கவிதையின் முகங்கள் 8

                            கவிதையின் முகங்கள்                                 
                             8 ஞாபகத்தைப் பிளத்தல்                            

 


கவிதை குறித்த அபிப்ராயங்கள் எல்லாமே மாறும் என்பது நியதி என்றால் கவிதையும் மாறும்தானே? எதைப் பற்றிய நிலையான அபிப்ராயமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே எனச் சொல்லப்படும்போது அது யாவற்றுக்கும் பொதுவான என்கிற பேருண்மை ஒன்றை முன்வைக்கிறது அல்லவா? Free verse என்கிற தளையற்ற சொலல்முறை ஒரே பாய்ச்சலைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் என்று எப்படி நம்புவது? ஒரு காலத்து மாபெரும் பிடிமானம் அடுத்த காலத்துப் பகடி என ஆவதை மறுதலிப்பது எங்கனம்? வெள்ளெழுத்துக் கண்ணாடி மற்றும் குளிர் கண்ணாடி என இரண்டு தேர்வுகளில் ஒன்றைப் போல் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் கவிதைகளை அணுகுவதற்கும் இருவேறு கண்ணாடிகள் இருக்கின்றனவா? பேசியும் பேசாமலும் இந்த நூற்றாண்டின் இருபது வருடங்கள் கழிந்திருக்கின்றது. இன்னும் கடந்த நூற்றாண்டை வழிபடுவதிலேயே காலம் கழிகிறது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் என்று அதே ஒரே ஒன்றைப் பற்றிக்கொண்டு, உலவுவது அயர்ச்சியைத் தருகிறது. உலகம் மாறியிருக்கிறது என்பதை ஒருபுறம் இட்டு, மறுபுறத் துலாத்தட்டில் மொழியும் கவிதையும் நடத்துகிற ஆலிங்கனத்தை இட்டுப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரே விடையற்ற விடை சூன்யத்தை நிரப்புகிறது. எதுவும் கூடிக் குறையாததால் எதோ ஒன்று கூடுகிறது அல்லது குறைகிறது.

தனக்கு மட்டும் மறைத்து வைத்திருக்கக்கூடிய குழந்தமைப் பிரியத்தின் பிடிவாதப் பற்றுதலாகவே தொடர்ந்துகொண்டு இருக்கிறது கவிதையின் தேட்டம். எல்லோரும் வாழ்ந்த வாழ்வில் யாராவது எழுதி, யாராவது வாசிக்கிற ஒன்றாக இப்போது கவிதை இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்வின் ஆதார மதிப்பீட்டுச் சிதறல்களும் நிர்ப்பந்தங்களும், புற வாழ்வின் அழுத்தமும் ஒரு பரவலாக்கப்பட்ட கலை முயல்வாக அல்லது விடுபடுதலாக கவிதையை ஆக்கிக்கொண்டிருக்கிறது. ஆறில் ஐந்து பேர் கவிதை எழுதுகிற காலத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டில் நோட்டுப் புத்தகங்கள் விலையுயர்ந்த பண்டமாக அருகிக் கிடந்தது, காகிதத்தின் மீது ஏற்றிச் சொல்லப்பட்ட புனித மதிப்பீடு, ‘நாங்கல்லாம் சின்னூண்டு பென்சில் வெச்சு பரீட்சை எழுதினோமாக்கும்’ போன்ற சுயநலத்தின் தியாகப் பெருமிதம், சென்ற நூற்றாண்டின் இயல்பாக தனி மனிதனுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கூச்சம் இவை எதுவும் இந்தக் கணத்தில் உயிர்த்திருக்கவில்லை. தனிமையை வெளிப்படுத்துவது இன்று ஒரு சுலப காரியம். காலமும் முந்தைய காலத்தின் அனேகத்தை மாற்றித் திருத்தி அமைப்பதை எல்லாப் பொழுதுகளிலும் ஊக்குவித்தபடி இருக்கிறது. கவிதை அதன் சென்ற நூற்றாண்டின் அந்தஸ்தை மொத்தமாக இழந்துவிட்டது எனச் சொல்லத் தோன்றுகிறது. எந்த ஒன்றின் அழிவையும் அதன் ஆகமங்களைக் கைவிடுவதிலிருந்து தொடங்க முடியும். புதிய மற்றொன்றை ஏற்படுத்துவதிலிருந்து ஏற்பது வரை எதுவுமே நிகழாதபோதும், இந்தக் கைவிடுதல் காலம் கூர்ந்து நோக்க வேண்டியதாகிறது.

