பாப்கார்ன் படங்கள் 6
சட்டம்

பறக்காத ப்ளேன் – பரிதாப வில்லன்


ராஜ் கோஸ்லா இயக்கத்தில் சலீம்-ஜாவேத் எழுதிய திரைக்கதை தோஸ்தானா என்று எண்பதாம் வருடம் வெளிவந்தது. 4 பிலிம் பெயர் விருதுகளை வென்ற படமிது. லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் ஆனந்த் பக்.ஷி பாடல்களை எழுத எண்பதாம் வருடத்தின் அந்த ஊர் தீபாவளி ரிலீஸ் இந்த படம்.ராஜ் கோஸ்லா 35 வருட காலம் இயக்குனராக செயல்பட்டு இருபத்தி ஆறு படங்கள் இயக்கியவர். அழுத்தமான கதைகளைக் கொண்ட படங்களை இயக்கியவர் ராஜ். இந்தப் படத்துக்காக முகமத் ரஃபி மற்றும் கிஷோர் குமார் இணைந்து பாடிய சலாமத் ரஹே தோஸ்தானா ஹமாரா பாடல் மனத்தை உருக்கும்.தோஸ்தானா அமிதாபச்சன் இன்ஸ்பெக்டர் விஜய் ஆகவும் சத்ருகன் சின்கா வழக்கறிஞர் ரவி ஆக நடித்த படம். பிரேம் சோப்ரா, அம்ரிஷ் புரி, ஹெலன், பிரான் உள்பட பலரும் நடித்த படம்.

இந்த படத்தை கே.பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.விஜயன் இயக்கத்தில் தமிழில் சட்டம் என தயாரித்தார் இந்தியில் பிரான் நடித்த டோனி எனும் போலீசுக்கு துப்பு கொடுக்கும் வேடத்தில் பாலாஜி நடித்தார். கமலுக்கு ஜோடி மாதவி சத்ருகன் இந்தியில் ஏற்ற வேடத்தில் சரத்பாபு நடித்தார். என்னை பொறுத்தவரை அந்த வேடத்தில் ரஜினி நடித்திருந்தார் என்றால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் அத்தனை ஸ்டைலான, நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் அது. கமலுக்கு இணையான நாயக பிம்பம் கொண்டவர் என சரத்பாபுவை சொல்ல முடியாது. இந்த படத்தில் தமிழில் ஜெய்சங்கர், விஜயகுமார், V.கோபாலகிருஷ்ணன், ஒய் ஜி மகேந்திரா, மனோரமா, இளவரசி, சத்யகலா, சில்க் ஸ்மிதா எனப் பலரும் நடித்திருந்தனர். வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதியிருந்தார். சின்னச்சின்ன இடங்களிலெல்லாம் ரசிக்க வைக்கும் வசனங்கள் இந்தப் படத்தை அழகாக்கின.

வாலி எல்லாப் பாடல்களையும் எழுத ஒரே ஒரு பாடல் தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு என எழுதி இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் கங்கை அமரன். கங்கை அமரன் இசையமைத்த படங்களிலேயே சூப்பர் ஹிட் என இந்தப் படத்தின் பாடல்களை நிச்சயம் சொல்ல முடியும். ஒரு நண்பனின் கதை இது பாடலாகட்டும் நண்பனே எனது உயிர் நண்பனே பாட்டாகட்டும். சினேகத்தை விதந்தோதும் பாடல்களின் பேரகராதியில் நிச்சயம் இடம்பெறும் நல்ல பாடல்கள். இந்தப் படத்தில் கமல் மாதவி இணைந்து தோன்றும் இரண்டு டூயட் பாடல்களை வாணி ஜெயராமும் பாலசுப்ரமணியமும் பாடினர். வா வா என் வீணையே எனும் பாட்டும் அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் பாட்டும வரலாற்றில் நின்று ஒலிப்பவை. மாதவிக்கு இந்த படத்தில் குரல் கொடுத்தவர் கமலா காமேஷாக இருக்குமோ என்பது என் ஐயம்.

