கலைஞர் மு.கருணாநிதி : திரையை ஆண்டவர்
1. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கலைஞர் மு.கருணாநிதியின் மரணம் மாபெரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
2. கலைஞர் ஒரு பன்முக ஆளுமை என்பதைக் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்க்க நேர்ந்தவர்கள் கூட ஒப்புக் கொள்ளுவார்கள்.
3. ஒரு இதழாளர், திரை வசன எழுத்தாளர், அரசியல்வாதி, எம்எல்ஏ, மந்திரி, திமுக தலைவர், முதல்வர் ஆகியன ஒரு நேர்க்கோட்டு நகர்தற் சித்திரம் என்றால், நாடகம், பாடல்கள், பிற எழுத்துக்கள் என உபகிளைகளுக்கும் சொந்தக்காரர் கருணாநிதி.
4. தான் ஆரம்பித்த எதையும் எதற்காகவும் நிறுத்திவிடுவதில் உடன்பாடற்ற பிடிவாதக்காரர் கலைஞர். துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பது அவருக்குப் பிடித்தமான ஒரு அரசியல் பாணி என்றால், அதை அவர் எப்போது ஆரம்பித்தாரோ கடைசி வரை பின்பற்றினார். தம்பிக்கு எழுதிய கடிதங்கள் ஒரு உதாரணமாகச் சொல்ல முடிகிறது.
5. எதையும் எதற்காகவும் எனத் தன் அத்துணை செயல்பாடுகளையும் ஒன்றிணைத்துத் தான் நின்றுகொண்டிருக்கும் புள்ளியிலிருந்து முன்செல்ல வேண்டிய நகர்தல் நோக்கியே, சென்றடைய வேண்டிய இலக்கு குறித்தே தனக்கு முன்னால் கிடைத்த அத்துணை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டவர் கலைஞர்.
இந்த இடத்திலிருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்குவதுதான் அதற்கான சின்னதொரு நியாயம் எனத் தோன்றுகிறது. கலைஞர் என்கிற மா உரு மண்ணகம் நீங்கி ஐம்பது தினங்களுக்குள் அவரது திரைப் பயணத்தின் குறிப்பிட்டதொரு நகர்தல் குறித்துக் கட்டுரை ஒன்றை வடித்துத் தரச் சொல்லி சரவணகார்த்திகேயன் கேட்டபோது திகைப்பாக இருந்தது.கடல் ஒன்றைப் புரிந்து கொள்ளுவதற்குக் குவளை நீரைத் தந்து இதைப் பருகுக என்றால் அது நியாயம். அதே குவளை நீரைத் தந்து கடலின் ஆழம் அறிவதற்காக இதனுள் புகுந்து அலைந்து திரிந்து திரும்புக என்றால் எப்படித் தகும்? உண்மையில், கலைஞர் என்கிற மகா ஆளுமையின் ஒரு பரிமாணமான ‘திரைத் துறையில் கலைஞர்’ என்பதிலிருந்து அதன் கிளையுருவான ‘திரைக்கதை-வசனகர்த்தா கலைஞர்’ எனும் உப நிலையம் முன் நின்று, அதிலும் வரலாற்றுத் தொன்ம புதினங்கள் படைத்த கலைஞர் குறித்துக் கட்டுரை வடிக்கச் சொன்னபோது அரிதான நிம்மதியும் அயர்தலும் ஒருங்கே ஏற்பட்டது.அவரது திரைத் தமிழில் வரலாற்றுப் புனைவுகள் கொண்ட படங்களை மாத்திரம் தனியே அகழ்ந்து அவற்றில் கலைஞரது தீற்றல் குறித்த அலசல் ஒன்றைப் பகிரலாம் என்று விழைந்ததன் விழைவே இக்கட்டுரை.
கலைஞரின் திரைப்பட வசனங்களைப் பற்றிப் பேசும்போது அனேகமாகத் தமிழ் சினிமாவின் முதல் நூறு கதை-வசனகர்த்தாக்களுக்குள் கலைஞரின் பெயர் கட்டாயம் இருக்கும் எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. மௌன சினிமா, சலன சினிமாவாகி, பாடல்களின் சினிமா மந்திர தந்திர எந்திர புராண சினிமாக்களாகி, எத்தைத் தின்றால் பித்துத் தெளியும் என்று அத்தை வந்து சொல்லட்டும் எனக் காத்திருந்த போது, வித்தை தெரிந்த நான் சொல்லுகிறேன் எனக் களம் கண்டவர் கலைஞர்.
