எனக்குள் எண்ணங்கள் 2


எனக்குள் எண்ணங்கள் 2
           பாலங்கள்


புத்தக ரூபத்தில் வீட்டுக்குள் வந்து சேர்கிற பேராளுமைகள் தான் எழுத்தாளர்கள் என்று அப்பா சொல்வார். அவர் ஒரு புதிரான மனிதர். ஒரு பக்கம் எம்ஜி.ஆரின் பரம ரசிகர். இன்னொரு பக்கம் கையில் புத்தகத்தை எடுத்தாரென்றால் முடித்து விட்டுத் தான் கீழே வைப்பார் என்று சொல்லத் தகுந்த தீவிர வாசகர். ஒரு பக்கம் மதுப்பழக்கத்தின் மீது தீராப்ரியம் கொண்டவராகத் தோன்றிக் கொண்டே இன்னொரு பக்கம் இசையின் மீது குறிப்பாக மெல்லிசைப் பாடல்களின் மீதெல்லாம் விடாப்பிடித் தேடலோடு தென்பட்டவர். அப்படியான அப்பாவுக்கு நேர்மாறாகக் கோடுகளைத் தானே கிழித்துக் கொண்டு அதனுள் பிசகாமல் வாழ்ந்தவள் அம்மா. இந்த இருவரிடமிருந்தும் குணங்களின் கலந்து கட்டிய பிரதியாகத் தான் நான் உருவானேன்.

அம்மா கார்ப்பொரேஷன் ஸ்கூலில் ஆசிரியை ஆனது தற்செயல் தான். இந்த உலகத்தில் எல்லா நிகழ்தல்களுக்குப் பின்னும் உறைந்திருப்பது தற்செயல் எனும் திட்டம் தான். திட்டமிட்டு சிலபல விஷயங்கள் நடக்காமல் போவதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிற நம்மால் தற்செயல்களின் வருகையை எப்படிப் புரிந்து ஏற்பது என்பது பல சமயங்களில் தெரியாது. அம்மாவைப் பெற்ற ராஜம்மா பாட்டி சிறுவயதிலேயே கணவனை இழந்தவள். மதுரைக்கும் அவளுக்கும் யாதொரு பரியந்தமும் இல்லாதிருந்த போது அவள் மதுரைக்கு வந்து சேர்ந்ததும் தற்செயல் தான். அம்மாவுக்கு ஒரே ஒரு அண்ணன். ராஜம்மா பாட்டியின் சின்னம்மா அவரைத் தத்துக் கொண்டுவிட்டாள். தானும் தன் மகளுமாய்த் தனித்த ராஜம்மாவுக்கு மதுரையில் அப்போது தூரத்து உறவினரான டாக்டர் ஒருவரின் வீட்டில் வேலை கிடைத்தது. டாக்டரின் மனைவிக்கு நோய்மை. அவருடைய அம்மாவேறு கூடவே இருக்கிறாள். அவருக்கு ரெண்டு பசங்கள். அவுட் அவுஸில் பாட்டி தங்கிக் கொண்டாள். அம்மாவைப் படிப்பதற்காக மதராஸூக்கு ஆஸ்டலுக்கு அனுப்பினாள். அவளுடைய உலகமே அந்த ஓர் அறை தான். எப்போதும் கிருஷ்ண நாமத்தை ஜெபிக்கிறதைத் தவிர வேறு கதியில்லை. பாட்டிக்குக் கேட்புத் திறன் மிகவும் குறைவாக இருந்தது. சுத்தமாக இல்லை என்று சொல்ல முடியாது.சில சொற்களைக் கேட்டுப் பலவற்றை யூகிப்பாள்.

டாக்டருடைய ரெண்டு பசங்களும் ராஜம்மாவுக்குப் பெறாத பிள்ளைகளானார்கள். பாட்டி குழந்தைகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே கண்டிப்பைப் பெரியவர்களைப் பேணுவதிலும் காட்டியவள். டாக்டருடைய அம்மாவுக்கு தினமுமே எதாவது இனிப்பைத் தன் வாய்க்குள் தள்ளியாக வேண்டும். ஏகத்துக்கு ஏறிக் கிடந்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிற சோல்ஜராகவே பாட்டி நியமிக்கப் பட்டிருந்தாள். என்ன தகிடுதத்தம் செய்தாலும் கைக்கு இனிப்பு அகப்படாமல் பார்த்துக் கொண்டாள். பாட்டி வரும் முன்பு தினமுமே டாக்டருக்கு வீடு என்பதை நினைத்தாலே நரகமாய் இருந்தது நீங்கிப் பாட்டியின் நிர்வாகத்துடன் கூடிய உபசரணை வீட்டை அமைதியாய்க்காணத் தந்தது பெரிய நிம்மதியாயிற்று. ராஜக்கா சொல்றதைக் கேளுங்க என்பதைத் தவிர டாக்டர் வெறேதும் சொல்ல மாட்டார்.

