சொல்லின் நிழல்
மிஸ்யூ எனும் தலைப்பை விடவும் எனக்கு என்னவோ “இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது” என்ற தலைப்புத் தான் ஈர்ப்புக்குரியதாகப் பட்டது. மனுஷ்யபுத்திரன் ஒரு மாதிரி நேர்தாக்கக் கவிதைகளின் எல்லைவரை சென்று பார்த்துவிடக் கூடிய எத்தனத்தோடு தொடர்ந்து தன் கவிதைகளை அணுகுகிறார். எண்ணிக்கையில் அதிகம் என்பதைத் தாண்டி எல்லாத் தேடலுமே ஒரு காணாப்பண்டத்தைக் கண்டுவிடுகிற முனைப்புத் தான். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின்பால் நெடுங்காலத் தொடர்தல் கொண்டவனான எனக்கு அவருடைய எழுத்தில் மிகவும் பிடித்த தொகுதிகள் என நீராலானது மற்றும் அதீதத்தின் ருசி இரண்டையும் தான் சொல்வேன். அவற்றுக்கு முன்பாக அவர் ஏறி வந்த பயணத்தின் ஒவ்வொரு மைல்கல்லும் முக்கியமானவையே. இந்த இரண்டு தொகுதிகளுக்குப் பின்னால் மனுஷ்யபுத்திரனின் இன்றுவரையிலான கவிதைகளை நான் அவற்றின் எண்ணிக்கை கொண்டு மட்டும் காண்பதில்லை. மாறாக அவை ஏற்படுத்த விழையும் கண்ணறியாப் புள்ளிகளினூடாகக் காணத் தருகிற தொடர் சித்திரமொன்றைத் தான் எப்போதும் நோக்குவேன். அந்த வகையில் கடவுளுடன் பிரார்த்தித்தல் பசித்த பொழுது மற்றும் சென்ற வருடம் வெளிவந்த அலெக்ஸா உள்ளிட்ட மூன்று தொகுதிகள் இவையெல்லாம் ஒரு உக்கிரமான காலநகர்தல்களின் சாட்சியங்களாகத் தூரதூரங்களுக்குத் தொடர்ந்து வர விழைபவை என்று தான் பார்க்கிறேன். இந்தக் கவிதைகள் ஒட்டுமொத்தமாய் ஒரு அல்லது சில குரல்களை மீண்டுமீண்டும் எழுப்பப் பார்ப்பவை. மனுஷ்யபுத்திரன் இந்தக் காலத்தின் யுவமனங்களுக்கு அருகே சென்று பார்த்ததன் விளைவல்ல இக்கவிதைகள். மாறாக அவர் அப்படியான யுவமனம் ஒன்றைத் தன்னுடையதாக்கி வரித்துக் கொண்டதன் பலாபலன்களே மிஸ்யூ கவிதைகள்.
நெடுங்காலத்துக்கு முன்பு ஹால் மார்க் மற்றும் ஆர்ச்சீஸ் என இரண்டு பரிசு ப்ராண்டுகள் இந்தியாவில் தழைக்கத் தொடங்கிய நேரம் போட்டி போட்டுக் கொண்டு பரிசளித்தலுக்கான பேருலகம் ஒன்றைத் திறந்து வைக்கத் தொடங்கின. அஞ்சலட்டையின் அதே எளிமையோடு பொங்கல் வாழ்த்துப் போலவே காதலர் அட்டைகள் காணக் கிடைத்துக் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் சட்டென்று ஒரு மாயத் திறப்பாய் அற்புதம் ஒன்றினைப் போல் அந்த மாற்றம் நிகழ்ந்தது. எங்கு பார்த்தாலும் காதலை அன்பை நட்பைப் பிரிவை இன்னபிறவற்றை எல்லாம் சொல்லிக் கொள்வதற்கான சிறப்பான வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து சந்தைப்படுத்தியதன் மூலம் ஒருவிதமான மேதமையை நளினத்தை சமூகத்தின் கூட்டுமனத்தின்பால் நிகழ்த்தவும் தலைப்பட்டது. முன்பிருந்த திரும்பிச் செல்ல முடியாத பொன்னுலகத்தின் எளிமையைக் கைவிட்டாலும் கூடவே முன் சொன்ன நளினமான நவீனமான முன் செல்லல் சாத்தியமானது.
