கவிதையின் முகங்கள் 9 கனவின் நேர்நிறை
தமிழ்க் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், சொலல் முறை ஆகியவற்றில் ஒவ்வொரு காலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். மரபுக் கவிதை புதுக்கவிதை இரண்டுக்கும் மத்தியிலான இருள் நீர்ப்பரப்பில் குறும்பாலமொன்றை அமைத்தாற் போல், வசன கவிதை அதற்குண்டான அளவை விட மிகுந்தோ குன்றியோ ஒளிர்ந்தது. உண்மையில் வசன கவிதையை வசனம் என்று ஏற்றவர்கள் கூட அதன் கவித்துவத்தை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டினர். வசன கவிதை நியாயமாக அரை நூற்றாண்டு காலமாவது செல்வாக்கோடு திகழ்ந்திருந்தால் அதற்கு அடுத்த படிநிலை மாற்றங்களான நவீனத்துவ, பின் நவீனத்துவக் கவிதைகள் அவற்றுக்கும் அப்பால் வெடித்துச் சிதறடிக்கப்பட்ட எல்லையற்ற தற்பொழுதின் கவிதைகள் என ஒரு ஆனந்த வரிசையில் அடுக்கிப் பார்க்க முடிந்திருக்கும்.
பாரதி கையளித்ததில் வசன கவிதையை நாளும் சோதித்துக்கொண்டே இருந்ததில் அதன் பல்வேறு கிளைத்தல்களை அடுத்த காலம் முழுவதும் அடைய முடிந்தது. இஃது என்றில்லை. எந்தக் கலையிலும் முன் தீர்மானமோ எதிர்பார்த்தலோ ஒரு வழிக்குறிப்புக்குள் நிர்ப்பந்திப்பதும் ஒருவிதமான உறைநிலையைப் பிரதியெடுப்பதற்கு ஒப்பானதே. குறுகிய காலமே செல்வாக்கோடு திகழ்ந்தாற் போல் தோற்றமளித்தாலும், வசன கவிதை திரும்பி வரும் என்று தோன்றுகிறது. ஒரு காலத்தின் கொண்டாட்டம், மிகதூரத்துப் பின்னொரு காலத்தில் பகடியாக மாறுவது கனிதலின் அழகு. போலவே, சரிவரப் பொருட்படுத்தப்படாத அக்கினித் துளிகள் பிறிதொரு காலத்தே பெருந்தீயெனப் புகுந்து, பேயென்று விரவி, நெடுவனம் அழிப்பது இயல்பே. முப்பாட்டன் காலத்துச் சிகையலங்காரமும், உடை இத்தியாதிகளும் அடுத்த சுற்று வந்து நவீனாவதாரம் எடுப்பது வாழ்விலும், கவிதையிலும் சாத்தியம்.
வசன கவிதைகள், என்னளவில், கவித்துவத் தத்துவங்களாக மறைவிடத்தில் ஒளிர்வதறியாமல் கிடந்து வருகிற சொல்மணிக் கற்கள். பாம்பு துப்பும் என்று அலைவது விழலுக்கு வியர்வை இறைத்தலன்றி வேறில்லை. குழிகளிலும், பொந்துகளிலும் ஆராய்ந்து பார்க்கிறவர்களுக்குத் தட்டுப்படலாம். பாதசாரி, ஆத்மநாம், க.மோகனரங்கன், கல்யாண்ஜி, நாரணோ ஜெயராமன், ராணி திலக் போன்ற பேர்களைக் கொண்ட தனித்த பித்துப் பட்டியலொன்றைப் பின் தொடரமுடியும். அவை கவித்துவத் தத்துவங்களோ, வசன கவிதைகளோ, கடல் பெரிது, அலை பெரிது, சேர்விடங்கள் ஏராளம் என்பது மாத்திரம் நிஜம். மழை வேறு பெய்கிறது. நிலாவும், சூரியனும் மாறி மாறி வரத்தான் செய்யும். வேலையாவது, தனிமையாவது, அதனதன் என்று எதுவுமே இல்லை. காற்று தீண்டாத எதுவுமே இல்லை. சிறகில்லை எனினும் வானுள்ளது பறவை. கனவின் நேர் நிறை கவிதை.
ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பதான இந்த உலகின் கற்பிதங்கள் அனைத்தையும் உடைத்துத் தகர்த்து ரத்து செய்வதற்கான ஒட்டுமொத்த அதிகாரம் கவிதை. குழந்தையின் விளையாட்டினுள் உடைந்த செங்கற்சில்லு ஒன்றுக்கு இருக்கக்கூடிய மதிப்பை லௌகீகப் புறவயப் பண்டமாற்று ஒன்றின் மூலம் சமன் செய்யவே முடியாது. எங்கனம் குழந்தமையின் கைப்பொருளைப் புழங்குவதும் பறிப்பதும் வன்முறையோ, ஆதிக்கமோ, போலவே கவிதையின் மீதான புற உலகின் மதிப்பு மாற்றுகள் திகழ்கின்றன.
ஏதாவது ஒன்று அர்த்தம் இழக்கும்போது, கதியறுதலின் விரக்தி கவிதையாக மாற்றம் கொள்ளுகையில் ஒழுங்கின்மையின் ஒழுங்காக உருவெடுக்கிறது. ஒரு மனத்தின் மெலிதான உணர்தல்கள் தொகுக்கையிலோ, அல்லது தனியே எடுத்துக் காட்டுகையிலோ, பிறழ்ந்தோ, பிசகியோ, மலிந்தோ, இறுகியோ, மொழியின் ஊடாக பதியப்படுகின்றன. அபத்தத்தின் மன உளைச்சலை கவிதையில் வெளிப்படுத்தி மீண்டும் பெற்றுக்கொள்ளுவதன் மூலமாக, கொதிக்கிற திரவத்தை இரு கலயங்களில் மாற்றி மாற்றி ஊற்றி ஆற்றுவதன் மூலமாக அதில் உள்ளுறையும் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளுகிற அதே செயல்முறையை, கவிதை நடுக்க காலத்தில் மனிதனுக்கு சாத்தியம் செய்கிறது. மேலும், கவிதைக்கென்று துல்லியமான நோக்கங்கள், முன் தீர்மானங்கள், அல்லது அகவய நம்பிக்கைகள், சாத்திய பலித சான்றுகள் இருப்பதற்கில்லை. மலைப் பிரதேசத்து கடுமழை காலத்து இரைச்சலுக்கு நடுவே ஒலிக்கிற பெருங்குரல் எதிரொலியற்றுப் போவதற்கான சாத்திய அசாத்தியங்களைத் தனதே கொள்கிற மொழியின் மர்மப் புன்னகை கவிதை.
கவிதை எதையும் வலியுறுத்த வேண்டியதில்லை. கவிதையின் நோக்கங்கள் அந்தரங்கமானவை. மேலும், திறந்து பார்க்காத புதிர்களின் அழிதலைப் போல கவிதையின் அந்தம் முற்றக்கூடும். கவனத்தை ஈர்ப்பதோ, கண்டனமோ, எதிர்த்தலோ, மடைமாற்றுதலோ, மனம் கழுவுவதோ, சத்தியப் பிரமாணமோ, அவநம்பிக்கையோ, விகசிப்போ, ஆற்றாமையோ, கையறு நிலையோ, தொழுதலோ, நிர்ப்பந்தமோ, எள்ளலோ, குறை கூறுவதோ, பெருவாழ்த்தோ, சபித்தலோ, மொழியின் ஊடாக சொற்களை எறிந்து கொலை புரிவதோ, இன்ன பிறவோ இவற்றில் ஏதேனும் ஒன்றோ, எல்லாமுமோ, தனித்தோ, கூடியோ கவிதையின் நோக்கங்களாக அமையலாம். நோக்கமறுதலும் ஒரு நோக்கமாகலாம்.
மா அரங்கநாதன் எழுதிய “பொருளின் பொருள் கவிதை” நர்மதா பதிப்பகம் வெளியிட்டது மே 83 இல் இதன் முதல் பதிப்பு வெளியானது. ரொம்ப முக்கியமான புத்தகம்.