கவிதை, தன் தற்பொழுதிலிருந்து முந்தையதை கருணையற்று உரித்துப் போடுவதிலிருந்து அடுத்ததாக மாற விழைகிற கால சர்ப்பம். மொழி, பல விசித்திரங்களிலிருந்து யதார்த்தங்களைத் தொகுத்தெடுக்கக் கூடியது. காகிதமும் அச்சும் கிடைப்பதற்கு முன்னால், கலையும், கவிதையும். மொழியும் எழுத்து வல்லமை, சொல்பொருளறிவு, பேச்சுத்திறன் ஆகியவற்றுக்கிடையிலான அறிதல் அறியாமை இவற்றிடையிலான வேற்றுமை விகிதமொன்றைக் கொண்டிருந்தாற் போலவே கூடியும் குறைந்தும் அடுத்தடுத்த காலங்களுக்கு இந்தக் கணக்கை மேலெழுதி வந்திருக்கிறது. பயன்பாட்டின் பன்மைத் தன்மை அனுமதிப்பதன் பேரில் மொழியும் அறிவியலும் ஒன்றுக்கு ஒன்று உபகரணங்கள் ஆகின்றன. அந்த வகையில் தன் விரல் பிடித்து எழுத்துக்களை எழுதிப் பழகி, அதன் மூலமாக மொழியின் அடுத்தடுத்த அடுக்ககங்களுக்குள் நுழைந்து, மொழியின் வாயிலாக, மொழி மற்றும் பிற அறிதல்களைக் கைக்கொண்ட அறிதலின் முன் சமீப முறை முற்றிலுமாகக் கைவிடப்பட்டு எழுத்துக்களை எப்படி எழுதுவது என அறியாமலேயே தொடுதிரை முறையில் அடுத்தடுத்த நகர்வுகளுக்குச் செல்லுவதன் மூலமாக, முழு மொழியறிவையும் பெற்றுவிடச் சாத்தியமுள்ள முதல் தலைமுறையை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெரும் கூட்டத்திலிருந்து எழுதப் படிக்கத் தெரிந்த வேறொரு கூட்டத்தை மொழி உற்பத்தி செய்த நேர்மாறல் நிகழு சாத்தியம் ஆனது. அதுவே இன்று எழுதத் தெரியாமல் எழுதுகிற வேறொரு புதிய உட்பிரிவு ஒன்றைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. கவிதை இதனுள்ளும் இஃது கவிதையினுள்ளும் பொருந்தத் தக்கது.

  ஏமாற்றங்கள்

 பிலிப் லார்க்கின் 
தமிழில் தென்றல் சிவக்குமார்


“உண்மையில் எனக்குப் போதைப்பொருள் புகட்டப்பட்டது, அதன் தீவிரம் என்னை மறுநாள் காலை வரையில் பிரக்ஞையற்றுக் கிடக்கும்படிச் செய்தது. நான் சிதைக்கப்பட்டிருக்கிறேன் என்பதைக் கண்டறிந்தபோது அதிர்ந்து போனேன், சில நாட்கள் வரையில் யாராலும் என்னைத் தேற்ற முடியவில்லை, ஒரு குழந்தையைப் போல என்னைக் கொன்றுவிடவோ அல்லது சிற்றன்னையிடம் திருப்பி அனுப்பி விடவோ கேட்டு அழுதுகொண்டே இருந்தேன்”


