எனக்குள் எண்ணங்கள்
13 ரத்தமலர்கள்
___________________________________________
இந்த தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். திஜா எழுதிய அடி எனும் கதை அப்புறம் தான் படித்தேன். மனிதன் சக மனிதன் மீது நிகழ்த்தி பார்க்கும் ஆக்கிரமிப்பு, குற்றம், மீறல் இவற்றுக்கான ஆரம்பம் என்று ஒருவன் இன்னொருவனை அடிப்பதைச் சொல்ல முடிகிறது. எண்பதுகளில் பள்ளிப் பருவம் அமையப்பெற்றவன் நான். என் வீட்டில் அப்பா அம்மா இருவரில் அம்மாதான் என்னையும் அக்காவையும் அடித்திருக்கிறார். அப்பா எங்களை அடித்ததே இல்லை.
ஆறாவது வகுப்பில் என்னோடு படித்த ஹரி ஆனந்த் அவனுடைய அப்பா அவனை தொட்டதற்கெல்லாம் அடிப்பார் என்று சிரித்துக் கொண்டே சொன்னது பல தசாப்தங்களுக்கு பின்னாலும் இன்னும் நினைவிருக்கிறது. ஈ.எம்.ஜி நகரில் முத்துராஜ் என்பவன் வீடு தெருவின் எல்லையில் இருக்கும். அவனுடைய அப்பா லாரி ஓட்டுநர். தேசிய அளவில் கிளைகள் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை. முத்துராஜூக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. அவனுடைய அப்பா ஊருக்கு வரும் போதெல்லாம் அவர்கள் வீடு வினோதமான வெளிச்சம் பெறும். நாலு அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வருவார். ஒரு மாதம் விடுப்பில் இருப்பார். மீண்டும் வேலைக்குக் கிளம்புவார். அப்படியான அப்பாவிடம் பசங்கள் செய்கிற சிறு பெரிய தப்புகள் எல்லாமும் ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா குற்றச்சாட்டுகளை வாசிப்பார். அப்பா மூணு பசங்களையும் வரிசையாக நிற்கச் சொல்லி ஸ்கேலால் மணிக்கட்டில் அடிப்பார். அவர்கள் அலறுகிற சப்தம் பாதித் தெருவைத் தாண்டிக் கேட்கும். ஓலம் என்று தான் அதனை வகைப்படுத்த முடியும். நல்ல வேளை “நமக்கெல்லாம் முத்துராஜின் அப்பா போல் அப்பா அமையவில்லை” என்று சண்முகமும் சுந்தரும் வாய்விட்டே சொல்வது வழக்கம். முகத்தில் தேவையற்ற மச்சம் போல் அவர்களுடைய வாழ்க்கையில் அந்த ஸ்கேல் அடிகள் நெடுங்காலம் தொடர்ந்து கொண்டிருந்தன. எங்கள் மனதிலும் அவ்வப்போது ஒலித்தபடி.
எப்படிப் பார்த்தாலும் யார் யாரை அடித்தாலும் அது தப்புதான் தவறுதான் பிசகு தான் பிழையும் தான். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்கிற வாசகத்தை நான் படித்த பள்ளியை ஒட்டினாற் போலிருந்த தேவாலயத்தின் வெளிப்புறச் சுவரில் வியந்து படித்திருக்கிறேன். அந்த வயதில் அந்த வாக்கியத்தின் சாத்திய அசாத்தியங்கள் மாத்திரம் தான் உரைத்ததே தவிர அதன் பின்னால் இருந்த அன்பின் தத்துவம் புரிபடவே இல்லை 2ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு மூன்றாம் வகுப்பு சேர்ந்து படிக்கும்போது வலி மற்றும் அடி எனும் இரு சொற்களும் பெரிதாக எனக்கு அறிமுகமானது அப்போதுதான்.
