புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 2

வாக்குமூலம்:-

///சொல்லிவிட்ட பொய்களின் வீச்சப்பிணங்களிலிருந்து நெளிந்துகொண்டே இருக்கும் ஞாபகங்கள்.ஒரு வலியைக் கூட நிம்மதி யாக அனுபவிக்க விடாமல் துரத்தும் சுயம்.நான் உயிரோடு இருக்கிறேன் என்கிற ஒவ்வொரு கணத்தின் விளிம்பிலும் செலவாகிக் கொண்டிருக்கும் திரும்ப வராத கணங்கள்.எங்கேயோ ஒளிந்துகொண்டு தீர்க்கமாகப் பார்த்தபடி ஒரு நிழலாய்த் தொடர்ந்து வரும் அவரவர் மரணம்.தாசத்துவம் தவிர வேறேதையும் கொண்டிராது திரும்பத் திரும்ப நனைக்க வரும் மழை. இமைகளுக்குள் வந்துவந்து போகும் இருள்.சாம்பல் என்னும் ஒரு சொல்லை முன்னாலனுப்பி விட்டு பின்னோடி மறையும் பிற சொற்கள்.நதியின் நடுவாந்திரத்தில் வெளியேறச்சொல்கிற குரூரமான படகோட்டியின் பெயர் வாழ்க்கை.எத்தனை அழுக்கானது மனம் ////

ஆத்மார்த்தியின்
வாழ்தல் இனிது II அத்தியாயம் இரண்டு


மழையை அறியாத கடவுள்

மழை என்ற வார்த்தையைக் கவிஞர்கள் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறோம்.மழை எந்த மொழியிலும் பொதுக் கவிப்பொருள். மழை அலுக்கவே அலுக்காத சாகாவரங்களில் ஒன்று.கவிதைத் தொகுப்புக்களுக்குத் தலைப்புத் தேடி அலைகிறவர்களுக்கு என் சின்னயோசனை: "மழை" என்ற உள் வார்த்தையை வைத்துக் கொண்டு தலைப்பை அடைவது எளிது. உதாரணம்:"மழை பெய்யாதநகரம்" ,"மழையை அறியாத கடவுள்"."மழையைப் புணர்ந்தவன்".மழை என்ற வார்த்தையை வாசிக்கையிலேயே மனசுக்குள் ஈரம் படர்கிறது.என்னளவில் மழை என்பது ஒரு பொது நிகழ்வல்ல. விட்டேற்றியாகத் திரிபவனுக்கும் ஒரு மருந்தை வாங்கிக்கொண்டு உடனே திரும்ப வேண்டியவனுக்கும் பெய்வது ஒரே மழையல்ல.மழை என்பது யார் எங்கே எதற்காக நின்று கொண்டிருக்கையில் பொழிகிறது என்பதே அந்தமழையை ரசிக்கவும் சபிக்கவும் செய்கிறது.யோசித்தால் எத்தனை மழைகளை ஞாபகத்தில் வைத்திருக்கிறோம்..?முன்னும் பின்னுமான நிகழ்வின் ஏதோ ஒரு உபகாரணி,ஒரு மழையை மற்ற வற்றிலிருந்து தனிக்கச் செய்கிறது.ஞாபகத்தின்  ஒரு மூலையில் பிடிவாதமாய்ச் சம்மணமிட்டு அமர வைக்கிறது.அந்த மழை எங்கேயும் நகராமல் அவ்வப்பொழுது நம்மைப் பார்த்துக் கெக்கலிக்கிறது.என் இத்தனை வருட நகர்தலில் மறக்கவே முடியாத மழைகள் சில
இருக்கத்தான் செய்கின்றன.எல்லோருக்கும் இருக்கும் என்பது வினோதமான ஒற்றுமை. அதன் உட்கதை வேறுவேறு.