இந்த இடத்தில் தமிழ் சினிமாவின் முதல் இருபது தீர்மான (trend setting) சினிமாக்களுக்குள் கலைஞரின் பராசக்தி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே எம்ஜிஆர் என்கிற ஒருவர் உதித்த பிற்பாடு, சின்னப்ப-கிட்டப்ப பாகவதர்கள் எல்லாரும் மெல்ல விடைபெறத் தொடங்கிய பிற்பாடு, சிவாஜி என்கிற கணேசன் எனும் பெரும்பசி மிருகம் தோன்றிய காலத்தே தமிழ் சினிமாவின் பிரஸ்தாப சினிமாக்கள் கதைகளைத் தாண்டி இந்த இரண்டு நாயகர்களையும் மனங்களில் விதைத்து, மானசீகங்களில் அறுவடை செய்து தரும் உழவாரப் பணிகளைத் துல்லியமாக நிகழ்த்தித் தந்தவை பெரும்பாலும் கலைஞரின் படங்கள். எம்ஜிஆரும், சிவாஜியும், எம்ஜிஆராகவும் சிவாஜியாகவும் உருவெடுத்த திரைப்படங்களை உற்று நோக்கினால், அவற்றின் பின்னே பெரும்பணி ஆற்றித் தந்த கலைஞரின் பேனா இருப்பது புலனாகும்.
ஒரு பெரிய போரைத் தன் மனதிலிருந்து திட்டமிட்டுத் தொடங்குகிறவன் யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் கிடைக்கக் கூடாது என்பதிலெல்லாம் கவனம் செலுத்தவே மாட்டான். தன்னோடு யாரெல்லாம் வருவார்கள், எப்படியெல்லாம் தான் போரிட வேண்டும், தனது படை எப்படி வென்றெடுக்க வேண்டும், இவை மட்டும்தான் கவனம்.
சித்தாந்தத்துக்கும் பிரசாரத்துக்குமான இடைவெளியைத் தன் திரைப்பட வசனங்களைக் கொண்டு நிரப்பலானார் கருணாநிதி. முன் சொன்ன எதையும் எதுவாகவும் என்கிற கூற்றின்படி, தான் எதிர்க்க வேண்டிய கருத்துக்களை முரண்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு பேசச் செய்தார். தனக்கு ஒப்புமையுள்ள, தேவையான கருத்துக்களைத் தன் நாயகர்களை வைத்துப் பேச வைத்தார்.
கரகர குரலும், கறுப்புக் கண்ணாடியும், சுருள் கிராப்பும், குட்டையான உருவமும், தோளின் இருபுறமும் வழிந்து நீளும் துண்டும், பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளும் கொண்ட கருணாநிதி நேரடியாகத் தான் சார்ந்த திராவிட இயக்கத்தின் கருத்துக்களை எப்போதும் தகிப்புக் குறையாத தணலைப் பராமரிக்கிறாற் போல் தன் பாத்திரங்களைக் கொண்டு பேசச் செய்தார்.
புராண இதிகாச மந்திர தந்திர, ஏற்கனவே மதத்தின் செல்வாக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அதன் ஆளுமை, இவற்றின் கீழ் வரக்கூடிய அத்தனை கதைகளையும் நிராகரித்தவர் கருணாநிதி. உண்மையில், அவருடைய மொத்த வாழ்விலும் மகா சிரமமான பகுதி இதுதான். சமூகக் கதைகள் மாத்திரம் நான் எழுதுகிறேன் என்று குன்றியிருக்க வேண்டிய ஒரு மனிதர், இருக்கின்ற எதுவும் நான் தொடமாட்டேன், இந்தா உருவாக்குகிறேன் புதிய வரலாறுகளை எனக் கிளம்பினார்.
இசையொடு பாட்டின் காலம் சற்றே முடிவடைந்து, உரையாடல் ஒரு கலையாகத் தன் சகல திசைகளையும் விஸ்தரித்துக் கொண்டு, அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னால், மொழி, இனம் ஆகியவை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி, மாற்றியமைத்து, அவற்றை வலுவடையச் செய்யக் கூடிய அரசியல் முன்னெடுப்புகள் அப்போதுதான் வலுப்பெற்றன. ஏகாதிபத்திய, சர்வாதிகார அமைப்புகள் அனைத்தும் கேள்விக்கு உட்படலாயின. தன் தாய் அமைப்பான பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்திலிருந்து பகையில்லை, முரண் என்கிற முன்வைப்போடு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியிருந்தார் அண்ணா.
