூவீலரை நிறுத்தி விட்டு தேநீர் அருந்தி ஆசுவாசம் கொள்வது என்வழக்கமாக இருந்தது.நினைவில் அகலாத ஒரு மழை இரவு.அனேகமாக ஆறு ஆண்டுகளுக்கு முன் பொதுவாக மழைப் பொழுதுகளில் என் டூவீலரை ஒன்று மிகவும் மெதுவாகஓட்டுவேன் அல்லாது போனால் நிறுத்தி மழையை அனுப்பி வைத்துவிட்டே மீண்டும் தொடுவேன்.

அன்றைக்கு பழங்காநத்தத்தில் நாராயணா சைக்கிள் ஸ்டேண்ட் முன்வாசலில் இருக்கும் டீக்கடைஎன் வழக்கஸ்தலம்.அங்கே நின்று கொண்டிருந்தேன்.அந்தக் கடை ஓனர் ஒரு ரஜனி ரசிகர்.காமேஷ் என்று பெயர்.நான் அங்கேதினமும் என்றால் ஞாயிறு உட்பட தினமும் வந்துசெல்லும் முக்கிய கஸ்டமன்.கல்லாவில் பலநாள் நின்று வியாபாரம் பார்த்திருக்கிறேன்.அந்த அளவு பழக்கம்.அவர் அன்றைக்கு ரஜனி படங்களில்இருந்து தேர்ந்தெடுத்த பாடல்களை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்."இந்தப் பாட்டுல தலைவர் நடையே நடை..."போன்ற சொல் லாடல்களை அவர் சொல்லி கேட்பதே ஒரு இன்பம்,.நான் மாலை பேப்பரைப் படித்து வைத்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்தேன்.கடையை ஒட்டிய பஸ்டாப்பில் சடசடவென்று பொழியத் துவங்கிய மழைக்கு அஞ்சி சிலர் வந்து குழுமினர்.

வர்களில் ஒரு பெண்.ஏதோ ஒரு வட மாநிலம் என்பது மட்டும் பார்த்தவுடன் தெரிந்தது.கையில் ஒரு பச்சைக்குழந்தை.அது உறங்கிக் கொண்டிருந்தது.அந்தப் பெண் முழுவதுமாக நனைந்து இருந்தாள்.கையில்இருந்த குழந்தை உறக்கத்தில் ;லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. அதே பெண்ணின் தோளில் இருந்து இறங்கிய பை ஒன்றில் இருந்து ஒரு பால் பாட்டிலை எடுத்தாள்.வாய் திறந்து கேட்கவில்லை.ஆனாலும் அந்தப் பெண்ணின் அப்போதைய தேவை பசிக்கு அழப்போகும் பிள்ளையின் நகர்தல் குறித்து இருந்தது.அவளோடு வந்திருந்த இன்னொரு பெண்குழந்தை அதற்கு ஐந்து வயது இருக்கும்.அதன் கையில் ஒரு அட்டையை சுற்றி கெட்டியாகப் பற்றிக்கொண்டு இன்னொரு விரலால் தன் அன்னையின் சேலையைப் பிடித்துக் கொண்டிருந்தது.அந்தப் பெண் கையில் இருந்த பால்புட்டியை இன்னொருமுறை பார்த்தாள்.அவளிடம் காசு இல்லை என்பது அவளது தயக்கத்தின் கால அளவு மூலம்நான் புரிந்துகொண்டிருந்த செய்தியாக இருந்தது.டீக்கடை மாஸ்டரிடம் நான் கண்ணைக் காட்டினேன்.உடனே அவர் எதுவும்பேசாது அந்த புட்டியை வாங்கி சரசரவென்று வெந்நீர் ஊற்றி கழுவி சூடான பாலை ஆற்றி அதில் நிரப்பி தர உடனே அதை கிட்டத்தட்ட வெடுக்கென்று பிடுங்கி உறங்கும் குழந்தையின் வாயில்திணித்தாள்.நான் மாஸ்டரிடம் "அந்தக் குழந்தைக் கும் ஒரு பால் டம்ப்ளர்ல குடுங்கண்ணே"என்றேன்.

