எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்

எனக்குள் எண்ணங்கள்
14 எம்ஜி.ஆரும் ரஜினியாரும்


அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். எம்.ஜி,ஆருக்காக எம்.ஜி.ஆரால் எம்.ஜி.ஆரின் வாழ்வை வாழ்வதாக மட்டுமல்ல, எம்.ஜி.ஆருடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு தோற்றம். உண்மையில் அது ஒரு கள்ள பக்தி என்றுதான் சொல்வேன். உடல்நலத்தைப் பேணுவது, தீய பழக்கங்களிலிருந்து தள்ளி இருப்பது, என எம்.ஜி.ஆர் கடுமை காட்டிய ஒன்றைக்கூட பின்பற்றியவரில்லை. சதா சர்வ காலமும் எம்ஜியார் பேரைச் சொல்லிக் கொண்டே இருப்பது மட்டுமா அவரைப் பின்பற்றுவது? எம்ஜி.ஆரை எங்கள் வீட்டில் எல்லாருமே தலைவர் என்றுதான் சொல்லுவோம். இந்த நாங்களே ஏழு வயது நானும் பத்து வயது என் அக்காவும். அது என்னவோ அம்மாவிடம் இது எதுவும் செல்லுபடி ஆகவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் தொட்டே அவள் கலைஞர் அபிமானி.

பார்க்கிற இடத்திலெல்லாம் எம்.ஜி.ஆர்… கேலண்டராக, ஸ்டிக்கராக, சுவர்ப்படமாக, அப்பாவின் வலது கரத்தில் உடலோவியமாக (டாட்டூஸின் முற்பிறவிப் பெயர்) எம்.ஜி.ஆர் மிளிர்ந்துகொண்டிருந்தார். அப்பா தவிரவும், அவருடைய அத்யந்த நண்பர்கள் பலரும் எம்.ஜி.ஆர் அபிமானிகளாகத்தான் இருந்தார்கள். சித்தப்பா சிவாஜி ரசிகர். அம்மாவிடமோ, சித்தப்பாவிடமோ, வேறு சொந்த பந்தங்களிடமோ தான் சொல்ல வந்த எம்.ஜி.ஆர் புராணத்தை மட்டும் சொல்லிவிட்டு, ‘சரி வேணாம், விட்டுரு, உனக்குப் பிடிக்காது… நாம வேற பேசலாம்…’ என்று ஸ்கிப் ஆகி ஓடிவிடுவார்.

எனக்கு எப்படி ரஜினிகாந்தைப் பிடிக்கத் தொடங்கியது என்று இன்னமும் சரிவர விளங்கவில்லை. சொன்னால் நம்புவது கடினமாகக் கூட இருக்கும். ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற அழுகாச்சிப் படங்களைத்தான் அதிகமும் பார்த்துக்கொண்டிருந்து சட்டென்று ஒரு யு டர்ன் அடித்தாற்போல், ‘பில்லா’, ‘ரங்கா’, ‘தாய் வீடு’ என எனக்குள் ரஜினியும், ரஜினிக்குள் நானும் இரண்டறக் கலந்தோம்.

வீட்டுக்கு வரும் பாய் மாமா அலையஸ் நைனா முகம்மது, கணேச மாமா, தங்கவேலு சித்தப்பா, நடராஜன் பெரியப்பா உள்ளிட்ட யாவரிடமும், ஏரியாவில் மாவட்டச் செயலாளரையோ, அல்லது கவுன்சிலரையோ அறிமுகப்படுத்துவார்கள் அல்லவா, அதே பாணியில், ‘நம்ம தம்பிதான்… பெரிய ரஜினி ரசிகன்…’ என்றுதான் அறிமுகப்படுத்துவார். நானும் புளகாங்கிதம் அடைந்து புன்னகையும் புரிவேன். கணேச மாமாவிடம் கண்ணைக் காட்டுவார், கபட டாடி. அவர் உடனே ரஜினிகாந்தைப் பற்றி, தன்னால் ஆன அளவு வெறுப்பு மிகுந்த வாக்கியங்களை உமிழ்வார். என் கோபம் பன்மடங்கு பெருகும். இடையிடையே எம்.ஜி.ஆரைப் பற்றி வேறு பேசிப் புகழ்ந்து சிரிப்பார்கள். கணேச மாமா நல்ல கறுப்பு. அவர் ரஜினியை கறுப்பு என்று சொன்னால் எனக்குப் பற்றிக்கொண்டு வரும். ‘கிடையாது… ரஜினி கறுப்பு கிடையாது…’ என்று கத்த ஆரம்பிப்பேன். அது உடனே உச்சஸ்தாயிக்குச் செல்லும். அப்பாவின் பனியனின் கீழ்ப்புறம் பிடித்துத் தொங்குவேன். கணேச மாமாவின் சட்டை பட்டன்களையெல்லாம் ஓரிரு முறை அறுத்திருக்கிறேன். ‘ரஜினி ஒண்ணும் கறுப்பு கிடையாது’ என்று அதே வாக்கியத்தைச் சொல்லி, அழுதபடி ஓரிரு முறை மயங்கியிருக்கிறேன். அப்போதைக்கு என்னை சமாதானம் செய்துவிட்டு, பிறகு அடுத்த முறை வரும்போது விட்ட இடத்திலிருந்து அதே போல ஆரம்பிப்பார் கணேச மாமா.

