தேன் மழைச்சாரல் 1 சரஸமும் ஹாஸ்யமும்
முதன் முதலாகக் கண்ணதாசன் முதலாளியாகவும் பாடல் புனைகிறவராகவும் முன்னெழுந்து நிலைபெற்ற காலம் என்று சொல்லத் தக்க 50 களின் இறுதி 3 வருடங்கள் வரை பாடல்களின் யதார்த்தம் இவ்வகையிலாகத் தான் இருந்தது. அப்போதைய பாடல்கள் தெலுங்குக் கீர்த்தனைகளாகவும் அளவுகடந்த ஆங்கிலச் செறிவுடனும் இருப்பதை மக்கள் ரசனையாக நிறுத்திடுவதற்கான முயல்வுகள் காலமெல்லாம் நிகழ்ந்தவண்ணம் இருந்தாற் போலவே அக்காலப் பாடல்களை ஜரிகைச் சொற்கள் கொண்டு பூர்த்தி செய்துவிடுவதும் நிகழ்ந்தபடி இருந்தது. அளவுக்கதிகமான மணிப்பெருக்குச் சொற்களும் அர்த்தமற்ற பிறமொழிச் சொற்களின் கூட்டும் கொண்டவையாகப் பாட்டுக்கள் அதிகதிகம் புனையப்பட்டன. மக்களுக்கு பாடல் ஒரு ஒட்டாத அந்நியத் தன்மை மிகுந்த பண்டமாகவே தொடர்ந்து விளங்கிக் கொண்டிருந்தது எனவும் சொல்ல முடியும்.
கண்டஸாலாவைத் தெலுங்கு தேசத்தின் ரசிகர்கள் இன்றளவும் வழிபடவே செய்வது நிசம். தன் குரலால் எல்லோரையும் கொள்ளையடித்தவர் கண்டஸாலா. இசையமைப்பாளராகவும் பாடற்கலைஞராகவும் ஒருங்கே வென்றவர். தமிழிலும் இவரது புகழ்க்கோடு பெரியது. மனோகரமான குரலால் இவர் பாடிய பல பாட்டுக்கள் காலம் கடந்து ஒளிர்கிற வைடூர்யங்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தைய்யடா தைய்யடா என்று பாடும் பாங்கே அழகு எனில் அன்பு சகோதரர்கள் படத்துக்காக இருவேறு மனவிரிதலாக துக்கமும் சந்தோஷமும் கொண்டு பாடிய முத்துக்கு முத்தாக இன்றும் ஜொலிக்கிறது தானே? கல்யாண சமையல் சாதம் என்று கண்டஸாலா குரலெடுத்துப் பாடியது மாயாபஜார் படத்தின் அலாதியான பேரின்பப் பாட்டல்லவா..? பாதாள பைரவிக்காக கண்டஸாலா பாடிய அமைதியில்லா என் மனமே பாட்டும் அற்புதம் தான் இல்லையா? தேவதாஸ் படத்தில் துணிந்த பின் மனமே உலகே மாயம் இரண்டும் எல்லா நாளும் பௌர்ணமியாக வானில் நிரந்தரிக்கிற பாடல் நிலவுகள் எனலாம் அல்லவா?
பார்த்தீரா இவர் சரசம் கேட்டீரா இவள் ஹாஸ்யம்
“சரசம்-ஹாஸ்யம்” என்ற இரண்டு சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச்சொற்களைக் கொடுத்திருந்தால் இன்னும் வேறொரு தளத்தில் நின்றொலித்திருக்கும் இப்பாடல் என்பதில் எள்ளுட்புற அளவும் ஐயமில்லை. இருந்தபோதிலும் அந்தக் காலத்தில் சினிமாப் பாடல்களுக்குத் தரப்பட்ட அழுத்தத்தை மனதிற்கொண்டு இவற்றை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா..?