Post Views:
416
ரெண்டாவது ரோஜா
குறுங்கதை
அவனும் அவளும் நண்பர்கள். அவனுக்கு ராஜ் என்று பேர். அவளுக்கு கீதா. கல்லூரியில் நுழைந்த சில நாட்களிலேயே கீதாவுக்கு ராஜ் மீது ஒரு வாஞ்சை பிறந்து விட்டது. சாதுவான அன்பான தோற்றம். குணாம்சங்களும் அப்படித் தான்.
அவளுக்கும் அவனுக்கும் இடையிலான பரந்த வெளி குறைந்துகொண்டே சென்றது. அவளுடைய சில தோழிகளுக்கே ராஜ் தான் கீதாவின் உற்றவன் என்றோர் எண்ணம் வந்திருந்தது. அவர்களும் எல்லாமே பேசிக் கொண்டார்கள். எல்லாமே என்றால் அவள் எல்லாமே பேசுவாள். அவன் கேட்டுக் கொள்வான். அதற்குத் தன்னாலான பதில்களைத் தெரியச்செய்வான். அவளுடைய உப மனிதனாகவே வலம் வந்தான் ராஜ்.
படிப்பு என்றில்லை சினிமா கவிதை பாடல்கள் இசை மழை என்று எதை எடுத்துக் கொண்டாலும் சேர்ந்தே கொண்டார்கள். சேர்ந்தே சென்று வந்து சேர்ந்தே நிகழ்ந்தார்கள். அவர்களது துறை ஆசிரியர்களுக்கே முதலிரண்டு இடங்களில் வரும் ராஜூம் கீதாவும் இத்தனை நெருக்கமான நண்பர்களாக இருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
கீதா நல்ல அழகி. அவள் பின்னாலேயே சதன் என்றோர் மாணவன் அவளை உபாசிப்பதாகச் சொல்லிக் காதலை இறைஞ்சினான். ராஜூவிடம் அவனது கொணஷ்டைகளைச் சொல்லிச் சிரித்துக் கொண்டாள் கீதா. அந்த சதன் ராஜூவைக் கேண்டீன் வாசலில் பார்த்து சாஷ்டாங்கமாக அவன் காலில் விழப் போனான். ராஜூ கடைசி நேரத்தில் கைதாங்கித் தடுத்து விட்டான். நீ தான் என் காதலில் கரையேற்றி விட வேண்டும் என்று கதறினான். ராஜூ அவனிடம் பக்குவமாகப் பேசினான். காதலை இப்படிப் பட்ட வழிகளில் பெறவே முடியாது என்பதைப் புரியச் செய்தான். இதைப் பற்றி கீதாவிடம் சொன்ன போது அவள் ராஜூவின் கரிசனத்தைக் குறிப்பிட்டுக் கண் கலங்கினாள்.
ராஜூ தொடர்ந்து வகுப்பில் முதல்வனாகவே வந்துகொண்டிருந்தான். கூடப் படிக்கிற செல்வனும் சுமேஷூம் அவனையும் கீதாவையும் காதலிப்பதாகக் கதைபேசி அவனிடம் கிண்டல் செய்ததை முதலில் எளிதாகக் கடந்து விட்டான். இப்படிப் பேசுகிறார்கள் என்பதை கீதாவிடம் சொல்வதாகத் தான் இருந்தான். மதியம் வகுப்புகள் முடிந்து உணவு வேளை வந்தது. வழக்கமான மரத்தடியில் அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். அவள் கொண்டு வந்திருந்த வெஜிடபிள் சாதத்தை அவனுக்கு ஒரு கை எடுத்து வைத்தாள்.அவன் சாம்பார் சாதத்தை கொஞ்சம் தந்தான். பேசிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினர். சட்டென்று செல்வனும் சுமேஷூம் என்று தொடங்கியவன் அந்த விஷயத்தைச் சொல்லாமல் வேறெதையோ பேசிக் கடந்துவிட்டான்.
அன்றைய இரவு விடுதியில் அவன் அறையில் கட்டிலில் புரண்டுகொண்டே இருந்தான். தான் ஏன் அப்படிச் செய்தோம் என்று அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு கீதா மீது விருப்பம் இருக்கிறதா என்பதே புரியவில்லை.விருப்பம் காதல் என்பதெல்லாம் எப்படிப்பட்டவை என்பதில் குழப்பம் இருந்தது. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லலாமா..? அவள் தெரியும் என்பாளோ….ஆமாம். அதற்கென்ன என்று சிரித்துவிட்டால் என்ன செய்வது..? காதல் என்பது என்ன என்றே தெரியாத போது அதை எப்படித் தங்களுக்குள் வரவழைத்துக் கொள்வது..? அன்றைக்கு நெடுநேரம் கனவு சிவந்து பின்பே உறங்கினான்.