முத்துலெக்ஷ்மி ரெட்டி உருவாக்கிய சேவா சதன் சென்னையில் அந்தக் காலத்தில் வானற்ற பறவைகளுக்கான புகலிடம். அம்மா அங்கே தான் படித்தாள். பியூசி முடித்து விட்டு டீச்சர் ட்ரெய்னிங்கில் தேறியவளுக்குச் சிறுவயது தொட்டே டீச்சர் வேலை தான் ஒற்றைக் கனா. விளையாடினால் கூட டீச்சர் வகுப்பெடுக்கும் விளையாட்டுத் தான். ஆம். அவள் ஒரு டீச்சர் என்பதைத் தவிர வேறு வார்ப்பே இல்லை.

எந்த மதுரையில் டாக்டர் வீட்டில் எட்டு வருடங்கள் இருந்தாளோ அவரது பிள்ளைகள் பெரியவர்களாகி ஒருவன் பெங்களூருக்கும் அடுத்தவன் பம்பாய்க்கும் படிக்கக் கிளம்பினார்கள். டாக்டரின் அம்மா காலமாயிருந்தார். “மீனாட்சி படிச்சு முடிச்சிட்டா. அவளைப் பார்த்துக்கணும்” என்று பாட்டி சொன்ன காரணத்தின் நியாயம் அவர்களைப் பேசவிடவில்லை. அம்மாவோடு பாட்டி மதுரையில் சின்னஞ்சிறு குடித்தனம் ஒன்றைத் தொடங்கினாள். ஸ்டோர் வீடுகளில் ஒன்று. எப்போதும் மனித அருகமையோடு வசிப்பது அந்தக் காலத்தில் கொடுப்பினை. இன்றைக்கு அதற்கு நேர் மாறான அபார்ட்மெண்ட் வாசத்தை நோக்கி மன நாட்டம் கொள்வது விந்தை. அம்மாவுக்கு மதுரையின் அன்றைய பிரபல பள்ளிகளில் ஒன்றான சரஸ்வதி ஸ்கூலில் வேலை கிடைத்தது. குழந்தைகளுக்குப் பிரியமான டீச்சராக அம்மா அந்த வேலையைப் பெரும் நாட்டத்தோடு செய்யத் தொடங்கினாள்.

அம்மாவின் அண்ணனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு ஒட்டாமலேயே இருந்து விட்டது. படித்து முடித்து அவருக்குத் திருமணமும் ஆயிற்று. அவர் வேலை கிடைத்து பாம்பே சென்று விட்டார். பாட்டி நான் மீனாட்சியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டாள். அவரும் ஒரு தடவை சம்பிரதாயமாய்க் கேட்டதோடு சரி. மதுரையே கதியற்றவர்களின் கதி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாயிற்று.

அம்மா வேலைபார்த்த சரஸ்வதி வித்யாசாலா ஸ்கூல் இரு மாடிக் கட்டிடம் 1964 ஏப்ரல் 4 ஆம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது சாப்பாட்டு வேளை என்பதால் பலர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.பள்ளியில் இருந்தவர்களில் 36 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டனர். பலருக்கு பலத்த காயம். கட்டிடத்தின் அந்தப் பக்க மூலையில் மாடியில் இருந்த அம்மா மற்றும் நாற்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர்.

முதலில் ஸ்கூல் இடிந்து அம்மா இறந்து விட்டதாகவே யாரோ வந்து பாட்டியிடம் சொல்லியிருக்கின்றனர். காது சரியாகக் கேட்காமல் என்ன புரிந்ததோ என்ன புரியவில்லையோ உடனே கிளம்பி ஒரு ரிக்சாவில் ஏறி ஸ்கூல் இருக்கும் பகுதிக்கு அவள் வந்து சேர்வதற்குள் அந்தப் பிரதேசம் முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே ஓலம். யார் இருக்கிறார்கள் யாரெல்லாம் இல்லை என்று தெரியாமல் மதுரை நகரமே பேராழியில் மாட்டிக் கொண்டாற் போல் நடுக்கமுற்ற தினம் அது.

