எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

எனக்குள் எண்ணங்கள்

15 ரசிகன்


மதுரையில் ஒவ்வொரு தியேட்டருக்கும் எனக்குமான தனித்துவமான உறவு மெச்சத்தக்கது. என் முதல் திரைப்படத்தை பாட்டியோடு சென்று பார்த்த சாந்தி தியேட்டர் எனக்கு ஏழெட்டு வயதாக இருக்கும்போதே மூடிவிட்டார்கள். அடுத்து குடியிருந்த சிம்மக்கல் வீட்டில், கூப்பிடு தூரத்தில் கல்பனா தியேட்டர், வீட்டுக்குள் வசனம் கேட்கும். கனவில்கூட அந்தப் பாடல்கள் ஒலிக்கும். முதலில் கிடைத்துவிடுகிற சத்தத்தை வைத்து ஒரு மாதிரி அந்தப் படத்தின் கதையோட்டத்தைப் புரிந்துகொள்வேன். தெருவெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களைப் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் கதா ஞானம் விரியும். நேரில் சென்று பார்க்கையில், முற்பிறவி ஞாபகம், எதிர்கால ஜோசியம் எல்லாம் கலந்த கட்டிப் பெருங்காயமாக, தற்கணம் கமழும்.

புதூர் வீட்டுக்குப் போனபிறகு, குறைந்தபட்சம் ஒன்றரை கிலோமீட்டர் அப்பால்தான் முதல் தியேட்டரே இருந்தது. நகரத்தின் மாபெரும் தியேட்டரை இழந்து, அடையக் கிடைத்ததோ வீரலட்சுமி என்னு, டெண்டுக் கொட்டாய். இரும்பு சேர், பெஞ்சு, குவித்த மணல் தொடங்கி, கூரைத் தடுக்கு தாண்டிப் போக வெற்று மணல் கழிப்பிடம் வரை எல்லாமே வேறு தினுசாக இருந்தது. எப்படியாவது சினிமா போவதை அம்மா தட்டிக்கழிக்கவே பார்ப்பாள். என் வாழ்வின் வினோதத்தைப் பாருங்கள். பால்யம் தொட்டு எனக்குப் பிடித்தவை இந்த உலகின் இரண்டே பண்ட பதார்த்தங்கள்தான். ஒன்று காகிதம், அதாவது புத்தகம். இன்னொன்று சினிமா. முன்னதை ‘எவ்வளவு வேணா எடுத்துக்கோ,’ என்று சொன்ன என் வீடுதான், பின்னதை, ‘ம்கூம், கூடாது,’ என்று அதட்டவும் செய்தது. நானோ இரண்டு நதிகளிலும் குறைவின்றிக் குளிப்பவன். இது இன்றுவரை தொடர்கிறது.

மூன்று மாவடியில் ராஜா என்றொரு தியேட்டர் திறந்தார்கள். முதல் படமே ரஜினி படம், ‘ராஜா சின்ன ரோஜா.’ மதுரையில் அமிர்தத்திலும், புதூரில் ராஜாவிலும் ஒருங்கே ரிலீஸ். நன்றாகவே அந்தப் படம் ஓடினாலும், அதற்குப் பிறகு, ஷிஃப்டிங் தியேட்டராக மாறிப்போனது. அழகர் நகரில் மெயின் ரோட்டில் கார்த்திக் என்று ஒரு தியேட்டர் கட்டினார்கள். நாகார்ஜுனா நடித்த டப்பிங் படம், ‘சித்தார்த்தா’ அங்கேதான் பார்த்தேன். அந்தப் படம் அதற்குப் பிறகு யூட்யூபில் கூடக் கிடைக்கவில்லை. என் ஆதி ஆரம்பக் கிளுகிளு படங்கள் வரிசையில் நிச்சயம் அந்தப் படம் இடம்பெறும். ரஜினியோ, கமலோ நம்மை நோக்கி வந்தால்தான் பார்க்க முடியும் என்பது கொடுமைதான் இல்லையா.

