எனக்குள் எண்ணங்கள்
5 மேகமும் நகரமும்
சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள். அவளோடு வகுப்பில் ஒன்றாகப் படித்த இளங்கோ அவரைக் கண்ணன் என்று அவர் வீட்டில் அழைப்பார்கள்.அதுவே எங்களுக்கும் விளிப்பெயராகிற்று. கண்ணா தான் நானறிந்த முதல் சுஜாதா வாசகர். கண்ணா மிக மெல்லிய குரலில் பேசுவார். நன்றாகப் படம் வரைவார். அவருடைய உற்ற நண்பர் பெயர் ராஜா. அந்த இரண்டு பேரும் அக்காவின் நண்பர்கள் என்பதைத் தாண்டி எனக்கும் ரொம்பவே நெருக்கமானார்கள். கண்ணா தான் என் இசை ரசனையின் சாளரங்களை விரியத் திறந்தவர். சுரேஷ் பீடர்ஸ் ஆல்பமான மின்னல் ராஜாவின் ஃபேவரைட். இது வானம் சிந்தும் ஆனந்தக் கண்ணீர் என்ற பாடலின் தொடக்க வரியை என் புதுவருட டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன். பாடலின் வரியை விட அந்தக் குரல் அதுவரை இல்லாத உலகங்களை இருக்கத் தந்தது.
ராஜா சற்றே ஜாலியான மனிதர். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். நானும் ராஜாவும் ரொம்ப நெருங்க இளையராஜா காரணமானார்.அதை விட வித்யாசாகரும் மனோவும் வைரமுத்துவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எனப் பல காரணங்கள் இருந்தன. சுஜாதா எழுதிய மேகத்தைத் துரத்தினவன் கதையைத் தற்செயலாக நியூசினிமா பழைய புத்தகக் கடையில் வாங்கி வந்தேன். அது பெரிய நாவலெல்லாம் கிடைய்யாது. மோனா என நினைவு. மாத நாவலாக வெளியானது தான். ஜெயராஜின் சித்திரமொன்று இன்னும் கூடக் கசங்கல் பிரதியாக நினைவிலாடுகிறது. அந்தக் கதையைத் தான் சுஜாதா என்று உள்வாங்கி நான் வாசித்த முதல் படைப்பு. அதற்கும் முன்பே சுஜாதாவின் தொடர்கதைகள் தொடர்ந்து ஆனந்த விகடன் குமுதம் இரண்டும் எங்கள் வீட்டில் நிறுத்தாமல் வாங்குவோம் அவற்றில் வாசித்திருந்தாலும் கூட உண்மையாகச் சொல்வதானால் ஆங்காங்கே படித்தேனே ஒழிய முற்றிலும் விடாமல் தொடர்ந்து வாசித்ததெல்லாம் கிடையாது. முதல் கதையே மேகத்தைத் துரத்தினவன் தான்.
அந்தக் கதை அன்பழகன் என்கிற மையப்பாத்திரத்தின் நோக்கினூடே விரிந்து முடியும். அன்பழகனுக்கு யாருமே இல்லை. ஒன்றுவிட்ட சித்தப்பா வங்கியில் மேனேஜர். அவருடைய ஆதரவில் அவர் வீட்டில் சம்பளமில்லாத வேலையாளாக இருப்பவன். தனக்குள் சுழன்று மடங்கி வாழ்வின் விகசிப்பில் அல்லாடும் இளைஞன். சித்தியின் ஒன்று விட்ட தங்கை ரத்னா அவர்கள் வீட்டிற்கு ஒரு இண்டர்வ்யூ காரணமாக வருகிறாள். அவளைக் கவர முயன்று தோற்கிறான் அன்பழகன். அவனை விரும்ப யாருமே இல்லை. அவனொரு முதல் தர அடிமை. மாங்கு மாங்கென்று உழைக்கிறான். சின்னச்சின்ன விஷயங்களில் காசு பார்த்து அதை சேமித்து தனக்கென்று எதாவது செய்து கொள்ள முனையும் அல்லாட்ட வாழ்க்கை. அவனுக்குத் தன் மீதே மாபெரும் சுய இரக்கம் வந்து