இவற்றுக்கெல்லாம் அப்பால், தேர்தல் அரசியலை நோக்கிய விரைதல்களுக்கு அரசியல் சஞ்சாரம் பழகிக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் எழுதித் தருவதைப் பேசுகிற முகங்கள் அடைய வாய்ப்புள்ள செல்வாக்குகள் குறித்தெல்லாம் தனித்தறியத் தயாராக இல்லை கருணாநிதி.
அண்ணா, தான் சார்ந்த இயக்கம், தனக்கு மேலிருந்த முன்னோடிகள், இவர்களின் பின்னொற்றி, அரசியலில் நகர்ந்து கொண்டே, தனக்கு எழுதக் கிடைத்த சமூகப் படங்களாகட்டும், அல்லது வரலாற்றுப் படங்களாகட்டும், ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு, சாதிமத எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் அவற்றைப் பின்பற்றுவோரைக் கைவிடவைப்பது, அவற்றை எற்கனவே கைவிட்டோரைப் பெருமிதம் கொள்ளச் செய்வது, நடப்பு அரசியலை எப்போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது, இவற்றையெல்லாம் தெளிவாகச் செய்தார்.
கடுமையான விவாதங்களுக்குப் பின்னால் அவரது எதிரிகள் தோற்றார்கள். அவரது நாயகர்கள், நேசர்கள், அணுக்கர்கள், சகலகலா வல்லமை உடையவர்களாகச் சொல்லாலும், வில்லாலும் வெல்லமுடியாதவர்களாக முன்னிறுத்தப் பட்டார்கள். கருணாநிதியின் கொள்கையே, அவர் விதைக்க விரும்பிய சித்தாந்தமே, அவர்களது கொள்கையாகவும் சித்தாந்தமாகவும் முன்வைக்கப் பட்டது. எல்லோரும், எல்லோருடையதாகவும் அவற்றைக் கையாண்டார்கள்.
அவரது தைரியமும் வீரியமும் அளப்பரியது.
“கோவில் கூடாது எனக் கூறவில்லை, கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்றுதான் கூறுகிறேன்” என்பது தொடங்கி, பராசக்தி தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்ட மிக ஆணித்தரமான புரட்சித் திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் தைரியமாகத் தனித்தறியத் தேவையற்ற ஒரு பெயர் கருணாநிதி.
மனோகரா உண்மையில் ஒரு திரைப்படமல்ல..எழுத்தின் வழி காவியம்.இலக்கியச்சாறு என்றும் குன்றாத தமிழ் அமுதம்.காலம் கடந்து தன்னை நீட்டித்துக் கொள்ளத் தெரிந்த சமர்த்துச் சிற்பம்.அற்புதம்
அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!’வீர வழி வந்தவனே என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்… என்ன குற்றம் செய்தேன்?
சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.
அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!
அரசர்: போதும் நிறுத்து… வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!
அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.
அரசர் மனோகரா நீ சாவுக்குத் துணிந்துவிட்டாய்
மனோகரன் ஆமாம் நீங்கள் வீரராக இருக்கும் போது பிறந்தவனல்லவா நான்.சாவு எனக்கு சாதாரணம்
அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பிறகும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!
அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!”
கடைசிக் கேள்வி என் கட்டளைக்கு வணங்கப் போகிறாயா இல்லையா..?
மனோகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும் மனோகரன் அதுவும் அரை நொடியில் அரை நொடியென்ன.?அதற்குள்ளாகவே ஆனால் யாரிடம்
கேட்கவேண்டும் தெரியுமா..?
கோமளவல்லி கோமேதகச்சிலை கூவும் குயில் குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல்
புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை கொடிய நாக்கை என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு அதை எதிர்த்தால் உம்மையும் உமக்குப் பக்கத்துணையாக வந்தால் அந்தப் பட்டாளத்தையும் பிணமாக்கிவிட்டு சூன்யக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று சுழலும் வாளுடன் சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்கவேண்டும்.நிறைவேற்றட்டுமா அந்த உத்தரவை..தயார் தானா தயார் தானா..?
