மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள்                              பாவண்ணன்


விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’ என்று தொடங்குகிறது. தற்செயலாக அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பரிதாபத்துக்குரிய ஒருவனைப்பற்றிய சித்திரத்தை அந்தப் பாடலில் காணலாம்.

ஒருவனுடைய வீட்டில் தாய்மையடைந்திருந்த பசு கன்றை ஈன்றெடுக்கிறது. அந்த நேரத்தில் மழை பொழியத் தொடங்குகிறது. மழையில் மண்சுவர் சரிகிறது. வீட்டில் பிள்ளைப்பேற்றுக்குத் தயாராக இருக்கும் மனைவிக்கு வலி வருகிறது. வீட்டில் ஏவல்பணிகளுக்கு உதவியாக இருக்கும் அடிமை மரணமடைகிறான். ஈரப்பதம் இருக்கும்போதே விதைத்துவிடவேண்டுமென்பதால் விதைக்கூடையை நிலத்துக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான் அவன். அப்போது பழைய கடன்பாக்கி கேட்டு அவனை வழிமறிக்கிறார் ஒருவர். அந்த நேரத்தில் அயலூரிலிருந்து மரணச்செய்தியோடு அவனைத் தேடிக்கொண்டு வருகிறார் இனொருவர். திருப்பியனுப்ப முடியாத நெருங்கிய உறவுக்காரரும் தேடி வந்து நிற்கிறார். தலைகுழம்பி என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறவனை புற்றை நோக்கிச் சென்ற பாம்பு கொத்திவிட்டுச் செல்கிறது. உயிரச்சத்தில் தவிக்கிறவன் என்று தெரியாமல் அந்தப் பக்கமாக வந்த ஊர்க்கணக்குப்பிள்ளை வரிபாக்கியையும் கோவில் குருக்கள் தட்சிணை பாக்கியையும் கேட்கிறார்கள்.


Pavannan – சிலிகான் ஷெல்ஃப்

யாருக்கோ இப்படி நடந்தது என்று இலக்கியம் சொல்வதில்லை. மாறாக, இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்றொரு சாத்தியப்பாட்டை முன்வைக்கிறது. அதன் வழியாக வாழ்க்கை என்பது என்ன, அதில் மனிதன் என்பவனுக்குரிய மதிப்பென்ன, இன்பதுன்பங்களின் மதிப்பென்ன என்னும் கேள்விகளுக்கு விடையைக் கண்டடைய வைக்கிறது.

விவேகசிந்தாமணிப் பாட்டில் எல்லாத் தற்செயல்களும் ஒரே கணத்தில் அடுத்தடுத்து நிகழ்கின்றன. இதற்கு மாறாக, ஒரு தற்செயலின் குறுக்கீட்டால் திசைமாறி பயணம் செய்து, மீண்டுமொரு தற்செயலின் குறுக்கீடு திசையை மாற்றிவிட, அந்தப் பயணத்திலும் இன்னொரு தற்செயலின் குறுக்கீடு முற்றிலும் வேறொரு திசையில் செலுத்திவிட, விதியின் விசையால் இப்படி திசைமாறி திசைமாறிச் செல்கிறவன் நிலை என்னவாக இருக்கும் என்றொரு கேள்விக்கு விடைசொல்வது எளிதன்று. அத்தகு பயணத்தின் குழப்பங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் சீற்றங்களுக்கும் அலைச்சல்களுக்கும் முடிவே இல்லை. விதியின் விசையால் உருண்டோடும் பந்து போன்ற ஒருவனின் வாழ்க்கையை முன்வைத்து காலத்தோடும் தற்செயல்களோடும் மனிதன் ஆடும் பகடையாட்டம் ஒரு நாவலுக்குரிய களம். அப்படி ஒரு களத்தை உருவாக்கி மிட்டாய் பசி நாவலை எழுதியிருக்கிறார் ஆத்மார்த்தி.

நாவல் முழுவதும் விடைகாண முடியாத தற்செயல்கள் நிறைந்திருக்கின்றன. அந்தப் பகடையாட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்பைவிட தோல்விக்கான வாய்ப்புகளே நிறைந்திருக்கின்றன. கலங்கியும் தயங்கியும் பின்வாங்கி நிற்பதைவிட துணிந்து ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடவேண்டியிருக்கிறது. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் ஆபத்துகளைக் கடந்து அப்பால் சென்றுவிடலாம். தோற்று விழுந்துவிட்டால் தாயம் போட்டு மீண்டும் ஆட்டத்தைத் தொடரலாம்.