விடுகிறது. அவன் எப்போதாவது சிகரட் பிடிப்பான். அந்தக் கடையில் அவனுக்கு ஒருவன் அறிமுகமாகிறான். அந்தப் புதிய மனிதன் அன்பழகனை ஆதிக்கம் செலுத்துகிறான். சீக்கிரமே பெரிய பணத்தை அறுவடை செய்வதற்குத் தன்னிடம் திட்டமிருப்பதாக அன்பழகனின் மூளையைச் சலவை செய்கிறான். அவன் அள்ளித் தரும் லாகிரி வஸ்துவான கஞ்சாப் புகையின் ஆறுதலான அக வருடலுக்கு அடிமையாகும் அன்பழகன் அவன் சொல்வதைச் செய்யத் தீர்மானிக்கிறான். மாமா மேனேஜராக இருக்கும் வங்கியில் பெரும் பணம் புழங்கும் தினத்தன்று அந்த வங்கியைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து அதை செயல்படுத்துகிறார்கள். புதிய மனிதன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அன்பழகன் உடன்படுகிறான். கடைசியில் கொள்ளை அடித்த பணம் ஆற்றோடு பறக்கிறது. எல்லாச் சதிக்கும் உத்தமர் போல் வேடமிட்ட மாமா தான் காரணம் என்பது தெரியவருவதுடன் கதை முடிகிறது.
இந்தக் கதையின் விறுவிறுப்பும் எளிய யாருமற்ற அனாதை ஒருவனின் பேரெழுச்சிக்கான முயல்வை அடிப்படையிலான கதை நகர்தலும் அதுவரை வாசித்த அத்தனை கதைகளின் மகரந்தப் படர்தலினின்றும் என்னை நகர்த்திச் சென்று வேறோர் தளத்தில் நடைபழகத் தந்தது. அன்பழகன் என்ற பாத்திரத்தின் மன அலைதல்களில் நானும் அவனோடு அலைந்து திரும்பினேன். அவன் தோற்ற போது மனம் கசிந்தேன். அவனுடைய வாழ்க்கை அவனை நசுக்கிய அத்தனை வழிகளையும் ஆய்ந்து பார்த்தேன். நம்மைச்சுற்றிலும் ஆயிரமாயிரம் அன்பழகன்கள் ததும்புகிற வாழ்க்கையின் முதல் மனித வரவைத் தாளவொண்ணாததன் அல்லாட்டம் அது. அன்பழகனின் தனிமை அனாதையான வாழ்க்கையை உணரும் கணங்கள் அவனுடைய அலைதல் மற்றும் எதோவொரு தெய்வதூதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேறேதுமற்ற வாழ்வுச்சலிப்பு என எல்லாமே ஈர்ப்புக்குரியதாய்த் தோன்றியது. பாரதியார் கவிதைகள் மீது பெரும்பற்றுக் கொண்டிருந்தவனாக அன்பழகனின் பாத்திரத்தை சுஜாதா படைத்திருப்பார். தனக்கு மனசு சரியில்லை என்றால் பாரதியின் வரிகளை சப்தமாகப் படிப்பான் அன்பழகன்.
நான் அந்தப் பழக்கத்தை அவனிடமிருந்து கைக்கொண்டேன்.
என் வாழ்வினுள் பாரதி வந்தது அதன் பிறகு தான். எனக்கு எல்லையில்லா மகிழ்வுகளின் போதும் சொல்லப்ரியமற்ற கசங்கல் கணங்களிலும் ஒருங்கே நான் தேர்வெடுத்தது பாரதியின் எழுத்துகளை. எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்து கண்படுகிற வாக்கியத்திலிருந்து தோன்றி மீளும் வரை பாரதியின் படைப்புக்களில் லயித்துக் கிடந்திருக்கிறேன். பாரதியின் தீர்க்கமான குரலும் சமரசமில்லாத எதிர்பார்ப்பும் எனக்குப் போதுமானவைகளாக இருந்தன. எனக்குப் பிடித்தவற்றின் உலகம் பாரதியின் கவிதைகளுக்குப் பிறகு தான் அடுத்தடுத்த பெயர்களை உச்சரித்தது.