அப்போது மதுரையின் இதயபிரதேசத்தில் இருந்து எட்டு கிமீ தூரம்உள்ள திருநகர் என்னும் பகுதியில் எங்கள் வீடு இருந்தது.நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன்.என் அக்காளுடைய லேடீஸ் சைக்கிளில் தான் நான் சைக்கிள் பழகினேன்.பழகுவதற்கு எளிது என்பதால் சைக்கிள் யுனிவர்சிட்டியில் முதலில் லேடீஸ் சைக்கிள் அதற்கப்புறம் முன்னம்பிக்கை வந்தபிறகு ஆண் சைக்கிளுக்கு மாற்றிக்கொள்வது வழக்கம்.சிலபலர் பத்தாவது படிக்கையில் ஏரோப்ளேன் பழக செல்வர் என்றாலும் நான் அப்போது தான்
சைக்கிளையே தொட்டேன்.அக்காவை பின் சீட்டில் அமர சொல்லி நான் பெடலிக்கொண்டே எங்கள் வீட்டில் இருந்து திருநகர் மையத்தில் இருக்கும் அண்ணா பார்க்குக்கு சென்று அங்கே ஓட்டிவிட்டு திரும்ப வீட்டுக்குவருவேன்.ஏதோ ஒரு பெயர் தெரியாத முனிவர் கனவில் வந்து ஆசீர்வதித்தாரோ என்னவோ அத்தனை வருடங்களில் கல்லாத சைக்கிளை ஒரு பதினைந்து நாளில் பழகி ஒரு மாதிரி ஓட்டவும் செய்தேன்.அன்றைக்கு என் அக்கா பெருந்தன்மையாக அது தான் ஓட்டுகிறானே தம்பி..இனி நம் மேற்பார்வை எதற்கு என நினைத்தாளோ என்னவோ என்னை மட்டும் போகச்சொல்ல நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு பார்க்செல்லாமல் என் உடன் படித்த "மார்லன்" என்பவனை அழைத்துக் கொண்டு வேறொரு பகுதிக்கு சென்றேன்.அது ஊரெல்லையில் இருக்கிற
பொட்டல். அங்கே வறட்டு வெய்யிலில் வழக்கமாக கிரிக்கெட் ஆடுவோம்.ஆனால் நாங்கள் சென்றபோது மணி ஐந்தரை இருக்கும்.அங்கே இருந்து வீட்டுக்கு வர இரண்டு கிலோ மீட்டர் இருக்கும்.


நேரத்தை கவனியாது நானும் மார்லனும் சிரித்துக்கொண்டே சைக்கிள் விட்டு கிட்டத்தட்ட இரண்டு தொடைகளும் கெஞ்சும் நேரத்தில் சர்வசகலமும் இருள் சூழ்ந்தது.மார்லனைப் பின் சீட்டில் அமர்வித்துக்கொண்டு வேகவேகமாய் அழுத்தத் தொடங்க
அந்த நேரம் எங்கேயிருந்தோ வந்த மழை கொட்டத் தொடங்கியது.மழை என்றால் அப்படி ஒரு மழை.வானத்தை கிழித்துக்கொண்டு அவ்வளவு ஆக்ரோஷமாய்ப் பெய்கிற மழையை அதுவரை நான் கண்டதேயில்லை.அதுவோ பொட்டல் நிலம்.ஒதுங்க ஏதுமில்லாத் தன்னந்தனி வெறுமை.இருள் வேறு.கண்ணே தெரியாமல் குத்துமதிப்பாக எதிர்த்திசையை அளந்து அளந்து சைக்கிளை நிறுத்தாமல் நகர்த்திக் கொண்டிருந்தேன்.லைட் வேறு வேலை பார்க்கவில்லை.பின்னால் இருந்த மார்லன் எப்போதுமே சிரிப்பான்.அன்றைக்கும் சிரித்தான்.அவன் சிரித்தது அமானுஷ்யமாக இருந்தது.தூரத்தில் ஒரு லாரி வந்து கடந்ததை வைத்து நாங்கள் எங்கள் வீதியின் சந்திமுனைக்கு வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டேன்.