வர் அதையும் கொடுக்க அன்னையின் கரத்தில் இருந்து அதை பெற்றுக்கொண்ட சிறுமி என்னைப் பார்த்து ஸ்னேகமாய் சிரித்தபடி தன் கையால் எட்டி வரிசையாக இருந்த பாட்டில்களில்ஒன்றைத் தொட்டுக் காட்டினாள்.உடனே தன் மொழியில் அது பீகாரியோ ஒடிசாவோ எனக்கு அர்த்தப் படவில்லை.அந்தக் குழந்தை முகம் சுண்டிற்று.நான் மீண்டும் கண் காட்ட அதில் இருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து நீட்டினார் மாஸ்டர்.பயந்து கொண்டே தன் தாயைப் பார்த்து ஏதோ முனகினபடி அந்த வட்ட வடிவ பிஸ்கட்டைப் பெற்றுக் கொண்ட அந்தச்சிறுமி தன் கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பருடன் இரண்டு கரங்களில் இரண்டுபண்டங்களாக பால் தம்ளரையும் பிஸ்கட்டையும் கையாள வழியின்றி திகைக்க அவளின் கையில் இருந்த பேப்பரை வாங்கி விரித்துப் பார்த்தேன்.ஹிந்தி போன்ற எதோ ஒரு மொழியில் தன் பெயரைஇனிஷியலுடன் எழுதியிருந்தாள். ஒரு அழகான ஓவியமுயல்வு அது.கோடுகளால் ஒரு மலையும் அதன் உச்சியில் ஒன்றிரண்டு வீடுகளும் இருந்தன.அந்த சிறுமியின் சின்ன கரங்களுக்குள் இருந்து புறப்பட்டஅந்த மலையுச்சி வீடு ஒருவேளை அவர்களுடைய வசிப்பிடத்தின் மீதான ஏக்கமாகவோ மேலும்கடந்து வந்திருக்கக் கூடிய தூரமாகவோ இருக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஏக்துஜே கேலியே ஹிந்தியில்(ஹிந்தி என்பது என் நம்பிக்கை.வாழ்க திமுக.)கேட்டேன்..."துமாரா நாம் க்யா ஹே?" என்று.அதற்கு தன் ஒழுங்கற்ற பற்களால் சிரித்து " சோனா" என்றாள். எந்த மொழியாக இருந்தாலும் தங்கம் எனப்பொருள்.ஒழுங்காய் வளர்த்தால் ஒரு ஓவியமேதை அவள்,  இதற்குள் மழை நின்றுவிட்டது. ஒரு மனிதன் தன் உடல் முழுக்க பெயிண்ட் தீற்றல்களுடன் வந்து சேர்ந்தான்..அவர்களின் நாயகன் அவன் என்பது அந்தக் குழந்தை அவனை வரவேற்றதில் இருந்து தெரிந்தது.உடனே அந்த இடத்தின் அதற்கு முந்தைய முகம் மொத்தமாக மாறியது.சிறுபிள்ளை எதையோ கேட்க அந்த தகப்பன் எதையோ பதிலுக்கு சொல்ல அந்தப் பெண் அதற்குள் கண்விழித்து வீறிட்ட தன் பச்சைக் குழந்தைக்கு எதோ சில வார்த்தைகளை சமாதானமாக உச்சாடனம் செய்தபடியே மீண்டும் உறங்கச் செய்தாள்.கிளம்ப எத்தனித்த தன் கணவனிடம் எதையோ காதில் சொன்னாள்.உடனே அந்தக் கணவன் தன் உள் பாக்கெட்டிலிருந்து அழுக்கான நோட்டுக்கள் ஒன்றிரண்டை எடுத்து மாஸ்டரிடம் நீட்ட அவர் என்னைப் பார்த்தார்.நான் மீண்டும் தலையசைத்து அவரிடம் வாங்காதே என்றேன்.அவர் வேண்டாம் என மறுத்தார்.அவன் ஒரு கணம் ஒரு கணத்தின் சிறுதுளியளவு யோசித்துவிட்டு மீண்டும் தன் பணத்தாட்களை மடித்து உள்பாக்கெட்டில் அதக்கிக் கொண்டு என்னைப்பார்த்து தன் மொழியில் எதையோ சொன்னான்.அவனைப் பார்த்தாலே தெரிந்தது அவன் அத்தனை நேரம் ஒரு பெயிண்டராக தன் உடல் உழைப்பை சிந்தி சொற்ப கூலியுடன் திரும்பிக் கொண்டிருக்கிறவன் என்பது. மேலும் அந்தப் பெண் வாய்திறந்து ஒரு வார்த்தை கூட அங்கே பேசவேயில்லை என்பதும் கூறத்தக்கது.