ஆசிரியர்கள் அப்போது மாணவர்களை அடிப்பது ஆட்சேபம் எதுவும் இல்லாத இயல்பான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்ட காலம். ஐந்தாம் வகுப்பில் இருந்து மாறி வேறு பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது சற்றே விபரம் தெரியத் தொடங்கிய அந்த 11 வயதில் இந்த உலகத்தை இரண்டாக பிரித்துக் கொள்ள முடிந்தது. அடிக்காத வாத்தியார்கள் நல்லவர்கள். எப்போதாவது அடிக்கும் வாத்தியார்களும் நல்லவர்கள்தான். எதற்கெடுத்தாலும் அடிக்கும் வாத்தியார்கள் ரொம்பவே மோசமானவர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
பாடம் எழுதாவிட்டால் அடி. கேட்கிற கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் அடி. விடுமுறை எடுத்தால் அடி. தாமதமாக வந்தால் அடி. பக்கத்தில் இருக்கும் பையனிடம் பேசினால் அடி. சத்தமாக சிரித்தால் அடி என நியாய தர்மத்துக்கு உட்படாத பல்வேறு விஷயங்களுக்காக தொடர்ந்து அடிகள் வழங்கப்பட்டன. மிருகங்கள் ஒன்றை ஒன்று கொன்று புசிப்பதுண்டு அதற்கு வேட்டை என்று பெயர். வேட்டையின்போது ஒரு மிருகம் இன்னொன்றை வீழ்த்தும் காரணத்திற்காக மட்டுமே அதை தாக்கும். மனிதன் மட்டும்தான் வாழ்க்கையின் பல தினங்களில் சக மனிதர்களை தாக்கிக் கொண்டே இருக்கிறான். இந்த விஷயத்தின் வினோதம் புரியத் தொடங்கியபோது பள்ளியில் இருந்து கல்லூரிக்கு வந்து விட்டிருந்தேன்.
நியாயம் கேட்டு நல்லவர்களை காப்பதற்காக தீயவர்களை ஒடுக்குவதற்காக ரஜினிகாந்த் அவர்களை அடித்தார். ரஜினிகாந்தின் கைகளால் நான் எனக்குப் பிடிக்காதவர்களை நான் வெறுக்கிற அவர்களை -என்னை அடித்தவர்களை- என்னை அடிப்பார்கள் என்று நான் கருதியவர்களை -எல்லோரையும் அடித்தேன். ஒரு வசனமும் இல்லாமல் நேரடியாக படத்தின் சண்டைக் காட்சியில் வந்து அடிக்க முயன்று அடிபட்டு திரும்பும் ஸ்ட்ண்ட் நடிகர்களை மானசீகமாக நானும் சேர்ந்து அடித்து நொறுக்கி இருக்கிறேன்.
பக்கத்து வீட்டுப் பையன் மற்றும் எனது சித்தப்பா பையன் என்னைவிட வயதில் இளைய சில பசங்கள் ஆகியோரை வாய்ப்பு கிடைக்கும்போது நானும் சில முறை அடித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பையனை பேனாவால் குத்த முயன்று அதற்காக பலமுறை அடிகள் வழங்கப்பட்டவன் நான்.
பதினோராம் வகுப்பு படிப்பதற்காக திருநகரில் ஒரு பள்ளியில் சேர நேர்ந்தது. ஒரு அளவுக்கு ஆங்கிலம் பற்றிய புரிதல் இருந்ததால் எஸ் சார் நோ சார் தேங்க்யூ சார் யூ ஆர் கரெக்ட் சார் என்றெல்லாம் அவ்வப்போது அடித்து விட்டதில் வாழ்வில் முதல் முறையாக ஆசிரியர்களின் மனதில் இவன் படிக்கிற பையன் என்று என் பிம்பம் பதிய தொடங்கியது. எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர் M.S.S என்று ஒரு ஆசிரியர் அந்தப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். பார்ப்பதற்கு மிக சாதுவாக தோன்றுவார். அவரைப் பார்த்தாலே பலரும் நடுங்கினார்கள். நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் பின்னால் வளைத்து மணிக்கட்டை தொட செய்வார். நான் படித்த அந்த மேல்நிலை இரண்டு வருடங்களும் என்னை ஒரு முறை கூட அப்படி வளைத்ததில்லை. அந்த வகுப்பின் லீடராக என்னை ஆக்கினார். கிண்டலாக என்னை “அண்ணே “என்று அழைப்பார். இப்போது வரை “அண்ணே” தான்.