கலைஞர் பேசச் சொல்லிப் பேசிய அனைத்தும் கலைஞர் பேசச் சொல்லிப் பேசியதாகவே கருதப்பட்டது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவருடைய வசனங்களைப் பார்த்தவர்கள் மூன்றாகப் பிரிந்தார்கள். ஒன்று, கலைஞரின் அவர் சார்ந்த இயக்கத்தின் அவருடைய இணக்கமான நடிகர்களின் அபிமானிகள்; இரண்டு, கலையாக சினிமாவாக அவரது கைவண்ணத்தை ரசித்துக் கொண்டே அரசியல் ரீதியாக அவரை எதிர்த்தவர்கள்; மூன்று, அப்படிப் பிரித்தறியத் தெரியாத நடுப்பொதுக் கூட்டத்தார்.
அபிமானிகள் பொதுவிலிருப்பவர்களை வசனங்களின் குறியீடுகள் உணர்த்தக் கூடிய அவற்றின் உள்ளர்த்தங்கள் பற்றி வினவிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்த் திரையுலகில் திராவிட இயக்கத்தை ஆதரித்த கலைஞர்களைப் போலவே, பிற பல சித்தாந்தங்களை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இல்லாமல் இல்லை. என்றபோதும், கருணாநிதி என்கிற ஒரு மனிதரின் எழுத்துக்கள் உற்பத்தியாகிற இடம் அவரது குறுவாள் என்று நம்புகிற அளவுக்கு அவர் பின்னின்று இயக்கினார். அவரது வசனங்கள் கேட்கும்போது உச்சரித்தவர்களின் குரலாக்வும், கேட்ட பிற்பாடு கலைஞரின் கையெழுத்தாகவும் அபிமானிகளின் மனங்களில் படர்ந்தன.
ராஜகுமாரியில் சிப்பாய் எம்ஜி.ஆரை நோக்கி கேட்பதும் அவர் பதில் சொல்வதுமாக
ஏனய்யா கையில் பலமான காயமோ..
மகாராணி அடித்ததாயிற்றே மனமோகனமாய் இருக்கிறது
மன்னருக்கும் ஆலகாலருக்கும் இடையே நிகழக் கூடிய உரையாடல் ரத்தினச் சுருக்கமாய் சொற்சிக்கனத்தோடு இருப்பதைக் கண்ணுறலாம்.வரலாற்றுப் புதினப் படங்கள் என்றாலே நீள நெடுக பக்கம் பக்கமாய்ப் பேசுவது என்று இருந்த ஒற்றைத் தன்மையை கலைஞர் தன்னால் ஆன மட்டும் மாற்றி அமைத்தார்.அவரது ஆரம்ப முயல்வுகளிலேயே இதனை சாத்தியம் செய்தார்.
வைரக்கத்தியாகவே இருக்கலாம் அதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள மாட்டேன்.இது மல்லிகா.இளவரசி.ஆலகாலனை நிராகரிப்பதற்கு இப்படி ஒரு வசனம்.அது வரைக்குமான காதல் மொழிகள் வீணாகின்றன.அதிலொன்றை இப்படித் தொடங்குகிறான் ஆலகாலன் “ஆலகாலன் நினைத்தால் கனவும் நிஜமாகும். மல்லிகா கேள்…இன்று நேற்றல்ல அறிவறிந்த பருவம் முதல் உன்னை ஆராதித்து வருகிறேன்.சொர்ணமயமான உன் அழகில் சொக்கிச் சாகிறேன்.உன்னை பட்டமகிஷி ஆகப் பக்கத்தில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன்.”
சுகுமாரை அவன் தாய் இப்படி எச்சரிக்கிறாள்.”அரண்மனையில் உள்ளவங்க சாதாரண மனுஷங்க இல்லைப்பா பயங்கர ஜந்துக்கள்.அரசவர்க்கமே அகங்கார வர்க்கம் அவங்களோட பழகுறது அளவோட முறையோட பழகணுமப்பா…”
எரிந்துகொண்டிருக்கும் விளக்கை துப்பி அணைப்பாள் அழகி.
இளமை ததும்பும் பருவப்பெண் என்னைப் பார்த்துத் தாயென்றீரே இது தர்மமா
சுகுமார்: சரியான தர்மம்.பிற பெண்களைத் தாயாகவும் தங்கையாகவும் கருதுவது தான் எங்கள் இந்திய நாட்டு தர்மம்
அழகி: இது வாழ்வை ருசிக்கத் தெரியாத பயித்தியக்கார தர்மம்
சுகுமார் பைத்தியக்காரர் கண்களுக்கு உலகமே பைத்தியமாகத் தான் தோன்றும்
அழகி பேச்சை மாற்ற வேண்டாம் என் ஆட்டம் எப்படி அதைச் சொல்லுங்கள்
சுகுமார் கட்டுக்கடங்காதது கருத்தைக் கலக்குவது அம்மா கலைவாணி இங்கு தலை கூட நீட்ட மாட்டாள்
அழகி ஓ சரியான வார்த்தை நாட்டியம் என்றால் சாமானியமா நளினமான அசைவு மின்னல் நடை கண்ணில் காந்தம் இவ்வளவும் வேண்டும்.சுகுமார் என்னிடம் எல்லாம் இருக்கிறதல்லவா
சுகுமார் எல்லாம் இருக்கிறது முக்கியமான ஒன்று நாணம் அது மட்டும் இல்லை.
