கல்யாணி மேனன்
கல்யாணி மேனன் எழுபது எண்பதுகளில் மலையாளத்தில் பல முக்கியமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழிலும் சில பாடல்கள். 1979 ஆமாண்டு வெளிவந்த நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன்மேகமே பாடல் நல்ல பிரபலமடைந்தது. ஜெயச்சந்திரனும் டி.எல் மகராஜனும் பாடிய அந்தப் பாடலில் சசிரேகாவும் கல்யாணியும் நாயகியருக்காகப் பாடினர்.
எத்தனை பாடல்களுக்கு நடுவாந்திரத்திலும் தனித்துத் தோன்றவல்ல குரல் கல்யாணியினுடையது. வாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற ஏ ராஜாவே என்ற பாடல் ஜீராவில் ஊறிய இனிப்புப் பண்டத்தின் கடைசி விள்ளலைப் போல் மனத்தைக் கிளர்த்தும். ஒரு போலிச் சோகத்தை சொல்வழி படர்த்தவியலாத நடுக்கத்தை பிற்பகுதிக் கதை சென்று சேரப் போகிற அழிதலின் முன் கூறலைப் போல் அந்தப் பாட்டைக் கல்யாணி எடுத்துச் சென்ற விதம் வண்ணமயமாய்ப் பெருக்கெடுக்கும். கல்யாணியின் தனித்துவங்களில் மிக முக்கியமான பாடல் நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன் என்ற சுஜாதா படப் பாடல். எம்.எஸ்.வியைப் பற்றிச் சொல்கையிலெல்லாம் அவருடைய குழந்தமை மிகுந்த குணாதிசயங்களைச் சேர்த்தே வியப்பது வழக்கமில்லையா..? அதே அப்படியான குழந்தமையின் கதவுகளைத் திறந்துகொண்டு பதின்மத்தின் வாசலுக்குள் நுழைந்தவண்ணம் பாடினாற்போல் அந்தப் பாடலைத் தொடங்கியிருப்பார் கல்யாணி. அதுவே பாடல் நிறையும் போது ஒரு பண்டிகையின் நிறைகணம் போல் சட்டெனப் பூத்துவிடுகிற வெறுமையைக் குரலால் கடத்தியிருப்பார். தீர்க்கமும் மிருதுவும் ஒன்றுகலந்த குரல்வகை கல்யாணியினுடையது. நிகர் செய்ய முடியாத ஒன்று.
“களிவீடு கெட்டி ஞான் காணாமறயத்து காட்டிலொளிச்சுக் களிச்சிருந்நு” என்று தொடங்கும் ஒரு ஸோலோ பாடல். தேவதாஸ் இசையமைப்பில் 1986 ஆம் வருடம் வெளிவந்த பூமழா படத்தில் இடம்பெற்றது. கல்யாணியின் குரல் உருகித் தவித்து உடைந்து நொறுங்கி அத்தனை அவஸ்தையை வாழ்வில் மிகுந்த வலிகளையெல்லாம் குரலினூடே பெயர்த்துத் தந்தது. அதிகம் ஒலிக்காத பாடல்களிலொன்று என்றாலும் அதுவொரு வைரம். தொண்ணூறுகளில் ரஹ்மான் இசையிலும் கல்யாணி சிலபல பாடல்களைப் பாடினார். சுஜாதா சுனந்தா மின்மினி மூவருடனும் கல்யாணி சேர்ந்து பாடிய காதலன் படப் பாடல் இந்திரயோ இவள் சுந்தரியோ குழுக்குரல் பாடல்களில் ஒரு மகாவரம்.
கல்யாணி மேனன் அழியாத கானவாழ்வுக்குச் சொந்தக்காரர்.
அவருக்கு அஞ்சலிகள்.