இப்போதெல்லாம் நீ முன்பு போல் இல்லை என்றாள் கீதா. அதற்குப் பின் ஆறுமாதங்கள் கழிந்திருந்தன. அப்போது தான் இப்படிச் சொன்னாள். இந்த ஆறுமாதங்களாகத் தான் காதல் என்ற ஒரு வார்த்தையைக் கையில் பற்றவும் முடியாமல் அகற்றவும் தெரியாமல் அலைவது குறித்து அவனுக்கே வெட்கமாக வந்தது. ஆனாலும் யாருமறியாத சுயத்தின் அழுக்கு கணக்குத் தெரிவிக்கத் தேவையின்றிக் கனக்கிறது என்று மௌனித்தான். இன்றைக்காவது சொல்லிவிடலாமா..? ஏய்..கீதா எனக்குத் தோன்றுவதெதுவும் உனக்குத் தோன்றவே தோன்றாதா..? கல்லூரிக் காற்றில் அலைந்து காணாமற் போகவிருக்கிற சோப்புக்குமிழிகளா நம் பந்தம்..?” லேசாய்க் கண்கள் கலங்கின. அவன் பையில் எதற்கும் இருக்கட்டும் என்று காலையில் கல்லூரிச் சாலைக்குச் சென்று வாங்கின ஒற்றை சிகப்பு ரோஜா உறங்கும் சர்ப்பத்தைப் போல் கனத்தது.
அப்படி எல்லாம் இல்லை கீதா..நான் எப்போதும் போலத் தான் இருக்கிறேன். குன்றிய குரலில் பேசிய ராஜின் முன் தலையைச் செல்லமாய்க் கலைத்த கீதா அடேய் மைனர்…ரொம்பப் பண்ணாதேடா…உனக்கொரு ஸ்வீட்டான விஷயம் வைத்திருக்கிறேன்” என்றாள்.
ராஜின் மனத்துக்குள் ரீ ரெகார்டிங் தொடங்கிற்று. ஒத்திகைகளுக்கு அப்பாலான பிசிறற்ற ராஜ இசை வழுக்கிக் கொண்டு மிதந்தது. ஸ்வரங்களால் நிரம்பியது சூழல். கீதா…நான் நினைப்பது போலில்லையா நிஜம்..? நீயுமா என்னை….” அப்படி நினைக்கவே சந்தோஷத்தில் இறகைவிட லேசாகிக் கொண்டிருந்தான் அவனுள் வேறோரு ராஜ்.
டக்கென்று பார்க்காதே. கேஷூவலாகத் திரும்பிப் பார் என்றாள் கீதா. என்ன சொல்கிறாள் என்று திரும்பியவனிடம் அந்தக் கத்தரிப்பூ நிற கலம்காரீ அணிந்தவள் தெரிகிறாளா..? அவள் தான் நந்தினி. செகண்ட் இயர் கெமிஸ்ட்ரி படிக்கிறாள். உன் மீது ரொம்ப நாளாக அவளுக்கு இஷ்டமாம். உன்னிடம் சிபாரிசு செய்யச்சொல்லி கேட்டாள். நீ இல்லாவிட்டால் செத்து விடுவாளாமடா…என்ன சொல்கிறாய்..?” என்றாள்.
ராஜூக்கு வியர்த்தது. நான்…நான்…என்று திணறினான். தெரியும்டா…இந்தா ரோஜாப்பூ ரொமாண்டிக்காகப் பேசு. இந்தத் தருணம் வாழ்வின் உன்னதம். சொதப்பினாய் என்றால் தொலைத்துவிடுவேன்…நான் போறேன். பெஸ்ட் ஆஃப் லக் என்று சன்னமான குரலில் முணுமுணுத்தபடி ரோஜாப்பூவைக் கையில் திணித்தாள். விலகிப் போனாள்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் அவன் வாழ்வின் அத்தனை நீள அகலங்களும் மாற்றி எழுதப்பட்டன.
அவன் மூக்கை நிமிண்டியபடியே நந்தினி சொன்னாள். யாரைக் கேட்டாலும் கீதா தான் உனக்கு பெஸ்டின்னு சொல்றாங்க. எனக்கு பிடிக்கலை என்றாள்.
வாசனை பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிறேன் டியர் அதுவரைக்கும் பொறுத்துக்கோ என்ன என்றான்.
அரை மனதாக ம்ம் என்ற நந்தினியை இன்னும் வியப்பு குறையாமல் பார்த்தான்.
கிளம்பலாம் என்று அரை மனதாக சொன்னபடியே எழுந்து கொண்டாள்.
சரி என்றவன் திடீரென்று எதோ தோன்றியதாய் நந்து ஒன் செகண்ட் என்று அவளைத் தன் பக்கம் இழுத்து தலையிலிருந்த முந்தைய ரோஜாவை எடுத்து தூர எறிந்துவிட்டுத் தன் பாக்கெட்டிலிருந்து சிகப்பு ரோஜாவை எடுத்துத் தலையில் செருகினான். ஓக்கே..கெளம்பு நாளைக்குப் பார்க்கலாம்.
லவ் யூ லாட்ஸ் என்றாள்.
லவ் யூ லாட்ஸ் என்றான்.