பத்தாம் வகுப்பு வரை அதிகம் அடி வாங்குகிற பையனாக எல்லோருடைய பரிதாபம் மற்றும் ஏளனம் ஆகியவற்றுக்கு உரியவனாக வேறொரு பள்ளியில் கொண்டிருந்த பழைய சரித்திரத்திலிருந்து இந்த புதிய பள்ளி வெகு தூரம் இருந்தது. இங்கே நான் வேறொருவன் அடி வாங்குகிறவர்களின் தரப்பில் இருந்து அடிப்பவர்களின் பக்கத்தில் மாறி நின்று கொண்டவன். அடுத்தவர்கள் அடி வாங்கும் போது என் பழைய காயங்களின் மீதான புதிய காற்று வருடல்களாக அவற்றை கருதி ஆனந்தம் கொண்டேன். சில வருடங்களுக்கு முன்பு மலையாளப் படம் ஒன்று அயோபிண்ட புஸ்தகம் என்று அதில் லால் வெள்ளைக்காரர்களிடம் கங்காணியாக இருந்து பிற்பாடு ஒரு எஸ்டேட்டுக்கு முதலாளியாக உயர்த்தப்பட்டவராக வருவார். மனதளவில் தன்னை ஒரு பிரதி-ஆங்கிலேயனாகக் கருதி வாழ்கிற சிதில மனிதனாகப் பின்னி எடுத்திருப்பார். அதைப் பார்க்கும் போது அந்த லாலின் ஒரு துளிமனம் கொண்டு தான் நானும் புதிய பள்ளியில் நான் லீடராக வலம் வந்தேனோ என்று தோன்றியது.
99 ஆம் வருடம் மதுரை நடனா தியேட்டரில் தீனா எனும் திரைப்படம் ரிலீஸ் ஆகிற தினம் அதன் முதல் ஷோ பார்க்க போனபோது நண்பன் பிரசன்னா அவனுடைய வகுப்பு தோழன் தேவு உடன் ஐந்து பேர் டிக்கெட் எடுத்துவிட்டு அரங்கத்தில் நுழைவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம். முதல் ஷோ என்பதால் ரசிகர்கள் கூட்டம் முண்டி எடுத்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூட்டம் ஒரு வழியாக தாண்டி அரங்கத்தின் நுழைவாயிலில் ஆளுக்கு ஒரு டிக்கெட்டோடு உள்ளே நுழைவதற்காக நிற்கும்போது வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவரின் சீட்டையும் வாங்கி சரி பார்த்து கிழித்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள் . பெரிய கம்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்த ஒருவன் தேவுவை தொடையில் ஓங்கி ஒரு அடி அடித்து “ஒழுங்கா வரிசையில் நில்லு” என்று அதட்டி விட்டு அந்தப் பக்கம் சென்றான் இடைவேளையில் தேவுவின் முகத்தை பார்த்தால் அழுது வீங்கிய தடம். அவன் சொன்ன ஒரு வாசகம் இன்று வரை தன் இஷ்டத்துக்கு இந்த சம்பவத்தை எனக்கு நினைவு படுத்தி கொண்டிருப்பது அதுதான். “இதுவரைக்கும் நான் அடி வாங்கினதே இல்லைடா” என்றான் செல்வந்த வீட்டுப் பையன் பெரிய கான்வென்ட் படிப்பு முதல் மதிப்பெண் வாங்குபவன் அவனுடைய அப்பா மதுரையில் இரண்டு மூன்று திரையரங்குகளுக்கு பைனான்ஸ் செய்திருப்பவர் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தைவிட அதன் தொனி என்னை உறுத்தியது. தனக்கு ஏன் அது நிகழ்ந்தது என்று புரியாமல் அதன்பின் பலமுறை அதை எண்ணி மனம் குமைந்து கொண்டே இருந்தான் தேவு. அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு வருட காலம் படமாளிகைகளுக்கு சென்று சினிமா பார்ப்பதையே முற்றிலும் கைவிட்டு விட்டதாக ஒரு முறை சொன்ன தேவு அந்த நிகழ்வின் ஞாபகத்தை என்ன செய்தாலும் அழிக்க முடியவில்லை என்றான். எனக்கும்தான் அதனை அழிக்க முடியவில்லை என நான் அவனிடம் சொல்லவில்லை.
மனித குலம் இன்று வரை கைக்கொண்டிருப்பதிலேயே மிக மோசமான ஒன்று அடுத்தவரை அடிப்பது.