திருநகருக்குக் குடிபெயர்ந்த பிறகு, அப்போதைய மதுரையின், ஏன் அப்போதைய தென் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த குளிரூட்டப்பட்ட, நம்பர் ஒன் தியேட்டர் என்று மெச்சத் தகுந்த கலைவாணி திரையரங்கில் வாழ்வின் முதலாவது ஏசி குளிர், அனேகமாக முதலாவது கோன் ஐஸ், முதலாவது முட்டை போண்டா ஆகியவற்றோடு, வீட்டுக்குத் தெரியாமல் பொய் சொல்லிப் பார்த்த முதல் படம் தொடங்கி, பல அந்தரங்க ஞாபகங்களை, ஆரம்பப் பாவங்களின் மானசீக சாட்சியமாய் நினைத்தால் இன்றும் மர்மமாய்ப் புன்னகைத்துக்கொள்ளுகிறேன். வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுத்து டிக்கெட் வாங்கிய அதே தியேட்டரில் பின்னொரு நாளில் என் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வேன் என்றோ, குறிப்பிட்ட காலம் அந்தத் தியேட்டரின் கேண்டீன் உள்பட, அந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு தேனீர்க் கடையை எடுத்து நடத்துவேன் என்றோ அப்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டேன். அடிக்கடிப் பார்க்க வாய்த்த ஓர் அழகிய முகம் போலத்தான் என் வாழ்க்கையில் அந்தத் திரையரங்கின் ஞாபகங்கள்.

முதன் முதலில் ஒவ்வொரு தியேட்டருக்கும் என்ன படத்துக்காக சென்றோம் என்பதை பூபதியும் நானும் மூன்றாவது ஸ்டாப்பிலிருந்து வீடு வரைக்கும் பேசிக்கொண்டே வருவோம். ‘ராம் தேட்டர்ல படம் பாத்திருக்கியா? பழனி முருகன்ல? இந்துமதி எங்க இருக்குன்னு தெரியுமா? ஜெயராஜு? ஜெகதா?’ என்று அடுக்குவான். அவனுக்கும் எனக்கும் படிப்பின் மீது ஒரே ஒவ்வாமையும், சினிமாவின் மீது ஒத்த காதலும், ரஜினியின் மீது குறையாத பித்தும் அருகருகே அத்திப் பூத்தாற் போல் அமைந்த ரசவாத ஒற்றுமைகள். ஊர் சுற்றுவதற்குப் பெயர் டியூட்டிக்குப் போவது. அதை அவன் தான் சூட்டினான். கடமைல நேர்மை முக்கியம் மிஸ்டர் அலெக்ஸ் பாண்டியன் என்றெல்லாம் இஷ்டத்துக்கு முழங்குவான். பூபதி எனக்கு அமைந்த வினோத நண்பன். ஈழத்திலிருந்து வந்து சேர்ந்த முதல் பேட்ச் அகதி அவனுடைய அம்மா, இங்கே  வீட்டு வேலை பார்த்தார். ஒரே ஒரு அக்காவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இவனும் அம்மாவும் மட்டும்தான் அரசாங்கம் ஒதுக்கித் தந்த சிலோன் காலனி வரிசை வீடுகளில் ஒன்றில் வசித்து வந்தார்கள். வீடு என்றால் ஒரு அறை, சமையலறை, ஒரு ஜன்னல், அவ்வளவுதான். தந்தையை, மாளிகை போன்ற வீட்டை, வாசலில் அணிவகுத்து நிற்கும் கார்களை இலங்கையில் இழந்துவிட்டு, காலம் மாற்றிப் போட்ட நாடகத் துன்பத்தை மௌனமாக ஏற்றுக்கொண்டு, மதுரையில் வந்து வாழ்வதான பரிசளிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.

எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பான். எங்கள் பள்ளியின் அருகமை தேவாலய வெளிப்புறச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் தங்கமொழி வாக்கியங்களைச் சத்தமாக வாசிப்பான். எதற்கெடுத்தாலும் அவனுடைய ஒரு கமெண்ட் வந்து விழும். ஒரு உதாரணத்திற்கு, ‘என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்’ என்று கூறி மத்தேயு என்று எழுதியவர் பெயர் கீழே எழுதப்பட்டிருக்கும். அதைச் சத்தமாக ஒருமுறை வாசித்துவிட்டு, ‘எதுக்கு நன்றி? பேசாம சிரிச்சிட்டுப் போயிரலாம் – பூபதி’ என்று தன் பெயரையும் சேர்த்துச் சொல்வான். ‘எவனாயிருந்தா எனக்கென்ன’, ‘போங்கடா நீங்களும் உங்க அரசியலும்’, ‘எங்கடா உங்க எம்.எல்.ஏ’ என்று போஸ்டரில் இருக்கும் டப்பிங் படத் தலைப்புகளை ஒவ்வொன்றாக வாசிக்க நேரும்போதெல்லாம், ‘மரியாதையா பேசுடா, எங்கிட்ட எதுக்குடா கேக்கற, இங்கதான் எங்கயாச்சும் போயிருப்பாண்டா…’ என்றெல்லாம் சொல்லுவான். தனிமைச் சூன்யத்தின் மீதெல்லாம் தன் புன்னகை கொண்டு மெழுகியவன் பூபதி. சினிமா என்றால் அவ்வளவு உயிர். ரஜினி அதைவிட.

ஒரு மாதிரி மானசீகத்தில் ரஜினியுடனேயே வாழ்ந்துகொண்டிருந்தான் பூபதி. ‘படித்து முடித்துவிட்டு என்னவாக விருப்பம்?’ என்று தமிழய்யா கேட்டபோது, ‘டப்பிங் படத்துக்கு டயலாக் எழுதப் போறேன்’ என்று பதில் சொன்ன வீரன். அய்யா பொறுப்பாக அதனை ஃபாதரிடம் போட்டுக்கொடுக்க, ஹெட்மாஸ்டராகப்பட்டவர் பூபதினின் அன்னையை அழைத்து விஷயத்தை விளக்க, அதையே தன் மகனுக்கு தன் மூலமாக விளக்குமாறு அவர் சொன்னதாக எண்ணிக்கொண்ட அந்த அன்னை, தன் வீட்டு விளக்குமாறு கொண்டு அவனைப் பின்னியெடுத்தார். ‘நண்பா, நான் எழுதுற மொத படத்துல சைடு வில்லன் பேரு சிகாமணி (ஃபாதர்). மெயின் வில்லன்… ‘என தமிழய்யாவின் பெயரைச் சொன்னான். மகன் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, அளவுக்கு மீறி அவனைக் கண்டித்துக்கொண்டே இருந்தார் அவன் அம்மா. அடிகளைப் புன்னகையோடும், வலிகளை ஆனந்தத்துடனும் ஏற்றுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அவனுடைய உயர்ந்த லட்சியமாக ‘ரஜினிக்கு ட்ரைவராகச் செல்லவேண்டும்,’ என்று சொல்ல ஆரம்பித்தான். ‘அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன்’ என்று ரஜினி கொடுத்த ஒரு பேட்டியைப் படித்துவிட்டு, ‘சயின்ஸும் மேத்ஸும் படிச்சி சீரழியிறதுக்கு பதிலா, சிக்கனும் சுக்காவும் பண்ணத் தெரிஞ்சிருந்தா, என் தலைவனுக்கு சமையக்காரனா போயி செட்டில் ஆயிருப்பேன். ம்க்கும் அதெல்லாம் அவ்வளவு சாதாரணமா நடந்துருமா? நடக்கவே நடக்காது,’ என்று வேதனையாகச் சிரிப்பான்.

அடிக்கடி அவன் அவதாரங்களை மாற்றிக்கொண்டே இருந்தான். ‘ரவி, சுந்தரராஜன்தான் தலைவருக்கு ஆஸ்தான மேக்கப் மேனாம். பேசாம அவரோட அசிஸ்டண்டா போயிட்டா என்ன? தலைவன் கிட்ட அவர் கூட்டிட்டுப் போற வரைக்கும் அமைதியா இருப்போம், தொழில நல்லா பழகிக்குவோம். தலைவன் அறிமுகம் கிடைச்ச உடனே, கைல கால்ல விழுந்து, தலைவன்ட்ட போயி வேலைக்குச் சேந்திருவோம்,’ என்று சீரியஸாக டிஸ்கஸ் செய்வான். அவன் பேச்சிலிருக்கும் பன்மை புரியாமல், ‘என்னடா, எந்த வேலையைச் சொன்னாலும் போவோம், சேருவோ, சேந்திருவோம்ன்னு சொல்றே? ஒரே வேலைக்கு ரெண்டு பேரு எப்படி போகமுடியும்?’ என்று சீரியஸாகக் கேட்டேன். தன் ட்ரேடு மார்க் புன்னகையுடன், ‘என்ன நண்பா? ஒனக்குக் கெடச்சா ஒன்னய வச்சு நான் வந்துருவேன். எனக்குக் கெடச்சா நான் ஒன்னய பாத்துக்குவேன். நம்ம ரெண்டு பேருல யாரு மொதோ தலைவனை நெருங்கினா என்ன?’ என ஆதுரம் தொனிக்கச் சொன்னான்.

