குடுவை
குறுங்கதை
அவள் அப்படித்தான். அந்தப் பேரில் எழுபதுகளில் ஒரு திரைப்படம் வந்திருந்தது. எல்லோருமே அந்தப் படத்தைத் திட்டிக் கொண்டே பாராட்டிக் கொண்டே வெறுத்துக் கொண்டே பேசிக் கொண்டே நிராகரித்துக் கொண்டே தேடிக் கொண்டே கடந்து சென்றார்கள் என்று அவளது காவ்யா சித்தி சொல்லியிருக்கிறாள். “அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும் உன் அம்மாவுக்கு” என்பதைச் சொல்லத் தான் இத்தனையும் சொல்வாள்.
இவள் பேரும் மஞ்சுதான். இவள் வாழ்க்கையிலும் டாகுமெண்டரி படமெடுக்கிறேன் என்று புதுமை பேசிக் கொண்டு அருண் என்ற பேரிலேயே ஒருவன் வந்திருக்கிறான். “நீ தான் என் உயிர்” என்று பேசிவிட்டுச் சலனதாகம் அடங்கிய வேறோரு பொழுதில் அவள் காது பட “மஞ்சு எனக்குத் தங்கை மாதிரி” என்று வசனம் ஒப்பித்து விட்டுக் காணாமல் போன மனோ என்ற வேறொருவனும் இருந்திருக்கிறான். இவர்களைத் தவிர அவள் பணியாற்றும் நிறுவனத்தின் அதிபன் தியாகுவும் “உன்னப் பிடிச்சிருக்கு” என்றான். ஒரு கட்டத்தில் ‘என்னடா இது 45 வருடத்துக்கு முன்பாக எடுக்கப் பட்ட திரைப்படத்தின் அதே கதையை மீண்டும் மீண்டும் நடத்தவா பார்க்கிறீர்கள்’ என்று அவள் வெறுப்பானாள்.
தன் முகப்புத்தகக் கணக்கில் நண்பர்களாக இருந்த அத்தனை ஆண்களையும் நட்புவிலக்கம் செய்தாள். ஃபோன் புக்கில் இருந்த ஆண்களின் நம்பர்களையும் அழித்தெறிந்தாள்.
தன் ப்ளாட் விட்டால் வேலை விட்டால் மறுபடி ப்ளாட் என்றே சுழன்றது அவள் பூமி.
மஞ்சுவுக்கு நெடு நாட்கள் கழித்து ஜினோ என்ற ஒருவன் அறிமுகமானான். அலுவலகத்தில் புதிய பாஸ் அவன். மனத்திலிருந்து அணுகாமல் வாழ்க்கையை அறிவிலிருந்து அணுக முயன்றான். அதே நேரத்தில் உணர்வுகளின் மெல்லிய இசைமீட்டலுடனும் தென்பட்டான். மஞ்சுவுக்கு ஜினோ மேல் கவனம் லயித்தது.
மீண்டும் நெடு நாட்களுக்கப்பால் புன்னகைக்கத் தொடங்கியிருந்தாள் மஞ்சு. CONTRA வண்ணத்தில் சற்றே பெரிய நெற்றிப் பொட்டை அணிந்துகொண்டாள். புருவங்களை லேசாய்த் திருத்தியதும் போதும் என்று ஸ்பாவிலிருந்து எழுந்து கொண்டாள். அந்த அழகு நிலையத்து உபராணி “மேடம் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர் இருக்கிறது எட்டாயிரம் மதிப்புள்ள பேக்கேஜ் வெறும் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும் இன்று ஒரு நாளோடு முடிவடைகிறது” என்றவளிடம் “இல்லை பெண்ணே எனக்கு நான் போதும் வேறாரும் வேண்டாம்” என்று கன்னத்தில் தட்டி விட்டுக் கிளம்பினாள்.