(((((((மேஹ்யூ, லண்டன் லேபர் அண்ட் லண்டன் புவர் நூலில்))))))))))))

எவ்வளவு தொலைவிலிருந்தும் அந்தத் துயரை என்னால் ருசிக்க முடிகிறது,
தண்டுத் துகள்களுடன் கசந்து வழிந்ததை அவன் உன்னை விழுங்கச் செய்தான்.
எப்போதாவது பதிந்த கிரணங்கள் விரைவாக
வெளிப்புறச் சாலையில் விரையும் கவலைகொண்ட வாகனச் சக்கரங்கள்,
அங்கேதான் லண்டன் மாநகர் ஒரு மணப்பெண்ணைப் போல மறுபுறம் வளைகிறாள்,
அந்த ஒளி, உயர்ந்த அகன்ற அந்த ஒளி
காயங்கள் ஆறுவதற்குத் தடை விதிக்கிறது,
மறைந்திருக்கும் அவமானத்தை வெளிக்கொணருகிறது.
அவசரமற்ற அன்றைய நாள் முழுக்க
உன் மனம் கத்திகள் நிரம்பிய இழுப்பறையைப் போலத் திறந்து கிடந்தது.

சேரிகளும், ஆண்டுகளும் உன்னைப் புதைத்தன. என்னால் முடிந்தாலும்
உன்னைத் தேற்றுவதற்கு நான் துணிய மாட்டேன்.
வாதை என்பது மிகக் கச்சிதமானது,
ஆனால் ஆசை ஆளுமிடத்தில்,
அளவீடுகள் தவறாகவே விழுகின்றன என்பதைத் தவிர
வேறென்ன சொல்லிவிட முடியும்?
ஏனெனில்,
அந்தப் படுக்கையில் கிடந்த உனக்குக் கிடைத்த ஏமாற்றம்
மூச்சடைக்கும் படிகளில் தடுமாறியபடி ஏறி
முழுநிறைவின் தனித்த மாடத்துக்குள் வெடித்துப் புகுந்தவனின்
ஏமாற்றத்தைக் காட்டிலும் குறைவானதென்பதை
நீ கண்டுகொள்ளப் போவதே இல்லை

பிலிப் லார்க்கினின் மேற்காணக் கூடிய கவிதை மாறாத அதிர்வுகளை சாட்சியப்படுத்துகிறது. வெறுமையை அமைதியினூடாக எப்போதும் நிர்ப்பந்திக்கிற ஆற்றல் கவிதைக்கு உண்டு.மொழி விட்டு மொழி பாய்ச்சப்படுகையில் உணர்வுகளின் பொதுமை மாபெரிய கூடாரமாக கற்பனைக்கு அப்பாற்பட்ட விரிதலை சாத்தியப்படுத்துகிறது.

