எதிர்நாயகன்  3

எதிர்நாயகன்  3

விஜய்குமார்


நேற்று மாங்குடி மைனர் பார்த்தேன். அப்போது தான் எம்ஜி.ஆர் ஆட்சி அமைத்திருந்த சமயம் போலும், படத்தின் பல இடங்களில் வாத்யார் போற்றிகள் இடம்பெற்றிருந்தன. அண்ணா சிலையை நோக்கி நாயகன் விஜயகுமார் வீறு நடை போட்டு வந்து நீங்க நெனச்சபடி எல்லாம் நடந்துருச்சி என்று பாடி வருவார்.. கருப்பு வெள்ளைப் படமான இதற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். அவரது ஆரம்ப காலப் படங்களில் ஒன்று இது.

Mangudi Minor (1978) - IMDbவிஜயகுமார் பேர் முதலிலும் ரஜினிகாந்த் பெயர் அடுத்ததாகவும் டைட்டில்ஸில் மின்னும். இதற்கடுத்த காலத்தில் வணக்கத்துக்குரிய காதலியே படத்தில் இருவரும் நாயகம் எனும் போது முதல் பெயராக ரஜினிகாந்த் என்பது மிளிரும். சிலபல படங்களைத் தயாரிக்கவும் செய்தார் விஜயகுமார். மகேந்திரன் இயக்கத்தில் மிக மிக அழகான ரஜினியைக் கதாநாயகப் படுத்திய கை கொடுக்கும் கை படம் விஜய்குமார் தயாரித்தது தான். ரஜினி தயாரிப்பில் மாவீரனில் அவரோடு மோதினார் விஜய்குமார்.

தாய்வீடு-தனிக்காட்டு ராஜா-துடிக்கும் கரங்கள்-நான் அடிமை இல்லை-விடுதலை – என அரை டஜன் வில்ல வேஷங்களைத் தாண்டி இளையராஜாவின் சொந்தப்படமான ராஜாதிராஜாவில் ரஜினிக்கு அப்பா வேஷம் கட்டினார் விஜய்குமார். சத்யா மூவீஸ் தயாரித்த பணக்காரனிலும் அவரே பிதா. நடுவில் சிவாவில் வில்லனாகி விட்டு அடுத்த சில வருடங்களில் வெளியான ஏவி.எம்மின் எஜமான் படத்தில் நாயகி மீனாவின் அப்பாவாக ரஜினிக்கு மாமனாராகத் தோன்றினார் விஜய்குமார். உழைப்பாளியில் ரஜினியின் முதல் பட நாயகியான ஸ்ரீவித்யாவுக்கு இணையாக வந்தார்.

உலகப் புகழ் பெற்ற பாட்ஷாவில் மாணிக்கத்தின் தந்தை ரங்கசாமி யார்..? நம்ம விஜய்குமார் தான். ற ங் க ஸா மீ  என்று ரகுவரன் பற்களைச் செரித்துக் கொண்டு அழைக்கும் போதெல்லாம் பவ்யமாய்ப் பணி செய்து தன் இன்னுயிரையே விசுவாசத்துக்காக நல்கும் பாத்திரம். வெளுத்திருப்பார் விஜய்குமார் . பாபா சந்திரமுகி குசேலன் லிங்கா  எனப் பல படங்களில் ரஜினியோடு சேர்ந்து நடித்தார் விஜய்குமார். நாட்டாமையில் விஜய்குமார் ஏற்ற ஃபாதர் ஆஃப் தி மெயின் நாட்டாமை வேடத்தைத் தெலுங்குப் பதிப்பான பெத்தராயுடுவில் நடித்தது சாட்சாத் அந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாரு தான்.

விஜயகுமாரின் கதாபாத்திரத்தில் நடிக்க துடித்த ரஜினி.. பின் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து மரண ஹிட் - Cinemapettai

ரஜினி ரசிகனாக எப்போது பார்த்தாலும் வயிறு எரியச்செய்யும் ஒரு பாடல் வாழுமட்டும் நன்மைக்காக எனத் தொடங்கும் காளி படப்பாடல். ரஜினி சும்மாக்காச்சும் வண்டி ஓட்டிக் கொண்டு வர முழுப்பாடலுக்கும் வாயசைத்தவர் விஜய்குமார். அந்த ஒரு பாடலாலேயே எனக்கு மிகவும் பிடிக்காத மனிதர்களின் பட்டியலில் என் பெரீப்பாவை முன் தள்ளி முதலிடம் பிடித்தவர் விஜய்குமார்.தெலுங்குப் பதிப்பில் அதே ரஜினியோடு இதே பாடலைக் களவாண்டு நடித்தவரான சிரஞ்சீவி மீது அதே வன்மம் ஆரம்பத்தில் இருந்தது அப்புறம் பல்வகை டப்பிங் காவியங்களைக் கண்டுய்த்த பிறகு அவருக்கும் தன்யனானேன்

