சபாட்டினி


குமரன் சிறுபிள்ளையாக கோமதியாபுரத்துக்கு வந்தவன். உற்றார் உறவென்று யாருமில்லை. பார்க்கிற யாரையுமே ஏதாவது உறவு சொல்லிக் கூப்பிட்டே வளர்ந்தான். இந்தப் பதினாலு வருடங்களில் அவனுக்கென்று அங்கே அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா தாத்தா உட்படப் பலரும் கிடைத்திருக்கிறார்கள். உற்ற நண்பன் சபரி. இவனின்றி அவனில்லை.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜகநாதன் வீடு கட்டும் போதே பக்கவாட்டில் பத்து செண்டு இடத்தில் டென்னிஸ் கோர்ட் ஒன்றை அமைத்துக் கொண்டார். அவர் வீட்டில் எல்லாருமே பிரமாதமாக டென்னிஸ் ஆடுவார்கள். அதுவரை கிரிக்கெட் அல்லது கால்பந்து என்றிருந்த கோமதியாபுரத்தின் பார்வை டென்னிஸ் பக்கம் சென்றது அப்போது தான். தென்னந்தோப்பு வைத்திருக்கும் மணிசாமியின் மூத்த மகன் கண்ணன் படித்து விட்டு ஊரின் பெரும் சி.ஆர்.வி ஸ்கூலில் பிடி வாத்தியாரானார். ஊரில் பலரும் டென்னிஸ் மீது ஆர்வமானார்கள். உடற்பயிற்சி கலந்த ஆட்டம் என்பதால் பலரும் மட்டையும் கையுமாய்த் திரியத் தொடங்கினர்.

துபாய் மனோகரன் ஸ்போர்ட்ஸ் கடை ஒன்றை ஆரம்பித்து இங்கேயே ஸெட்டில் ஆனார். அந்தக் கடையின் முகப்பில் மாபெரும் போர்ட் ஒன்று வைக்கப் பட்டது. ஜப்பான் ஸ்போர்ட்ஸ் என்ற பெயர் நியானில் ஒளிர்ந்தது. போர்டின் வலப்புறம்  உலகக் கோப்பையைக் கையில் உயர்த்தியபடி கபில்தேவின் உருவப்படம் மிளிர்ந்தது. இடது புறம்  கையில் டென்னிஸ் மட்டையுடன் நெற்றியில் திரளும் நிறமிலி நீர் முத்துக்களுடன், சற்றே வெளிறிய உதடுகளும், போரின் இறுதி நாள் வெம்மையைத் தன் கண்களில் தேக்கினபடி  அந்த டென்னிஸ் வீராங்கனையின் படம், பார்த்த மத்திரத்தில் குமரனுக்குள் ஒரு ஜென்மாந்திர சமரசத்தை ஏற்படுத்தியது. விடுவிடுவென்று கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், ஓனர் மனோகரனிடம், “சித்தப்பா, கடை போர்டுல  யாரு?” என்று கேட்டான். சட்டென்று அவர், “கபில் தேவ்” என்றார். நெற்றியைச் சுருக்கிய குமரன், “தானைத் தலைவன எங்களுக்குத் தெரியாம இருக்குமா? இந்தப் பக்கம் யாரு?” என்றான் அதட்டும் குரலில். “சபாட்டினி, கப்ரில்லா சபாட்டினி” என்றார் மனோ.

அப்படித்தான் சபாட்டினி சுந்தர் நகருக்கு வந்து குமரனின் வாழ்வில் புகுந்தாள்.அந்தப் பேர் தனக்கு மறந்து விடக் கூடாது என்பதற்காக சபாட்டினி சபாட்டினி என்று பல தடவை உச்சாடனம் மாதிரி சொல்லிப் பார்த்துக் கொண்டே இருந்தான். இனி மறக்காது என்று நன்றாகத் தோன்றிய பிறகே சொல்வதை நிறுத்தினான்.

கிடைத்த இடத்திலெல்லாம் வேலை என்ற பேரில் சுற்றித் திரிந்தவன் ராஜலட்சுமி மில்லில் தினக்கூலியாய் சேர்ந்து பத்து வருட சர்வீசை முடித்து பர்மனண்டு வேலைக்காரனாக மாறியிருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நஸீர் பாய் மெகானிக் கடைக்கு வந்து அமர்ந்து கொள்வதை விடவே இல்லை. சுற்றுப்பட்டு பதினெட்டு சிட்டிக்கும் பஞ்சர் என்றால் நம்ம கடைதான் ஒரே கதி என்பான் சபரி. நஸீர் பாயின் தளபதி. சபரியின் அப்பா நஸீர் பாயின் தோஸ்த். நண்பனின் மறைவுக்குப் பிறகு சபரிக்கு வேலை தந்து அரவணைத்துக் கொண்டவர் பாய் தான்.
கோமதியாபுரத்தில் நாலாவது அல்லது ஐந்தாவது டெலிபோன் கனெக்சன் நஸீர் பாய் கடையில் தான் இருக்கிறது. ஃபோன் என்ற சமாச்சாரத்துக்காகவே சபரியைக் கூட அந்த ஏரியாவில் யாரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். எங்கிருந்து ஃபோன் அழைப்பு வந்தாலும் பொறுப்பாக அவர்களிடம் தகவல் சொல்லி விடுவார் நஸீர் பாய். ஆனால் தன் போனிலிருந்து யாரையும் கால் செய்ய விடவே மாட்டார். அவரைப் பொறுத்த மட்டிலும் தங்கம் வைரம் இவற்றுக்கு நடுவே ஃபோன் கால் என்று மனம் கொண்டிருந்தார்.