ஆனால்...வறுமை அவர்களை அவர்களின் பிறந்த இடத்தில் இருந்து ஒரு தேசத்தின் வரைபடத்தில் எத்தனை கிலோமீட்டர்கள் நகர்த்தி வந்திருக்கிறது..?வீட்டிற்கும் மறுபடி வீட்டிற்கும் இடையிலான தினசரிப் பிரயாணத்தில் இரண்டு இடங்களிலாவது வாகனத்தை நிறுத்தி
ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அலுப்பிற்கும் அங்கே நான் கண்ட அந்த மனிதர்களின் அலுப்பற்ற நகர்தலுக்கும் எத்தனை வித்யாசங்கள்.
அந்த மனிதன் தன் பணத்தை எடுத்ததற்கும் மீண்டும் உள்ளெ வைத்ததற்கும் இடையே நிதானித்த ஒரு நொடி மிகவும் அர்த்தம் வாய்ந்தது.
அது உதவியோ யாசகமோ அல்ல.மாறாக மிக மௌனமாக எந்த மொழியின் துணையும் செயல்படாத ஒரு வெற்றிடத்தில்  தனித்து உருவாகக் கூடிய புரிதல்.இதற்கு மேல் தங்களது வறுமை தங்களை நகர்த்தினால் எங்கே செல்வது என்ற கேள்விக்கு யாசித்தலைக் கையிலெடுக்காமல் விடாது உழைக்கிற ஒரு பெயிண்டர் அவன் என்பது பார்த்த கணத்திலேயே தெரிந்தது.இன்னும் அவர்கள் ஓடுவதற்குரிய சாலைகள் இருந்தால்
நல்லது என்பது கடவுளற்ற ப்ரார்த்தனையாக எனக்குள் ததும்பியது. தன் தோளுக்கு மேலே தன் மூத்த மகளை ஏற்றிக்கொண்டு அந்த
மனிதனும் அவனுடன் வேகவேகமாக ஈடுகொடுத்து நடந்து மறைந்த அந்த பெண்ணும் குழந்தைகளும் ஒரு நீண்டகாலச் சித்திரமாக
என் நினைவுகளில் தங்கிப் போனார்கள்.


"ஸ்தெபானின் காதல்"

வசீலி ஷூக்ஷின் எழுதிய ரஷ்யமொழிக்கதை ஒன்று..நம் கண்களுக்கு முன்னே வேறு ஒரு காலத்தின் வேறொரு உலகை சிருஷ்டித்து விடக் கூடிய வல்லமை மிகுந்த எழுத்து. ஸ்தெபான் ஒரு லாரி ஓட்டி.அவன் திருமணமாகாதவன்.அவன் வீட்டில் அவனது அப்பா மற்றும் தாத்தாவோடு வாழ்ந்து வருகிறவன்.அவன் ஒருமுறை வெகுதொலைவில் இருந்து வீடுமீள்கிற வழியில் ஏல்லா என்றொருத்தி அவனது வாகனத்தில் உடன் பயணிக்கிறாள்.அவள் மீது பித்தாகிறான் ஸ்தெபான்.அவளை மீண்டும் சந்திப்பது ஒரு மேடை நாடகத்தில்.அவளுடன் நடிக்கிற வாஸ்காவும் அவளும் நெருக்கமாக நடிக்கிற இடத்தில் புழுங்குகிறான் ஸ்தெபான்.அவனால் அவளின்றி வாழ முடியாதென்று முடிவு செய்கிறான்.தனக்காக தன் தந்தையை பெண் பேச வரச்சொல்கிறான். முதலில் மறுக்கிற தகப்பன் பிறகு உடன்பட்டு வருகிறார்.சென்றால் ஏல்லாவின் வீட்டில் அவளுடன் நெருக்கமாக ஒரே சோஃபாவில் அமர்ந்திருக்கிற வாஸ்கா "லேட்டா வந்திட்டியே நண்பா..,எங்களுக்கு கல்யாணமாக போகுது.."என்று சொல்ல அதிர்கிறான் ஸ்தெபான். அவர்களை அமரச்சொல்கிறாள் ஏல்லா.வாஸ்கா என்பவன் கடுப்பாகி.. அவங்களை போக சொல்வேன்னு பார்த்தா..?உட்காரச் சொல்றே..?அப்போ நான் கிளம்ப வேண்டியது தானா? எனக்கேட்கிறான்.. பொறுமையிழந்து கிளம்பிச் சென்றும் விடுகிறான் வாஸ்கா.ஸ்தெபான் மற்றும் ஏல்லாவிற்குத் தொந்தரவாக தானிருக்க விரும்பாத அவன் தந்தை"இந்த மாதிரி கல்யாணம் பேசி முடிச்சி எனக்கு டயர்டா இருக்கு..."என்று கிளம்பி செல்கிறார்.

மிக நேரான கதை.மிக முக்கியமானது மொழி.ரஷ்யாவில் இருந்து 1981இல் பூ.சோம சுந்தரம் மொழிபெயர்த்த வாழவிருப்பம் என்ற
தொகுப்பு  மிக முக்கியமான ஒன்று.இது விரித்துக் காட்டும் அகவுலகம் அழகானது.உண்மையானதும் கூட
.

தொடர்வேன்
அன்போடு
ஆத்மார்த்தி
Last Updated (Tuesday, 23 October 2012 17:57)