அதிலிருந்து ஒரு விள்ளல்
“கலைச் சொற்களின் பட்டியல் தயாரிக்க கூடியவன் அல்லன் கவிஞன் இலக்கிய நெறிமுறைகளையும் தூய்மையானவை என கருதப்படும் சொற்களையும் கை விடுபவன்தான் கவிஞனாக இருப்பான். எந்தச் சொல்லை நீங்கள் கையாளுகிறீர்களோ அதையே பரவலாக பயன்படுத்துவான்.இலக்கியத் தன்மையோ கவிதை அம்சமோ மொழிக்குள் இருக்கும் இன்னொரு மொழி நாம் பயன்படுத்தும் சொற்கள் மூலம் அந்த இன்னொரு மொழியினைப் படைப்பாளி பேசுகிறான் அந்த இன்னொரு மொழி தெரிந்தவர்கள் மாத்திரமே அதை புரிந்துகொள்ள முடிகிறது.தான் உணர்ந்ததற்கும் கண்ட பொருளுக்கும் இடையில் நின்று உங்களுக்கு புரிந்த மொழியில் அவன் மட்டுமே சொல்லக்கூடிய முறையில் சொல்லிவிடுகிறான் அந்த முறையை நடை எனலாம்.”
கற்றுக்கொடுத்தால் கவிதை வருமா?
கவிதையைப் பயிற்றுவிக்க முடியுமா?
கவிதைக்கான குறைந்த பட்ச செயல்முறைத் திட்டம் ஏதேனும் உண்டா?
பள்ளி கல்லூரிகளில் இலக்கியத்தைப் பயிற்றுவிப்பதன் நீட்சியாகக் கவிதை எழுதுவதற்கான கோர்ஸ் மெடீரியல்ஸ் எதாவது தமிழில் இருக்கிறதா?
கவிதை பேராசிரியர்கள் எடுத்தோதிக் கற்றுத் தேறுவதற்கான அறிவுப்பண்டமா?
இவற்றுக்கெல்லாம் ஆமாம் என்றும் இல்லை என்றும் இரு பதில்கள் எப்போதும் உள்ளன.
100 greatest love poems எனும் புத்தகத்தை Rupa Publishers 295 ரூ விலையில் தொகுத்திருக்கிறார்கள். காதல் பித்து பன்மடங்கு அதிகரிக்கும். கவிதையில் காதலை எழுதுவதில் மேற்கத்தியர்கள் அபாரர்கள். அதிலும் தேர்வதற்கான சூட்சுமங்கள் இந்தக் கையடக்கப் புத்தகத்தில் கிடைக்கலாம்.
ஒரு உதாரணக் கவிதை James Henry Leigh Hunt (19.10.1784 – 28. 08. 1859) எழுதிய இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் சங்கமி
நாங்கள் சந்தித்தபோது ஜென்னி,
தான் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து
துள்ளிக் குதித்து எனை முத்தமிட்டாள்.
காலம் எனும் கள்வனே யாரெல்லாம் வேண்டுகின்றனரோ
அவர்களது பட்டியலிலெல்லாம் இனிப்புகளை உட்படுத்துவாயாக!
சொல்! நான் சோர்ந்துபோனேன் என்று
சொல்! நான் சோகத்திலுளேன் என்று
சொல்! செல்வமும் உடல்வலுவும் என்னை நீங்கிவிட்டன என்று
சொல்! எனக்கு வயதாகிவிட்டது என்று
ஆனால் இதையும் சொல்
ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்று
கவிதை என்பது சன்னதப் பித்து என்று வகைப்படுத்துகிறவர்கள் அதனைத் தன் உள்ளே இருந்து கேட்கும் என வகைப்படுத்துகிறவர்கள் ஒரு மந்திரசெய்கையாகவே கவிதையை முன்வைப்பவர்கள் கவிதை என்பதைத் தன்னால் மட்டுமே உருவாக்கக் கூடிய பேரெழில் புத்துருப் பொருளாகவே அணுகுவது ஒரு பக்கம் இதே மொழியாற்றின் மறுகரையில் கவிதை என்பதைப் பார்த்துப் பார்த்துக் கோத்தல் இயலும் என்று நம்புகிறவர்கள் நிற்கிறார்கள். இந்த இரு தரப்பாருக்கும் இடையில் பல சுற்றுக்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கக் கூடிய படகுப் போட்டியைப் போலத் தான் கவிதை ஊடாடிக் கொண்டே இருக்கிறது. இது முடியாத யுத்தம்.