என்று சொன்னதும் தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் சுகுமாரை அவப்பழி சுமத்தி கொல்லுமாறு ஆணையிடுகிறாள் அந்த வெளிநாட்டு ராணி.
நீதியில் ஒரு சொல்லாடல் உண்டு. ‘குற்றவாளியைச் சாகும்வரை தூக்கிலிடுங்கள்’ என நீதிபதி உத்தரவிடுவார். இறந்தது உறுதி செய்யப்பட்ட பிற்பாடுதான் பிரேதம் கீழிறக்கப்படும். அதே உறுதியை, நெஞ்சுரத்தைக் கொண்டவராகக் கருணாநிதி இருந்தார். எதிரிகளைக் கையாளும்போது கருணையற்ற நீதிபதியாக இருக்கத் தலைப்பட்டார். பெற்ற தந்தையை உன் கழுத்தை அறுத்து விடுகிறேன் என்றும் உன் ஆசை நாயகியின் கண்களைப் பறித்துக் குழிபறிப்பேன் என்றும், உன்னையும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டுவேன் என்றும் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று குமுறுகிறான் மனோகரா. அதற்குச் சற்று முன்புதான் தந்தையானவர் பரசுராமனை நினைவுபடுத்துகிறார். அதற்குப் பதிலாக மனோகரா அது வெறும் புராணம் என்கிறான்.
இன்னொரு இடத்தில் வசந்தசேனை கொடியவள், கணவனைக் கொன்ற பத்ரகாளியைப் போன்றவள் என்றொரு வசனம் வருகிறது. யாரோடு போர் புரிகிறோமோ அவர்களோடு உரையாடக் கிடைத்த வாய்ப்பும் போருக்கான ஒரு தந்திரம்தான் என்பதை மெய்ப்பிக்கிறாற் போல், இந்துச் சனாதன ஆழ்ப் பிடிமானங்களை ஏன் எதற்கு எப்படி என்று பகுத்தறியும் வினவுதலை முற்றிலுமாகத் தடைசெய்து வைத்திருக்கும் ஆரியப் பார்ப்பன யதேச்சாதிகார தந்திரங்களை ஆங்காங்கே விடையற்ற விசாரிப்புகளாக நிகழ்த்திச் செல்லுவதன் மூலமாகத் திரைப்படத்தின் காட்சி அனுபவத்தைத் தாண்டிய பகுத்தறிவிற்கான வாசலாகத் தன் வசனங்களைப் பயன்படுத்தினார் கருணாநிதி.
அவரது நாயகர்கள் எதுவுமற்ற எளியவர்களாக இருந்தார்கள், அல்லது இருந்தவற்றை சூழ்ச்சிகளுக்கு இரையாக்கி இழந்தார்கள். கலைஞர் எழுதிக் காட்டிய நாயகிகள் முட்டாள்களாக இல்லாமல், அறிவுள்ளவர்களாக இருந்தது மாபெரிய ஆறுதல். அவர் ஏற்படுத்திய எதிரி பாத்திரங்கள் கருணையற்ற புனிதர்கள், கடைசிவரை களமாடி, தோற்கும் கணம்வரை வெல்வதற்கான சூழ்ச்சிகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்கள். மந்திரி குமாரி திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு பெண் தன் கணவனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிக் கொன்றாள். அவருடைய ஆடவர்கள் ஒருபோதும் அவதாரங்கள் இல்லை, மனிதநேயம் மிக்கவர்கள்.
மருத நாட்டு இளவரசி
ஆம்பளை மாத்திரம் வாழ்ந்தா’
ஆம்பளை மட்டும் வாழ்ந்தா அதும்பேர் ஆசிரமம்.பொம்பளை தான் குடும்ப விளக்கு
பொம்பளை விளக்கு ஆம்பிளை விட்டில் பூச்சி…
பொம்பளை புஷ்பம் ஆம்பளை வண்டு
பொம்பளை பாம்பு ஆம்பளை மகுடி…ஹஹஹா
மிருகஜாதியில புலி மானைக் கொல்லுது.மனித ஜாதியில மான் புலியைக் கொல்லுது..