மலையாளத்தில் சினேகபந்தம் என்று டப்பிங் செய்யப் பட்டது. தமிழில் நல்ல வெற்றியைப் பெற்ற சட்டம். எண்பதுகளின் கொண்டாட்ட சினிமா வரிசையில் சோர்வளிக்காத நல்ல படம். பாடல் வசனம் கதை நகர்தல் என எல்லாமும் மின்னினாலும் ஒய் ஜி மகேந்திரா மனோரமா பங்குபெற்ற படத்தின் நகைச்சுவைப் பகுதி சுத்தமாக எடுபடாமல் போயிற்று. ஒரு சீனில் ஒய் ஜீ மகேந்திரா கமல் மீது பட வேண்டிய தோட்டாவைத் தன் உடலால் தாங்குவார். ஏதோ கதையில் அந்தப் பாத்திரத்தின் தோன்றலுக்கு ஒரு நியாயம் கிடைத்திருக்கும்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ரகளையாக இருக்கும். இங்கே மட்டுமல்ல. இந்தியிலும் அப்படித் தான். என்ன கொஞ்சம் இந்தியைக் காட்டிலும் இங்கே அதகளம் கொஞ்சம் தூக்கல் என்பது புல்லரிக்க வைக்கும் உண்மை.

ஜெய்சங்கர் மெயின் வில்லன் அவருடைய சைடு வில்லன் விஜயகுமார். ஜெய் மற்றும் விஜய் இருவரும் கமலும் சரத்பாபுவும் நட்பாக இருக்கக் கூடாது என்று நெடு நாட்கள் திட்டமிட்டு ஒரு வழியாக அதில் வெற்றி அடைவார்கள். கடைசியில் மீண்டும் கமல் நல்லவர் என்பது புரிந்து சரத்பாபு கண்கலங்கி ரெண்டு பேரும் மனம் உருக ஃபோனில் பேசிக் கொள்வார்கள். அப்போது அங்கே வந்து ஜெய் மற்றும் விஜய்குமார் கோஷ்டி மிஸ்டர் ரவி ஃபோனை வச்சிட்டு வாங்க என்று அழைப்பார். அடுத்த சீனில் அவர் வீட்டிலேயே சரத்பாபுவையும் மாதவியையும் கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள்.

Sattam (1983)

ஜெய்யானவர் சரத்பாபுவிடம் என்ன பிரபல கிரிமினல் லாயர் ரவி அவர்களே, சௌக்கியமா இருக்கீங்களா? என்பார் புகை சூழ. அதற்கு எதுவுமே சொல்ல மாட்டார் சரத்பாபு.

அரசாங்கக் கோர்ட்ல அந்த ராஜாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திட்டீங்க ஆனா அதுக்கு எங்க கோர்ட்ல நீங்க பதில் சொல்லியே ஆகணும்” என்பார்.
அதற்கு சரத்பாபு சம்மந்தமே இல்லாமல் “உனக்கு என்ன பாயிண்ட் வேணுமோ அதை மட்டும் கேளு” என்பார் விறைப்பாக. இப்ப நான் கேட்டதே அந்தப் பாயிண்டைத் தானே என்று கேட்பதற்குப் பதிலாக ஜெய் “ஓ பாயிண்டுக்கு வர்ரீங்களா…வக்கீலாச்சே அதான் பாயிண்டுலயே நிக்கிறீங்க” என்று மேலும் சம்மந்தம் இல்லாமல் பேசி விட்டு அவரை ஓங்கி அறைவார். அடுத்து ஜெய் சொல்வது வெறும் வசனம் அல்ல. ஜோசியம். “ஓஹ்….உச்ச்ச்ச்..! அய்யோ பாவம்..அதுக்குள்ளே ரத்தம் வந்திடுச்சே…ஆஹ் {என்று சிரித்து விட்டு} இன்னும் எவ்ளவு கதை பாக்கி இருக்கு” என்று எங்கோ திரும்பி சுருட்டுப் புகையை ஊதுவார்.

அதற்கு சரத்பாபு “ரமேஷ்… ராதா என்ன தப்பு பண்ணினா அவளைப் போகவிடு” என்று மாதவியைக் காட்டி ஜாமீன் கேட்பார். அதற்கு உடனே ஜெய்யெனப்பட்ட வில்லர் சரத்பாபுவை மறுக்கா ஒரு தபா ஓங்கிக் கன்னத்தில் அறைந்து “அட அறிவு கெட்ட முண்டம், இவளை விட்டா நேரா போலீஸ் ஸ்டேஷன் போவா, அப்புறம் அந்த ராஜாகிட்ட சொல்லுவா. அதுக்கப்புறம் அந்தப் பய இங்க வருவான்” என்பார் வெள்ளந்தியாக. சரத்பாபுவோடு ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததே அந்த ராஜா தான் என்பதை அறியாத ஜெய். “அதுக்கு அவசியம் இல்லடா” என்று நேரே அந்த வீட்டின் மாடிக்கு வந்து சேர்வார் ராஜாவாகிய கமல். உடனே “ராஜா” என்று ஹஸ்கி வாய்ஸில் அக்னாலெட்ஜ் செய்வார் மாதவி. சரத்பாபு பெரிய புன்னகையோடு “சபாஷ்” என்பார் என்னவோ அங்கே வந்து சேர்ந்ததே சாதனை என்ற முஸ்தீபில். அடுத்த சில நிமிடங்களில் தன் ஆட்களை வைத்து அவரை அடித்து நொறுக்கி “டேய் இவனையும் பிடிச்சி கட்டுங்கடா” என்பார் மீண்டும் ஜெயி(த்த)சங்கர்.

