எனக்குள் எண்ணங்கள் 10
ராம்தாஸூம் மோகனும்
சுபா இரட்டையர்கள். எழுத்துத் துறையில் இரண்டு பேர் சேர்ந்து இயங்குவது எத்தனை கடினம்? ஆண்டுக்கணக்கில் சுபா என்ற பேரில் சுரேஷூம் பாலாவும் இணைந்தே பறந்து வரும் ஓருவான் பறவைகள்.
பாக்கெட் நாவல்களின் காலம் எண்பதுகளின் பின் மத்தியில் நிகழத் தொடங்கியிருக்கலாம். ஜி.அசோகன் இரண்டாம் தலைமுறை பதிப்பாளர். அவருடைய தந்தை எல்.ஜி.ராஜ் எழுபதுகளில் பல்வேறு பதிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாய் இயங்கியவர். எண்பதுகளில் அசோகன் ஆரம்பித்த பாக்கெட் நாவல் பெரிய ஹிட் அடித்தது. ராஜேஷ் குமாருக்கென்றே தனியாக க்ரைம் நாவலைத் தொடங்கினார். ஜோசியம் வேலைவாய்ப்பு உட்படப் பல பத்திரிகைகளை நடத்தி வெற்றி கண்டவர் அசோகன். பட்டுக்கோட்டை பிரபாகர் மாதாமாதம் எழுதுவதற்கென எ நாவல் டைம் இதழைத் தொடங்கினார். அப்போது சூப்பர் நாவல் என்ற மாத நாவல் சுபா இருவரும் தொடர்ந்து எழுதுவதற்காக ராமு என்பவர் ஆரம்பித்தார்.
ராணி முத்துவும் மாலைமதியும் தமிழ் மக்கள் மனப்பரப்பில் செலுத்திய செல்வாக்கு அளப்பரியது. சின்ன விலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு உருவாக்கித் தந்தவை மாத நாவல்கள். சாவி நடத்திய மோனா, சுஜாதா தொடங்கிப் பல இதழ்கள் வந்தன. சில தொடர்ந்தன. பல பாதிவழியில் நின்றன.
மாத நாவல் எனும் உலகத்துக்குள் சமூக குடும்பக் கதைகளைக் கையாளும் நாவல்களுக்கென்று தனித்த வாசிப்பாளர்கள் இருந்தார்கள். துப்பறியும் நாவல்கள் சாதாரணர்களின் வாழ்க்கைக்கு உள்ளே சாகச வருகை ஒன்றைப் பாவனையாக நிகழ்த்தலாயிற்று. அத்தகைய கதைகளை மிகவும் விருப்பம் கொண்டு வாசிப்பவர்கள் தங்களுக்கும் விரைவில் சிறகு முளைத்துப் பறக்கப் போவதாக எண்ணினார்கள். நான் எல்லோரிலும் ஒருவன் இல்லையாக்கும். நான் கொஞ்சம் மேதை என்ற பொய்யுணர்வைப் பராமரித்துத் தந்தவை எண்பதுகளின் மத்தியில் தோன்றிய இத்தகைய துப்பறியும் கதைகள்.
முன் காலத்தில் தமிழ்வாணன் வரை பலரும் எழுதிய துப்பறியும் கதைகள் வேறு விதமானவை. அவை முழுப் புனைவின் விலக்கத்தை வாசகனுக்கு முன்பாகத் தோற்றுவித்த பிறகே விரியத் தலைப்பட்டவை. இதனைத் தமிழில் மாற்றி அமைத்தவர் சுஜாதா. மொழிமாற்றக் கதைகள் மெல்லச் செல்வாக்கடையத் தொடங்கிய காலகட்டத்தில் நைலான் கயிறு என்ற குறு நாவலொன்றின் மூலமாகத் தனதொரு திசையைத் திறந்து கொண்டார் சுஜாதா. அந்தக் கதை அவருக்குத் தந்த வெளிச்சம் அதன் பின் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அத்தகைய கதைகளை விடாமல் படைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கிற்று.
சுஜாதாவின் துப்பறியும் உலகத்துக்குள் இரண்டு பேர் நிரந்தரித்தனர். கணேஷ் மற்றும் வஸந்த். குருவும் சீடனுமான தோற்றம். ஒருவன் அமைதி இன்னொருவன் பரபரக்கும் ஆரவாரம் இந்த மெல்லிய வித்யாசத்தை வளர்த்துக் கொண்டு போய் வழக்குத் தீர்த்தல்களை செய்து காட்டிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை சுஜாதா எழுதினார். திரையிலும் இந்தக் கதாபாத்திரங்களை மேலெழுத முயன்று அவை எடுபடாமல் போயிருக்கின்றன. ஜெய்சங்கர் ரஜினிகாந்த் ராஜீவ் ஆகியோர் கணேஷாக வந்தது வரலாறு.