நகைச்சுவைக் காட்சிகளை அவனளவுக்கு ரசனைபட எடுத்துச் சொல்ல முடியாது. கவுண்டமணி தான் எங்கள் ஆதர்சத் தலைவர். 89 முதல் 94 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் படங்களில் கவுண்டமணியின் அதகளத்தை ரசிக்காதவர் இருக்க முடியாதல்லவா..? பூபதி அப்படியே கவுண்டமணியின் வசனங்களை அவர் குரலிலேயே பேசிக்காட்டுவான். எத்தனை தூரம் செல்ல வேண்டி இருந்தாலும் கிடைக்கிற வாகனங்களில் பயணிப்போம். இல்லாத போழ்து நடைவண்டி தான். நடந்து செல்கையில் கால்களுக்குப் பாரம் தெரியாமல் இருக்க அவனது அங்கதம் மயிலிறகு போல் எங்களை வருடும். ரிக்ஷா மாமா படத்தில் வரக் கூடிய பார்த்துட்டான் பார்த்துட்டான் என்ற வசனத்தை அந்தக் காட்சியை அப்படியே வசனவழியாக சொல்லிக் கொண்டே வந்து பார்த்துட்டான் பார்த்துட்டான் என்று புரண்டு உருண்டு முடிப்பது போல் பாவனை செய்வது ஆரவாரமாக இருக்கும்.

நகைச்சுவைக் காட்சிகள் மனங்களை இளக்கி வைக்கும் வில்லைகளைப் போலத் தான். வாழ்வின் அசௌகரியங்கள் வலிகள் மறு தினத்தின் சமாளிப்புகள் செய்ய வேண்டிய கடமைகள் செல்ல வேண்டிய தூரங்கள் செலவினங்கள் என்ற பேரில் காத்திருக்கக் கூடிய அவமானம் நெருக்கடி கண்ணீர் உறக்கமின்மை இன்ன பிறவற்றிலிருந்தெல்லாம் விடுதலையாகி ஓடுவதற்குப் பாடலைச் சரணடைந்த பலருக்கு மத்தியில் வசனங்களை அதுவும் நகைச்சுவைக் காட்சிகளைத் தொழுது பார்த்தவன் பூபதி. சூழலைச் சற்றும் மதியாமல் தன் அத்தனை பிரச்சினைகளையும் கால்பந்தாக்கி ஒரே உதையாக வான் நோக்கி உதைத்தவன்.

ஒரு வினோதமான நெடிய வெய்யிலும் மழையும் காற்றும் நிரம்பிய தினத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது . பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம். நானும் பூபதியும் வெவ்வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்கையிலும் ஸ்கூலுக்குப் போகாமல் கட் அடித்து விட்டுத் திரிகையில் ஒன்றாகவே இருந்தோம். வான் பிரிக்காத வரைக்கும் வகுப்பறை பிரித்தாலென்ன என்றெல்லாம் முழக்கமிடுவான். சத்தம் போடாதடா என்று கெஞ்சினால் என்ன..? கேட்கலை என்று கத்துவான். அடக்கும் போது திமிறும் காளையாய்த் தெரிவான்.

அன்றைக்கு நோ ஸ்கூல் டே…கட் அடித்தாயிற்று. காலையில் எட்டரை மணிக்கு திருநகர் ஐந்தாவது ஸ்டாப்பில் பஸ் ஏறி பெரியார் நிலையம் சென்றேன். அங்கே கண்ணன் டீக்கடையில் பூபதி காத்திருந்தான். என்னை விடவும் அவனுக்குப் பொது அறிவுகள் அதிகம் என்பதை அன்றும் நிரூபித்தான்.