ஜீனோ அவளைத் தேடி அவள் இருக்கைக்கே வந்தான். “இன்றைக்கு நாமிருவரும் ஒரு காபிக்கு சந்திக்கலாமா?” எனக் கேட்டான். அவள் அவனிடம் “இதோ பார் எதாக இருந்தாலும் ட்விட்டரைப் போல் குறளைப் போல் சுருக்கமாகப் பேசு. சுற்றி வரும் பாதைகள் கொண்ட பயணங்களை வெறுக்கிறேன். சம்மதம் என்றால் ஏழு மணிக்கு சந்திக்கலாம். ஏழே கால் வரைக்கும் நீ ஆற்றப் போகும் பேருரைக்கு என் காதுகளைத் தானம் செய்வேன். தட்ஸ் ஆல்” என்று முடித்தாள்.
ஜீனோ காற்றில் கைமுஷ்டியை மடக்கி ஹூர்றே என்றான். சப்தமின்றிக் கத்தினான். “நீ வருகிறாய் போதும் நீ பேசுகிறாய் போதும் டுடே இஸ் தி டே” என்றவன் “வீடு வரைக்கும் போய் வருகிறேன். மாலை ஏழு மணி கஃபேதேரியாவில் நம் அத்யந்தத்துக்கான மேசை தயாராக இருக்கும். ஏமாற்றிவிடாதே இந்தக் கட்டிடத்துக்கு எத்தனாவது மாடி மொட்டை மாடி” என்றான். அவள் சிரித்துக் கொண்டே “கிளம்பு.. சாக்லேட் பய்யன் ரோலெல்லாம் உனக்கு ஆவதில்லை” என்று அனுப்பினாள்.
அன்று மாலை- சொன்ன நேரம்- முன்பே சித்தரித்த காதல் இருள்.
“ஸோ…இவையெல்லாம் உனக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. என்னிடம் சொல்லி விட்டாய் அல்லவா..அழி.அத்தனையையும் அழி.நாம் என்ற சொல்லிலிருந்து தான் இந்தப்ரபஞ்சமே தொடங்கப் போகிறது. நாம் வாழலாம். நாம் என்ற சொல்லின் உட்புறம் நீ மாத்திரம் தான். நம்பு” என்றான். அவன் உதடுகள் துடித்தன.
“ஜீனோ…நீ உன் வயதை விடச்சிறியவனா..? இத்தனை குதூகலமாகவே இருக்காது வாழ்க்கை. இன்னும் யோசி. நான்…நான்…”என்றவள் வேறு புறம் பார்த்தாள்.
“நீ போதும் மஞ்சு. எதுவும்…ஐ ரிபீட்…எதுவுமே பேசாதே ப்ளீஸ்”அவள் எழுந்து கொண்டாள். “நான் உன் வீடு வரை வரலாமா? “அவனும் வந்தான். அவனுக்கு இந்த தினத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்று பரபரத்தது. ‘இந்த நாளே முடியாமற் போயேன். நீண்டு கொண்டே செல்லேன். எதற்கு நாளை என்றொரு தினம்…நீயெனும் தேவதையே நிரந்தரியேன் ப்ளீஸ்….’என்று இறைஞ்சினான். செல்லும் வழியில் அக்வேரியம் ஒன்றில் கால் டாக்சியை நிப்பாட்டி அவள் மட்டும் இறங்கிச் சென்று சின்னஞ்சிறிய மீங்கள் வளர்க்கும் குடுவை ஒன்றினை கையில் ஏந்தி வந்து ஏறினாள்.
அவள் வசிக்கும் அபார்ட்மெண்டின் வாசலில் சென்று கால்டாக்ஸியில் இறங்கிக் கொண்டார்கள். லிஃப்டில் ஏறி எத்தனையாவது மாடியிலோ வெளிப்பட்டு மஞ்சுவின் மனையுள் நுழைந்தார்கள். “நல்ல ஃப்ளாட்” என்றான்.
