பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற இப்படியான பாடல்களை அப்படிச் சாதாரணமாகக் கடந்து விடவே முடியாது. சில பாடல்கள் மழைமுடிந்த ஈரத்தின் மேல் வருடிக் கடக்கிற காற்றின் துளித்துளி ஆனந்தத்தின் பெருக்கங்களாகவே மனத்தை நிறைப்பவை.
காக்ஷி : அம்மிணிப்பிள்ளா என்ற இந்தப் படத்தில் மனு மஞ்சித் எழுத்தில் சாம்யுயேல் அபி இசைத்திருக்கும் உய்யாரம் பய்யாரம் பாடலைப் பாடியளித்திருப்பவர் ஜியா வுல் ஹக். கேரளப் பண்பாட்டில் திருமண நிகழ்வு ஒன்றைச் சுற்றிலும் இழைந்து பெருகுகிற உப-நுட்ப-நேர்தல்களைக் கோத்தெடுத்த பாடல்பூமாலை இது. ஜியாவின் குரல் சின்ன வினோதமும் உறுதியுமாய்ப் பகுபடுவதும் பிசிறேதுமின்றித் தொடர்வதும் துள்ளலும் நசிவுமாய்க் கலைவதும் இந்தப் பாடலைப் பெரியதோர் ஒலிச்சித்திரமாக்கித் தருகிறது. காட்சிப் படுத்தியிருப்பதும் ரசிக்கவைக்கிறது. துள்ளலிசைப் பாடல்களின் பொது இலக்கணம் அதிலிருக்க வேண்டிய சின்னஞ்சிறிய பிசகு. இன்னெதென்று வரையறுத்து விட முடியாத பிறழ்சரி ஒன்றின் தேவ வருகை அந்தப் பாடலை அது போன்ற பற்பல பாட்டுக்களினின்றும் தனித்தெடுத்து உயர்த்தும். இந்தப் பாடலும் அந்த வினோத இலக்கணத்துக்குள் கானமாடுவது நிதர்சனம். வாத்தியக் கோவை மெலிதான எள்ளலும் சோகச்சாய்வுமாய் அமைந்திருப்பது அனேக அற்புதம்.
இன்றெலாம் கேட்கலாம்