அந்த இடத்தில் ஒற்றைக்கடை ஒன்று இருக்கும்.ஊரின் வளர்ந்துவரும் பகுதியில் ஒரே ஒரு ஆல் இன் ஆல் கடைகள் முளைக்குமல்லவா.அது போன்ற ஒரு கடை.அதன் பலமுகங்களில் ஒன்று அங்கே டெலிஃபோன் இருக்கும்.அதனால் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.அந்தக் கடையின் வாசலில் நிறுத்தி விட்டு மார்லனும் நானும் கிட்டத் தட்ட நடுங்கிக் கொண்டு நின்றோம்.மழை மெல்லக் குறைந்து கிட்டத்தட்ட நின்றது.நிறுத்தாமல் தான் பார்த்த புதிய படமான "வேலை கிடச்சிடுச்சி" வின்  நகைச்சுவைக் காட்சிகளை மனப்பாடமாக ஒப்பித்துக் கொண்டு இருந்தான் மார்லன்.தூரத்தில் இருந்து மணி அடித்தபடியே ஒரு  வண்டி வந்து நின்றது.மீண்டும் நடமாட்டம் லேசாய் துவங்கி இருக்க எதிர் திசையில் இருந்து ஒரு பெண் நைட்டியோடு
தன் குழந்தையை அழைத்து வந்து தூக்குவாளியில் பருத்திப்பால் வாங்கினார்.நான் என் வாழ்க்கையில் "பருத்திப் பால்" என்ற வஸ்துவை அன்றைக்குத் தான் முதன் முதலாக கண்ணுற்றேன்.பருத்திப்பால் விற்பவர் அதனை எடுத்து ஒரு ஆற்று ஆற்றி அந்த பெண்ணின் தூக்குவாளியில் நிறைத்தார்.என்னிடமோ காசு இல்லை.மார்லனிடம் இருக்காது.அவன் என்னை விட வசதி குறைந்த வீட்டின் பையன்.பூர்வீகமான இலங்கையில் மிக செல்வந்தனாகப் பிறந்தவன்.இங்கே அகதியாகவும் ஏழையாகவும் வாழ்விக்கப்
பட்டவனும் கூட.நான் மார்லனிடம் "காசு இருக்கா..?"எனக் கேட்கவே இல்லை.அந்த மழையின் முடிவில்ஒரு உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காகத் தரப்படும் பழரசம் போல உடலும் மனமும் நனைந்து ஊறி நடுக்கத்தின் மத்திமத்தில் இருக்கையில் மார்லன் அந்தப் பருத்திப்பால் வண்டியை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.ஆனால் எனக்கு மிகப் புதிதாக அறிமுகமான ஒரு பண்டம் எச்சிலூற மென்று விழுங்கி அதனை அந்த ஒற்றைக் கணத்தில் அனுபவிக்கா விட்டால் அவ்வளவு தான் என்ற மாதிரியான வினோதமான ஒன்று அந்தப் பருத்திப் பால்.அதனை வாங்கிக் கொண்டு அந்த பெண் கிளம்ப மெல்ல அந்த வண்டி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தது.வயதும் சூழலும் இன்னபிறவும் என எதெதையோ அடுக்கலாம்.பின் நாட்களில் நான் லட்சங்களை புழங்கியிருக்கிறேன்.மார்லனும் சென்னையில் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்கிறான்.விதவிதமான நட்சத்திர உணவகங்கள் வரை வர்ணம் ததும்பும் பானங்களையும்  சுவைசுழற்றும் பதார்த்தங்களையும் புசித்திருக்கிறேன்.ஆனாலும் கூட என்னால் வாங்க முடியாத ஒரு பொருள் அந்த வண்டியோடுசென்றது.மறக்க முடியாத பருத்திப் பால் மழையாக என் மனதில் தங்கிவிட்டது.


நான் மறக்கக் கூடாத இன்னொரு மழை என் 19ஆவது வயதில் இதே அக்டோபர் மாதம் 96ஆம் வருடம் என் தந்தை வசித்திருந்த அவரது உடலை அவர் காலி செய்துவிட்ட அன்றைக்கு தனக்கன்குளம் என்ற இடத்தில் ரோட்டின் மேலேயே இருக்கும் இடுநிலத்தில் அவரைத் தகனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தபின் எங்களுக்காகப் பெய்த அன்றைய இரவின் மழை மறக்க முடியாத இன்னொரு மழை.கதாநாயகர்களை அறிமுகப் படுத்தவும் கதாநாயகிகள் கிறுக்குத்தனமாய் ஸ்லோமோஷனில் குதித்துக் குதித்து ஆடவும்அப்புறக் கொடுமையாய் வில்லன்கள் மழையில் கொலை செய்தபடி அறிமுகமாகவும் என மழையைத் தொடர்ந்து அவமதித்து வரும் தமிழ் சினிமாவில் இரண்டொரு மழைக்காட்சிகள் மனதை விட்டு அகலாதவை.அதில் ஒன்று சலங்கை ஒலி. இன்னொன்று நாயகன்.

இன்றைய நகைச்சுவை:-


மருத்துவமனை என்பது:-
உறங்கிக்கொண்டிருக்கும் உங்களை எழுப்பி ஒரு நர்ஸ் தூக்கமாத்திரை தந்து சாப்பிடச்சொல்லுமிடம்.

வாழ்தல் இனிது

அன்போடு
ஆத்மார்த்தி


Last Updated (Thursday, 01 November 2012 13:20)