“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி நாவல் பற்றி லதா அவர்களது பார்வை

இப்படி ஒரு கனத்த புத்தகத்தை கொடுத்த ஆத்மார்த்திக்கு முதலில் என் அன்பும் நன்றியும் ❤️நான் பக்கங்களை சொல்லவில்லை. அதின் சாராம்சத்தை சொல்கிறேன்.

ஏன் கனம்? ஆம். உண்மைகளைப் பேசும் எழுத்துகள் எப்பொழுதுமே கனமாகத்தான் இருக்கும் என்பது உண்மைகளை ஏற்கும் பக்குவமுள்ளவர்கள் அனைவருக்குமே தெரிந்து தான் இருக்கும்.

இந்தக் கதையில் ஒரு கதாநாயகன் இருக்கத்தான் செய்கிறான். அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று யாரும் அருதியிட்டு கூற இயலாது. உண்மையில் இங்கு மனித ரூபம் எடுத்திருக்கும் யாருமே நல்லவரா கெட்டவரா என்பதை யாருமே அருதியிட்டு கூற முடியாது என்பது தான் உண்மை.

உண்மையில் இந்தக் கதையில் யாருமே நல்லவர்கள் என்று கொண்டாடப்பட வேண்டியவர்களும் இல்லை, யாருமே கெட்டவர்கள் என்று நாம் கொதிக்க வேண்டிய அவசியமுமில்லை. இப்படியான மனிதர்களாலேயே நிரம்பி இருக்கிறது இவ்வுலகம். இதுவும் உண்மை.

மனிதர்கள் அவர்கள் வாழும் சூழலால் உருவாக்கப்படுபவர்கள். அந்த சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதும் இதே மனிதர்கள் தான். அதுவும் உண்மை தானே? யாரும் மறுக்க முடியுமா இதை? ஆக ஒவ்வொரு மனிதனும் தன் சூழலால் உருவாக்கப்படுகிறான். அப்படி உருவாபவன் இன்னொருவனுக்கோ இன்னும் பலருக்கோ சூழலை உருவாக்கி தருகிறான். ஆனால் அதே சமயம் அவன் மட்டும் காரணகர்த்தா இல்லை இன்னொரு மனிதனின் சூழலுக்கு. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் பல மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறான்.

“வாழ்வானது தவறாகப் பூர்த்தி செய்யப்படுகிற தகவல் பிழைகள் நிரம்பிய படிவம்” இது இந்தப் புத்தகத்தில் வரும் ஒரு வரி. இதன் பொருளை காண விழைபவர்களுக்கு கண்டிப்பாக இந்தக் கதையில் அதன் பொருள் விளங்கும்.

இந்தப் புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களில் சில நம் சமூகத்தின் இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்த பாத்திரங்கள். ஆனால் இலக்கணங்கள் தாண்டி சிந்திக்க மறுக்கும் சில மனிதர்களால் பாதிக்கப்புக்கு உள்ளாகும் கதாநாயகன். அவனுக்குள்ளும் கதை முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் தத்தளிக்கும் மனநிலை….

புத்தகம் யாரையும் சாடவுமில்லை….சாடாமல் இருக்கவுமில்லை. தனி மனிதன் எவரும் தானாக சிந்திக்காமல் நேற்றைய நிகழ்வை வைத்து இன்றைய முடிவை எடுப்பதும், முன்முடிவுடன் மனிதர்களை அணுகுவதும், taking the easy route என்று சொல்வார்களே அந்த மாதிரி செயல்களாலும் இன்னொரு தனிமனித வாழ்வை எப்படி பாதிக்கிறார்கள் என்று சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம்.

நமது குறிக்கோள்கள் எத்தனை சரியாக இருந்தாலும் செயல்முறையில் அவை எத்தனை தூரம் சரியாக நடக்கின்றன என்று கேள்வி கேட்கிறது இந்தப் புத்தகம்.