புத்தகத் திருவிழாவின்போது கேபிள் சங்கர், கணிணி உதவியுடன் கவிதைகள் எழுதுப்படுவதாக ஆரம்பித்த ஓர் இழை, ஒரு நெடிய உரையாடலாகத் தொடர்ந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த சுபா செந்தில்குமாரின் ‘கடலென்னும் வசீகர மீன் தொட்டி’ என்ற தலைப்பிலான புத்தம்புதிய கவிதைத் தொகுப்பின் ஒரு கவிதையை அது ஏன் எங்கே கவிதையாகிறது என்கிற உரையாடலை மிக எதிர்பாராத ஒரு தினத்தின் ஒரு தருணத்தில் பேசவாய்த்தது. கவிதை எப்போதும் யாரையாவது பேச வைத்துக்கொண்டே இருந்துகொண்டே இருக்கத் தெரிந்த ஒரு வஸ்து என்பதை இன்னொருமுறை உறுதிப்படுத்தியது. நூறு ஆண்டுகளுக்கு அப்பால் யாராவது எதையாவது பற்றி எதாவது பேசிக்கொண்டு தானிருப்பார்கள், அது கவிதை ஆகவும் இருக்கலாம், கவிதை பற்றியதாகவும் இருக்கலாம், கவிதையற்றதாகவும் இருக்கலாம். அதனதன் பிரமாதம் அது அதற்கு. கேணி கிணறு என்பனவெல்லாம் நிசத்திலிருந்து மெல்லத் தம்மை விடுவித்துக் கொண்டு வெறும் சொற்களாய் எஞ்சுவதற்கான நிர்ப்பந்த காலத்தில் தொடர்ச்சியாகக் கவிதை என்ற கலைவடிவத்தின் உட்புறம் கேணி கிணறு ஆகியவற்றின் எழுதலும் இருத்தலும் வீழ்ச்சியும் என எல்லாமும் தொடர்ச்சியாகக் கையாளப் படுகையில் மனித மனம் என்பதன் உணர்வுகளைத் தொகுக்க விழையும் இன்னுமொரு அரூப இழையைக் கண்டறிய இயலுகிறது.

ஆழ்கிணற்றில்வாப்பாவின் மூச்சு - எம் எம் பைசல் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com
விஷவாயுத்
தாக்கி இறந்த கந்தனின்
சொப்பனங்கள்
ஊதிப் பெருத்து
மிதக்கின்றன
நீர் மேல்.

 

ஒரு கவிதை எதையும் எதிர்பாராமல் நம்மை வந்தடைய வேண்டும். மிக முக்கியமாக எந்தப் பரிந்துரையும் இல்லாமல் வாசிக்கக் கிடைக்கும்போது விதை சொந்தக் குரலில் பாடப்பட்ட மனசுக்குப் பிடித்த பாடலைப் போல அல்லது எவ்வளவு முயன்று தோண்டிக் குழியில் புதைத்தாலும், மிக நிச்சயமாக இதை மறந்துவிட்டோமென்று உறுதிப்படுத்திக்கொள்ளுகிற கணத்தில் தன்னை நினைவுறுத்திவிடுகிற ஞாபகப் பிளத்தல் போல ஒரு தொந்தரவின் வருகையாக நிகழ வேண்டும். ஒரு நல்லிசையின் முணுமுணுத்தலுக்கு இல்லா ஜன்னலைத் திறந்து பார்க்க விழையும் கரங்களைப் போலவே நல்ல கவிதையின் தேடல் என்பது எதிர்பாராமையின் மீது மிதந்துகொண்டிருக்கிற நதிப் பொருள். எம்.எம்.ஃபைஸல் எழுதி, காலச்சுவடு வெளியீடாக பிரசன்னமாகியிருக்கும் “வாப்பாவின் மூச்சு” அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதி எனத் தெரிகிறது.


                                      தாமரை பாரதியின் 3 கவிதைகள்


1.
பழைய பழக்கம்May be an image of 2 people and sunglasses
புதிய பொருளுடன்
கைவர
மறுக்கும்
*
2.அக்கினி நட்சத்திரம்
______________________
கோடையின் உக்கிரம் போல்
வலி உச்சமடைய
பித்தம் கொண்டு அலைகிறது
மனப் பூ
*
3. சூன்யத்தின் கொடிய கரங்கள்
என் கழுத்தை நெறித்தாலும்
அன்பின் வாழ்த்துதல்களால்
பெரிய பதாகைகளுடன்
மீண்டெழுவேன்.
*
கடற்காகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘தபுதாராவின் புன்னகை’ தாமரை பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு. நெடிய காலம் ஒன்று தன் கவிதைகளைத் தொகுக்காமல் தன்னை அவற்றுள் மேலும் அதுகளைத் தன்னுள் பரஸ்பரம் ஒளித்துக்கொள்வது ஒரு சூசகம். யாருமறியாத சேகரமாகத் தொகை செய்கையில் பிராயச் செறிதலுடன் கனத்துக் கிடைக்கும் கவிதைகள். தாமரை பாரதி அழுத்தமும் திருத்தமுமான கூர்ந்த மொழியை, கவிதைகளில் தொனிக்கச் செய்கிறார். கூடவரும் காலம், கூடி வரும் கவிதை.

