இன்றெல்லாம் கேட்கலாம் 2


 

இன்றெல்லாம் கேட்கலாம் 2
_______________________

எகிப்திய அராபி மொழிப் பாடகர் அம்ரு தியாப் பாடிய மாபெரும் இசைப்பேழை Nour El Ain நூர் இலாய்யேன். 1996 ஆமாண்டு வெளியானது. இந்தப் பாடலின் புகழ் நிழல் மாபெரும் பரப்பை வென்றெடுத்தது. அம்ரு தியாப் உலகின் பல நிலங்களிலும் கொண்டாடப்படுவதற்கான அடிவேராக இந்தப் பாடல் இன்றும் ஒலிக்கிறது. காதலின் பாடலுக்கு மொழியேது? இசையால் வசமாகும் அத்தனை இதயங்களையும் ஒட்டுப்பசை போட்டுப் பற்றிக்கொள்ளத் தானே காதல் மழைக்கிறது?

இந்தப் பாடல் கையாளுகிற காதல் வறண்ட தாகத்தை முன்வைத்து ஒலிப்பது. ஏக்கமும் விழிப்புமாய்த் தனிக்கும் அந்தகாரத்தின் சாட்சியமாக நிகழ்கிறது. சரணாகதியின் ஆரவாரமற்ற பேரமைதி ஒன்றின் வரைபடப் புள்ளிகளாக இந்தப் பாடல் கிளைத்து வளர்கிறது. முழுமையான ஒப்படைப்புடன் சமாதானத்துடன் இந்தப் பாடலைப் பாடியிருந்தார் அம்ரு.

Amr Diab Drops Teaser for New Song "Helw El Taghyeer" - Sada El baladபத்துக்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார் அம்ரு. பொதுவாகவே பிட்டுத் தர முடியாத பேரன்பின் ஒற்றையாகத் திகழும் குரல் அம்ருவினது. காதலின் கேவல்களை, எதிர்பார்த்தலின் வதங்கலை, ஒப்படைப்பின் பெருங்கானத்தை, ஒருதலைக் காதலின் அறியாப் பெருவலியை இன்னபிறவற்றை எல்லாம் குரல்வழியே அகழ்ந்தெடுத்து பாடற்படுத்தியவர் அம்ரு.

அவர் பாடியவற்றில் சிகர உச்சம் இந்தப் பாடல், நூர் இலாய்யேன். காதலின் கசிந்துருகும் பிரதிவாதப் பிரகடனம் இந்தப் பாட்டு. இன்னொன்றில்லா ஒற்றைப் பேரெழில் நதிப்பரவல் இதன் அனுபவமாக விரிகின்றது. இந்தப் பாடலின் மிகச்சுமாரான தழுவலை பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற காதலின் ஃபார்முலா நீ தானே ஜூலி என்ற பாடலில் உணரலாம்.

Habibi ya nour el-ain
Ya sakin khayali

என் அன்பே
என் கண்களின் ஒளியாக நீயே இருக்கிறாய்
என் கற்பனையில் நீயே வாழ்கிறாய் .
பல வருடங்களாக நான் உன்னை போற்றி வருகிறேன்
வேறு யாருமே என் எண்ணத்தில் இல்லை
என் அன்பே என் அன்பே என் அன்பே
என் கண்களின் ஒளியே
இந்தப்ரபஞ்சத்தின் பேரழகான கண்களாக நான் எப்போதும் பார்ப்பது உன்னுடையவற்றைத்தான்
கடவுள் உன்னோடு இருப்பாராக
என்னே மந்திரம் செய்யும் கண்கள்
உன் கண்கள் என்னோடு
உன் கண்கள் போதுமானவை
அவை இரவுகளை ஒளிரச் செய்கின்றன
உன் இதயம் என்னை அழைத்து நீ என்னை காதலிப்பதாக சொல்லியது
நீ என்னைப் புனரமைத்து இருக்கிறாய்
நீயே என் ஆரம்பமாக இருக்கிறாய்
நீயே மொத்த சரித்திரமாகவும் விளங்குகிறாய்
கதை முடியும் வரை நான் உன்னோடு தான் இருப்பேன்
என் அன்பே என் அன்பே
என் கண்களின் ஒளியே

கேட்கும் போதெல்லாம் என்னை அயரச்செய்யும் குரல் அம்ருவினுடையது.கடந்த சில வருடங்களாக இந்தப் பாடலைத் தான் எனது அழைப்பொலியாக வைத்திருக்கிறேன். சலிக்காத சந்தோஷம்.

இன்றெல்லாம் கேட்கலாம்.