இரா.முருகனின் சிறுகதைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று திசம்பர் மாத வாக்கில் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் நெறியாளர் திரு மந்திரமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். புத்தகத் திருவிழாவின் ஒத்திவைப்பு காரணமாக சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்தத் தோய்வுரையை நிகழ்த்த முடியாமற் போனது. இந்த மார்ச் மாத 5 ஆம் தேதி நிகழ்வை ஒருங்கிணைக்கலாமா என மந்திரமூர்த்தி என்னிடம் கேட்ட போது புத்தகத் திருவிழா சமயமாக இருப்பதால் 12 ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்வை வைத்துக் கொள்ளலாமே எனக் கோரினேன். அவரும் அன்பொடு அதனை ஏற்றார்.
இந்த மூன்று மாத கால இடைவெளியில் இந்த நிகழ்வை ஒட்டி நான் அழைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து மந்திரமூர்த்தி அவர்களோடு நிகழ்த்திய தொலைபேசிப் பேச்சுகளின் வழியாக அந்த நிகழ்வின் நோக்கத்தைத் தாண்டிய சிறு அன்பையும் நட்பையும் உணர முடிந்தது. எழுத்தாளர் ஒருவரை அவரது எழுத்துகளின் வழியாக நோக்கவும் நோக்கத் தரவுமான செயல்பாட்டினை மிகத் தீவிரமாக முன்னெடுப்பது எளிய முயல்வல்ல. இரா.முருகன் என்கிற முன்னோடி எழுத்தாளரின் கதைகளை நான் இன்னும் நெருங்கிச் சென்று பார்ப்பதற்கும் இந்த வாய்ப்பு எனக்கு உதவிற்று.
நிகழ்வு திட்டமிட்டபடி சனிக்கிழமை மாலை தொடங்கியது. அன்று காலையே காணொலி இணைப்பின் ஒலி ஒளி இன்னபிற தொழில்நுட்ப அம்சங்களை எல்லாம் ஒரு முறை நேரலையில் பரிசோதித்துக் கொண்டோம். அதனால் மாலை நிகழ்வின் உள்ளே எளிய மனத்தோடு இலகுவாக நுழைய முடிந்தது. ஆரம்பம் முதலே எனக்கு மிகப் பிடித்தமான ஒரு உரையை நிகழ்த்துவது மனத்தினடியில் உணர்ந்து கொண்டே பேச முடிந்தது. பேச்சின் இறுதியில் முருகன் அவர்கள் தன்னிடம் முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு ஐயம் திரிபு அற பதிலளித்தார். என்னிடம் முன்வைக்கப் பட்ட வினாக்களுக்கும் என்னால் உகந்த பதில்களை நல்கினேன்.
விழாவில் எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், கண்மணி, பா.ராகவன், ரமேஷ்கல்யாண் போன்றோர் கலந்து கொண்டது உவப்பைத் தந்தது. காளிப்ரஸாத் சுருக்கமாகவும் தீர்க்கமாகவும் நன்றியுரை நல்கினார்.
வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் இலக்கிய முன்னெடுப்பு இந்த நிகழ்வு. இன்னும் தொடர்க என்று வாழ்த்துகிறேன். நன்றி பகிர்கிறேன்.
நிகழ்வின் காணொலியை இங்கே இணைத்திருக்கிறேன். அன்றைக்குக் கலந்துகொள்ள முடியாத அன்பர்கள் இதனைக் கண்டு கேட்டு இன்புறலாம்.
வாழ்தல் இனிது