கணேசமாமாவின் நகைச்சுவை உணர்ச்சி அளப்பரியது. சிரிக்காமல் ஜோக் அடிப்பார். அவர் பேசும் போது அருகிலிருக்கும் எல்லார்க்கும் சிரிப்பு பீறிட்டு வரும். கிண்டல் செய்வதில் ரெண்டு மூணு டிகிரி படித்தாற் போல் பேச்சு தூள் கிளப்பும். அப்பா மீது அளவு கடந்த பக்தி அவருக்கு இருந்தது. என் பாட்டிக்கு அவரொரு பெற்றெடுக்காத புதல்வனைப் போல். கணேச மாமா வீட்டுக்கு வரும் நாட்களில் பாட்டி கன ஜோராக உபசரிப்பாள். பாட்டியின் கைமணத்தை வாயாரப் புகழ்வார் மாமா. அதிலும் மாவடு ஊறுகாயைப் பற்றிப் பாட்டாகவே பாடுவார் என்றால் மிகையல்ல. எதையும் ரசித்து ருசிப்பது அவர் பழக்கம்.

சின்ன வயதில் என்னைக் கலங்கடிக்கும் ஒரு செயலைச் செய்தார் கணேச மாமா.

“தம்பி இது உன் வீடில்லை. நீ திண்டுக்கல் காரன். அங்கே உங்கப்பா அம்மா உன்னைய தொலைச்சிட்டாங்க. எங்க மாமா உன்னைய எடுத்துட்டு வந்து வளக்குறாரு. நீ கெளம்பு உன்னைய உங்க வீட்டுல கொண்டு போயி விட்டுர்றேன்” என்பார்.

இதை அவர் வரும்போதெல்லாம் சொல்லி என்னை அழ வைப்பார். ஒருமுறை கூட அந்தச் சொல்லாடலை நான் அனுமதித்ததும் இல்லை. எனக்கென்னவோ அவர் விளையாட்டுக்குத் தான் சொல்லுகிறார் என்று புரிந்தாலும் மனம் அதை விரும்பாமல் கதறுவேன்.
“அம்மா சொல்லும்மா நான் இந்த வீட்டுல தானே பிறந்தேன்?” என்று கண் மல்க அழுவேன்.அப்பாவோ அம்மாவோ கணேச மாமாவின் காமெடி என்ற அளவில் இதைப் பார்த்துச் சிரிப்பது கூட என் காது கேளாத பாட்டிக்குத் தெரியும் வரை தான். ஒரு நாள் எங்கே இருந்து வந்தாள் எனத் தெரியாது, புயல் போல வந்தவள் என் அம்மாவிடம் பிலுபிலுவென்று சண்டைக்குப் போய் விட்டாள்.
“ஏண்டி அவன் தான் கிறுக்குப் பய என்னத்தையோ சொல்றான்னா நீயும் கேட்டுட்டா இருப்பே…. கொழந்தைய கண்ணீர் விட்டு அழ வச்சிப் பார்க்குறியே உனக்கு அறிவு இருக்கா..?
என்றவள் என் அப்பா பக்கம் திரும்பி ஒரே ஒரு முறை முறைத்துப் பார்த்தாள். மனிதர் விட்டலாச்சார்யா படத்தில் கால்ஷீட் சொதப்பியதால் பாதிக் காட்சியில் பூனையாக மாற்றம் செய்யப்படுகிற தெலுங்கு நடிகரைப் போல் நடுங்கியபடி வாசல் பக்கம் நகர்ந்து விட்டார். அதற்குப் பிறகு மாமா ஒருமுறை கூட அப்படிச் சொல்லவேயில்லை. நான் தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது குடும்ப மொத்தமும் எனதொரு செயல்பாடு பொறுக்க மாட்டாமல் என்னை எதிர்த்து சண்டையிடுகிற பொழுதில் “என்னைய திண்டுக்கல்லேருந்து தானே கூட்டிட்டு வந்தீங்க..என் வீட்டுக்கு கொண்டு போயி விட்டுருங்க” என்றேன்.

