கவிதையின் முகங்கள்
5 மொழிவழி நோன்பு
எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்து கொண்டே
இருக்கிறார்கள்
நகுலன்
சுருதி கவிதைத் தொகுதி(1987)யிலிருந்து
கவிதை என்பது தத்துவக் குப்பையோ ஆழ்மனப் பித்தோ அல்ல அது வேட்டைப் பொழுது வியர்வை நனவிலியின் கடைசித் துளி ஞாபகம். மரணத் தருவாயில் அறியத் தருகிற ரகசியம். கடவுளைத் தழுவுகிறாற் போன்றதொரு அபூர்வம்.கவிதை வானவில்லில் எப்படி வண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை விளக்குவதில்லை மாறாக வண்ணத்துப்பூச்சியின் நிறங்களை உணரச்செய்கிறது. இசையை எங்கனம் விளக்க முடியாதோ அப்படியே கவிதையையும். இசையை எங்கனம் பற்றிக் கொள்வது சாத்தியமோ கவிதையும் அங்கனம் இசை எப்படி புழக்கத்திலிருக்கும் ஒலிகள் ஓசைகள் மற்றும் குரல்கள் இவற்றைத் தனதே உட்கிரகித்து உருவாக்கம் பெருகிறதோ கவிதையும் அவ்வண்ணமே மொழியின் சொற்கள் மனிதனின் மனநிலை மற்றும் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை உள்வாங்கியபடி தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது. இசையும் கவிதையும் தனித்தும் ஒன்றையொன்று தழுவியணைத்தும் உயிர்த்துக் கொள்பவையும் கூட.
கவிதைகளை அணுகுவதில் நிகழக்கூடிய வெளிப்படையான சிக்கல்களில் ஒன்று அதை எப்படிச் சொந்தம் கொண்டாடுவது என்பதில் தொடங்குகிறது. தனி மனித அந்தரங்கத்திலிருந்து எல்லையற்ற திறந்த வெளியை நோக்கியதாக கவிதை முன்வைக்கப் படுகிறது. இன்னும் இதனை விரித்துச் சொல்லலாம். கவிதையை இயக்குகிற அகம் வாசிக்கிறவனுடையதாக எளிதாக மாற்றம் கொள்ளுகிறது. இறைஞ்சுதலோ சிபாரிசோ எதுவுமின்றி, பூட்டிய வாசலில் அன்றைய செய்தித்தாளை எறிந்துவிட்டுக் கடந்து செல்லக் கூடிய அதே தன்மையோடு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறி விலகுகிறான். தொடரோட்டத்தில் அடுத்தவருக்கு மாற்றித் தரப்பட்ட ஒளிச்சுடர் பெற்றுக் கொண்ட கரங்களுக்குப் புதிய பாரமாக மாறுகிற அதே கணத்தில் அதைத் தந்த கரங்களுக்குப் புதிய பார வெறுமையாக லேசாய்க் கூச்சம் தருவதும் கூச்சம் கொள்வதும் பக்கவாட்டில் நிகழ்ந்துவிடுகிறது.
கவிதை ஒரு அந்தரங்கத்தின் மீவருகையெனக் கொள்ளவேண்டியதாகிறது. மனிதர்களை உதிர்த்த பிறகான சம்பவங்களின் சாத்தியப்பாடு கவிதை. அதனூடாக, பெயர்க்குறிப்புகளென உயிர்த்துப் பிழைத்தல் சாத்தியமாகிறது. கவிதை யாருமற்ற இடத்தில் உரக்கச் சொல்லப்பட்ட ரகசியத்தின் அறிதலென எப்போதும் திறந்துவிடுவதற்குச் சாத்தியமுள்ள பூட்டப்பெறாத பேழை எப்படி நிகழ்ந்ததெனத் தெரியாமல் அதை நிகழ்த்தியவனே அதனொரு உபபாகமாக தன்னை வியந்தபடி விலகி நடக்கிற சாகசத்தின் ஒற்றை வருகை கவிதை. தன்னை அறிவித்தலும் நிராகரித்தலும் ஒருங்கே சாத்தியப்படுவது கவிதையின் ஒரு திசை.