அம்மாவும் பிழைத்த பிள்ளைகளும் கட்டிடத்தின் உடையாத மூலைக்குச் சென்று அங்கேயிருந்து பெருங்குரல் எழுப்பிக் கத்தியிருக்கின்றனர். காப்பாற்றச் சொல்லிக் கத்துவதை அந்த வழியாக சைக்கிளில் பாரா சென்ற காவலர் ஒருவர் தான் முதலில் கட்டிடம் உடைந்ததையும் அதனுள் இன்னும் பலர் போராடுவதையும் மாநகராட்சிக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். அடுத்தடுத்து செயல்பாடுகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சென்னை மாகாண கவர்னர் பிஷ்ணுராம் மேய்தி பாரதப் பிரதமர் நேரு ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். கட்சி பேதமின்றித் தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கினர். ஊரே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த இடத்தில் இன்றும் உயிரிழந்தவர்களின் நினைவுச்சின்னம் இருந்துவருகிறது

அம்மா இடிபாடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டு பத்திரமாக மீண்டு வந்த போது பாட்டி சற்றுத் தள்ளினாற் போல் ஒரு வேப்பமரத்தினடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர்ப் பெருக்கெடுத்தபடி இருப்பதைப் பார்த்தாராம். அந்த தினத்தைப் பற்றி அதன் பிறகு எத்தனையோ முறை அம்மா சொல்ல முயன்று வார்த்தைகள் கிடைக்காமல் திணறுவதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த நிகழ்வின் பின்னர் அந்தப் பள்ளி மூடப்பட்டது. அம்மா உட்பட அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகளுக்கும் மாணவர்க்கும் மாநகராட்சிப் பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது. தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியையானார் அம்மா. நாலைந்து பள்ளிகளுக்கு பணிமாற்றங்களுக்குப் பின் மேல அனுப்பானடி மாநகராட்சி இடைநிலைப் பள்ளியில் ஆசிரியையானார். அங்கேதான் 1998இல் ஓய்வு பெறும் வரைக்கும் வேலை பார்த்தார்.

Only acceptance can lead you to happiness' - DTNext.in

அம்மா சிவசங்கரியின் வாசகி. வேறு யாரையும் பிடிக்காது என்றில்லை. தேடிப் படிப்பது சிவசங்கரியின் எழுத்துக்களைத் தான். மூன்று தலைமுறையின் கதையைத் தொகுத்தாற் போல் அவர் எழுதிய பாலங்கள் ஆனந்த விகடனில் வெளியானதை வரிவிடாமல் படித்தவள் அம்மா. சின்ன நூல்கண்டா என்னைச் சிறைபிடிப்பது என்கிற தலைப்பைப் பெருமிதம்பொங்கப் பாராட்டுவாள். ராஜிப் பாட்டியே பாலங்கள் தொடரைத் தன் இடுங்கிய கண்களால் விடாமல் வாசித்ததைப் பார்த்திருக்கிறேன். சிவசங்கரி பாலங்கள் கதையை 1907-1931 பிறகு 1940-1964 மற்றும் 1965-1985 என மூன்று விதமான காலகட்டங்களைப் பிரித்து ஒவ்வொன்றையும் குழப்பமே இல்லாமல் கோத்தெடுத்திருப்பார்.பாட்டி எங்களோடே இருந்தாள். அவளைத் தான் நினைவறிய நான் அம்மா என்று அதிக முறை அழைத்திருக்கிறேன். பெற்றவளைக் கூட அப்புறமாய்த் தான் அம்மா என்பேன்.

ஒரு மனிதனின் கதை சிவசங்கரியின் எழுத்துக்குப் பெரும் புகழை வார்த்தது. “அவன்” என்ற பேரில் சிவசங்கரி போதை வஸ்துப் பழக்கத்தை மையமாகக் கொண்டு ஆனந்த விகடனில் எழுதிய தொடர் மறக்க முடியாதது. ஜெயராஜ் எழுதிய சித்திரங்களில் இடுங்கிய கண்களோடு போதைப் பழக்கத்துக்கு அடிமையான இளையவர்களின் சித்திரங்கள் நெடுங்காலம் கனவுகளின் நடுவாந்திரம் வந்து சென்றன.