எழுத்து எல்லோர்க்கும் எல்லாப் போழ்துகளுக்குமான ஒன்றல்ல. உண்மையில் அது எப்போது வேண்டுமானாலும் அற்றுப் போவதற்கான வாய்ப்புள்ள தற்காலிக அனுபவம், தான் நிகழ்கிறவர்களை மாற்றிக் கொள்ளுவதன் மூலம், தன்னைப் புதுப்பித்துக்கொள்ளுகிறது. எவனொருவனும் தன் கவிதைகளை எழுதுவது நின்றுபோகிற புள்ளியில் தன்னைப் போன்ற கவிதைகளை எழுதத் தொடங்குகிறான். தன் போலவே எழுதும் இன்னொருவனைப் போலவே அந்த எழுத்து மாறுவதை விரிக்கிறான். தன் போன்றதைப் போன்ற இன்னொன்றை தன்னைவிட இன்னொருவன் ஒரு சிட்டிகை லாவகம் அதிகமாகக் கையாளுவதைப் பார்த்துப் பதற்றமுறுகிறான். அவனது இருத்தல் கிரீடம் தாங்கியின் வயோதிகக் காலம் போல் இடத்தைக் காலி செய்து கிளம்புவதை நிர்ப்பந்தித்து அவனோடு உடனிருக்கிறது. இந்தக் குரூரக் காத்திருத்தல் காலத்தில் எதாவது செய்து இரண்டாம் முறை உதித்துவிடுவதற்காகக் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளுகிறான்.

காலம் பேருந்தில் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிக்கிறவனின் வியர்வை பொங்கும் கரங்களென அவனை மெல்லக் கைவிடுகிறது. ஒரு நம்ப முடியாத அற்புதத்தைப் போலவே தான் நிகழத் தொடங்கியதை பிரஸ்தாபித்தவன் தன் கைப்பிடிக்கு அகப்படாமல் பூட்டப்பட்ட கூடத்தின் உள்ளே இடவலமாய் எப்போதும் கடந்துகொண்டிருக்கிற தன் பழைய புரவியை என்ன செய்தாவது மீண்டும் அடக்கி அதன் மீது ஏறி அமர்ந்துவிட மாட்டோமா என்று ஏங்குகிறான். விசுவாச ஒவ்வாமை கொண்ட அந்தக் குதிரை அவன் நெருங்கும்போதெல்லாம் அவனை உரசிச் செல்வதன் மூலமாக காயச் சிராய்த்தல்களை அவன் உடலெங்கும் ஏற்படுத்திச் செல்கிறது. வேறு ஒரு தோற்றப்பாட்டில், அந்தக் குதிரையின் மீது வேறொருவன் அமர்ந்திருப்பதைக் கானலற, யாரேனும் மெய்ப்பித்துத் தர மாட்டார்களா என்று மறுகுகிறான். மனவிருப்பக் கடவுளைத் தொலைத்த நிறமிழந்த பார்வையாளனைப் போலத் தன் மொழிமுதுமைக் காலத்தில் தட்டுத் தடுமாறுகிறான். தன் போலச் செய்த பிரதிகளைச் சிதையூட்டி, கணப்பொழுது குளிர்நீக்கம் செய்யத் தலைப்படும் மாபெரிய துரோக ரயிலென அவனை நோக்கி வரப்போகும் காலத்தை எதிர்கொள்ளப் பிறரறியாத் தண்டவாளங்களில், திசையும் எதிரும் அறியாமல் ஓடி மறைகிறான். எழுத்தே பித்தும் பிறழ்வும் விடுபடுதலுமாகிறது.