இந்நலே வரே
சோனி லைவ் OTT சேனலில் ஆசிப் அலி நடித்த இந்நலே வரே பார்த்தேன்
பாபி சஞ்சய் இரட்டையர்களின் கதை வசனம். இது ஆசிப் மற்றும் இயக்குனர் ஜிஸ் ஜாய் இணையும் நாலாவது படம்.
த்ரில்லர் படங்களுக்கென்று ஒரு தனி லட்சணம் உண்டு. தப்பித்துக் கோடு தாண்டி விட்டால் அபாரம். இந்தப் பக்கம் ஆகி விட்டது என்றால் பரிதாபம் என்பது தான் அது. அமைந்தால் நந்தவனம் அமையாவிட்டால் கட்டாந்தரை என்பான் நண்பன் பரணி. இன்னாள் வரே அட்டகாசம்.
மினிமம் பட்ஜெட்டில் இப்படியான படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என்பது ஆதங்கம் மட்டுமல்ல. அவ்விடம் மீது பொறாமையே வருகிறது. கைக்கடக்கமான செலவு. தெளிவான கதை பலமான வசனம் உள்ளிட்ட உப நிரவல்கள். தேவையான அளவு இசை. கச்சிதமான ஒளிப்பதிவும் எடிட்டிங்கும். படம் எல்லா விதத்திலும் ஓங்கி ஒலிக்கிறது.
சுஜாதாவின் ஒரு சிறுகதை உண்டு. ஒரு சினிமா இயக்குனர் டூர் செல்லும் இடத்தில் முன்னிரவு அவர் அறையைத் தேடி ஒரு அதிதி வருவாள். ஆபத்தில் இருப்பதாகச் சொல்லி உதவி கேட்பாள். அன்றிரவு அவரோடு தங்குவாள். அவர்களை யாரோ சன்னலின் வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்து விடுவார்கள். அந்த இயக்குனரை தேடி ஒரு லெட்டர் கவர் வரும். அதில் அந்தப் படங்கள் இருக்கும். கேட்ட தொகையைத் தராவிட்டால் ஹ்ம்ம்.. என்று மிரட்டும். அவர் பணம் தருவதோடு விடாமல் அந்தப் பெண்ணை நடிகை ஆக்குவார். அந்தப்பெண் பெரிய நடிகை ஆகி விடுவாள். இது கதையின் முதல்பாதி.
டைரக்டர் மெல்லப் புகழ் மங்கும் தருணம் தன் வசம் உள்ள படங்களை நடிகையிடம் காட்டி எனக்கு கால்ஷீட் கொடுக்காவிட்டால் ஹ்ம்ம்..என்று மிரட்டுவார். அவள் கால்ஷீட் தருவதோடு மட்டுமல்லாது அந்தப் படங்களை மதிப்பிழக்கச் செய்வதுடன் கதை முடியும். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்.
இந்தக் கதையின் பெயர் மறந்து விட்டது. திரைக்கதை செய்வதில் ட்விஸ்ட் என்றொரு வஸ்து உண்டல்லவா அதற்கு இந்தக் கதையை எப்போதும் உதாரணம் சொல்வேன். மணல் கடிகார உத்தி என்று சொல்லத் தக்க ட்விஸ்ட் வகை. ஒன்று இரண்டு மூன்று என பார்வையிற்படுவது மூன்று இரண்டு ஒன்று எனத் திரும்பும் போது கதையே மாறுவது.
இந்நலே வரே படத்தின் கதையை ஒரு துளி மட்டும் சொல்வதானால் ஒரு முன்னணி நடிகனின் புதிய படம் வெளிவந்து தோற்கிறது. அதற்கடுத்த நாலைந்து தினங்கள் என்னவாகப் புலருகின்றன என்பது தான் சொல்ல வேண்டியது. இரண்டேகால் மணி நேரம் கூச்செறிதலுக்கு உத்தரவாதம்.
ஆசிப் அலியை சிபி மலையில் இயக்கிய அபூர்வராகம் தொடங்கி ரசித்து வருகிறேன். அளவுகளுக்குள் அடங்கித் தோன்றுகிற முகமொழியும் யதார்த்தமான பரிமளிப்புமாக எல்லா வேடங்களிலும் சிறப்பவர். இந்தப் படம் நிச்சயம் வெற்றிகரமானதொரு தொப்பிச்சிறகு.
நிமிஷா சஜயனும் ரெபா மோனிகா ஜானும் அங்கமாலி புகழ் ஆண்டனி வர்கீஸூம் படத்தில் சொல்லப்பட வேண்டிய முகங்கள்.
படம் முடிகிற கடைசி பதினாறு நிமிடங்கள் எல்லாவற்றையும் அழித்துத் திருத்தி எழுத வேண்டியதை எழுதிவிடுகிறது.
அவசியம் பார்க்கலாம்