விஜயகுமார் எழுபதுகளின் மத்தியில் திரை தோன்றத் தொடங்கிய நாயகன். மிகத் திருத்தமான முகம் அழகான புன்னகை செறிவான உடற்கட்டு தீர்க்கமான குரல் எட்ஸெட்ராக்கள் எல்லாம் இருந்தும் நாயகனாக நிறையப் படங்கள் தாக்குப் பிடிக்கவில்லை. எண்பதுகளின் ஆரம்பத்தில் அழகிய வில்லனாக மாறினார். தனக்குப் பின்னால் நாயகர்களான பலரிடமும் சாத்து வாங்கி மோதித் தோற்கும் பல படங்களைத் தாண்டித் தமிழ் சினிமாவின் கனகச்சித கம்பீரக் கலர்ஃபுல் அப்பா வேடந்தாங்கியாக ஒரு மெகா வலம் வந்தார்.

எழுபதுகளில் பல அழியாப் புகழ் பாடல்களுக்கு வாயசைத்தவர் விஜயகுமார். சில படங்களில் புரட்சிக் கலைஞர் என்றெல்லாம் பேர் போட்டார்கள். பின்னால் வந்த கேப்டனுக்குத் தான் அந்தப் பேரும் சொந்தமாகி நிலைத்தது.  புதியவானம் போன்ற படங்களில் மிகக் க்ரூரமான வில்லனாக வந்தாலும் ச்சே…இவர் இப்படியானவரா..? நல்லவர்னு நம்பினமே என்று தோன்ற வைத்த அழியாத ஜெண்டில்மன் முகவாகு இவருக்குப் பலவீனமுமான பலம்.  அக்னி நட்சத்திரம் படத்தின் நாயகர்களின் அப்பாவாக வேஷங்கட்டினார். அந்தப் படத்தில் விஜய்குமாருக்கு யாரை வில்லனாக்கலாம் என்று ஆனானப் பட்ட மணிஷாரே கொஞ்ச நஞ்சமல்ல நிறையக் குழம்பி வெளியூர் வேற்று மாநில முகங்களையெல்லாம் பரிசீலித்து முடித்த ஒரு நன்னாளில் ஆனந்த் தியேட்டர் உமாபதியை அழைத்து நீங்க தான் மிஸ்டர் விஜய்குமார் அண்ட் சன்ஸ் எல்லாருக்கும் வில்லரா நடிக்கணும் என்று பணித்தார்கள்.  பல படங்களில் மிகை நடிப்புக்காகப் பேசப்பட்டார் விஜயகுமார். பாரதிராஜாவின் அந்திமந்தாரை –கிழக்குச்சீமையிலே, மணிவாசகத்தின் பட்டத்து ராணி போன்ற வெகு சில படங்களில் அடக்கி வாசித்து ஆச்சர்யப் படுத்தவும் செய்தார்.

நாட்டாமை தொடங்கிப் பல படங்களில் பஞ்சாயத் செய்தவர் விஜய்குமார். அதை விட அதிகப் படங்களில் காவல் துறை அதிகாரி வேடங்களில் நடித்தும் இருக்கிறார். ஒரு முறை பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலில் ஏன் இவர் பெயர் இடம்பெறவில்லை என ஒருகணம் நான் மைசெல்ஃப் நானே யோசித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்குக் காக்கிகளோடு கலந்து நிறைந்தவர் நம்மாள்.

“யோசிச்சிப் பார்த்தா ஒரு குறையும் தோண மாட்டேங்குது..அப்பறம் ஏண்டா விஜய்குமாரால பெரிய ஹீரோவா தாக்குப் பிடிக்க முடியலை.?” எனக் கேட்டதற்கு என் வாழ்வியல் ஞானியும் வகுப்புத் தோழனுமான பரணி சொன்னது தான் ஹைலைட்.

“சினிமால ஜெயிக்கணும்னா எக்கச்சக்கமான ப்ளஸ் பாய்ண்ட்களோட ஒண்ணு ரெண்டு மைனஸ் பாயிண்ட்ஸூம் இருக்கணும் நண்பா…காலண்டருக்குப் படம் எழுதினாப்ல இருந்தா கெலிக்கிறது கஷ்டம்”

அது விஜய்குமாருக்கு நிச்சயம் பொருந்தும்

நமக்கென்ன ஹீரோவாகவே நிலைத்திருந்தால் அதிக பட்சம் நூறு நூற்றைம்பது படங்களில் தோன்றியிருப்பார் என்றால் இப்போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார் அல்லவா..?

தட் இஸ் ரியலி க்ரேட் நாட்டாமை  ஸாரே!