ராஜேஷ் குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்களைத் தாண்டி சுபாவின் மாத நாவல்கள் வாசிப்பவர்க்குக் கிளர்த்தித் தந்த அனுபவம் முக்கியமானது. இதழியல் துறையிலும் புகுந்து புறப்பட்ட சுபா ஜெயமன்மதன் என்ற பேரில் கல்கி இதழில் சில வருட காலம் தொடர்ச்சியாக எழுதிவந்த சினிமா விமர்சனங்கள் கூர்மை மிக்கவை. அந்தந்த ஊர் சிறப்பிதழ்களைத் தயாரிப்பதில் அவர்கள் பெரும்பங்காற்றினர். அதிர்ந்து பேசாத மென் குணம் படைத்த இரண்டு பேர் தங்கள் எழுத்துக்களின் வழியாக ஏற்படுத்த முனைந்த அதிர்வுகள் பலமிகுந்து நிகழ்ந்தன.
சமூக நாவல்களையும் எழுதியிருக்கும் சுபா துப்பறியும் கதைகளைப் பொருத்தமட்டிலும் தனியோர் உலகத்தை நிர்மாணித்துக் கொண்டிருந்தனர்.
ராஜேஷ்குமார் மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரின் எழுத்துகளைத் தாண்டி சுபாவின் எழுத்து என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்கள் இருந்தன. முதல் காரணம் துப்பறியும் நாவல்களில் அவர்கள் கையாண்ட மொழிநடை. சரித்திர நாவல்களுக்கான அதே தொனியைக் கொண்டு வந்து துப்பறியும் நாவல்களை எழுதிப் பார்த்தது வித்யாசமான முயற்சி. நன்றாகவே கைகொடுத்தது எனலாம். அடுத்த காரணம் அவர்கள் கட்டமைத்த eagle’s Eye என்கிற துப்பறியும் நிறுவனம்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராம்தாஸ் என்பவர் அதன் தலைவர். எப்போதும் பைப் பிடிப்பார். அதிகம் பேசமாட்டார். மிகவும் கண்டிப்பானவர். எல்லாக் கேஸ்களையும் ஒப்புக் கொள்ள மாட்டார். முக்கியமாக அறம் வழுவவே மாட்டார். எந்த விசயத்திலும் நல்ல பக்கம் எதுவோ அதையே சார்ந்து நிற்பவர். தன்னிடம் பணிபுரிகிறவர்களை எல்லாம் மரியாதையோடும் கண்டிப்போடும் கையாள்பவர். அவருடைய முகம் இறுக்கமாக இருக்கும். எந்த உணர்ச்சியையும் அவ்வளவு எளிதில் தென்படச் செய்யாதவர். நல்லவர்.
ஈகிள்ஸ் ஐயின் அலுவலகம் தேவையற்ற ஒளி ஏதுமின்றிக் கச்சிதமான இருளொன்றில் ஆழ்ந்து இருக்கும். விவாதங்களின் முடிவில் அதுவரையிலான கண்டிப்பைத் தளர்த்திக் கொண்டு தன் சகாக்களுக்குத் தேவையான அதிரடி சுதந்திரத்தை நல்கும் போது கதைக் குதிரை முடிவை நோக்கி விரைந்து விடும். ஈகிள்ஸ் ஐ தோற்றதே இல்லை. அதன் வெற்றிக்குக் காரணம் மேற்சொன்னவற்றோடு கூட சட்டத்தையும் காவல்துறையையும் மதித்து பெரும்பாலும் விதிமீறாமல் செயல்படுவதும் தான்.
நரேந்திரன் தான் பிரதானக் கழுகுக் கண்ணன். அவனது காதலிணை வைஜயந்தி.மற்றும் ஜான்சுந்தர் கருணாகரன் (சில கதைகளோடு இவன் இறந்தான்) எனப் பலரும் கொண்டது அந்த நிறுவனம்.