Sattam (1983) - IMDb

கட்டிய பிறகு ஸ்டைலாக கமல் முன் நின்று கொண்டு“வெல்கம் இன்ஸ்பெக்டர் ராஜா, நான் நினைச்சா இப்பவே உன்னை சுட்டுப் பொசுக்கிட முடியும். நீ எங்களுக்கு எவ்வளவோ கெடுதல் பண்ணியிருக்க அதுனால உன்னை அணுஅணுவா சித்திரவதை பண்ணி தான் சாகடிக்கப் போறேன். இப்போதைக்கி ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு. என் கூட்டத்தைப் பத்தி உனக்கு அப்பப்ப தகவல் சொல்லிட்டிருந்த இன்ஃபார்மர் யாரு” என்பார். உடனே விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “என் உயிரே போனாலும் அதை மட்டும் சொல்லமாட்டேன்” என்பார் கமல். உடனே துப்பாக்கியை எக்சேஞ்சு பண்ணிக்கொண்டு ஒரு சிவப்பு நிற சாட்டையைக் கையில் பற்றிக் கொண்டு கமலுக்கு ஒரு அடி அப்புறம் சரத்பாபுவுக்கு ஒரு அடி என்று வாரி வழங்கி விட்டு மூன்றாவதாக கட்டிப் போடப்பட்டிருக்கும் மாதவியிடம் வந்து “ஹாய் டியர்” என்று ஒரு சிரிப்பு சிரித்து “உன்ன நான் அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்” என மீண்டும் கமல் இடமே வந்துவிடுவார். ஒருமுறை இருமுறை அல்ல கிட்டத்தட்ட பத்து முறை சாட்டையால் அடிப்பார் “சொல்ல போறியா இல்லையா” என்று கேட்டு அடித்துவிட்டு ஒரு பிரேக் விடுவார் வேறு ஏதோ பேச போகிறார் என்று பார்த்தால் மறுபடியும் அந்த கொஸ்டின் இருக்கிறதல்லவா அதையே முழுக்க கேட்பார். “மரியாதையா அந்த இன்பார்மர் யாருன்னு சொல்ல போறியா இல்லையா?” என்பார் எதற்கும் பிடி கொடுக்காத வடிவேலுவிடம் சங்கிலி முருகன் கேள்வி கேட்பாரே அந்த பஞ்சாயத்து சீன் அதற்கு முன்னோடி சீன் இதுவாகத்தான் இருக்க வேண்டும். சைடில் திரும்பி விஜயகுமாரிடம் “ஏப்பா நான் சரியா பேசுறனா?” என்று கேட்காதது தான் குறை.

இப்போது கமலுக்கு முன்பக்கம் வந்து நின்று கொள்வார் முதுகில் அடிப்பதற்கு பதிலாக முன்பக்கம் 12 முறை அடிப்பார். வாயில் மென்று கொண்டிருக்கும் சூயிங்கத்தை விடாமல் மென்று மேலும் கீழும் உக்கிரமாக பார்த்து அந்த எரிச்சலை உள்வாங்கிக் கொள்வார் கமல். அடி பொறுக்க முடியாமல் ராதாவாகிய மாதவி கத்துவார் “ஸ்டாப் இட் அது யாருன்னு சொல்லிருங்க ராஜா” என்று கமலிடம் கேட்பார் மாதவி தன் டீமில் சேர்ந்ததை ரொம்பவே ரசித்து விட்டு “ஆமாண்டா ராஜா சொல்லுடா ராஜா” என்று நக்கலாய் அதை வழி மொழிவார் ஜெய்சங்கவில்லர். இப்போது சூயிங்கத்தை அவர்மேல் துப்புவார் ராஜ்கமல் ஆனால் அது அவர் மேல் படாது. மீண்டும் கோபத்தோடு அதை மெல்ல தொடங்குவார் கமல் இப்போது சவுக்கை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு “நீ இந்த அடியை தாங்கலாம், உன் காதலி ராதாவுக்கு பட்டு மேனி அவளால் தாங்க முடியாது” என்று மாதவியிடம் {ஏற்கனவே கொடுத்த வாக்கை காப்பாற்றுகிற மன திருப்தியோடு வந்து} அவரை அடிக்க ஆரம்பிப்பார்