மறக்க முடியாத ஒரு தீபாவளி தினம் ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்காக கடைத்தேடி நாங்கள் ஒரு ஐந்து பேர் அலைந்து கொண்டிருந்தோம் தீபாவளி அன்று திறந்திருக்கும் தேநீர் கடை கண்டடைவது கடினம் தான் இல்லையா வழியில் நான்காவது நிறுத்தத்தில் ஸ்டார்ட் ஆக முரண்டு பிடித்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆத்திரம் தீர அதன் டயரில் எத்தினான் சட்டென்று திரும்பி அருகே நின்று கொண்டிருந்த அவனது மனைவி அவளை கன்னத்தை சேர்த்து ஓங்கி
அறைந்தான். அவள் பட்டவர்த்தனமாக ஒரு வெட்ட வெளியில் அந்த தினம் அந்த கணம் அப்படி ஒரு அறையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் நிலை குலைந்தாள். தூரத்தில் வந்து கொண்டிருந்த நாங்கள் ஒரு கணம் உறைந்து போனோம். சற்றைக்கெல்லாம் அந்த வண்டி சரியாகிவிட்டது அவர்கள் கிளம்பி அந்த காட்சியில் இருந்து வெகு தூரம் சென்று மறைந்து போனார்கள். ஆனாலும் அந்தப் பெண் கண்ணீர் ததும்பும் அந்த முகம் பல தினங்களுக்கு ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.
அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால் அழக்கூடாது
எப்போதும் வாசித்த மனுஷ்யபுத்திரனின் இந்த கவிதை எனக்கு உடனே அந்த தீபாவளிப் பெண்ணின் முகத்தை நினைவு படுத்தி விடும்.
அடி என்னும் விஷயம் குறித்து நம் தமிழ் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை கருத்தாக்கங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பதெல்லாம் பம்மாத்து. அடி என்பது மனித உரிமை மீறல். அதிகார துஷ்பிரயோகம். சக மனிதர் மீதான அடக்குமுறை.பெண்களை குழந்தைகளை முதியவர்களை பலவீனமானவர்களை யார் அடித்தாலும் அது குற்றம். அதை தட்டிக் கேட்பதற்கு உறவோ சொந்தமோ உரிமையோ தகுதியோ எதுவும் தேவையில்லை. அப்படி அடிப்பவர்களை நாலு சாத்து சாத்தியாவது அடியின் கொடுமையை வலியின் துன்பத்தை அவர்களுக்கு புரிய வைத்தால் தப்பில்லை என்று தோன்றுகிறது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் அடிக்கு அடி என்பது கூட குரூரத்தின் மறு முகம் தான். மனிதன் பண்பட வேண்டிய பயண மிச்சம் இது.
கலாச்சாரம் பண்பாடு ஆகியவை எல்லாம் ஒற்றை தினத்தில் பூத்துவிடுகிற மலர்களல்ல. நாம் வந்தடைந்திருக்கிற ‘இன்றெனும் புள்ளி’க்கு முன்பாகப் பயணித்து வந்த சந்ததித் தொலைவு இருக்கிறதே பல லட்சம் ஆண்டுகால நகர்தல் அது. மனிதன் எத்தனையோ நன்மைகளைக் கண்டடைந்து விட்டவன். இந்த உலகத்தில் வாழக் கிடைத்த அத்துணை தருணங்களையும் அதன் உட்புற மைக்ரோ துளிகளையெல்லாமும் இன்பம் பொங்க வாழ்வதற்கான உபாயங்களாகப் படைத்தவன் அவனே. ஆன போதிலும் இன்னமும் முற்றிலுமாகக் கைவிட வேண்டிய மிக முக்கியமான மிருகாம்சம் ஒன்று உண்டென்றால் அது தான் சக மனிதனைத் தாக்குவது. ‘அடிப்பது’ என்ற சொல் அதன் அர்த்தவீர்யத்தைப் பெரிதும் குன்றச் செய்து விடுகிறது. அதன் உட்பகுதியில் பொதிந்திருக்கிற அத்தனை வன்மமும் வெறியும் புரிபட வேண்டுமானால் ‘தாக்குதல்’ என்ற சொல் தான் சரி எனத் தோன்றுகிறது.