விளையாட்டுக்கு வெளியே இருந்து விளையாட்டோடு யார் யாரெல்லாம் சம்மந்தப்படுகிறார்கள் என்று சற்று சிந்திக்கலாம். ஏற்பாட்டாளர்கள், ஊக்குவிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரை விட்டுவிடலாம். முன்னாள் ஆட்டக் காரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், விமர்சகர்கள், விளையாட்டை அவதானித்துத் தொடர்ந்து எழுதிவருபவர்கள். உடலால் விலகி மனதால் அதே ஆட்டத்தை இவர்களும் ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான். உடல், மனம் இரண்டாலும் ஆடும் நிஜ ஆட்டக்காரர்களைவிட, மனதால் ஆடும் இரண்டாம் வகைமையினர் நூறு சதம் அந்த ஆட்டத்தை ஆட முடிகிறது. யூகங்களும் அனுமானங்களும் தீர்மானங்களும் வியூகங்களாகி உத்திகளாகி பரீட்சித்துப் பார்ப்பதில் விளைய வாய்ப்பிருக்கிற வெற்றி தோல்விகளைப் பொறுத்து ஒரு ஆட்டம் அதன் கூடுதல் ஆட்டமாய் விரிவடைவது நேர்கிறது. ஆக, தன் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவர் வேறாரையும்விட உக்கிரமாக அப்படியான ஆட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. அப்படித்தான் அரசியல் எனும் ஆட்டத்தின் கூடுதலாய் சினிமாவை நிகழ்த்தினார் கருணாநிதி.
காஞ்சித் தலைவனில்
1 ஆம்பிளைங்க மனசை ஊசி போட்டுத் தைக்கிறதாலத் தான் பொம்பளைங்க பேச்சை தையல்மொழின்னு சொல்லுறாங்க
2 பூங்குழலி…
என்ன காற்று திடீரென்று இந்தப் பக்கம் அடிக்கிறது..?
அடிக்கிற காற்று தென்றலா புயலா என்றாவது தெரிகிறதா..?
இரண்டுமில்லை.என்னை உயிர் வாழச் செய்கிற இன்னொன்று
பூங்குழலி…புயலாகத் தான் இங்கு புகுந்தேன்.உன்னைக் கண்டதும் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாத மென் காற்றாய் மெலிந்து விட்டேன்.
மிருகத்துக்கு அண்ணன் பலியாகி விட்டதாகக் கதை புனைந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும் சிற்றப்பனிடமிருந்து எப்படி ஜீவகன் தன் உரிமையை மீட்டெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறான் என்பதான புதுமைப்பித்தன் கலைஞரின் இன்னொரு திறம் செப்பும் தமிழ்த் தெப்பம்.
யார் அந்த நாடகக் காரர்கள்..?
யாரோ இன்பவல்லியாம் அவளும் அவளது ஆட்களும் என்னா அழகு என்னா அழகு அந்தம்மா அழகை வர்ணிக்கிறதுக்கு ஆயிரம் நாக்குப் படைச்ச ஆதிசேஷன் கூட கம்பர் கிட்டே ஒரு நாக்குக் கடன் வாங்கணும்.அவ்ளோ அழகுங்க..
எம்.ஜி.ராமச்சந்திரனும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கண்ணதாசனும், சிவாஜி கணேசனும், தமிழ் சினிமாவில் கோலோச்சியபடி அரசியலில் வென்ற இருவர் மற்றும் தோற்ற இருவர் ஆனார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த பிம்ப செல்வாக்கைச் சற்றும் சிதைக்காமல் அந்த ஒற்றையின் பரிமாண சாத்தியங்கள் அத்தனையையும் பரீட்சார்த்தம் செய்து பார்க்க அவர் எப்போதும் விரும்பினார். கருணாநிதியின் வசனங்கள் அவற்றின் விளைதல்கள், திரைக்கதை-வசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆரின் மனதில் ஆழப் பதிப்பித்திருக்கக் கூடும். பொதுவிலேயே தனக்காக எழுதப்படுகிற ஒவ்வொரு சொல்லையும் சரிபார்த்த பின்பே அனுமதிக்கிற தணிக்கையை எம்.ஜி.ஆர் தன் அதிகாரங்களில் ஒன்றாகக் கையில் வைத்திருந்தார். கதை-வசனம் என்று மட்டுமில்லை, பாடலின் ஒவ்வொரு வரிகளும் கூடப் பார்த்துப் பார்த்துப் பண்ணப்பட்ட ஒரு நடிகர் எம்.ஜி.ஆர். முக அழகு, குரல், வாள்வீச்சு, சண்டைக் காட்சிகளில் வேகம், என்கிற எம்.ஜி.ஆர் மெனு கார்டில் வசனவாதங்களில் வெற்றி பெறுதல் எப்போதும் இருப்பதாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது.