இன்னிக்கு எல்லா தியேட்டரும் ஸ்ட்ரைக்காம்டா..சாயந்திரம் தான் ஷோ. காலை மதியக் காட்சிகள் ரத்து என்று பேப்பர் கட்டிங்கை நீட்டினான்.

எனக்கு உலகமே இருண்டது. ட்யூட்டியை என் உயிராக மதிப்பவன் இல்லையா நான்,,?

இப்ப என்னடா பண்றது என்றேன்.

எதிரே வரக் கூடிய முதல் பஸ்ஸை சுட்டிக் காட்டினான். விமான நிலையம் என்று இருந்தது. இன்னிக்கு முழுக்க எங்கெல்லாம் பஸ் கிடைக்கிதோ அங்கே எல்லாம் போவோம். பொழுது ஜாலியாப் போவும் என்றான். சரி போகலாம் எனக் கிளம்பினோம். விமான நிலையத்தில் எங்கள் விமானம் ஒரு மணி நேரமே நின்றது. அங்கே இருந்து அண்ணா நிலையம் வந்தடைந்தோம். எங்களுக்கான அடுத்த பயணத்தை சத்திரப் பட்டி பேருந்து தீர்மானித்தது. அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்து நாட்டு நடப்பை அலசியபடியே மதிய உணவை உண்டு முடித்தோம். விஸ்ராந்தியாக அமரலாம் என்று முடிவெடுத்த அடுத்த நிமிடம் எங்கிருந்தோ தொடங்கியது மாபெரும் மழை. பேய் மழை. பிசாசு மழை. என்பதைத் தாண்டிய பூதமழை.

இரண்டு மணியில் இருந்து நாலரை மணி வரைக்கும் சத்திரப்பட்டி விலக்கில் இருந்த புரோட்டா கடை ஒன்றில் தஞ்சம் புகுந்து கழித்தோம். அடுத்த பஸ் எப்போது வரும் என்ற கேள்விக்கு வானத்தைக் காட்டி தெரில என்று பதில் சொன்னார் மாஸ்டர். எப்போதுமே பின் மதியங்களில் மனிதனின் தனிமை பன்மடங்கு பெருகத் தொடங்குவதும் அவனுடைய மனத்திடம் குன்றுவதும் ஒருங்கே நிகழ்கிறது.

எங்கே இருக்கிறோம்…என்ன நடந்து கொண்டிருக்கிறது…எப்போது இந்த மழை முடிவுக்கு வரும்..? எப்படி வீடு சென்று சேர்வோம்..? இரவென்பது சமீபத்திலா அல்லது நெடுந்தொலைவிலா என்றெல்லாம் எதுவுமே புரியாத அச்சம் மிகுந்த கணங்கள் அவை. அதுவரையிலான வாழ்வின் ஆகப் பெரிய மழையும் அது தான். எனக்கு உடம்பெல்லாம் அந்த மழைக்கு நடுவே வியர்த்தது. பயம் என்று சாதாரணமாய்ச் சொல்லி விட முடியாது. இறப்பின் சிறு சிறு துளிகளாகவே மழை அப்படிப் பெருக்கெடுப்பதைப் போல் அஞ்சினேன். அந்தக் கடையில் ஏழெட்டு பேர் நிற்கப் போதுமான இடத்தில் குறைந்த பட்சம் முப்பது பேர் வரைக்கும் நின்று கொண்டிருந்தோம். சிலர் அந்த மழையிலும் பீடி சிகரட் பிடித்தார்கள். ஒரு தாத்தா பொடியை உறிஞ்சினார். சிலபலர் தேநீர் அருந்தினார்கள். நானும் பூபதியும் கூட சூடாய் ஒரு டீ என்று கேட்டு வாங்கிக் குடித்தோம். இடம் தந்த வள்ளலுக்கு வியாபாரம் எதையாவது செய்தாக வேண்டுமென்ற நன்றியுணர்வுக்கான டீ அது. சுவைத்ததா என்று சத்தியமாக ஒரு மொட்டுக் கூட நினைவில் தங்காத டீ. இன்று வரை என் வாழ்வில் தேனீர் அருந்திய கணங்கள் மிகவும் குறைவானவையே. எப்போதும் காஃபி பிரியன் தான் நான். அன்றைக்குக் காஃபி வேண்டியிருக்கவில்லை. முதலில் உயிர் பிழைத்து ஓடு.. பிறகு தான் எல்லாம் என்று மனம் சொல்லிக் கொண்டது.