அன்றைக்கும் நான் என்ன சொன்னேன் என்பதே அறியாத வெள்ளந்தியாக என் பாட்டி எனக்குத் தான் சப்போர்ட் செய்து மற்ற யாவரையும் திட்டித் தீர்த்தாள்.

நான் வளர்ந்து வாலிபனான பிற்பாடு கணேசன் மாமா என்னை ஒரு தோழன் போல் நடத்தினார் என்பதும் சொல்ல வேண்டிய செய்தி தான். அப்பா உடல் நலம் குன்றி வீட்டோடு இருக்கத் தொடங்கிய பிறகும் விடாமல் எங்களைத் தேடி வந்த வெகுசில குடும்ப நண்பர்களில் கணேசன் மாமாவுக்கு முதலிடம் தரலாம். அப்பாவைக் கடைசி வரை தோளில் சிலையாக ஏந்தி ஊர்வலம் வருகிற பித்துப் பிடித்த பக்தனாகவே இறுதி வரைக்கும் மதித்தவர். இன்றைய காலகட்டத்தில் அப்படியான மனிதர்கள் அருகி விட்டார்கள் என்பது ஒரு புறம் அப்படியான மனிதர்களுக்கிடையிலான பரியந்தம் மிகுந்த சந்தர்ப்பங்களே குன்றிக் குறைந்து விட்டன என்பது தான் நிசம்.

Rajinikanth Bollywood debut movie was with this legendary actor | GQ India

கணேசன் மாமா வீட்டுக்கு வந்தால் அனேகமாக மாலை ஐந்தரை மணிக்கு வருவார். எட்டரை மணி வரை பேச்சு நீளும். ஒரு சுற்று தெரிந்த நபர்கள் விசுவாசம் நன்றிகெட்டதனம் எனத் தொடங்கி லோக்கல் பாலிடிக்ஸ் முழுவதும் அலசுவார்கள். பிறகு ஸ்டேட் பாலிடிக்ஸ். இருவருமே அதிமுக அபிமானிகள். என் அம்மா ஸ்கூலில் இருந்து திரும்பி வரும் வரைக்கும் சுமுகமாய் இருக்கும் பேச்சு அப்புறம் அனல் தெறிக்கும் ரத்தம் கொதிக்கும். ஸ்டேட் மற்றும் செண்டிரல் அரசியலில் அவர்களுக்கு நேர்மாறான பாலிடிக்ஸ் பார்வைகள் கொண்டவளாக அம்மா இருந்தாள். அரசு ஊழியர்களின் குரலாக அவள் குரல் ஒலித்தது. தீவிர விசுவாசிகளால் அவளை எதிர்த்துப் பேச முடியாமல் சில சமயங்களில் திணறுவார்கள். எனக்கும் அக்காவுக்கும் வியப்பாக இருக்கும். காளி நீலி ஜாலி என்பாள் அக்கா. அதாவது தாயார் காளீஸ்வர அவதாரத்தில் இருப்பதைத் தான் சொல்கிறாள்.

நான் பதினோராவது வகுப்பு படிக்கும் போது என ஞாபகம். ஒரு நாள் கணேசன் மாமாவும் அப்பாவும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக அவர்களுக்குளேயே முரண்பட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வீதியில் கிரிக்கெட் ஆடிவிட்டு வீடு திரும்பிய எனக்கு என்ன பிரச்சினை எந்த கண்டெண்ட் எனப் புரியும் வரை ஆச்சர்யமாக இருந்தது. தலைப்பை சொல்லிட்டு சண்டை போடுங்கப்பா என்று எத்தனையோ கூவினேன். சொல்லவில்லை. பிறகு ஒரு வழியாக எனக்கு அன்றைய விவாதத்தின் தலைப்புத் தெரிய வந்தபோது வாய் விட்டுக் கூவினேன் அட்றா சக்கை.

ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் முரண்படத் தொடங்கிய காலகட்டம். ரஜினி ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுப்பார் கட்சி தொடங்குவார் அரசியலில் குதிப்பார் ஆட்சியைப் பிடிப்பார் ஜெயலலிதாவை எதிர்பார் என்றெல்லாம் சொன்னது யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் அந்த கணேசன் மாமா. ஒரு பத்து வருட காலத்துக்கு முன்னால் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரஜினியை திட்டியவர்.90களில் ரஜினி அவருக்கு எதிர்காலத்தை ஆளப் போகும் சக்கரவர்த்தியாக தெரியவந்தது ஆச்சரிய மாற்றம் தான்

தான் ஏன் அப்படி சொல்லுகிறோம் என்பதற்கு பலவித காரணங்களை கணேசன் அடுக்கினார். அப்பா ஒன்று கூட அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை. நீ வேணா பார் இன்னும் 30 வருஷம் ஆனாலும் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை. “வந்தா…?” இது கணேசன் “வந்தா என் பெயரை மாத்திக்கிறேன்யா” என்று அப்பா சூளுரைத்தார்.

