Post Views:
253
இன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 75 ஆவது பிறந்த தினம். முற்பகல் அவரை வாழ்த்துவதற்காக மூன்று முறை அழைத்த போதும் லைன் பிஸி என்றே வந்தது. சரி வாழ்த்து மழையில் நனைகிறார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவரே அழைத்தார். தனக்கே உரிய மென்மையும் கம்பீரமும் கலந்த குரலில் “சொல்லுங்க ஆத்மார்த்தி எப்படி இருக்குறீங்க…”என்றார். விட்ட இடத்திலிருந்து பேசுவதாக உணர்த்துவது எல்லோருக்கும் கைவராது. அதிலும் அவர் மன்னர் எனப் பல முறை உணர்ந்திருக்கிறேன். இன்றும் அவ்வண்ணமே உணர்ந்தேன்.
“மனசுக்கு இருபத்தி அஞ்சு வயசிருக்குமா?” என்று கேட்டேன். அட்டகாசமான குரலில் சிரித்தார். “விவேக்கை விட நான் வயசுல சின்னவன் தான் ஆத்மார்த்தி” என்றார்.
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
என் பதின்மத்தில் க்ரைம் நாவலின் வருகையை மாதாமாதம் விழிவிரியக் காத்திருந்து வாசித்திருக்கிறேன்.
இன்றைக்கும் ராஜேஷ்குமாரின் எழுத்துகளைப் படிக்கும் பலரில் ஒருவன் நான். அவரைப் பிடிக்கும் பலருள் ஒருவன் தான்.
எழுத வந்த பிறகு ஸார் நான் உங்க ரசிகன் என்று ஒரு நாள் பேச ஆரம்பித்தது.
வஞ்சனையில்லாத வார்த்தைகள். வார்த்தைக்கு வார்த்தை வாஞ்சை. துளிக் கூடக் கர்வம் இல்லாத திருக்கொண்ட மனம் அது தான் ராஜேஷ்குமார்.
இன்னும் பல்லாண்டு ஆரோக்கியமாகவும் அளவற்ற மகிழ்வோடும் வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார்.
வாழ்தல் இனிது