அதற்கப்புறம் கொஞ்ச நேரம் வேறேதோ பேசியபடியே இசை கேட்டபடியே ஆளுக்கு ஒரு மடக்கு ஒயின் அருந்தியபடியே “நம் முதல் முத்தம் ப்ளீஸ்” என்றவனை அவள் பெரிதாக ஆட்சேபிக்க வில்லை. “இன்னும் இன்னும்” என மூர்க்கமானவனை “நோ…இன்றென்பது இத்தனை தான்” என்று கடுமையாக மறுத்தாள்.
இந்த கருப்பு சோஃபாவில் வந்து உட்காரேன் என்றாள் லேசாய்க் கிறங்கும் மொழியில்.அப்படியே செய்தான் ஜீனோ. சற்றே தள்ளி தானொரு கூடைச்சேரில் அமர்ந்திருந்த மஞ்சுவின் முகம் உணர்வுகளற்ற புன்னகை ஒன்றினை அணிந்திருந்தது. லேசாய் வாயினுள் குழறிற்று. எழலாமா எனப் பார்த்தான். முடியவில்லை.
“ஜீனோ.. நான் ஏன் உன் காதலை உடனே ஏற்றேன்? எனக்கு எப்படி மேலும் ஒரு ஆணின் மீது நம்பிக்கை வரும்? எனக்குப் போதும் போதும் என்று அனுபவங்களத் தந்துவிட்டவர்களின் மீது எனக்கெப்படி பரிவு வரும்.? ஆனாலும் நீ பாவம். நீ என்னோடு வந்த அத்தனை கணங்களிலும் அத்தோடு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. உன் எல்லாக் கதவுகளையும் நீ அடைத்துக் கொண்டாய். ஹ..நானென்ன செய்வதாம்..?” இப்போது வலுவோடு எழ முயற்சித்தான்.சரக்கு சரக்கென்று நாலு திசைகளிலும் இரும்புக் கதவுகள் மூடின.
“என்ன இது” அலறினான் ஜீனோ.
“இரு ஜீனோ. இது வழக்கமான கதையில்லை. வாழ்க்கை வெறுத்திருந்த ஒரு நாளில் நான் அந்த மஞ்சுவை சந்தித்தேன். முதுமை எந்தவகையிலும் அவளது உள்ளத்தைக் குலைத்திருக்கவில்லை. அவள் என்னிடம் ஒரு அருமருந்துக் குப்பியைத் தந்தாள். அதை ஒரு சொட்டு ஒயினோடு கலந்து விட்டால் போதும். ஆண்கள் சின்னூண்டு பொம்மை மீன் போலச் சுருங்கி விடுவார்கள். அவர்களைப் பராமரிப்பது அதன் பின் ரொம்பவே எளிது என்றாள். நான் நம்பாமல் தான் அதனைப் பெற்றுக் கொண்டேன். முதலில் அருணிடம் அப்புறம் மனோவிடம் முயற்சித்தேன். பிறகு தியாகு..அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தார்கள். இப்போது என்னிடம் ஆறு பொம்மை மீன்கள் இருக்கின்றன. உன் எண் ஏழு. இன்னும் இரண்டே நிமிடத்தில் நீ ஒரு சின்னூண்டு மீனாக மாறிவிடுவாய். வழியில் வாங்கினேனே அந்தக் கண்ணாடிக் குடுவையில் தான் இனி நீ உன் ஆயுளெல்லாம் நீந்தப் போகிறாய்” என்றாள்.ஜீனோ பயத்தோடு காலிக் குடுவையைப் பார்த்தான். “வெளாடாத…என்னை விடு” என்றான் சார்பற்று உலர்ந்த குரலில்.
“அங்கே பார்த்தால் அப்படித் தான் தோன்றும். இங்கே இந்தப் பக்கம் பார்” என்று சிரித்தாள். அவள் கண்காட்டிய திசையில் வரிசையாகக் கண்ணாடிக் குடுவைகளுக்குள் காதல் வழியும் திறந்த விழிகளோடு திரவ நீச்சலிடும் அருண் சிவா தியாகு இன்ன பிறரைப் பார்த்தான் ஜீனோ.