அப்போது தான் சுஜாதாவின் நிர்வாண நகரம் கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஜாதா எழுதிய கதைகளில் என்னளவில் உச்சபட்ச சிகர நுனி நிர்வாண நகரம் தான். 1978 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அந்தக் கதையை இன்று வாசித்தாலும் தற்கணத்தின் கதையாகவே தோன்றத் தருவது பிரமிப்பு. சுஜாதா மொழியில் செய்து பார்த்த கச்சித நேர்த்திக்கு மாபெரும் விளைபயனாக இந்தக் கதையை ஒப்புக்கொள்ளலாம். எடுத்தால் கீழே வைக்க முடியாத வேகமும் அறுந்து போகாத நரம்பு போல் சன்னமான அகவுணர்வுகளைத் தொகுத்துத் தந்த விதமும் நிர்வாண நகரம் கதையை இன்றும் ரசிக்க வைக்கின்றன.
சிவராஜ் என்கிற வாழ்வின் போதாமை அல்லது அ-நிம்மதி ஒன்றின் உந்துதலால் தான் வாழும் மகா நகரமான சென்னை நகரைப் பழிவாங்கப் புறப்பட்ட மனம் கோணிய அறிவுஜீவி ஒருவனின் சிலகால அலைதல் கணங்களைத் தொகுத்துத் தந்தது தான் நிர்வாண நகரம் நாவல். சுஜாதாவின் தொடருலா மாந்தர்களான கணேஷ் மற்றும் வஸந்த் ஆகிய இருவரும் இந்தக் கதையிலும் வருவார்கள். ஆனால் சிவராஜ் என்பவனின் கானல் குற்றத்தின் ஈரமின்மையை உறுதிப்படுத்தி விட்டு விலகிச்செல்வர். சிவராஜ் என்பவனின் மனம் உடைந்து சில்லுப்படுவதன் அடுத்தடுத்த கணங்களை அழகாக விவரித்திருப்பார் சுஜாதா.
இந்தக் கதையின் ஆரம்பத்தில் ஒரு காட்சி கடற்கரையில் நிகழும். அடுத்த ஒன்று ஹோட்டலில். இன்னொரு சம்பவம் ஒரு ஸ்டார் ஓட்டலின் காபரே மதுக்கூடத்தில் பிறகு நடைபாதை பழைய புத்தகக் கடையில் நிலைபெறும். சிவராஜின் அதுவரையிலான அல்லாட்டத்துக்கு அப்பால் பழைய கடையில் அவன் தேர்ந்தெடுத்த புத்தகங்களை விவரிக்கும் காட்சியில் இழந்த ராஜ்ஜியத்தை வென்று மீண்ட அரசனின் மனோ நிம்மதி போல் அவனது கண நேர நிம்மதியின் வருடலைக் காட்சிப்படுத்தி இருப்பார் சுஜாதா. வனஜா பாலு வனஜாவின் அப்பா தண் அழகரசன் எம்.எல்.ஏ போலீஸ் அதிகாரி இன்பராஜ் என சின்னச்சின்ன பாத்திரங்களின் குணாம்ச உப நுட்ப விபரங்களைக் கூடப் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருப்பார். ஒரு டாக்டர் கொல்லப்படுவார். என் அந்த வயதுவரையிலான வாழ்வினுள் அந்தக் காட்சி க்ரூரத்தின் யௌவனமொன்றைக் காணத் தந்தது. கடற்கரையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் கொல்லப்படுவார். அவர் தன் நினைவை இழக்கும் தருணத்தின் விவரணையும் நிஜத்தை ஒரு நூலாம்படை போல் அத்தனை நுட்பமாக சன்னமாக வெளிச்சொல்ல முடியுமா என்கிற வியப்பை அளிக்கிறது.
சுஜாதாவின் வசன சிக்கனம் நீள நீளமான உரையாடல்களின் சலிப்புக்கெதிரான மென்மலர்க் காற்றாக நிறைந்து ஒளிர்ந்தது. நிர்வாண நகரம் கதை-பாத்திரப்படைப்பு-சொல்லிய விதம் எனப் பலவும் பற்பல சினிமாக்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமுறை எடுத்தாளப்பட்டதும் கூறவேண்டிய மற்றொன்று தான்.