பரபரப்பான சேஸிங் காட்சிகள் விறுவிறுப்பான கதை நகர்வுகள் யூகிக்க முடியாத திருப்பங்கள் எதிர்பாராமை எப்போதும் நீண்டு கொண்டே இருக்கக் கூடிய புதிர்களின் பயணம் எனப் பல காரணங்கள் சுபா கதைகளை விரும்பச் செய்தன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் லாஜிக் மீறல்களும் மூட நம்பகப் பற்றுதல்களும் இல்லாமல் ஆங்கிலப் படங்களின் அதே லட்சணத்தைத் தம் கதைகளின் பிரதிபலித்தவர்கள் சுபா. பல கதைகளைப் படித்து முடிக்கையில் நாமும் கூடவே ஓடித் திரும்பினாற் போன்ற வியர்வைப் பரவசம் நிகழும்.
தூண்டில் கயிறு எனும் நாவல் அனேகமாக இரண்டல்லது 3 பாகங்கள் வந்தது என நினைவு. எடுத்தால் கீழே வைக்க முடியாத தடையற்ற வாசிப்பை நமக்குத் தரும் எழுத்து. சுபாவின் பல நாவல்களைப் படிக்கையில் இவற்றை எல்லாம் படமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்திருக்கிறேன் பொன் ஜிதா என்று ஒன்று அட்டையில் ஜூகி சாவ்லாவின் டைட் க்லோஸ் முகத்துடன் வெளிவந்த மாலைமதி. நிச்சயமாகப் பத்து முறை படித்திருப்பேன். சுபா மாலை மதியில் எண்பதுகளில் எழுதிய பல நாவல்கள் திரைத்தரம் கொண்ட கதைகள்.
கே.வி.ஆனந்த் ஆரம்பத்தில் எடுத்தளித்த பல ஸ்டில்கள் சூப்பர் நாவலின் தொடக்க கால அட்டைப்படங்களாக மிளிர்ந்தவை. தீராத திரைத் தாகம் கொண்ட ஆனந்த் பிறகு திரைத்துறையில் கால்பதித்து மின்னத் தொடங்கினார். நெடுமுடி வேணு மோகன்லால் ஷோபனா நடித்த தேன்மாவின் கொம்பத் இந்தியாவைக் கலக்கிய மலையாளப் படம். இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் கடைசிப் படம் எனச் சொல்ல முடியும். இதை ஒப்புக் கொண்டு பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே பர்மன் மறைந்தார். இரட்டையர்களான பெர்னியும் இக்னேஷியஸூம் பின்னர் இசையமைப்பை மேற்கொண்டனர். ப்ரியதர்ஷன் இயக்கிய இந்தப் படம் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான 1994 தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இதே படம் பிறகு ரணரணாதி மாற்றங்களோடு தமிழுக்கு வந்தது. உலகத்தையே கலக்கிற்று.அது தான் ரஜினி நடித்த முத்து.
ஆனந்தின் திரைவலம் ஒளிப்பதிவைத் தாண்டித் திரைப்பட இயக்கம் நோக்கிச் சென்றது. ஒளிப்பதிவாளராக காதல் தேசம்-முதல்வன் தொடங்கி சிவாஜி வரை 14 படங்களைப் பதிவு செய்த ஆனந்த் இயக்குனராகி கனாக் கண்டேன்-அயன்-கோ-மாற்றான்-அனேகன்-கவண்-காப்பான் போன்ற படங்களை இயக்கினார். காப்பான் படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியளித்தார். ஆனந்தின் மற்ற படங்கள் யாவற்றிலும் கதை திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை இரட்டையர்கள் சுபா கையாண்டனர்.
அயன் கோ போன்ற படங்களில் சுபாவின் எழுத்துப்பரவலின் அதே உப நுட்ப நிரவல்கள் திரைப்படுத்தப் பட்டிருந்தது ஆச்சரியம். மறக்க முடியாத பாத்திரங்களை கதை நிகழ்வுகளை முற்றிலும் வணிக முகாந்திரம் கொண்ட படங்களில் இடம்பெறச் செய்தது கவனிக்கத் தகுந்த அம்சம்.அயன் கோ கவண் உள்ளிட்ட படங்களில் நாயகன் மற்றும் பல பாத்திரங்களை சுபா ஏற்கனவே எழுதிய கதை மாந்தர்களின் குணாம்சங்களோடு பொருத்தியும் விலக்கியும் பார்த்திருக்கிறேன். வாசகனாக ஒரு திரைப்படத்தைக் காணும் போது அது ஒரு நீட்டிக்கப்பட்ட இன்பமாக மாற்றம் அடைவதை உணரலாம். வாசிப்பு சாத்தியப்படுத்துகிற உலகளாவிய தனித்துவம் இது.
