கண்ணதாசன் 94
கண்ணதாசன் கொடுத்து வைத்த மகாகவி. தமிழமுதைக் கொடுத்துச் சென்ற பாவள்ளல். எழுத்து தாகம் குன்றாத ஆளுமை அவருடையது. சென்ற நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளில் இரண்டு பேர் மட்டும் பிறர் யாவரிடமிருந்தும் விலகித் தெரிகின்றனர். வாழ்வில் பணம் பதவி பட்டம் வெற்றி எனப் பலவற்றைக் கண்ட பிறகும் எழுத்தை-இதழியலை- அவற்றின் மீது கொண்ட ஆதிப்ரியத்தைக் கடைசிவரைக்கும் கைவிடாமல் காகிதக் காற்றைக் காதலித்துச் சுவாசித்தவர்கள்.
ஒருவர் கலைஞர் இன்னொருவர் கண்ணதாசன்.
திரைப்பாடல் எழுதுவது கண்ணதாசனின் ஏராளமான முகங்களில் ஒன்று. அவருடைய திறன் மொத்தமும் ஒரே விடயத்திற்கானவை அல்ல. கதை கவிதை கட்டுரை வசனம் போலத் தான் பாட்டெழுதியதும். ஆனால் தமிழ்த் திரைப்பாடல்களின் செல்திசையை-வான்பரவலை-வடிவத்தை-உட்பொருளை எனச் சகலத்தையும் தீர்மானிக்கிற பாடல்களை அவர் எழுதினார். பாடலின் முதல் முகமாகக் கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்திய பெருமை கண்ணதாசனையே சாரும். 1983 ஆமாண்டு வரை தமிழ்த் திரைப்பாடல் அவருடைய கைப்பிடிக்குள் இருந்த பட்டத்தின் நூலாகவே வானேகித் திளைத்தது.
இசையைப் பாடலின் சுமையாகக் கொள்ளாது துணையாகப் பற்றிக் கொண்டு அவர் படைத்த பல பாடல்கள் வியப்பளிப்பவை.
பல்லவியின் தொடக்கம் தொட்டு இறுதிச் சொல் வரைக்கும் எத்தனையோ மடைமாற்றும் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன். இவற்றை எல்லாம் ஒரு பாடலின் உட்புறத்தில் பதியமுடியுமா என்கிற வியப்பை நல்கும் ஆயிரம் பாடல்கள் உண்டு.
நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஒன்றல்ல இரண்டு வான வேடிக்கைப் பாடல்களை நிகழ்த்தினார் கவியரசர். இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன என்ற பாடல் வரி ஆயிரம் கதை திறக்கும். அதிலேயே ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று தொடங்கும் இடத்திலேயே டோல்கேட் அமைக்கும் பாடலும் பானகமழை தானே?
நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காவல் இந்தக் காதல் என்ற பாட்டை இன்றெல்லாம் வியக்கலாம்.
அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்பம்மா ஏதேதோ சொன்னானம்மா என்பதன் காதல் இன்னுமின்னும் கிறங்கடிக்கும்.
ஒரே ஜீவன், ஒன்றே உள்ளம்! வாராய் கண்ணா!!! பாடலை எப்படிப் புகழாமல் இருப்பதாம்..?
காதலை வார்க்கவும் வடிக்கவும் இப்படி ஒரு வரித் தொடக்கம் “மானல்லவோ கண்கள் தந்தது”
ஆழக்கடலில் தேடிய முத்து என்று தொடங்கும் இடத்திலேயே தன்னைச் சமர்ப்பிக்கத் தொடங்கும் நேய மனம்.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட….எத்தனை வலி….ஒற்றை வரி!
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே என்று தொடங்குமிடமே வலிக்கும். தனிமையின் துயர்ப்பெருக்கெடுக்கும்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
அந்தக் குரலையும் முகத்தையும் இசையினையும் தாண்டி வந்து ஆக்ரமித்து முதலிடம் கேட்கும் முதல் வரிகளின் மற்றோர் சான்று.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா எனும் வரி எத்தனை கதைகளைத் திறந்து வைத்தது..?
காதல் ரசம் சொட்டும் இந்தத் தொடக்கம் எனக்கு எப்போதும் விருப்பமான பல்லவித் தொடக்கங்களில் ஒன்று
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
இந்தப் பல்லவியின் இரண்டாம் வரியை எப்போது நினைத்தாலும் மனத்திமிர் அழிந்து காதலாய்க் கசியும்.
அதெப்படி அள்ளித் தெளிப்பது..? “”காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்பது”” எனும் வரியைப் பதின்ம வயது டைரிகளில் பலதடவை மேலெழுதி வைத்திருந்தேன்.
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு எனும் வரியைக் கடப்பது கடினம்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்-அவள் ஒரு நவரச நாடகம்- கம்பன் ஏமாந்தான்-வான் நிலா நிலா அல்ல- என சொல்லிக் கொண்டே செல்லலாம்.
நிரந்தரமான அழிவற்ற எந்த நிலையிலும் மரணமற்ற கவியரசருக்கு இன்று 94 ஆவது பிறந்த நாள்.
வாழ்க அவர் புகழ்.