Post Views:
205
வெளியேற்றம்
குறுங்கதை
தான் தேர்ந்தெடுத்த காகம் தனியாகவே எப்போதும் இருப்பதே இல்லை என்பது தெரிந்ததும் நரி மனம் நொந்து விட்டது. என்னடா இது நாய்படாத பாடு என்று சொல்வது நரிகளுக்கும் சேர்த்துத் தானா என விம்மிற்று. இன்றைக்கெல்லாம் எதையும் தின்றதில்லை ஒரு முறை கூட தொண்டையிலேருந்து குரலெடுத்துக் கத்துகிறதுமில்ல என்று தனக்குள் சபதம் செய்து கொண்டாற் போல் ஊரெல்லையில் கோணலாக நீட்டிக் கொண்டிருந்த பாறையொன்றின் அடி நிழலில் போய் படுத்துக் கொண்டது. அதை எப்போதும் தேடி வரும் சினேகித நரி தன்னைத் தேடும் என்பது தெரியும். ஹ…இருந்தாலென்ன..? நீ தேடினால் நான் உடனே கிடைக்கணுமா என்றும் சொல்லிக் கொண்டது. அதன் ஒரு கண்ணில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்தது. தன் மீதே அதற்குப் பரிதாபம் வந்தது சில பல நாட்களாகத் தான். முன்பெல்லாம் அது வெறும் கோபமாக மட்டும் இருந்த விஷயம்.
என்னடா இது, நரியாகப் பிறந்தது இத்தனை பெரிய குற்றமா..? பாட்டி ஒருத்தி வடை சுட்டாளாம். அதிலொன்றைக் காகம் பற்றிக் கொண்டு பறந்ததாம். அதைப் பார்த்த ஒரு நரி அதனிடம் சென்று நீ ரொம்ப நல்லாப் பாடுவியாமே எனக்காக ஒரு பாட்டுப் பாடேன் எனக் கேட்டதாம். காகம் தன்னை மறந்து பாடத் தொடங்க அதன் பற்றுதலினின்றும் வடை கீழே விழுந்து விட்டதாம். அதைக் கவ்விக் கொண்டு நரி ஓடிவிட்டதாம். என்ன அயோக்கியத் தனமான கதை..? நானொரு நரி. நான் சொல்கிறேன். எனக்கு வடை வேண்டுமானால் நானே நேரே சென்று பாட்டியைப் பயமுறுத்தி ஒன்றென்ன நாலு வடையை ஆற அமரத் தின்று விட்டுக் கிளம்பிச் செல்ல மாட்டேனா..? கேவலம் எனக்கொரு காக்கையின் எச்சில் வடை தான் அகப்படுமா..?நானென்ன அத்தனை கீழ்மை புத்தி கொண்டாற் போல் தோன்றுகிறேனா..? நினைக்க நினைக்க அதன் குருதி கொதித்தது. இந்தக் கதையைக் கிளப்பி விட்டவன் எவனென்று தெரிந்தால் அவன் காதுகளில் ஒன்றை வடை கடிப்பது போலக் கடித்து வைக்கலாம். வழிவழிக் கதை என்று கித்தாய்க்கிறார்கள். அதனால் தான் அந்த நரி ஒரு முடிவெடுத்தது. அந்தக் கதையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும். அதற்காகத் தான் காகத்தோடு உரையாடலாம் என்று நாலைந்து நாட்களாகத் தேடி அலைந்தது. இதென்னய்யா நியாயம் ஒரே ஒரு முறை ஒரு விஷயத்தைச் சொல்வதற்கே காகத்தை நிறுத்தி அதனோடு பேச முடியவில்லை. நான் எங்கே காகம் எங்கே வடை எங்கே..நியாயம் வேணாம்,,? இப்போது இன்னும் அதற்குச் சுயகவலை அதிகரித்தது. கண்ணில் நீர் முட்டிற்று.
எப்போதென்று அறியாமல் சற்றே கண்ணயர்ந்து மீண்டும் விழிப்படைந்த நரிக்கு சந்தோஷம் தாளவில்லை. அதன் பார்வை தூரத்தில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. இது தான் தேடியலைந்த அந்தக் காகமா என்று பார்த்தது. ஆம்…அதே தான். அந்தக் காகமே தான். என் தங்கமே…வந்து விட்டாயா..?
“நம் இருவருக்கும் பொதுவானதொரு விஷயம். அது நம் இருவருக்குமே சேர்ந்தாற் போல் இழைக்கப்பட்ட அநீதி. அந்தக் கதையிலிருந்து நாம் உடனே வெளியேற வேண்டும். அப்போது தான் நாம் இழந்த மானம் நமக்கு வசப்படும். என்றெல்லாம் யோசித்ததை வரிசையாகப் பேசத் தொடங்கிய நரிக்கு லேசாய் மூச்சு வாங்கத் தொடங்கியது.
அதை ஆசுவாசப் படுத்துகிற குரலில் காகம் கரைந்தது ” எனக்கும் தெரியும்…ரொம்ப நாட்களாகவே ஒரு வதந்தி உலவுகின்றதே..காக்காய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்று அதைப் பற்றித் தானே சொல்கிறாய்…சொல் என்ன பண்ணலாம்” என்றது