பழைய புத்தகக் கடையில் தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மோகன். பின் நாட்களில் செல்பேசி வாங்கியபோது அவர் பெயரையே மோகன்-சுபா என்று தான் பதிந்திருப்பேன். அப்படி ஒரு சுபா ரசிகர். அவருடைய வாசிப்பு மிகவும் குறிப்பிட்ட வகைக்குள் இயங்குவது. ஒன்று படக்கதைகள் எனப்படுகிற காமிக்ஸ் புத்தகங்களை சேகரிப்பார். அவற்றை ஒன்று விடாமல் பல தடவை படிப்பார். இல்லா விட்டால் சுபாவின் எழுத்துகள். அதிலும் சுபா எழுதிய சமூகக் கதைகள் காதல் நாவல்கள் ஒன்றைக் கூட விடமாட்டார். தேடித் தேடிப் படிப்பார். எதாவது ஒரு கதையின் பெயரைச் சொன்னால் ஒரு படத்தின் கதையைப் பகிர்கிற அதே உற்சாகத்துடன் அந்தக் கதையை எடுத்துரைப்பார். தன் வீட்டில் சுபா எழுதிய அனைத்து நாவல்கள் தொடர்கள் நூல்கள் எனப் பெரிய அலமாரியில் வருடவாரியாக அடுக்கி வைத்திருந்தார். ரசனை நேசம் என்பதன் வானளாவிய விரிதற்பொருள் அது. எப்படி ரசிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகவே இன்றளவும் மோகனை எண்ணிக் கொள்வேன். யார் கேட்டாலும் ஒரே ஒரு பாக்கெட் சைஸ் புத்தகத்தைக் கூட இரவல் தர மாட்டார். இரவல் தந்து பரவலாக புத்தகங்களைத் தொலைத்தவனான எனக்கு அவருடைய மிலிட்டரி கண்டிப்பு சரிதான் என்றே தோன்றியது.
அவருக்குத் தேவையான நாலைந்து மாலைமதி இதழ்களைத் தந்ததன் மூலம் நாங்கள் நெருக்கமான நட்பானோம், அவர் எனக்குப் பதிலுக்கு வாங்கித் தந்தது கிரணம் இதழொன்று உள்ளிட்ட தீவிர இலக்கிய சிறுபத்திரிக்கை இதழ்களை. தூண்டில் முரண் தாண்டி அவரவர் மீன்களைக் கைமாற்றிக் கொண்டதும் ரசனை எனும் பெருந்தெய்வத்தின் உப நாம கரணம் தான் இல்லையா?
மோகனுக்கு ஒரு ஆசை இருந்தது.
நானும் மோகனும் பழைய புத்தகக் கடைகளில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். பெரிய சைஸ் கைப்பை ஒன்றை அவர் எப்போதும் வைத்திருப்பார். அந்தப் பையின் உள்ளார்ந்த உலகம் வியப்பைத் தரும். சின்ன கர்ச்சீஃபை விடச் சற்றே பெரிய சைஸ் துண்டு தொடங்கி அமிர்தாஞ்சன் பாட்டில் வரை என்னென்னவோ வைத்திருப்பார். தவிர சில புத்தகங்கள். இந்தாங்க உங்களுக்காக வாங்கினேன் என்று எடுத்துத் தருவார். மேடையில் வெறும் கைகளோடு ஏறுகிறவன் எதையாவது பிடித்துத் திறந்து என்னவாவது வரவழைப்பானே மேஜிக் எனும் தந்திரத்தைத் தாண்டிய வியப்பு அவன் வரவழைத்தது அதற்கு முன் எங்கே இருந்திருக்கும் என்பதாக மாறும். அப்படியான அதே வியப்புத் தான் மோகனின் பையினுள் கைவிட்டு அவர் எடுத்தளிக்கும் புத்தகங்கள் எனக்குத் தரும். தான் தரும் புத்தகங்களுக்குப் பணமும் வாங்கிக் கொள்ள மாட்டார். பேரரசனின் வள்ளல்தன்மையோடு பரவால்லைங்க வேணாங்க என்று கூச்சம் காட்டுவார். வேறு வழியின்றி பக்கத்தில் இருக்கும் மாடர்ன் ரெஸ்டாரண்டுக்குள் நுழைவோம். தனக்கென்று தனி மொழி கொண்டவர் மோகன். காபி சாப்டலாங்களா என்பவர் உடனே டிபன் பண்ணிட்டீங்களா என்பார். தட் மீன்ஸ் சாப்டிங்களா தான். படத்துக்கு போகலாங்களா என்று கேட்கவே மாட்டார். எங்கூடப் படத்துக்கு வர முடியுங்களா என்று உபகார வரிசையிலேயே ஒலிக்க வைப்பார். அவரும் நானும் பல படங்கள் சேர்ந்து கண்டிருக்கிறோம். இப்படி எல்லாம் சுபாவோட கதைங்க படமாக்கினா எப்டி இருக்கும்..