கல்லில் வடித்த சொல் போலே

             வாசகபர்வம்  1

ல்லில் வடித்த சொல் போலே எனும் நூல்  சந்தியா பதிப்பக வெளியீடு. கட்டுரைகள் சிறப்புரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகைநூலாக்கம். காலத்தை எழுத்தினூடாகக் காணத் தருவது கலாப்ரியாவுக்குக் கை வந்த கலை என்று சொன்னால் தகும். நினைவின் தாழ்வாரங்கள் தொடங்கி இன்னும் வற்றாத எழுத்து நீர்மம் வேறொரு காலத்தைக் கண்முன் வரைந்து தள்ளும் லாவகம். எழுத்தினூடாகப் பல்வேறு மனித-சம்பவ விள்ளல்களை பல்பரிமாணச் சித்திரங்களாகத் தோன்றத் தருவது கலாப்ரியாவின் எழுத்துவன்மை.

ந்த நூலும் அப்படித் தான். எடுத்தால் கவிழ்ப்பதற்கு இடமே தராமல் முடிவுப் பக்கம் வரைக்கும் சென்ற பிற்பாடு தான் கீழே வைக்க முடிந்தது. தன் மனத்தின் ஆழதூர இருளொன்றைத் தன் பால்ய கால முன்வாழ்வுச் சித்திரமாகவே நிலைத்துக் கொண்டிராமல் இத்தகைய தொகுத்துச் சொல்லும் வசீகரம் சாத்தியமாகாது.

ரு கட்டுரையில் வடமொழி மகாகவி அஸ்வகோஷூக்கும் பிரபாவுக்கும் இடையிலான பரியந்தத்தை ஒரே ஒரு நெடும்பத்தியின் மூலமாக பசை தடவி ஒட்டி வைத்து விட முடிகிறது. பின் தொடரும் பத்திகளினூடாகப் பெருங்கால சோகச்சாற்றை நம் மனக்கோப்பைக்கு நிறைத்து மாற்றி வைப்பது சாகசம்.பிரபாவைச் சொல்லி விட்டுத் தன் நெடுங்காலக் கவிக்கொடையாளி சசியைப் பற்றிப் பேசாதிருத்தல் பாவம் என்றுணர்ந்தோ என்னவோ அந்தப் பெயரைக் கூடச் சொல்லாமல் சொல்லி நிறைக்கும் கலாப்ரியா அந்தக் கட்டுரையைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கவியரசர் கண்ணதாசனின் கவியடி வாசகானுபவத்தை மேலும் செழுமையாக்குகிறது.

ன் கவிதைகளுக்குச் சற்றும் குன்றாத, வேறொரு உற்சாகத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து எழுதுகிறார் கலாப்ரியா.இந்தக் கட்டுரைகளுக்கப்பால் நாம் வாழாத ஒரு வாழ்வின் செல்வாக்கு நமக்குள் வலுப்பெறுவதை உணர்கையில், எழுத்தைப் பின் தொடர்கையில் மாத்திரம் சாத்தியப்படுகிற ஒளியறிதல் புரிபடுகிறது.

ழுதிக் கொண்டே இருங்கள் கலாப்ரியா.