ஜெய்சங்கரின் அடிகளை கமல்,சரத்பாபு மற்றும் மாதவி ஆகிய மூவருமே தாங்கிக்கொண்டு அந்த உண்மையை கமல் சொல்லாமல் தொடர்ந்து தாக்கு பிடிப்பதை கண்ணுற்று “ரொம்ப நேரம் ஆகுது இனிமே பொறுத்துக்க முடியாது” என்று சம்பந்தப்பட்ட அந்த இன்பார்மர் சத்யகலா அவரே வந்து “நான் தான் அந்த இன்பார்மர்” என்ற ஆஜராவார். அதுவரை விதவிதமாக சிரித்து சிரித்து எல்லோரையும் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கும் ஜெய்சங்கர் இந்த உண்மையை தாங்கமுடியாமல் “கேத்தரின் வாட் இஸ் திஸ்” என்று கேட்டு முகம் கோணி மூச்சு வாங்குவார். உடனே கேத்தரின் தான் ஏன் இன்பார்மர் ஆனேன் என்கிற காரணத்தை சொல்லி முடித்து “நான்தான் அந்த இன்பார்மர்” என்பார். உடனே ஜெய்சங்கர் “அது நீதானா?” என்று கேட்க வேறு செய்வார். சுதாரித்துக் கொள்ளும் ஜெய் நிலைமையை சமாளிக்க அழகாக முகத்தை வைத்துக்கொண்டு “கேத்தரின் உனக்கே தெரியும் உன்ன மாதிரி எத்தனையோ பொண்ணுங்க என் பாக்கெட்ல இருக்காங்கன்னு” என்று சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து அதிலிருக்கும் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் அப்படியே கேத்தரின் மீது சுடுவார்.
No description available.

ஒருவழியாக படம் கிளைமாக்ஸ் நோக்கி போகும் வண்ணம் அங்கே ஒரு நெடிய சண்டைக்காட்சி இடம்பெறும். கமல் மற்றும் சரத்பாபு இருவரும் மாறி மாறி ஜெய் மற்றும் விஜய்குமார் ஆகியோருடன் மோதி முடிக்கும் போது கமலையும் சரத்பாபுவையும் தங்கள் டீம் மெம்பர்ஸிடம் ஒப்படைத்து விட்டு ஒரு டயலாக் அடிப்பார் ஜெய். அந்த வீட்டை வெளியில் பூட்டி தாழிட்டுக் கொண்டே ” இனிமே இந்த ஊர்ல இருக்கிறது ஆபத்து. நாம உடனே ஏர்போர்ட் போயி நம்மளோட சொந்த ஃப்ளைட்ல ஏறி தப்பிச்சிடலாம்” என்று கிளம்புவார்கள். அங்கே குறுக்கே வரும் டோனி என்கிற இன்பார்மர் என்கிற பாலாஜியை படத்தின் தயாரிப்பாளர் என்று கூட கருணை காட்டாமல் அதே தன் கோட்டுப் பையில் ஒளிந்திருக்கும் துப்பாக்கியை வைத்து சுட்டுவிட்டு ஓடிப் போவார் ஜெய்சங்கர். கூடவே போவார் ஜானி ஆகிய விஜயகுமார். கதவை உடைத்துக் கொண்டு வெளியே வரும் கமல் சரத் இருவரிடமும் நாலைந்து சத்தியங்களை வாங்கிக்கொண்டு தன் காதுபட கிடைத்த தகவலான ஜெய் விஜய் இருவரும் தப்பித்துப் போகும் இன்பர்மேஷனை சொல்லிவிட்டு “மிச்சத்தை நீங்களே எப்படியாச்சும் கம்ப்ளீட் பண்ணிருங்க” என்று சொல்லாமல் சொல்லி செத்துப் போவார் டோனியாகிய பாலாஜி. அவரை டானி டானி என்று நாலஞ்சு தபா கூப்பிட்டுப் பார்ப்பார் கமல். பிறகு நேரமாச்சி எனக் கிளம்பி அவர் சொன்ன அந்த ஏர்போர்ட்டுக்கு காரில் போவார்கள் இருவரும்.

No description available.