எனக்கு,நிர்வாண நகரம் கதையின் இறுதியில் சுஜாதா முன்வைத்த க்ளைமாக்ஸ் என்பது அப்போது பெரிய வியப்பைத் தந்தது. வாசகனை ஒரு புதிருக்குள் வரவழைத்து அவனது சொந்த யூகங்களை ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே செல்லச்செய்து கடைசியில் எல்லாவற்றையும் ஊதி உடைத்து விட்டு வேறோன்றை இதான் உண்மை இதான் கதை இதான் நடந்தது என்று முன்வைப்பது துப்பறியும் கதைகளைப் படைப்பதில் உலகளாவிய யுக்தி. அதை நிறுவ முனைகையில் எத்தனைக்கெத்தனை எழுதுகிறவன் தனக்குள் சவாலாக அதை முயலுகிறானோ அந்த அளவு வாசகனைக் கவர்வதற்கான வாய்ப்புக் கிட்டும். ஒருவகையில் எழுத்தாளனோடு தொடர்ந்து ஓட்டத்தைப் பகிர்ந்துகொண்ட தேர்ந்த வாசகனை அவனால் மெல்லத் திருப்தி செய்யவியலாமற் போவதும் அடுதாற் போல் நிகழலாம். என்னளவில் சுஜாதா கடைசி வரை வாசகனை அயரடிப்பதில் இப்படியான பறவையின் திசை திரும்புகிற சடாரென்று எல்லாவற்றையும் உதிர்த்து வெல்வதில் கடைசிவரை வென்று கொண்டே இருந்தார் என்று தான் சொல்வேன். அதனால் தான் அவர் வாத்தியார்
சுஜாதா வெவ்வேறு மனிதராகத் தன் எழுத்துகளில் மிளிர்ந்தார்.
துப்பறியும் கதைகளில் அவர் அடைந்த புகழுயரம் அபரிமிதமானது. அதற்கான விலையை நேர்மையான வரிக்கொடையாளி போல் தன் வாழ்காலத்தின் இறுதி வரை தொடர்ந்து தந்துகொண்டே இருந்தார் சுஜாதா.
அனிதாவின் காதல்கள் நிறமற்ற வானவில் எப்போதும் பெண் பூக்குட்டி தீண்டும் இன்பம் போன்ற வெகு சில தனித்துவமான கதைகளில் முற்றிலும் வேறோருவராகத் தன் எழுத்தைப் பரீட்சித்துப் பார்த்தார் சுஜாதா.
அவருடைய சூப்பர் டூப்பர் படைப்புகளான ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஏன் எதற்கு எப்படி தூண்டில் கதைகள் உட்படப் பல சிறுகதைகளில் அவர் தன் எல்லைகளை ஆனமட்டிலும் விவரித்துக் கொண்டே இருந்தார். அல்லது விவரிக்க முயன்று கொண்டே இருந்தார்.அறிவியல் கதைகள் அரசியல் சரித்திரம் என அவர் தொகுத்துப் பகுத்த பின்புலங்கள் அவற்றுக்கான சிரமமேற்றல் மிக அதிகம்.
திருக்குறளுக்கு உரை,புறநானூறு ஒரு எளிய அறிமுகம், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் உட்படப் பத்தி எழுத்தில் அவர் தன் ஆர்வத்தின் வேறொரு ஊற்றைத் திறந்து பார்க்க முயன்றர்.
எனக்கு மேற்சொன்ன யாவற்றையும் விட சுஜாதாவின் நாடகங்கள் மீது பெரிய ஈடுபாடும் மதிப்பும் உண்டு. அவர் பெயரை நீக்கி விட்டுப் பார்த்தாலும் அவை முக்கியமான நாடகங்களே. தமிழின் நாடக முயற்சிகளில் சுஜாதாவின் பெயரைத் தவிர்க்கவே முடியாது. வந்தவன் எனும் சின்னஞ்சிறு நாடகம் இன்னும் சில நூறாண்டுகள் கழித்தும் போற்றப் படும். அந்த நாடகம் உணர்த்தித் தருகிற வாழ்வின் இருளும் நசிவும் அபூர்வமானது. உலகத் தரமான படைப்பு.
சுஜாதா வாழ்வார்.