கவிதை தன்னைக் கற்க விழைபவரின் அடுத்த இருக்கையில் அமர்ந்து தானும் கற்றுத் தேற முனையும் வினோதம். சொல்வதற்குத் தயக்கமாக இருந்தாலும் இன்னும் சிறு காலத்தில் இதுவும் பெரிதும் உறுதி செய்யப்படக் கூடும் “கவிதை மொழியின் ஆகச் சிறந்த தீமை”. இந்த உலகின் சிறந்த எல்லாமும் நல்லனவாகவே வகைமைப்படுத்தப் பட்டு வருவது சமூகம் என்ற கட்டமைப்பின் அறவிழிகளால் காணக் கிடைக்கிற காட்சியினூடான அனுபவ நிரந்தரம். ஆனால் கலையின் பிற தடங்களுக்கும் கவிதைக்குமான ஆதார இசை வேற்றுமையாகவே அதனைத் தீமை என்று வகைப்படுத்த முடியும்.
கவிதைக்கு ஒரு குறைந்தபட்சப் புரிதலைக் கோரும் எதிர்பார்ப்பு, எடுத்துச் சொன்ன பிறகும் எஞ்சக் கூடிய கூடுதல் தனிமை, விளங்கிக் கொள்ள முடியாத படபடப்பு, காலம் இருள் மரணம் மாற்றம் இன்னபிற ஏற்படுத்தித் தருகிற பேரச்சம், தொடர்பின்மை, மின்னலின் உட்புறமே காணக் கிடைத்த சின்னஞ்சிறு அன்பின் கடவுள் கணம், இழந்த அன்பு, மறக்க முடியாத ஞாபகம், இவை தவிர இன்ன பிற எதுவும் கவிதை என்றாகலாம்.
ஹில்டே டாமினின் மூன்று கவிதைகள்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஜெனிஃபர்
1 தலைதெறிக்கும் வேகத்தில்
நாம் அமர்ந்திருக்கும் ரயிலில்
எங்கே இறங்கவேண்டுமென
யாரும் விசாரிப்பதேயில்லை
ஒரு பாலத்தினூடாக நகர்கிறோம்
அது உடைந்து விடக்கூடும்
இந்தப்பாலமோ
இதற்கடுத்ததோ உடையலாம்
அப்படியொரு பாலத்தைத்
தலை தெறிக்கக் கடக்கும்போது கூட
என்னை
எத்துணை காயப்படுத்துகிறாய்
நானும் தானுன்னை.
2 கனவுகளின் வளர்தல்
கனவுகளின் வளர்தல் அச்சுறுத்துகிறது
என்னவோ இச்சுவர்களைக்
கடந்து பறப்பதற்கான
சிறகுகள் தொலைந்திட்டாற் போல்
கசிந்துருகி வேண்டுக
ஒரு கரத்தை ஒரு கதவை
சதையாலானதை, மரத்தாலானதை
3 வேருள்ள பறவைகள்
என் வார்த்தைகள்
வேருள்ள பறவைகள்
எப்போதும் ஆழ்ந்து
எப்போதும் உயர்கிற
தொப்பூழ்க் கொடி
நாளின் அந்தியில்
அவ்வார்த்தைகள் உறங்கிவிடுகின்றன
ஹில்டே பால்ம் என்ற இயற்பெயரைக் கொண்டவரான ஹில்டே டாமின் ஜெர்மானியக் கவிஞர் எழுத்தாளர் ஜெர்மானிய யூத இனத்தவரான ஹில்டேகார்ட் லாவென்ஸ்டைனின் மகளாக 1909 ஆமாண்டு பிறந்தார்.2006 ஆமாண்டு தனது 97 ஆவது வயதில் மரணமெய்திய ஹில்டே டாமின் அவரது காலகட்டத்தில் மிக முக்கியமான எழுத்தாளுமைகளில் ஒருவராவார்.சட்டம் தத்துவம் சமூகவியல் பொருளாதாரம் எனப் பலதுறை வித்தகம் கொண்டவர் டாமின் இங்கே,தடுத்து நிறுத்து, கப்பல்களின் மீவருகை, மரம் இன்னும் பூத்துக் குலுங்குகிறது, நான் உன்னை விரும்புகிறேன் போன்ற கவிதை நூல்கள் ஹில்டே டாமினுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தவை.
