அதியன் ஆதிரையின் கவிதைகள்

இன்றைய கவிதைகள்


அதியன் ஆதிரையின் கவிதைத் தொகுதி “அப்பனின் கைகளால் அடிப்பவன்” நீலம் வெளியீடாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ 150. அறிவுமதியும் ஆதவன் தீட்சண்யாவும் எழுதியிருக்கும் உரைகள் தொகுப்புக்கு வலு சேர்ப்பவை. அவற்றைக் காட்டிலும் எனக்கு அதியன் ஆதிரை எழுதியிருக்கும் தன்னுரை மிகவும் உவப்பாயிருக்கிறது.
அந்த உரையின் முதற்பத்தியை இப்படி முடிக்கிறார் அதியன். “காத்திருத்தல் என்பதே உறையிடப்பட்ட கலகம் தான்”.

  • 1
    பாடைக் கழிகளால் அமைந்த
    குடிசைக்குள் நுழைந்ததும்
    தோள்களை அழுத்துகின்றன
    பிணம் சுமந்தவர்களின்
    பாதங்கள்
  • 2
    பழைய
    இரும்புக்கடையில்
    குடைக்கம்பிகளைப்
    பொறுக்கிப் போய்
    குரோட்டன்சு செடிகளில்
    கூடு கட்டிக்கொள்கின்றன
    நகரத்துக் காக்கைகள்
  • 3
    எப்போதாவது
    ஒருமுறைதான்
    நீயே
    என்னை அடிப்பாய்
    ஆனால்
    நீ
    அடிக்கடி அடிப்பது
    என்
    அப்பனின் கைக்கொண்டுதான்

இவை காலகால வலியைப் பேச விழையும் கவிதைகள். உணர்வையும் அறிவையும் ஒருங்கே இயக்கத் தலைப்படுகிற நுட்பமான எழுத்து அதியனுக்கு வாய்த்திருக்கிறது. சொல்ல வந்ததைப் பிசகாமல் சொல்கிற கவிதைகள் இத்தொகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.
அறிவுமதியின் அணிந்துரையின் இறுதி வரி இப்படி முடிகிறது.
“அதியனின் கவிதை நூலில் தலைமுறைக் கோபங்களின் தார்மீக நியாயங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன.அடங்கா உரிமை வேட்கையோடு”

அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.