ஒவ்வொரு குழந்தையும் இங்கு வாழத்தானே பிறந்திருக்கிறது? அதை நாம் வாழவைக்கிறோமா? இல்லை வாழ அனுமதியாவது கொடுக்கிறோமா? இல்லை அதன் வாழ்வில் குறிக்கிடாமலாவது இருக்கிறோமா? என்று கூர் முனை வாள் கொண்டு கேட்கிறது இந்தப் புத்தகம்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு. Life is so simple, we make it complicated (வாழ்க்கை மிகவும் சுலபமானது, நாம் தான் அதை குழப்பிக்கொள்கிறோம்) என்று. ஆனால் நாம் நம் வாழ்வை மட்டும் குழப்பிக்கொள்ளவில்லை…..நம் குழப்பத்தால் நம்மைச் சுற்றியிருக்கும் எத்தனை வாழ்வை குழப்புகிறோம் என்பதை சிந்திக்க வைத்தது.

இந்தப் புத்தகத்தின் சிறந்த தன்மை என நான் பார்ப்பது கதை முழுவதும் ஊடுருவும் உளவியலும் வாழ்வியலும் தான். சிந்திக்க மறுப்பவர்களையும் சிந்திக்கத் தூண்டும் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு தனிமனிதனும் தன் எண்ணங்களும் செயல்களும் மற்றவரை எப்படி பாதிக்கும், இந்த சமூகத்தை எப்படி பாதிக்கும் என்று சிந்திக்கத் தொடங்காதவரை இங்கு எந்த மாற்றமும் சாத்தியமில்லை. நான் தனி மனிதன் தான் ஆனால் இந்தச் சமூகத்தில் நானும் ஒரு அங்கம்….இந்த சமூகம் என்னை பாதிக்கும், நான் இந்த சமூகத்தை பாதிப்பேன் என்ற உணர்வுடன், பொறுப்புடன், சுய அறிவின் உதவியுடன் செயல் பட்டாலேயன்றி இன்னும் இன்னும் பல ஆனந்துகள் பாதிக்கப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். இந்த பாதிப்புக்கு அவன் மட்டும் காரணமில்லை, அவன் சூழல் மட்டும் காரணமில்லை. இந்த சமூகத்தின் அங்கத்தினார்களாக, இந்தக் கல்விமுறையின் ஆதரவாளர்களாக, நாம் அனைவருமே காரணகர்தாக்கள் தான்.

இதை ஒரு சாதாரண நாவல் என்ற அளவில் பார்த்துவிட முடியாது. நம் சமூகத்தின் யதார்தத்தை நம் கண்முன் கொண்டு வந்து நம் உறக்கத்தை (இரவு இப்பொழுது 02.28 நேரம்) நம் நிம்மதியை குலைக்கும் ஒரு இளைஞனின் சரித்திரமாகவே, இன்னும் முடியாத ஒரு சரித்திரமாகவே நம்மை பாடுபடுத்தும் ……

இங்கு யாருமே குற்றவாளிகள் இல்லை….ஆனால் நாம் அனைவருமே குற்றவாளிகள் தான்…..

இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரு தனி மேடை அமைத்து விவாதிக்கப்பட வேண்டிய பாத்திரங்கள்….அவற்றில் நாமும் ஒருவராக இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம்…..

மிட்டாய் பசிக்கு விருதுகள் குவிவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை….

தமிழினி பதிப்பகம் / 8667255103


லதா

எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். சென்னையைச் சார்ந்தவர். இவர் எழுதி 2020 ஆமாண்டு knowrap imprints வெளியிட்ட “கழிவறை இருக்கை” நூல் பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. the toilet seat பார்வை வழிப்பயணம் விரலிடை வெளிச்சம் ஆகிய நூல்களின் ஆசிரியரான லதா பன்னாட்டு நிறுவனங்களில் முன்பு வேலை பார்த்தவர். தற்போது முழு நேர எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்