தனக்கென்று தனித்த கவிதா பாணியைக் கட்டமைத்த டாமின் மிக மெல்லிய இழைகளைப் பற்றியிழுத்து பேசாப் பொருள்களைப் பேசுவதன் மூலமாகத் தன் கவிதைகளைக் கனமானவையாக்கி முன்வைத்தமைக்காக அறியப்படுகிறார்.
தமிழினி வெளியீடாக ‘தாழம்பூ‘ எனும் தலைப்பில் பொன்முகலியின் கவிதைத் தொகுப்பு வாசிக்க நேர்ந்தது. நூற்றுக்கு அதிகமான கவிதைகளுடன் சமகாலத்தில் ஒரு தொகுப்பு எந்த அலுப்பையும் தராமல் மிக மெல்லிய நீர்க்கோலத்தின் நினைவுச் சுழலென மனதில் தங்கக் கிடைப்பது சிறப்பானது. கவிதை என்பது மாபெரிய தொந்தரவு அல்லது பலமுறை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துடன் அணுகவாய்க்கும் காணொளி ஆட்டத்து பலவுயிர் எதிரி. தன்னைத் தின்னக் கொடுத்தாலும் ஏற்கமறுத்துத் திருப்பி ‘நீயே கொல்’ என நிர்ப்பந்திக்கும் கறார்த்தன்மையுடனான எதிராளியை பொய்யாய்க் கொன்று நிசமாய்ப் பெருமூச்சு விடக்கூடிய தற்காலத்தின் இருள் முகடுகளுக்கிடையிலான இடைவித்தியாசங்களென பெருக்கெடுக்கின்ற கவிமனச் சிதறல்கள்.
பல நெடிய கவிதைகளுக்கு மத்தியில் சின்னஞ்சிறிய கவிதைகள் பலவுமாகக் கவர்கின்றன. சிறுகவிதைகள் ஆகக்கடினமானவை. அணுக எளியவை நெடுங்காலம் அதிர்தல் சாத்தியமுள்ளவை. கீழ்க்காணும் மூன்று கவிதைகளும் பொன்முகலியின் இருப்பை நெடிய காலத்திற்கு மேலெழுதித் தரவல்லவை.
பொன் முகலியின் மூன்று கவிதைகள்
1 உன் நினைவு அதிகமான
இந்நாளில் கிடைத்தது
உன் கடிதம்
மெல்லிய தூறலின் பின்னணியில்
பியானோவை நான் உணர்ந்தேன்.
2 கனிந்த பழங்கள்
மீண்டும் பூக்களாகின்ற பருவத்தில்
தாயின் முலை போல்
தன்னை அருந்தத் தருகிற
மரணம்
3 பிறகொரு நாள்
தூர மலைகளின்
பச்சை முகடுகளில்
தீபத்தின் நிழல்போல்
உன் முகம்
தெளிந்து மறைவதைக் கண்டேன்
பொன்முகலியின் கவிதைகள் சன்னமான பூச்சற்ற மெலிதற் சித்திரங்களைப் போலத் தோற்றமளித்தாலும் பேசுபொருளை, கூர்முள்ளின் நுனிவருடல் கிழியச் செய்கிற அருகமை இலைகள் காற்றின் வசமாவதைப் போல நிகழ்ந்துவிடுபவை. பெண் மனம் கவிதை இவற்றின் எல்லையற்ற இயங்குவெளி தனதான கவிதைகளை கனவின் அலைதல்களை மீட்பதற்கான நேரத் தத்தங்களாக நிகழ்த்திப் பார்க்க விழைகிற அதிகம் புழக்கத்திலில்லாத புதிய பிடிகளை தன் தொனியில் தன் மொழியில் வாதிட விழையும் உறுதியான முன்மொழிதல்கள் முகலியின் கவிதைகள்.
ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளுவதற்கான செயல்முறை என்ன? ஒரு கவிதையை எங்கே தொட்டால் அது திறந்து கொள்ளும்? வெண்ணெயைக் கத்தி கொண்டு அறுக்கிறாற் போல் அல்லது பயணகாலத்து சிக்கன ஷாம்பூ சாஷேயை ஓரத்தில் திறப்பது, பிளந்த மாதுளைக் கனியை அதன் துருத்துகிற முத்துகளை உதிர்ப்பதற்கு அணுகுவதில் காட்டுகிற அதே அலட்சியத்தோடு ஒரு கவிதையின் சொற்களை அணுக முடியுமா? பிணக்கூறாய்வு அறையில் புதிய மருத்துவன் தன் நடுங்கும் விரல்களைச் சமாளித்தபடி சிறுகத்தியைத் தாழ்த்துகையில் சடக்கென்று அதனை வாங்கி, தன் அனுபவத்தின் கரவிரல்களால் சட்டென்று இறந்தவனின் நெஞ்சகத்தைப் பிளந்து காட்டுகிற பழகிய மருத்துவனின் லாவகத்தோடு அணுகலாமா? அல்லது களவெடுக்க வந்த இடத்தில் இருளை விழிகளால் நிரடியபடி இடையில் தட்டுப்பட்ட அதுவரை உறங்கியவனின் விழிப்புக் கணம் நொடிப்போழ்தில் வாய் பொத்தி உயிரறுத்து இன்னும் திசையில் ஆழ்கிற நெடுங்காலக் கள்வனின் பாதத் தடங்களென உள்ளேகலாமா? பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கி உயிரை விழிகளில் தேக்கிய வண்ணம் காத்திருந்த முதிய உயிர் ஒரு பறவையின் இடம் நீங்குதல் போல் நிகழும் கணம் திரும்பிவிட்ட பிரியக்கார வருகையின் கண்ணுகு நீர்த்துளிகள் போல் தோன்றலாமா? ஒரு கவிதையை எங்கனம் திறப்பது? கவிதையை யூகிக்க, கவிஞனை யூகித்தல் சரியா தவறா?
கவிதையைத் திறக்கையில் கவிஞன் அங்கே ஒரு தடையாக மாறுவதை பொருட்படுத்தாமல் அவனைப் புறந்தள்ளி விட்டுக் கவிதையினுட் புகுவது ஒரு வழி. கவிஞனை யூகித்தவண்ணம் அவனை உட்படுத்தியவாறே கவிதைக்குள் பயணிப்பது தவறு என்பதில்லை. அதன் நிச்சயிக்கப் பட்ட அசௌகரியங்களினூடாகவே கவிதை அனுபவமாகிறது. இன்னது எனத் திருப்புகிற துல்லியம் சாத்தியமல்ல என்றாகையில் இரண்டில் எதாவதொன்றை முயன்றபடி கவிதையைக் கடக்க வேண்டியதாகிறது.கவிதை அரிதான சொற்களை எடுத்துத் தர விழைகிற காகிதக்கிளி அல்லது சந்ததிகளினூடாய் வழிந்தபடி தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய மொழியிடை மௌனத்தின் தற்கால உயிர்த்தலுக்கு முன்பின்னான அர்த்தங்களின் ஆட்டம்.
முதல் கவிதைத் தொகுதி என்பது தனித்த கொண்டாட்டம். அதிலிருந்து மாறி மாறி ஒளிர்ந்தபடி கவிதையால் ஆகக் கூடிய சஞ்சாரத்தின் கால-மாற்றத்துக்கப்பால் முதல் தொகுதி இளமைக் காலத்துப் பழுப்பேறிய புகைப்படம் போல மதிப்புக் கூட்டிய மனமலராகிறது. நினைவுகளின் தொகுப்பாளனாக வாழ்வதல்லவா மனிதனுக்கு ஆகக்கூடிய பெருஞ்சிறப்பான வாழ்முறை
கல்வெட்டு
சுகிர்தராணியின் கவிதைத் தொகுதி கைப்பற்றி என் கனவு கேள் பூங்குயில் பதிப்பகம் வந்தவாசி வெளியீடு.அதன் தன்னுரையின் இறுதிப் பத்தியாக சுகிர்தராணி எழுதியிருக்கும் வரிகள் பின்வருவன
“என் கவிதை வேர்களைப் போல உங்கள் பார்வை பூக்களைப் போல வேர்களுக்குப் புரியும் பூக்களின் வாசனை பூக்களுக்குத் தெரியும் வேர்களின் பாதை வேருக்கும் எனக்கும் வித்யாசம் ஒன்றுமில்லை. இதயத்தை இழந்தால் வேர்களைத் தொடலாம்.சலனம் தான் கவிதைக்கும் ஆதாரம். எனக்கும்.,
நீங்கள் சலனப்பட்டால் எழுதுங்கள்.”