இரட்டை வாதமாகட்டும் பன்முகப் பரவலாகட்டும் விளைந்தேறுகிற பயன் என்ன என்பதே நோக்க வேண்டியது. என்னளவில் கவிதையைக் கற்றுக் கொள்வது மாபெரிய செயல்முறை சார்ந்தது. ஒரு மகா பொறுமை இருந்தாலொழிய அதற்குச் சாத்தியம் இல்லை. கவிதை என்பதை ஒரு அந்தரங்கச் செயலாகவோ தனிப்பட்ட உரிமையாகவோ நம்புவது வரை அவரவர் கவிதை அவரவர் இருளிலேயே ஆழ்ந்தபடி இருக்கும். புறத்தின் ஆயிரம் கிரணங்கள் அவற்றுக்கல்லவே .
சின்னஞ்சிறு கவிதைகளைப் பற்றிப் பேசலாம் எனத் தோன்றுகிறது. எந்த ஒரு கலைப்படைப்புக்கும் அதன் வடிவம் சார்ந்த நிர்ப்பந்தங்கள் முகாந்திரக் கட்டுப்பாடுகள் இருப்பது அவற்றின் மீது செலுத்தவல்ல தாக்கமாகவே கருத முடியும். “இத்தனை வரிகளுக்குள் சிந்திக்க!” என்று ஒருபோதும் கட்டாயப் படுத்த முடியாது. சொல்ல வந்ததைச் சொல்லித் தீர்வது எழுதுபவனின் மனவோட்டப் புரவி ஓடிக் களைக்கிற புள்ளி போல் அதுவாக நிகழ்ந்தேறுவது. அதனை முன் கூட்டியே கணித்துக் கொள்வது இயலாது. வட்டத்துக்குள் எறிகிற நாணயங்கள் அல்ல கவிதைக்கு உள்ளே நேர்ந்து விடுகிற வார்த்தைகள். வரிகளாகவோ வார்த்தைகளாகவோ கவிதையைக் கட்டுப்படுத்துவது கவித்துவத்தை அற்றுப் போகச் செய்துவிடும். எழுதுவதென்பது மாபெரும் அனர்த்த விளக்கமாகக் குன்றிச் சீழேறும்.
அஞ்சனக்கண்ணி என்ற தொகுப்பில் குறுங்கவிதைகள் பலவற்றைப் படிக்க முடிந்தது. இவற்றை எழுதியவர் சஹானா.காலச்சுவடு வெளியீடு விலை 125ரூ முதற்பதிப்பு 2019 ஜூலை.
இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று கவிதைகள்
1
மழை முடிந்து குளம் நிரம்பிய பின்
துள்ளிக் குதிக்கும் குளத்து மீனின் முகத்தில்
பூனை பூத்திருந்ததைப் பார்த்தேன்
2
குழந்தைகளுக்குக்
குழந்தைகளைப் பிடிக்காது
3
நேற்று முளைத்த செடியில்
பூவாக அமர்ந்திருக்கிறது
பட்டாம்பூச்சி
எட்டு வரிகளுக்குள் கவிதைகளை இனம்காண்பது வேறு வகையான கூடுதல் சித்திரத்துக்கான வெளியை உண்டாக்குகிறது. சின்னஞ்சிறிய கவிதைகள் திட்டமிட்டு நிகழும் போது மலர்ந்துதிர்ந்து காலச்சருகுகளாய்க் கலைந்தழிபவை. அவையே இயல்பாக நிகழுங்கால் சாஸ்வதமாகின்றன. எல்லோராலும் எழுத முடியாத பண்டமாய்க் கவிதை இருப்பதைப் போலவே எல்லோர்க்கும் வசப்படாத ஓவியப் புன்னகையாய்ச் சிறு மற்றும் குறுங்கவிதைகள் தனிக்கின்றன. மொழியின் நிஜ செல்வந்தமாகவே இத்தகைய கவிதைகளைக் கொண்டு செல்ல முடியும். அடுத்த காலத்தை நோக்கி எறியப்பட்ட மொழிச்சில்லுகளாக இவை தற்காலத்தைக் கடக்க விழைகின்றன. அவை ஒரு போதும் இறந்த காலத்தின் மாபெரிய பேரேட்டில் மௌனத்தில் உறைந்துவிடுவதில்லை. இப்படியான சின்னஞ்சிறிய கவிதைகளை மாத்திரம் எடுத்துக் கோத்துத் தொகை நூலாக்கலாம். மழையைக் கலயத்தில் சேர்த்தாற் போன்றதொரு உபகாரமாய்த் திகழும்.
யார் செய்வது?