அங்கு ஏற்கனவே ஒரு குட்டியூண்டு glider type விமானத்தில் சாய்ந்து நின்று கொண்டு இந்த பக்கம் போலாமா அல்லது அந்தப் பக்கம் போகலாமா என்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் ஜெய் மற்றும் விஜய் ஆகிய வில்லன்கள் “ஐயையோ அங்க பார் ராஜாவும் ரவியும் வராங்க” என்று அப்போதுதான் ஓடிப்போய் உள்ளே கார் செட் போல ஓரிடத்திலிருந்து ஒரு தக்ளியூண்டு பொம்மை ஏரோபிளேனில் ஏறி அதை ரன்வேயில் {ரன்வே என்று அங்கு எதுவும் இருக்காது ஆகவே} அதை சாலையில் ஒரு கார் போல வேகமாக ஓட்ட ஆரம்பிப்பார். பக்கத்திலேயே சாவியோடு இருக்கும் ஒரு ஹெலிகாப்டரில் சரத்பாபு ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து உடனே பறக்க ஆரம்பிக்க நானும் வரேன் என்று ஓடிப்போய் அதன் கம்பியில் தொற்றிக் கொள்வார் கமல். இப்போதும் அந்தப் ப்ளேன் மேலே ஏறியிருக்காது. அதை முடிந்த மட்டிலும் அப்பாவியாக ரோட்டிலேயே ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருப்பார் ஜெய்சங்கர். ஹெலிகாப்டரில் இருந்து வழியில் தென்பட்ட ஜீப்பின் மீது குதித்து {அதிலும் சாவி இருக்கும்} அந்த வண்டியை எடுத்துக்கொண்டு துரத்திக் கொண்டு போவார் கமல்.

விடாமல் வானத்தில் சரத்பாபு பூமியில் கமலஹாசனும் தங்களை துரத்தி வருவது தெரிந்து இரண்டு பேரும் பேசிக் கொள்வார்கள். என்னடா இது சொந்த ப்ளைட்டு கெளம்பி பறக்க மாட்டேங்குது. அவனும் இவனும் கைக்கு சிக்குன எலிகாப்டரையும ஜீப்பையும் அஸால்டா எடுத்து ஓட்டிட்டிருக்கானுங்களே என்று அங்கலாய்க்கும் வண்ணம் ” என்ன செய்றது என்ன பண்ணாலும் இந்த ஏரோபிளேன் டேக் ஆஃப் பண்ண முடியலையே” என்பார் ஜெயபரிதாப வில்லசங்கர் உடனே விஜயரொம்பப் பாவகுமார் “ஏதாச்சும் டிரை பண்ணு” என்பார். ஒரே ஒரு அடி கூட வானத்தில் பறக்காமல் அந்த சொந்த ஏரோபிளேனை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு இரண்டு பேரும் அதில் இருந்து குதிப்பார்கள் ஜெய்சங்கர் புல்லில் குதிக்க விஜயகுமார் ரோட்டில் குதிப்பார் உடனேயே அவர் கால் முட்டி உடைந்து விடும் “என்னால ஓட முடியாது” என்று ஜெய்சங்கரிடம் சொல்ல உடனே டோனியைப் போலவே ஜானியையும் அதாவது விஜயகுமாரையும் தன் கோட்டுப் பை டுபாக்கியால் டுமீல் என சுட்டு கருணைக் கொலை செய்து விட்டு இன்னும் தன்னைத் துரத்தும் எலிகாப்டர் பாபு மற்றும் ஜீப் ஹாஸன் இருவரிடமிருந்தும் தப்புவதற்காக “நானே விமானம். எனக்கேன் விமானம்” என்கிற அறிவியல் விபரீத ஆராய்ச்சி முடிவெடுத்தவராய் ரன்வேயில் திப்புறி திப்புறி என ஓட ஆரம்பிப்பார். உடனே ஜீப்பை நிறுத்தி விட்டுத் தானும் ஓடி வந்து அவரைப் பிடித்து விடும் கமலஹாசனை சுடமுயன்று அவர் தோட்டாவுக்கு பலியாவதோடு ஜெய்சங்கரின் கிளம்பாத ப்ளேன் வீரதீர ரன்வே வாழ்க்கை முடிவுக்கு வரும்.

கடைசி வரைக்கும் ஏறிப் பறக்காத ஒரு டுபாக்கூர் வஸ்துவை விமானம் என்று நம்பி ஏமாந்து போகும் ஜெய்சங்கர் மீது படம் பார்ப்பவர்களுக்குப் பரிதாபம் குமுறும்.