இந்திய சினிமா அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதானால் தமிழ் சினிமா இப்போது பற்றிய கரத்தை விடாமல் தவித்துக் கொண்டிருப்பது சாபம். வன்முறை உச்சபட்சத்தின் ஊசிமுனையில் எத்தனை நாயகர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நிற்கத் தலைப்படுவார்கள் எனத் தெரியவில்லை. தாளவொண்ணாத வன்முறையை சர்வ சாதாரணமாகப் பாப்கார்ன் கொறித்தபடி பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் நமக்கு நாமே நிர்பந்தித்துக் கொள்ளக் கூடிய சுயவதை. ரத்தம் கொட்டக் கொட்ட நிறுத்தாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிற மாபெரும் சமூகச் சவரம் – சமீபத்திய படங்கள்.
வழக்கறிஞ நண்பர் சுதேசபாலன் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். “சமீபப் படங்கள்ல வர்ற அத்தனை ஃபைட் சீனுமே குற்ற வரிசையில இடம்பெறத் தக்க விஷயங்கள் தான். ஆனாலும் சகஜமா எல்லாருமே மறுபடி மறுபடி அப்படியே படம் எடுத்திட்ருக்காங்க.”
கபாலம் பிளக்க ரத்தம் பொங்க குடல் சரிய காலும் கையும் துண்டாட வயிற்றில்-தோளில்-முதுகில்-கழுத்தில் பாய்ச்சப்படுகிற கத்திகளும் கொறடு சுத்தியல் இத்யாதிகள் எல்லாமும் குற்றத் தூண்டல்கள் என்ற அடிப்படையில் சட்டத்தின் கருணையற்ற தடைக்கும் தண்டனைக்கும் உரியவையே. பாடலைக் கூட மெல்லக் கைவிடத் தயாராக இருக்கும் இந்திய சினிமா அத்தனை சீக்கிரம் சண்டைக்காட்சி என்ற போர்வையில் ஒளிந்திருக்கக் கூடிய வன்ம வெறியாட்டத்தைக் கைவிடாது என்றே தோன்றுகிறது. யார் வந்து இந்த டைனோசருக்கு மணிகட்டப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
என் மனசுக்கும் புத்திக்கும் எட்டிய வரைக்கும் 90களின் மத்தியில் வந்த பாட்ஷா திரைப்படம் அதுவரை சமர்த்தாக இருந்த இந்திய உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு பாட்ஷா எடுக்கிற ஆவலை விதைத்தது. இன்று நடிக்க வந்திருக்கும் கடைக்குட்டி நடிகர் வரைக்கும் ரஜினியாக/பாட்ஷாவாகத் தன்னைத் திரைப்படுத்திப் பார்க்கும் நியாயமற்ற ஆவலை அடுத்தவர் காசில் பூர்த்தி செய்த வண்ணம் இருக்கிறார்கள். ரஜினியே தன் பழைய பாட்ஷாவைத் தாண்டுவதற்காக எம்பிக் குதித்த சமீபத்திய ஜெய்லரின் வன்முறைக் காட்சிகள் சாபம் 2.0.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை கதா நியாயத்தோடு பூத்த ரத்த மலர். அதன் காட்சியாக்கத்தில் செல்வா செய்தளித்த நெளிவு சுளிவுகளுக்கப்பாலும் இன்றைக்குப் பார்க்கையிலும் மீண்டும் அதே ஒரே ஜிலீர்-குளிரை முதுகுத் தண்டுவடத்தில் பாய்ச்சத் தவறாத செலுலாய்ட் கத்தி.
தனுஷ் தன் தகப்பனுக்கு வழங்குகிற ஸெட்டில்மெண்ட் காட்சி சிறிதும் கத்தியோ ரத்தமோ இல்லாத நிசமான க்ரூரத்தின் நறுமணம். சாம்பலை ஒத்த சந்தியாகால இருளும் மழையும் அந்தக் காட்சியைப் பொறுத்தமட்டில் இரக்கமற்ற வாள்நுனிகளாகவே தோற்றமளித்தது திரைக்கதையின் நகாசு. ஆயிரமாயிரம் அடிகளை விடவும் கொடூரமானவை கதைமுடிக்கிற மழைத்துளிகள்.
வன்முறை போதும் என்று உரக்கச் சொல்லவேண்டும்.
ஒவ்வொருவரும்.
எல்லாரும்.
____________________________________________________________