மூன்று நிகழ்வுகள்
02/09/2022
வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின் 20 படிகளை கவிஞர் செந்தி, இயக்குனர் அரவிந்த் யுவராஜ் இருவரின் கரங்களிலிருந்தும் பெற்றுக் கொண்டேன்.நூலாசிரியர் தீபா நாகராணியின் ஏற்புரை சமீபத்தில் கேட்க வாய்த்த மிகச்சிறப்பான உரைகளில் ஒன்றாக அமைந்தது.
03/09/2022
சனிக்கிழமை மாலை மதுரை நார்த்கேட் ஓட்டல் கருத்தரங்கக் கூடத்தில் காலச்சுவடு பதிப்பக வெளியீடுகள் 4 நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இஸ்தான்புல் நூலைப் பற்றிப் பாவண்ணன் நிகழ்த்திய உரை சமீபத்தில் கேட்கவாய்த்த மிகச்சிறப்பான உரைகளில் ஒன்று. கு.ப.ரா கவிதைகளை வெளியிட்டுப் பேசிய ந.ஜெயபாஸ்கரன் அலுப்புத் தட்டாத சுவாரசியமான வகுப்பை நல்கும் பேராசிரியரின் குரலில் பேசினார். விஷயதானமும் விவரச்செறிவும் நிரம்பிய உரை அது. சுரேஷ்குமார இந்தர்ஜித் எழுதிய நான் லலிதா பேசுகிறேன் நாவல் பற்றி சுனில் கிருஷ்ணன் ஆற்றிய உரை நுட்பமானது. தடையற்ற பெருக்காகத் திசைவிலகாது நேர்சென்ற நல்லுரையாக இருந்தது. அரவிந்தன் தொகுத்த எஸ்பி.பி நினைவலைக் கட்டுரைகளின் தொகை நூலான எங்கேயும் எப்போதும் நூலினை வெளியிட்டு இயக்குனர் வஸந்த்.எஸ்.சாய் எஸ்பி.பிக்கும் தனக்குமான நட்புறவை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். லேசான மழை தினத்தில் அடர்த்தியான இலக்கிய நிகழ்வு.
04/09/2022
ஞாயிறு மாலை அகரமுதல்வனின் மாபெரும் தாய் சிறுகதைத் தொகுதிக்கான நூல் விமர்சனக் கூட்டம் மதுரை மணியம்மை பள்ளியில் நடந்தேறியது. ஆசிரியர் ரமேஷ் கண்ணன் எழுத்தாளர் தூயன் ஆகியோருடன் நானும் பேசினேன். முருகேசபாண்டியன்,இளங்கோவன் முத்தையா,போகன் சங்கர்,சென்றாயன்,சங்கர சுப்ரமணியன்,வழக்குரைஞர் பா.அசோக்,அழகுராஜா, சுருளி, Dir.வாஞ்சி நாராயணன்,Dir.முரளி அப்பாஸ்செல்வம் ராமசாமி,லக்ஷ்மி சரவணக்குமார் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். ஜீவா படைப்பகம் வெளியீடாக மிகச்சிறப்பான உருவாக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த நூலின் விலை 150 ரூ. அவசியம் வாசிக்க வேண்டிய கதைகளைக் கொண்டிருக்கும் நூல் இது.