மந்திரிகுமாரி
ஆம் பதியைக் கொன்றேன்.பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக்கூட்டமாய் எண்ணிய ஒரு பாவியைத் தான் கொன்றேன்.என்னையே கொல்ல வந்த ஒரு விஷப்பூச்சியைத் தான் கொன்றேன்.ஒரு பெண்ணுக்கு அன்பிருக்கும் அளவுக்கு வீரப்பண்பிருக்கும் என்பதை மறந்த ஒரு மனோன்மத்தனைத் தான் கொன்றேன்.ஏன் என்மேல் பழியா நானொரு கொலைகாரியா நான் அவரைக் கொல்லாவிட்டால் அவர் என்னைக் கொன்றிருப்பார் நீரே சொல்லும் அவர் இப்படிக் கொல்லப்படா விட்டால் உலகத்தில் இன்னும் எத்தனை கோடிக் கொடுமைகளைச் செய்திருப்பார்..?
வேறொரு காலம் என்பதை வழக்கமாக மந்திர தந்திர மூடப் புரட்டுக்களை மெய்மை போலாக்குவதும் அலங்காரத்துக்காக எதையாவது எழுதுவதுமாக ஒருபுற முயல்வுகள் இருந்து கொண்டிருந்தன என்றால் அடுத்த பக்கத்தில் செல்வாக்கான புராண இதிகாசங்களைத் தூக்கிப் பிடிப்பதன் மூலமாக மாவுருக்களான மதம் சாதி உள்ளிட்ட பழைய நிறுவனங்களுக்குக் கொடி பிடிக்கிற வசனகர்த்தாக்களும் இருந்தார்கள்.சினிமாவின் ஆரம்ப காலத்தில் எதனைப் படம் பிடித்துக் காட்டினாலும் ரசித்த முன்பனிக் கால முடிவில் அடுத்த காலத்தின் மாற்றமாகவே கருணாநிதியின் பேனாமுனை சிந்தித்தது.அதீதங்களையோ மூடத்தனங்களையோ கைக்கொள்ளாமல் பழைய நிறுவனங்களையும் எதிராடி முற்றிலும் புதிய சிந்தனையில் சொல்லப்படாத காதல் சொல்லில் அழகாகத் தோன்றிவிடுகிற சமரசம் அன்பு சக உயிர் மீதான பெருங்கருணை திராவிட சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனித சாமான்ய வரையறைகளுக்கு உட்படாத அநீதியை உத்தரவாதம் செய்கிற எல்லாவற்றையும் எதிர்த்து முற்றிலும் முன்பில்லாத வழியில் அவருடைய வசனங்கள் மிளிர்ந்தன.அவர் கட்டமைத்த நடிகர்கள் அவர்களுடைய தொடர்பிம்ப வரலாற்றில் முக்கியமான கல்லடைவுகளாகவே கலைஞரது படங்கள் அவர்களுக்கும் உதவின என்பதும் மறுக்கவே முடியாத பேருண்மை.
எம்.ஜி.ஆருடனான கலைஞரின் படங்கள் ஒன்று கூட சோடை போனதில்லை. பொதுவாக, ஆட்சிக்கு வந்து பலமுறை ஆட்சி அமைத்து, எதிர்ப்பதற்கு ஏதுமற்ற வெறுமையை முன்னிறுத்தியபடி கலைஞரின் இரண்டாவது இன்னிங்ஸ் வரலாற்றுத் திரைப்படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழில் வெற்றிபெற்ற வரலாற்றுத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் மிக முக்கியமானது சிம்புதேவனின் இம்சை அரசன் இருபத்து மூணாம் புலிகேசி, இன்னொன்று தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட பாகுபலி. குட்டிக் குட்டி வரலாற்று போர்ஷன்களை எடுப்பதாக ஒளஒளா காட்டிய பல படங்கள் தோல்வி பெற்றன.