கண் எட்டிய தொலைவு வரைக்கும் பேருந்து வருகிற பாடில்லை. மழையும் நின்றாற் போலில்லை. இத்தனை நீரை எங்கேயிருந்து அள்ளி வந்து இறைக்கிறாய் என்று யாரிடம் கேட்பதென அறியாமல் உறைந்து கிடந்த தருணங்கள்.

சாயந்திரமாயிட்டிருக்குடா என்று சொன்ன என் குரல் எனக்கே சகிக்கவில்லை. பூபதி எங்கோ பார்த்தபடி காத்திருந்தான். அவன் உதடுகள் மழையை இன்றைக்கு இதுவரை பொழிந்தது போதும் என்றாற் போல் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. என் பக்கம் திரும்பக் கூட இல்லை.

ஒரு வழியாக  மழை நின்றது. ‘கண் தெரிந்தது காட்சி இருந்தது’ என்றால் அது அப்புறம் தான்.

அடுத்து வந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். நல்ல வேளையாக பெரியார் நிலையத்துக்கே பஸ் கிடைத்தது.

வீடு வந்து சேர்ந்த போது மணி ஏழரை. முதல் படத்தின் கதைபோல் கான்ஃபிடெண்டாக சொன்ன போதிலும் மனமற்ற ப்ரொட்யூஸராக என் அன்னை எல்லாக் கதைகளையும் போலவே அதையும் நிராகரித்தாள். அணிலின் முதுகெங்கும் கோடுகளை அல்ல…சிறுசிறு ரோடுகளைப் போட்ட பிறகே சாந்தமானாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை. பூபதியும்  முந்தைய தினம் பலமாகத் தாக்கப் பட்டிருப்பான் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. அவனெங்கே வரப் போகிறான் என்று வீட்டிலேயே இருந்தேன். ஏரியாப் பசங்கள் சுண்ணாம்படித்த சுவரில் வெற்று முதுகோடு அழுந்தப் பதிய அமர்ந்து சொடக்கென்று எழுந்து எழுந்து சுவற்றுச் சுண்ணாம்பை உரித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். புதிதாகப் பம்பரம் விடத் தொடங்கியவர்கள் சிலரிடம் என் தம்பி கோபி பம்பரத்தைப் பிடுங்கி கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

பத்தரை மணி இருக்கும். இஸ்க் இஸ்க் என்று குரல் கேட்டுத் திரும்பினால்…பூபதி…

என்னடா வந்திட்ட என்றேன்,

ஏண்டா என்றவனிடம்

நேத்து உங்கம்மா என்ன சொன்னாங்க என்றேன். எங்கம்மா டவுனுக்கு போயிட்டு எட்டரைக்கு தாண்டா வந்தாங்க என்றவனைப் பொறாமை உமிழப் பார்த்தேன். என் முதுகு ரணங்கள் இன்னும் எரிந்தன.

பூபதி என் அருகே வந்து

” ரவீ.. ஹவர் சைக்கிள் எடுத்திட்டு கொடுக்கா பிடுங்கப் போயிட்டு வர்லாம்டா…” என்றான்.

வர்லைடா…நேத்து மழையில நனைஞ்சது தடுமம் பிடிச்சிட்டிருக்கு என்றேன்.

என்னருகே வந்து வலக்கரத்தை பற்றித் தன் கழுத்தருகே கொண்டு போனான். தொட்டுக் காட்டினான். நெருப்பாய்க் கொதித்தது.

இவ்ளோ காச்சலோட நானே டூட்டிக்கு வந்திட்டேன்…உனக்கென்னடா என்றான்.

சற்றைக்கெல்லாம் அவனை முன்புறம் ‘பார்’ மீது அமர்த்தின வண்ணம் மாணிக்கம் கடையில் வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு கொடுக்காப் புளி தேடி டூட்டிக்குப் புறப்பட்டோம்.