இந்த மிஸ்யூ என்னளவில் அப்படியான ஒரு நவீனத்தின் திறப்பு என்று தான் சொல்வேன். இப்போது புத்தகம் எனும் பண்டத்தை முதன்முதலாக ஒரு கவிஞன் பரிசுக்குரிய பொருளாக மாற்றியிருக்கிறான். ஏற்கனவே கவிதைகளுக்குச் சந்தை மதிப்பு கிடையாது என்பது தொடங்கிக் கவிதை நூல்களை விற்பது சிரமம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான வாதங்களும் சூன்யச்சொல்லாடல்களும் நிரம்ப ஒலித்துக் கொண்டிருக்கும் காரிருள் மேடை ஒன்றின் மேல் மெல்ல ஒரு ஒளி அரும்பி இருப்பதைக் காண முடிகிறது. இது ஒருவகையில் முதல் ஒளி. ஒரு கவிதைத் தொகுதி விற்பனைக்குரிய அந்தஸ்தைத் தாண்டி சூப்பர்ஹிட் பண்டமாக மாற்றம் பெறுகிறது. இது முன்பெலாம் சினிமாப் புகழ் அல்லது வேறெந்த நட்சத்திரத் தன்மை மிகுந்த மனிதர்களின் முன்னெடுப்புக்களில் நிகழ்ந்திருக்கக் கூடும். கவிதையில் அதுவும் சிறுபத்திரிக்கை சார்ந்த ஒரு மனிதனின் கவிதை நூல் ஒன்றின் ஊடாக நிகழப் பார்ப்பது நிகழ்ந்து கொண்டிருப்பது இப்போது தான். யாவர்க்குமான பரிசு ஒன்றினை ஒரு கவிஞன் தன் எழுத்தினூடாகத் தயாரித்துத் தந்திருப்பது இதுவே முதன்முறை.
மனுஷ்யபுத்திரனே நினைத்தாலும் இனி இந்த விரிவாக்கத்திலிருந்து பின்செல்லவே முடியாது என்று தான் தோன்றுகிறது. மிஸ்யூ என்பது கவிதையைப் பரிசாக மாற்றியிருக்கும் ஒரு உன்னதம். அதை எழுதிய மனுஷ்யபுத்திரனை யாதொரு கனமும் இல்லாமல் விலக்கியும் தள்ளாமல் காதலுக்குரிய நேசத்துக்குரிய பரிசொன்றின் உட்புறம் கொண்டு சென்றிருக்கிறது மிஸ்யூ. இது இலக்கிய அந்தஸ்தையெல்லாம் தாண்டிய வேறொன்று. கவிதைக்குத் தரப்படுகிற பெருவெளிச்சமாக இதனைப் பார்க்கும் போது இன்னும் இந்த மிஸ்யூவை வேறு யாராவது வெல்ல வருவார்களா என்பதைப் பார்க்கத் தோன்றுகிறது. அதுவொரு சுவையான காத்திருத்தல் தான் இல்லையா? அந்த வகையில் மனுஷ்யபுத்திரனுக்கும் இந்த மிஸ்யூவை அடுத்த நூலின் மூலமாக வென்றாக வேண்டிய ராஜ நிர்ப்பந்தம் ஒரு பரிசைப்போல் தரப்பட்டிருக்கிறது. அதைத் தந்தது அவர் பார்த்துப் பார்த்து உருவாக்கி இருக்கும் மிஸ்யூ எனும் புத்தகம் தான்.
ஒரு முத்தத்தின் மூன்றாம் நபராகக் கடவுளுக்குக் கூட இடமில்லாத போது தங்கள் காதலுக்கு உட்புறம் ஒரு கவிஞனை, அவன் கவிதைகளின் வழியாக எடுத்துச் செல்லக் கூடிய விசித்திரமான முன்னெடுப்பு ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது எனக்குத் தெரிந்த வரை இதற்கு முன்பாக நிகழ்ந்ததே இல்லை.
வெல்டன் மனுஷ்யபுத்திரன். மிஸ்யூ எனும் சொல்லின் நிழலாக இனி மனுஷ்யபுத்திரன் எனும் பெயர் இருக்கத் தொடங்கியிருக்கிறது. கவிதைகளை வேறெதை விடவும் காதலிக்கும் ஒருவனுக்குக் கவிதையால் திரும்பத் தரக் முடிகிற கர முத்தம் ஒன்றைப் போல அது.
இந்தப் புத்தகத் திருவிழாவின் பெருங்கவனப் புத்தகம் மிஸ்யூ;இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது என்பதாய்த் தான் இருக்க முடியும். விலை பக்கங்கள் கவிதைகளின் எண்ணிக்கை என்பனவற்றையெல்லாம் தாண்டி இந்த நூலெங்கும் மனுஷ்யபுத்திரன் அன்பின் மீது குன்றாத நம்பகம் ஒன்றினை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தித் தர முயல்வது தான் மிக முக்கியமான அம்சம் என்பது என் எண்ணம்.
வாழ்தல் இனிது