இதெல்லாம் ஒரு கதைன்னு எனத் திட்டுவார். அப்புறம் நாக்கைக் கடித்துக் கொள்வார். ஒரு நாள் அப்படித்தான் ஏதோ ஒரு படம் பார்த்து விட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம். நல்ல மழை அடிக்கவே சூடாக ஒரு டீயை சாப்பிட்டு விட்டு அப்படியே நின்றவாக்கில் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நேரத்தைப் போக்குவதற்காக மனத்தைத் திறக்கும் போது பெரிய சன்னல்களை அது திறந்து வைக்கிறது போலும். தன் காதல் தோல்வி தொடங்கிப் பல விசயங்களைப் பற்றிப் பேசிய மோகன் அந்தத் தனது கழுகுக் கண் ஆசையை என்னிடம் பகிர்ந்தார்.
ரவீ…எனக்கு மட்டும் காசு நல்லா கிடைச்சதுன்னா ஈகிள்ஸ் ஐ மாதிரி அதே பேர்லயே ஒரு ஏஜன்ஸி ஆரம்பிச்சுருவேனுங்க. சுபா சார்கள்ட்ட பெர்மிஷன் வாங்கித் தான். அதுல ராம்தாஸ் ஸார் மாதிரியே ஒருத்தரைப் பிடிச்சி சீஃப் வேலைக்குப் போட்டுட்டம்னுன்னா போதுங்க. நல்ல வசதிகளோட ஒரு ஏஜன்சி ஆரம்பிக்கணும்ங்க என்றார். விளையாட்டாகத் தான் பேசவில்லை என்பதை ஒவ்வொரு எழுத்துருவையும் அவர் பேசிய நேர்தொனி புரியத் தந்தது.
அதுல நீங்க என்ன பண்ணுவீங்க என்று கேட்டால் கூச்சத்தோடு நாமளும் அதே ஆபீஸ்ல ஒரு மூலையில சாதாரணமா உக்காந்திருக்க வேண்டியது தானுங்க. நமக்கு எதுனாச்சும் தோணுச்சின்னா அப்பயும் ராம்தாஸ் ஸாருக்குத் தேவைப்பட்டா மாத்திரம் நம்ம ஐடியாக்களையும் தெரியப்படுத்தலாங்க. ஆனா அது எப்பிடியும் தொந்தரவாயிரலாம்றதால வேண்டியிருக்காதுங்க. நான் பணம் செலவழிச்சு நடத்துறேன்னாலும் என் தொந்தரவு கொஞ்சமும் இருக்கக் கூடாது இல்லீங்களா..? நல்ல டவுன்ல மெயின்ல ஒரு ஆபீஸூம் ஊருக்கு வெளியில இந்த சர்வேயர் காலனி மாட்டுத் தாவணி இதுமாதிரி இடங்கள்ல கூட பெருசா ஒரு ஆபீஸூம் போட்றலாங்க என்றார்.
அவருடைய அந்தக் கனவு வெறும் காகிதத்தாலானதல்ல. காலமும் காசும் கையிலிருந்தால் நிச்சயம் செய்திருப்பார் என்று தோன்றியது. இரண்டாயிரமாம் ஆண்டுக்கப்பால் அவருடனான தொடர்பு அறுந்து விட்டது.இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. இந்தக் கணம் வரை சுபா சார்களின் எழுத்தனைத்தையும் சேகரித்து வரிசைப்படுத்திக் கொண்டு தானும் தன்னுலக சஞ்சாரமுமாக இன்புற்றுக் கொண்டு தான் இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
எப்போதாவது எனக்கு வரக் கூடிய கனவில் ராம்தாஸ் ஸாருக்குப் பக்கவாட்டு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி பரவசமாகப் புன்னகைக்கும் மோகனின் பழைய தோற்றத்தைப் பற்றி அவரைப் பார்க்கும் போது சொல்ல வேண்டும்.