கலைஞரின் கண்ணம்மா, கலைஞரின் உளியின் ஓசை, கலைஞரின் பொன்னர் சங்கர், ஆகிய படைப்புகள் முகாந்திரமற்று பயமற்ற கொண்டாட்டமாக மாறிப் போகும் போர் ஒத்திகை போலத் தளர்ந்தன. இன்னும் சொல்லப் போனால், புலிகேசி தன்னளவில் பேசிய அடுத்த கால அரசியலையோ, பாகுபலியின் பிரும்மாண்டத்தின் வசனங்களுக்கான இருப்பையோ ஒப்பிடுகிறாற் போன்ற எந்த ஒரு படைப்பிலும் வசனகர்த்தா கலைஞர் பங்குபெறவில்லை. ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தை அடைந்த பிற்பாடு நெடுங்காலம் நடிகராக எம்.ஜி.ஆர் நீடிக்கவில்லை. அதுதான் நிகழ்த்தியாயிற்றே என்கிற அளவில் ரசிகர்களும் பொதுமக்களும் தன்னளவில் அவரும் அமைதியானார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்துக் காட்டிய எண்பதுகளின் சிலபல திரைப்படங்கள் கலைஞரின் எழுத்துத் தேவையைக் கோரியபடியே நேர்ந்தன. ஆனால், சமூகமாற்றத்தின் சித்தாந்தங்களைப் பெருமக்கட் பரப்பை நோக்கிக் கதையும் காட்சி அமைப்பும் வசனங்களும் அவற்றை உச்சரிப்போர் நடிப்பும் முகபாவங்களுமாய், மொத்தத்தில் வரலாற்றின் புனைவை முன்னிறுத்தி, அதன் மூலமாய்த் தனக்குத் தேவையான சித்தாந்த மாற்றங்களை மெல்லப் பதியனிட்டு அறுவடை செய்ய முடிந்த அதே கலைஞர் கருணாநிதிக்கு, அரசியலில் அவருடைய இடை-தோல்விக் காலங்களில் அவருடைய வரலாற்றுப் படங்களின் உருவாக்கங்கள் கைகொடுக்கவில்லை. அந்த அளவில் காங்கிரஸை எதிர்த்த மற்றும் எம்.ஜி.ஆரை எதிர்த்த 1987 வரைக்குமான காலத்தில் இத்தகைய திரைப்படங்கள் நிகழ்த்திய விளைதல்களோடு ஒப்பிடுகையில் 1991 முதல் 2016 வரை தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான காலத்தில் திரை எழுத்தாளராக கருணாநிதி எண்ணியதும் மின்னியதும் மிகவும் குறைவே எனப் படுகிறது.
காற்றில் கத்திவீசி, பின்னணிச் சத்தம் சேர்க்கையில், கத்திகள் உரசும் சத்தத்தைச் சேர்த்துக் கொள்ளுவதற்குத் தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது. என்றபோதும் எப்போதாவது மைக்ரோ வினாடி பிசகி, படப்பதிவுக்கும் சத்தத்துக்கும் பொருத்த முரண் (non syncing) ஏற்பட்டுவிடுவதும் உண்டு. மேதமை சார்ந்த குற்றமல்ல, எளிதில் நேர்ந்துவிடக் கூடிய யதார்த்தம். அந்த அளவில், மனோகரா, மந்திரி குமாரி, உள்ளிட்ட படங்கள் மலையை மிதித்து முதற் பாதையைச் சமைத்த ஆதி நடைவாசிகளின் பண்பாட்டுச் சமைத்தல் போல் செல்லுலாய்டு மலையின் குடவரைச் சிற்பங்கள். மீவுரு செய்ய முடியாத அற்புதங்கள்.
இந்த உலகில் எந்த அதிசயத்துக்கும் மீவருகை இல்லை என்பதே அதிசயத்துக்கான இலக்கணம். அதனைத் தன் இரண்டாம் பகுதி வரலாற்றுத் திரைப்படங்களின் மூலமாகவும் இன்னொரு முறை மெய்ப்பித்துக் காட்டிய, வசனவழி ஒரு காலகட்டத்தின் அனைத்து மனங்களையும் சமைத்துத் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்ட மகாமேதை, தன் பேனாவை சித்துப் பொருளெனச் சுழற்றி, அது அரியணையை நெருங்கும்போது தானும் அதிலேறி அமர்ந்த மேதை கலைஞர்,
திரையை ஆண்டவர்.
இந்திய சினிமா இதுவரை சந்தித்தவர்களில் மிக அபாயகரமானதொரு எழுத்துக்காரர்.