மதுரைக்கு வரும் வழியில் ஊரப்பாக்கத்தில் நீல்சனின் புதிய இல்லத்தில் இளைப்பாறிவிட்டுத் தான் கிளம்பினேன். என்னோடு பாலகுமாரனும் நீல்சன் இல்லத்துக்கு விஜயம் செய்தது தான் ஹைலைட். பல ஆண்டுகளுக்கு முன்பாக புதிய மற்றும் பழைய கடைகளில் தேடித் தேடி ஒவ்வொரு நூலாக வாங்கி விழிகள் விரிய வாசித்ததெல்லாம் அசை போடுவதற்கொரு சந்தர்ப்பமாக இந்தச் சந்திப்பு அமைந்தது.
நீல்சன் 1995 வாக்கில் சிறுபெட்டி நிறைய அவர் வாசித்து முடித்த நூல்களை எனக்குத் தந்தது எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். அந்தப் பெட்டியிலிருந்து பச்சை வயல் மனது நூலை மட்டும் ஒரு முறை எடுத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு என்னிடமே தந்தார். “வச்சிக்க” என்றவரின் குரல் லேசாகக் கம்மியிருந்தது.வீடு மாற்றி வேறு தொலைவிலுள்ள ஊருக்குச் செல்பவர்கள் தொட்டிச் செடியைப் பக்கத்து வீட்டாரிடம் அல்லது பழக்கமானவர்களிடம் பிரியாவிடையோடு கையளித்து விட்டுச் செல்வார்கள் அல்லவா.? அப்படித் தான் நீல்சனின் குரலும் இருந்தது
பாலகுமாரனின் பெரிய ரசிகரான நீல்சன் இன்றைக்கும் தன் பழைய நினைவுப் பேழையைத் திறந்து பாலாவின் எதாவதொரு நாவலை அதன் கதாபாத்திரங்களின் வழியாகவும் பின்புல தரிசனத்தினூடாகவும் ஏன் சின்னச்சின்ன உரையாடல்களை முன் நிறுத்தியும் சிலாகிப்பது கேட்பதற்கு இனிமையான சங்கதி.