ஏழு வயதிலிருந்து வாசிப்பைக் கைக்கொள்ளத் தொடங்கினேன். என் வீட்டில் எதற்குக் குறை இருந்ததோ புத்தகங்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. அப்பா பி.ஆர்.சி கண்டக்டர். ஒவ்வொரு முறை ட்யூட்டிக்குச் சென்று திரும்பும் போதும் கை நிறையப் புத்தகங்களைக் கொண்டு வருவார். மாத நாவல்கள் வாரப்பத்திரிகைகள் என எல்லாவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. படக்கதைகள் கோகுலம் பாலமித்ரா அம்புலி மாமா போன்ற சிறார் இதழ்களில் தொடங்கி மஞ்சரி போன்ற தனித்த இதழ்கள் வரை ஆவலோடு படித்திருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகை புதிய இதழ் 3 ரூபாய். அதுவே மொத்தமாக ந்யூ சினிமா பக்கம் பழைய கடைகளில் ஒரு இதழ் 1 ரூபாய்க்குத் தருவார்கள். அதை வாங்குவதற்காக அப்பா என் கை பிடித்து அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் ஒரு அழியாத படம் போல் பதிந்திருக்கிறது. அன்று அங்கே தொடங்கிய தேடல் அடுத்தடுத்துப் பழைய புத்தகங்களின் வழியாகப் பல எழுத்தாளர்கள் புத்தகங்கள் என விரிந்துகொண்டே சென்றது. பதின்ம வயதில் பற்றியதெல்லாம் நெருப்பு என்று சொல்லத் தக்க அளவில் என்னைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களோடு எதைத் தேடுகிறேன் என்பதை அறியாமல் ஒரு நெடும்பித்தின் குன்றா தாகத்தோடு அலைந்தேன். . மாத நாவல்களின் உலகம் சுவாரசியமாக இருந்தது. பட்டுக்கோட்டை பிரபாகரும் சுபாவும் ராஜேஷ்குமாரும் தேவிபாலாவும் எழுதிய துப்பறியும் நாவல்கள் ஒரு புனைவு வெம்மையை நிரந்தரமாக்கித் தந்ததன் பலனாக மனவாதைகளுக்கான மாய நீவுதலாக வாசிப்பின்பம் அமையலாயிற்று.நண்பர்கள் சிலரது கடிதங்களின் வழியாகக் கவிதையும் சிற்றிலக்கிய பத்திரிகைகள் குறித்த அறிதலும் ஏற்பட்டன. பாலகுமாரன் சுஜாதா இருவரும் வாசிப்பின் வெவ்வேறு நெடுங்கதவுகளைத் திறந்து தந்தார்கள். கல்லூரிக் காலத்தில் காதலும் கவிதையுமாய்க் கழிந்தது. அப்போதே எனக்கு மட்டுமாய் எழுதத் தொடங்கி இருந்தேன். வாசிப்பு வெவ்வேறு தளங்களுக்குக் கைபற்றி அழைத்துச் சென்றபடியே இருந்தது தான் வாழ்வின் ஹைலைட் என்று நினைக்கிறேன். பிசகாப் பெரு நட்பென இந்த வாழ்வில் வாசிப்பு அமைந்தது. வேலை பிறகு தொழில் காதல் பிறகு திருமணம் குழந்தைகள் என்று எல்லோரையும் போலத் தான் நானும் நகர்ந்துகொண்டிருந்தேன். 2010 ஆமாண்டு வாக்கில் இல்லை இது நானில்லை என்று எதோவொரு பொன்பொழிதல் கணத்தில் நிஜமென்று சூழ்ந்திருந்த யாவற்றையும் உதற விழைந்தேன். எதிர்காலம் பற்றிய இருள் அச்சுறுத்தினாலும் உள்ளே கேட்கும் குரலே ஒளியாய் மாறியது. எழுதத் தொடங்கினேன். இணையதளங்கள் பத்திரிகைகள் எனக் கிடைத்த வாய்ப்புகள் யாவற்றிலும் என்னைத் தேடவும் தொலைக்கவுமாய் இந்த ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. கவிதைகள் சிறுகதைகள் தொடர்கள் என்று நகர்ந்து இத்தனை வருடங்களில் தொடக்கப் புள்ளியின் குழந்தமைப் பித்து கிஞ்சித்தும் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் ஆசைமரமாய்த் திளைக்க முடிகிறது. இன்னும் இன்னும் எழுத்தின் வழியாகச் சென்றடைய முடிகிற தூரங்களை மட்டுமல்லாது செல்வழிப் பயணங்களையும் ரசிக்கும் அதே ஒரே மனம் உடனிருக்கிறது. நான் தேடித் தேடிப் படித்த என் காதலுக்குரிய மகா எழுத்தாளன் பெயரால் அவருடைய நினைவைப் படர்த்தி வழங்கப்படுகிற விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பது மனதை நிறைக்கிறது. வாழ்வில் அனேக மனிதர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய கணம் இது. என்னை என் எழுத்தின் வழி விரும்புகிறவர்கள் பத்திரிகையாளர்கள் ஊடகத் துறையினர் பதிப்பகத் துறையினர் சக எழுத்தாளர்கள் நல்ல நூல்களை வாசித்து ஆதரிக்கிற அன்பர்கள் எல்லோர்க்கும் பேரன்பின் தீராவிள்ளல்களைப் பங்கிட்டுத் தருகிறேன். நாளை சென்னை கிருஷ்ண கான சபாவில் மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிற விழாவில் இந்த வருடத்திற்கான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் நினைவு விருதினைப் பெற்றுக் கொள்ள இருக்கிறேன். சென்னைவாசிகள் அன்பர்கள் வாய்ப்பிருக்கும் நூல் நேயர்கள் யாவரையும் இந்த நிகழ்வுக்கு வரவேண்டுமென்று அன்போடு அழைக்கிறேன். வாழ்தல் இனிது.