அ ல் லி க் கே ணி
ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன.
எந்தச் சித்திரமுமே ஒற்றைப் புள்ளியிலிருந்து விரிந்துகொண்டே செல்வது தான். ஒரு விஸில் ஒலி போதுமே எண்ணற்ற நினைவுக் கூடுகள் திறந்து கொள்வதற்கு? அப்படித் தன் வாழ்க்கையின் நிஜங்களினின்றும் மெல்லிய இழையொன்றைத் தொடக்கப் புள்ளியாக்கிக் கதை சொல்ல முனைந்திருக்கிறார்.
காலத்தின் ஊடுபாவாக மனிதர்களைத் தரிசிக்க முயலுகையில் எந்தப் படைப்புமே அழகாக செறிவாக உருக்கொண்டு விடுகிறது.சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தின் ஞாபக செல்வாக்கு இந்தக் கதையின் உப நுட்பத் தரவுகளெங்கும் எதிர்லொலித்தபடி நகர்வது பலம். வாசிப்பவனின் மனக்குரலாக அல்லிக்கேணி நாவல் அயரடிக்காத கதை-அனுபவத்தை முன் வைக்கிறது.
சென்னை எனும் மகாநிலத்தின் சொல்லப் படாத மனிதர்களை, மனங்களைச் சற்றே அருகே சென்று பார்க்கிற வாய்ப்பை வாசகனுக்கு நல்குகிற வகையில் இதன் முக்கியத்துவம் மறுக்க முடியாதது