புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஏடீஎம் மைய வாசலில் மழையில் நனையும் பல்ஸர்

 


ஏடீஎம் மைய வாசலில் மழையில் நனையும் பல்ஸர்

அதுவொரு வெளிநாட்டு வங்கியின் தானியங்கி பணம்வழங்கு மையம்.
( மயிரு என்பதை மயிரு என்றே சொல்லலாம் என்பதால்)
அதுவொரு அமெரிக்க வங்கியின் ஏடீ.எம்.மையம்.

வாசலில்
முன்பணமாக ஒரு ரூபாய் மட்டும் கொடுத்து
0% வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் கடன் திட்டத்தில்
மாதாமாதம்
3427ரூ கட்டுகிற
பஜாஜ் பல்ஸர் பைக்'ஐ நிறுத்தி விட்டு
இறங்குகிறான் அவன்.


ஏடீஎம் கதவில்
"இயந்திரம் பழுதாகி உள்ளது"
எனக்கையால் எழுதிய அட்டை தொங்குகிறது.
செக்யூரிட்டி
சூடான தேநீர் மற்றும்
ஒரு சிசர்ஸ் ஃபில்டருக்காகவும்
கிளம்பிச்சென்றிருக்கலாம்.

அடித்துப்
பெய்கிற மழை.
இன்னும்
ஒரு மணி நேரத்திற்காவது பெய்யும்.

கதவில் தொங்குகிற அறிவிப்பைக்
கவனிக்காத அவன்
தன் அட்டையை ஏடீஎம் இயந்திரத்தில் நுழைக்கிறான்.
சிறிது நேரத்துக்குப் பின்
ஏடீஎம் இயந்திரத்தின் தொடுதிரையில்
"மன்னிக்கவும்,இந்த இயந்திரம் பழுதடைந்து உள்ளது" என மின்னுகிறது.

மழை வலுக்கிறது வெளியே.
அவன் கரங்கள் நடுங்க
கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறான்.

ஒரு அனிமேஷன் நாய்
அவனுக்கடுத்து உள்ளே செல்கிறது.
அதன் கழுத்துப் பட்டையில் சில வங்கி அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நுழைக்கிறது.
மீண்டும் மீண்டும் தொடுதிரை மன்னிப்புக் கோருகிறது.
எல்லாவற்றையும் முயற்சித்த
அனிமேஷன் நாய்  ஏடீஎம் அறையின் வாயிற்கதவை
உட்புறமாகத் தாழிடுகிறது.

அவன் வெளியே
ஒரு சிகரட்டைப் புகைத்தபடி
கண்ணகலாது கவனித்துக் கொண்டிருக்கிறான்.
அனிமேஷன் நாய் ஏடீஎம் இயந்திரத்தை கீழே தள்ளி அதன் மீது
அமர்கிறது.
...............
..............
................
சிகரட்டின் கடைசித்துளி வரை இழுத்தவாறு
அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்,
இப்போது அந்த நாய்  
வெளியேறிக் கடந்து செல்கின்றது.

ஏடீஎம் மையத்தின் கதவு திறந்திருக்கிறது.
அவன் பார்க்கையில்
ஏடீஎம் இயந்திரம்
தனது முழங்கால்களில் முகம் புதைத்து
விசித்து விசித்து
அழுதுகொண்டிருக்கின்றது.

அவன் மெல்ல உள்ளே நுழைகின்றான்.
இன்னமும் நிறுத்தாது அழுதுகொண்டிருக்கிற ஏடீஎம் இயந்திரம்
அவனது நுழைதலை
க் கவனிக்கவில்லை
.
அவன்
ஏடீஎம் மையத்தின் கதவை
உட்புறம் தாழிடுகிறான்.