அம்மாவுக்கு கே.பாலச்சந்தர் இயக்கிய 47 நாட்கள் திரைப்படம் அச்சங்கலந்த ப்ரியம். அந்தப் படத்தை என் நினைவறிந்து எனக்குப் பத்து வயதிருக்கும் போது ஒரு தடவை மீண்டும் காண்பதற்காக வீடருகே இருந்த வீரலட்சுமி திரையரங்கத்திற்கு அழைத்துப் போனது நினைவில் இருக்கிறது. அதன் ஹீரோ கம் வில்லன் சிரஞ்சீவி. அதுவரை சிரஞ்சீவி நடித்த எந்தப் படமும் அனேகமாக நான் பார்த்திருக்கவில்லை. அவருக்கு அந்தப் படத்தில் பின் குரல் தந்திருந்தது டெல்லிகணேஷ் என்பது பின் நாட்களில் தான் அறிந்துகொண்டேன். அந்தப் படம் பார்த்து முடித்ததும் எனக்குள் ஏற்பட்ட வினோதமான பயம் நீங்குவதற்குப் பெருங்காலம் பிடித்தது. சிவசங்கரி எழுதிய கதையைத் தான் பாலச்சந்தர் 47 நாட்கள் எனப் படமெடுத்திருப்பதாகச் சொல்லித் தான் அம்மா அந்தப் படத்தை ஆவலோடு பார்க்க விழைந்தாள்.

சிவசங்கரி என்றால் தனியோர் வாஞ்சை அம்மாவுக்கு என்றென்றும் இருந்ததைப் பல முறை கவனித்திருக்கிறேன். யாருடைய எழுத்தையாவது குறை சொல்வதற்கு “இப்டியெல்லாமா எழுதறது..? எழுத்துன்னா சிவசங்கரி மாதிரி எழுதணும்” என்று அவளுடைய அளவிடும் கருவியாகவே சிவசங்கரி மீதான எழுத்து அபிமானம் தான் திகழ்ந்து வந்தது. பிராயச்சித்தம்,வளர்த்தகடா,கருணைக்கொலை,நூலேணி,ஒற்றைப்பறவை என சிவசங்கரியின் எழுத்துகளைத் தேடித் தேடிப் படிப்பவளாகத் தான் அம்மா இருந்தாள். நான் தீவிரமாக வாசிப்பின் பால் திரும்பிய பிற்பாடு எனக்கான நூல்-தேடல் நடுவே அவ்வப்போது அவளுக்காக சிவசங்கரியின் புத்தகங்களைக் கிடைக்கும் போதெல்லாம் பழைய புஸ்தகக் கடைகளிலிருந்து வாங்கி வந்து தந்திருக்கிறேன். தெப்பக்குளம் என்ற சிறுகதைத் தொகுதியை தன் பையோடு வைத்திருப்பாள். ஸ்கூலுக்குப் போகும் போது பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கிற தினங்களில் மட்டும் அதைப் படிப்பாளாம். கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலாக அந்த ஒரு புத்தகத்தைத் தன்னோடே வைத்திருந்து படித்ததைப் பற்றிப் பின்னொரு நாளில் சின்னதொரு வியப்போடு எங்களிடம் பகிர்ந்து கொண்டாள். சிறுகதைத் தொகுதி என்பதால் அப்படி வைத்து வைத்துப் படிக்க முடிந்திருக்கிறது.

சென்ற வருடக் கடைசியில் எனக்கு பாலகுமாரன் விருது வழங்கப்பட்ட போது அந்த விழாவுக்கு சிவசங்கரி அவர்கள் வந்ததும் விருதை வழங்குகையில் அவரும் மேடையில் இருந்ததுவும் எனக்கு கவுரவம் என்பதைத் தாண்டி எங்கிருந்தோ என் அம்மா சந்தோஷப்படுவாள் என்ற உணர்வைத் தந்தது. இதை சிவசங்கரி அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போதும் சொல்லி மகிழ்ந்து கொண்டேன். என் அம்மாவுக்கு உங்கள் எழுத்து என்றால் ரொம்பவே பிடிக்கும் என்று கண்கள் கலங்கச் சொன்னேன். ராஜம்மா பாட்டி தன் இடுங்கிய கண்களால் பாலங்கள் தொடரை விடாமல் வாசித்ததைப் பற்றியும் சொன்னேன். என்றைக்காவது ஒரு நாள் உங்களிடம் இதைச் சொல்வேன் என்று கூட அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் எனச்சொன்னபோது உரியதை உரியவர் வசம் சேர்ப்பித்து விட்ட திருப்தி.