நாவலின் கட்டமைப்பு நம்பகத்தன்மையோடும் கச்சிதமாகவும் ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் விதத்தோடும் உள்ளது. அதுவே நாவலின் பலம். குழந்தைப்பருவத்திலிருந்து வாலிபப்பருவம் வரைக்குமான ஏறத்தாழ இருபது இருபத்தைந்து ஆண்டுகால வாழ்க்கை நூற்றியெண்பது பக்கங்களில் செறிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பழிவாங்குவது பற்றியே இளமைமுதல் நினைத்துக்கொண்டிருந்த ஒரு மனம் பழியை மறந்து, அதற்கு அப்பால் சென்று யோசிக்கிற அளவுக்கும் தம் இழப்புகளை நினைத்து ஒரு கணம் துயருறுகிற அளவுக்கும் மாற்றமடையும் திருப்பம் மகத்தானது.


மிட்டாய் பசி | Buy Tamil & English Books Online | CommonFolks

ஒவ்வொரு முறையும் திருப்பங்கள் அவனை மேலும் மேலும் இருட்டை நோக்கியும் வெறியை நோக்கியும் மட்டுமே செலுத்திக்கொண்டிருந்தன. ஒரே ஒரு முறை – முதன் முறையாக ஒரு திருப்பம் அவனை வெளிச்சத்தை நோக்கித் திருப்பிவிட்டது. கசப்புகளாலும் துயரங்களாலும் நிறைந்திருந்த ஆனந்தின் நெஞ்சில் முதன்முதலாக ஆனந்தத்தின் துளி விழுகிறது. தித்திப்பான அந்த முதல் துளி ஆத்மார்த்தியின் கைவண்ணத்தில் கச்சிதமாகத் திரண்டு வந்திருக்கிறது. நாவலில் நிகழும் தற்செயல்களுக்கு அளவே இல்லை. நீர்வழிப்படும் புணையென நாவலைச் செலுத்தும் விசையே அந்தத் தற்செயல்கள். எவ்விதமான தர்க்கநியாயத்துக்கும் கட்டுப்படாத அச்செயல்களால் மாந்தர்களுக்கு நேரும் இன்னல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் கணக்கே இல்லை.

ஆசைக்குரியவளாக ஒருத்தி இருக்கும்போதே, அவளுடைய தோழியை நம்பவைத்து திருமணம் செய்துகொள்வது என்பது, பெற்றோர் இல்லாமல் பாட்டி வீட்டில் வளரும் இளம்பெண்ணான செல்லம்மாவுக்கு அளிக்கும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் அளவே இல்லை. இருவரும் தன்னை நம்பவைத்து ஏன் மோசம் செய்தார்கள் என்னும் கேள்விக்கு அவளால் விடைகாணவே முடியவில்லை. செல்லம்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது என உணர்ந்த கணத்தில் தோழி ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறாள். கணவனோ ஆண் என்னும் ஆதிக்க அணுகுமுறையோடு, அதைக் கடந்துசெல்ல முயற்சி செய்கிறான். அந்த அதிர்ச்சி அவளுக்குள் சுரக்கும் அன்பின் ஊற்றை அடைத்துவிடுகிறது. பிறக்கும் குழந்தை மீது அவளால் இயற்கையான அன்பைப் பொழிய முடியவில்லை. விதவையான கணவனின் சகோதரி குழந்தைக்கு ஆதரவாக இருக்கிறாள்.

எதிர்பாராத விதமாக வேலை செய்யும் இடத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து செல்லம்மாவின் கணவன் இறந்துவிடுவது இரண்டாவது திருப்பம். வீட்டில் முடங்கிவிடாமல் எங்கோ வேலை செய்து வருமானத்துக்கு வழிதேடிக்கொள்கிறாள் அவள். குழந்தை பெரியவனாகி பள்ளிக்குச் செல்கிறான். யார்மீதும் எவ்விதமான பிடிப்புமில்லாமல் காற்றில் சருகென அவள் வாழ்க்கை உருண்டோடுகிறது.

கூடப்படிக்கும் நண்பனொருவனுக்காக இன்னொரு நண்பனை அடிப்பதால் பள்ளியை விட்டு ஆனந்தைவெளியேற்றிவிடுகிறது நிர்வாகம். நகரத்தில் இருக்கும் வேறொரு பள்ளியில் அவனைச் சேர்க்கிறாள் செல்லம்மா. அது அடுத்த திருப்பம். அந்தப் பள்ளியின் கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அவனுக்கு படிப்பு வரவே இல்லை. மீண்டு எழமுடியாத ஏதோ ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டதுபோல அவன் தவிக்கிறான். அது மற்றொரு திருப்பம். பம்பாயில் வசிக்கும் தூரத்து உறவுக்காரர் ஒருவர் அவளுடைய ஆதரவற்ற நிலையைக் கண்டு அவளை மணம் புரிந்துகொள்கிறார். மனத்துக்கு ஒவ்வாத சூழலிலிருந்து விடுபட, அது விதி வழங்கும் வாய்ப்பென நினைத்து, வயதுவித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் திருமணத்துக்கு இசைந்து பம்பாய்க்குப் புறப்பட்டுச் செல்கிறாள் அவள்.