எனக்கு ஏனோ மனசுக்கு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். தீவிர கடுமையாக எதிர்த்த போதிலும் கணேசன் மாமா திடீரென்று சப்போர்ட் செய்வது எனக்கு பிடித்திருந்தது.

பிற்பாடு நக்கீரன் ஜூனியர் விகடன் உள்ளிட்ட புலனாய்வுப் பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு ரஜினியிஸ்டிக்காகப் பல செய்திகளைப் பெரிய அளவில் புரஜக்ட் செய்து அவ்வப்ப்போது அட்டைப்படக் கட்டுரைகள் தொடங்கி சகல விதத்திலும் ரஜினியை முன்னிறுத்திக் கொண்டே இருந்தன. ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் மேலும் அதிகமான முரண்கள் உண்டானது. சோ ராமசாமி ரஜினியை இயக்குகிறார். ரஜினியை காங்கிரஸ் சப்போர்ட் செய்கிறது. ரஜினி கவர்னரை சந்திக்கிறார் பிரதமரின் ஆசீர்வாதம் அவருக்கு முழுமையாக இருக்கிறது எனத் தொடங்கி புகழ்பெற்ற ஜோசியர் ஆருடம் என்றெல்லாம் செய்திகள் வந்தன. முத்தாய்ப்பாக ஆர்.எம்.வீரப்பன் சொந்தப்படமான பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய பேச்சு. ஆர்.எம்.வீயோடு முற்றிலும் முரண்பட்ட ஜெ ஆர்.எம்.வீயின் தனி ஆவர்த்தனம் கலைஞரின் அரசியல் மூவ் தொடங்கி அடுத்த தேர்தலில் மூப்பனார் சைக்கிள் சின்னத்தோடு களம் கண்டார். காங்கிரஸ் திமுக கட்சிகளிலும் நடுவாந்திர மக்கள் மத்தியிலும் ரஜினி எனும் மூன்றெழுத்து காய்ச்சல் பெருகித் திளைக்கத் தொடங்கியது. அந்தத் தேர்தலில் ரஜினி ஆதரவு பெற்ற வேட்பாளார் என்ற முத்தாய்ப்புடன் களம் கண்டு வென்றவர் பலர்.

அதன் பிறகு சில காலத்தில் அப்பா காலமானார். அதுவரைக்கும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த தன் முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை. கணேசன் மாமா கிட்டத் தட்ட ரஜினி கட்சி தொடங்கியதும் அதில் இணையவிருக்கும் தளகர்த்தர்களில் ஒருவராகவே தன்னைக் காட்டிக் கொண்டார். பலரும் அப்படி எண்ணினார்கள். நான் உட்படப் பலரும் முதல்முறை வாக்களிக்கும் போது மனதுக்குள் ரஜினியின் குரலை செவியுற்றவண்ணம் தான் வாக்களித்தோம்.

தலைவன் வர்றார். கட்சி தொடங்குறார். ஆட்சியை பிடிக்கிறார். ஒரு கவுன்சிலர் ஆகவோ எம் எல் ஏ ஆகவோ முடியாவிட்டாலும் ஒரு அமைச்சராகவோ கவர்னராகவோ ஆகி விடுவது என்று எனக்குத் தெரிந்த சில பேர் உட்படப் பலரும் ஆசைப்பட்டது என்னவோ வாஸ்தவம் தான். அவர் வரவே இல்லை என்பதால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை. காலத்தை கணிப்பதில் கணேச மாமா தோற்றதைக் குறித்தும் அப்பா கணிப்பின் துல்லியம் குறித்தும் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

கணேசன்  மிக நல்ல மனிதர். உத்தமமான நட்பு என்றதும் நினைவுக்கு வருபவர். வம்பாடு பட்டுச் சேர்த்த பணத்தையெல்லாம் அதிகம் வட்டி வரும் என்று நம்பி எதோ ஒரு டுபாக்கூர் கம்பெனியில் முதலீடு செய்துவிட்டு, புகாரளிப்பதற்காகப் பல நூறு பேர்களுக்கு நடுவில் ஒருவராக, எட்டு வருடங்களுக்கு முன்பாக  ஒரு வெயில் மிகுந்த வெட்டவெளி தினத்தில் அவரைக் கடைசியாகச் சந்தித்தேன். அதற்குப் பிறகு, சில மாதங்களில் அவர் இறந்துபோன செய்தி வந்தது. இன்னமும் தன் இளவயதுப் பற்களால் புன்னகைத்தபடி, ‘ரஜினியும் செவப்பு நானும் செவப்பு போதுமா’ என்று  சொல்லிச் சொல்லிச் சிரித்தது ஞாபகம் வருகிறது.