இன்றெல்லாம் கேட்கலாம் 4
காதல் நிலவே காதல் நிலவே
1997 ஆம் ஆண்டு வெளியானது வாசுகி எனும் படம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் பெரும்பாலும் கிராமக் கதைக்களனோடே கதைகள் புனையப்பட்டு வந்தன. இந்தப் படம் குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் படம் என வேறு பாதையில் திரும்பிற்று, கஸ்தூரி ராஜா இயக்குனராக அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்துக்கப்பால் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் இளையராஜாவோடு அவர் இணைந்த படம் நாட்டுப்புறப் பாட்டு. அந்தப் படத்தின் பாடல்கள் அபாரமான வெற்றியைப் பெற்றொலித்தவை. மூன்றாவதாக வாசுகி படத்தில் இணைந்து பணியாற்றினர். பாடல்களைத் தானே எழுதுவது கஸ்தூரிராஜா தொடர்ந்து பின்பற்றிய நடைமுறை. இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒரு பாடல் காதல் நிலவே காதல் நிலவே
இதுவொரு மிதமென்மைப் பரவல் கொண்ட மெலடி பாடல். மால்காடி ஷூபா பாடலின் முன்னொட்டு ஹம்மிங்கைப் பாடித் துவக்கித் தந்திருப்பார். மலேசியா வாசுதேவனுக்கு அமைந்த குரலென்பது வேறு யாருக்குமே வாய்க்காத நெளிவு சுளிவுகளுடன் அமைந்த தற்கணங்களின் அற்புதம். அதிலும் சோகத்துக்கான ஒரு குரலில் லேசான எள்ளல் கலந்து அவலச் சுவையுடன் அவர் பாடிய சில பாடல்கள் காலம் கடப்பதற்காக அனைத்து தகுதிகளையும் கொண்டவை. பெரிதும் அறியப்படாத ஒரு பாடலாகவே இருந்தபோதிலும் இந்த பாடல் அப்படியான ஒரு வசீகரம் கொண்டதே. இது காதலின் லாலி.
காதல் நிலவே காதல் நிலவே
கண்மணியே கற்பகமே
காதல் நிலவே காதல் நிலவே
கண்மணியே கற்பகமே
கவிதை பொழியும் கயலின்விழியும்
கரும்பில் பிறக்கும் காமன் கணையும்
கனவினை மூட்டி வாட்டுதெனையே
(காதல் நிலவே)
வீசும் தென்றல் பேசும் மொழியில்
விரகதாபம் அரும்ப
இரவு நோயின் இனிமை தன்னில்
இணைந்து இன்பம் மலர
ஓராயிரம் கனவுகள்
உனது அணைப்பில் உறக்கங்கள்
நீங்காத நல் உறவுகள்
நினைத்து மகிழும் நினைவுகள்
என் வேதனை உன் இன்பமோ
உன் ஞாபகம் எனை நீங்குமோ
தவிப்பதா இன்னும் துடிப்பதா
(காதல் நிலவே)
ஆடிப்பாடும் காதல் குயில்கள்
கூட்டில் கலக்க வில்லையா
தவழும் அலைகள் தாவிக்குதித்து
கரையைச்சேர வில்லையா
பாவைக்கு காதல் விளங்க
பட்டிமன்றங்கள் நான் நடத்தவா
கவி பாடும் காதல் இளைஞர்
கவியரங்கம் நான் நடத்தவா
உன் வாசலை ஏன் மூடினாய்
என் வேதனை ஏன் தேடினாய்
இறங்கி வா
அன்பே இறங்கி வா
(காதல் நிலவே)
இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பின்னால் அமர்ந்திருப்பவரைப் பயமுறுத்துகிற ஒரே நோக்கத்தில் சீராய்ப் போகையில் வேண்டுமென்றே சின்னதாய் வளைத்து நெளித்து ஒரு குலுக்கு குலுக்கி லேசாய் அச்சம் காட்டி பிறகு சிரித்துக்கொண்டே நேர்செல்லும் யுவ கால விளையாட்டு ஒன்றினை நம்மில் பலரும் கண்டிருப்போம் தானே? இந்தக் காதல் நிலவே பாடலில் அதே விளையாட்டைத் தன் குரலினூடாகச் செய்திருப்பார் மலேசியா.
இதன் வரிகள் இயல்பினழகோடு பெருகுபவை. பெர்குஷன் பீட் வகைமையிலும் தானே ராஜா என்பதை மெய்ப்பித்திருப்பார் இசைஞானி. பாடலின் உருக்கொளலையும்பெருக்கத்தையும் தடைபோடாமல் உடன் பயணிக்கும் வலுவான இசைக்கோவைகளாக இதன் மைய இசையிழைதல்களை அமைத்திருந்தார். சின்னஞ்சிறிய நுட்பமான நெளிதல் வளைதல்களைத் தன் குரலினூடாகப் பிரதிபலிக்கையில் அவற்றுக்கேற்ற அதிர்வுகளைத் தோற்றுவித்துப் பாடிய வகையிலும் மலேசியா ஒப்பீடற்ற கலைத்திறனைப் பரிமளித்தார்.
பாடலாசிரியர்களாக விளங்கிய இயக்குனர்களில் பலரும் பெரிதும் ஒளிர்ந்திருக்கின்றனர். கஸ்தூரி ராஜா அனேகமாக நூறு பாடல்கள் வரை எழுதியிருக்கக் கூடும். அவர் எழுதியதிலேயே என்னளவில் மிகச்சிறந்த பாடல் என்று காதல் நிலவே பாடலை முன்வைப்பேன். இந்தப் பாடலைக் கேளுங்கள். காதலின் மென் தருணங்களை எத்தனை அழகாகப் பதியனிடுகின்றது…..சொற்களைச் சித்திரங்களாக்குவது பெரிய புலமை. இந்தப் பாடலைத் தன் உயிரின் வினோத ஆழத்திலிருந்து இசைத்தளித்திருப்பார் இளையராஜா. மனத்தை இளக்கி மயக்கிக் காணாப் பண்டமாக்கிக் காற்றில் எறிந்துவிடும் மாயக் குரல்காரர் மலேசியா வாசுதேவன். தானும் கரைந்து கேட்கிற நம்மையும் கரைப்பதைக் கேளுங்கள்.
அனாயாசமான திசை திருப்பலோடு ஒலிக்கிற மாயமனமழை இந்தப் பாடல்
இன்றெல்லாம் கேட்கலாம்