புதிய பள்ளியோடு அவனால் ஒடடவே முடியவில்லை. பகைமையின் காரணமாக ராம்பிரபு என்னும் மாணவன் மறைந்திருந்து வீசிய செங்கல்லுக்கு இரையான ஆசிரியர் தன்னை அடித்தவன் ஆனந்த் என்று சாட்சி சொல்கிறார். அது ஒரு முக்கியமான திருப்பம். விசாரணைக்குப் பிறகு காவல்துறை அவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கிறது. தன் மீது பழி விழுவதற்குக் காரணமான அவனைக் கொன்று பழிவாங்கவேண்டும் என அவன் ஆழ்மனம் துடிக்கிறது. விடுதலையாகி அவன் செய்யப்போகிற அந்தக் கொலையை ஒவ்வொரு நாளும் மனத்துக்குள்ளேயே நிகழ்த்தி நிறைவடைகிறான் அவன். சிறையில் அறிமுகமான தயாளன் அவனுக்கு உதவுவதாக வாக்களிக்கிறான். சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்குமே அடுத்தடுத்து விடுதலை கிடைக்கிறது.

பழிவாங்க ஆதரவு தேடி தயாளனின் இருப்பிடத்துக்குச் செல்கிறான் ஆனந்த். அங்கே நாய்க்கடிப் புண் புரையோடியதால் அவன் இறந்துவிட்ட தயாளனையே அவன் பார்க்க நேரிடுகிறது. பழி தீர்ப்பதற்கான வாய்ப்பை எப்படி உருவாக்குவது என்புது புரியாமல் மனம் போன போக்கில் அவன் திரியத்தொடங்குகிறான். கேரளம், பம்பாய், தில்லி என வாழ்க்கை அவனை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. எங்கும் ஒட்டமுடியாமல் ஆண்டுக்கணக்கில் திரிகிறான். ஒவ்வொரு ஊரிலும் அவனுக்குப் புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன.

தில்லியில் ஒரு பெரிய விடுதியில் மின்சாரப்பராமரிப்புக் குழுவில் ஒருவனாக வேலை செய்துவரும்போது எதிர்பாராமல் தன் மீது கொலைக்குற்றம் விழுவதற்குக் காரணமானை ராம்பிரபுவை தற்செயலாகக் காண்கிறான் அவன். அவன் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் அந்த விடுதியில் தங்க வந்திருக்கிறான். ஆண்டுக்கணக்கில் அவனைப் பழிவாங்கத் துடித்த கொலைப்பசி சட்டென ஆனந்தை விசைகொள்ள வைக்கிறது. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துவிடுகிறார்கள். இருவருக்குமே மற்றவர் யார் என்னும் உண்மை தெரிந்துவிடுகிறது.

தன் வாழ்க்கையைத் திசைதிருப்பியவன். தீராத இருட்டை நோக்கிச் செலுத்தியவன். எண்ணற்ற துயரங்களுக்குக் காரணமானவன். அவனைப் பார்த்ததிலிருந்தே அவன் மனம் கொதிக்கிறது. அவனைக் கொன்றால் மட்டுமே தன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் கொலைப்பசி தணியும் என உறுதியாக நம்புகிறான் அவன். ஒவ்வொரு கணமும் வெறியுடன் கடந்து போகிறது.

இரவு நேரத்தில் பராமரிப்புப்பணியை முன்னிட்டு ஆனந்த் மொட்டைமாடிக்குச் செல்கிறான். அவனைப் பார்த்துவிட்டு ராம்பிரபுவும் மாடிக்கு வருகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனந்திடம் மன்னிப்பு கேட்கிறான் ராம்பிரபு. தன்னைக் கொன்றுவிடுமாறு சொல்கிறான் ராம்பிரபு. அந்தக் கெஞ்சுதல் ஆனந்தை என்னமோ செய்கிறது. எதையும் பேசாதே, இங்கிருந்து போய்விடு என அவனை விரட்டுகிறான் அவன்.

அந்தக் கணநேர மனமாற்றம் அவனுக்கே நம்பமுடியாமல் இருக்கிறது. ஒரு மிட்டாயை சப்பியதும் பசி அடங்கிவிடுவதுபோல, ஆண்டுக்கணக்கில் அவனை வாட்டிக்கொண்டிருந்த கொலைப்பசி சட்டென அடங்கிவிடுகிறது. சிக்கிக்கொண்டிருந்த வலையிலிருந்து அவன் தன்னைத்தானே விடுவித்துக்கொண்டான். அதுவும் ஒரு திருப்பமே. அதுவரை அவன் வாழ்வில் காணாத புதியதொரு திருப்பம். ஒரு புதிய திசையை நோக்கி அவனைத் திருப்பிவிட்டது அத்திருப்பம்.

மிகையின்றி எல்லாத் திருப்பங்களையும் நம்பகத்தன்மையோடு அமைத்திருப்பது ஆத்மார்த்தியின் கலைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

                                              To Buy This Book

                    https://www.commonfolks.in/books/d/mittaai-pasi