ஃபோனைப் பூட்டுப் போட்டு பத்திரம் செய்து விட்டுத் தான் எங்கே சென்றாலும் செல்வார்.அவர் இல்லாத நேரங்களில் அதைத் தொட்டெடுக்கும் தகுதி படைத்த ஒரே ஒருவன் மிஸ்டர் சபரி. அலோ நிலா மோட்டார்ஸ் நாப்பத்தேழு நாப்பது முப்பத்திரெண்டு என்பான். அந்த நம்பரை சொல்லி முடிக்கும் வரை எதிராளி காத்திருந்தே ஆகவேண்டும். இஷ்டமில்லாட்டி வச்சிட்டு போவட்டும் என்பான் தெனாவட்டாக.

ஒருமுறை சபரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போன் அடித்தது. எடேண்டா என்று அலுப்பாக சொன்னான் சபரி. லேசாய்க் கை நடுங்க எடுத்த குமரன் என்ன நினைத்தானோ சபாட்டினி என்றான். எதிர்முனையில் நஸீர் அண்ணன் கரண்டு பில் கட்ட கடைசி நாள் என நினைவு படுத்தி விட்டு வைத்தார். சாப்பிட்ட கையோடு ஈபி ஆபீசுக்கு அட்டை பணம் சகிதம் விரைந்தார்கள் இருவரும். அன்று சாயங்காலம் நஸீர் அண்ணன் வந்ததும் எலேய் ஃபோனை எடுத்ததும் என்னலே சபாட்டினின்னு சொன்ன என்றார் குமரைப் பார்த்து. அவுட்டுச் சிரிப்போடு சபாட்டினி சபாட்டினி என ஓட்ட ஆரம்பித்த சபரி வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியபடியே இருக்க ஒரு கட்டத்தில் சபாட்டினி என்பதே அவன் பேராக மாறியது.

ரஜினி மன்றம் கமல் மன்றமெல்லாம் இணைந்து ஊர்த் திருவிழாவின் போது நீர்மோர்ப் பந்தல் அமைப்பார்கள். எல்லா நடிகர்கள் படமும் போட்டு ஃப்ளெக்ஸ் என்ன பேனர் என்ன போஸ்டர் என்ன என அமர்க்களப்படும். அதில் நண்பர்கள் அன்புக்குழு என்று வரிசையாக எல்லார் பேரும் போடும் போது கூட சபரி என்ற பேருக்கடுத்து சபாட்டினி என்றே எழுதினார்கள். அவனுக்கே குமரன் என்ற பேர் சன்னமாய் மறக்கத் தொடங்கிற்று.

சபரியின் அக்கா கணவர் நான்கு வழிச்சாலையில் பராக்குப் பார்த்துக் கொண்டே கிராஸ் செய்த போது மண்லாரி அடித்துப் போனது. இருபத்தி மூன்று நாட்கள் பெரியாஸ்பத்திரியிலும் பிறகு தனியார் எலும்பு ஆஸ்பத்திரியிலும் அடுத்தடுத்து சேர்த்து தீவிரமாய் சிகிச்சைக்கப்பால் பிழைத்து வந்தார். சபரி அதற்கு முன்பிருந்த அத்தனை விடலைத் தனமும் வற்றிப் போய் என்னடா காசு இப்பிடிப் பறக்குது என்று அலுத்துக் கொண்டான். அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தவனிடம் இந்தா மாப்ள இந்த ரூவாயை வச்சிக்க என்று கையில் துணிப்பையை வைத்து அழுத்தினான் குமரன். தேங்க்ஸ்டா மாப்ள…சீட்டு கட்டிட்டு இருக்கேன் விழுந்ததும் அடைச்சிர்றேன் என்றவனால் அப்படி ஒரே கொத்தில் அடைக்க முடியவில்லை. அடுத்த ஒரு வருடம் சிறுகச் சிறுகத் தந்து அடைத்தான். பணம் வெறும் பேப்பர்டா என்ற சபாட்டினியிடம் “நீ ஒருத்தன் தான் இப்பிடி சொல்வே. உலகம் மாசமானா   வட்டிக்கித் தேடும் தெரியும்ல” என்றான். அத்தனை கஷ்டத்திலும் குமரா என்று அழைக்க மாட்டான். சபாட்டினி என்பது தான் அவனுக்கான பெயர் என்று தீர்மானமே செய்திருந்தவன் மூச்சுக்கு மூச்சு சபாட்டினி என்று தான் அழைத்தான்.

ராஜலட்சுமி மில்ஸ் மற்றொரு வளர்ச்சியாக ஊருக்கு வெளியே ஒரு யூனிட்டை ஆரம்பித்தது. அங்கே சீனியர் ஃபிட்டராக பதவி உசந்து சம்பளமும் கூடியது குமரனுக்கு. விடுறா சபாட்டினி. வாரம் ஒரு நா லீவு உண்டில்லை…அன்னிக்கு பார்த்துகிறது என்று ஆறுதல் சொன்னானே ஒழிய இயல்பாகவே சபரி உள்ளிட்டவர்களை அடிக்கடி சந்திக்க முடியாமற் போனது. கிடைத்த சந்தர்ப்பங்களில் விட்ட இடத்திலிருந்து பேசிக் கொண்டார்கள். முந்தியெல்லாம் எப்பிடித் திரிஞ்சம் என்று எண்ணும் போது கண் கலங்கிற்று சபாட்டினிக்கு.

இப்போது கூட இரண்டு மாசங்களாக சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்ற அங்கலாய்ப்புக்கு அப்பால் இன்றைக்கு சந்தித்தே தீர்வது என்று சபரியைத் தேடி வந்தான். வாடா எங்கிட்டாச்சும் போயிட்டு வருவம் என்றது மறுப்பேதும் இல்லாமல் கைக்கு சிக்கிய வண்டியை எடுத்து குமரனைப் பின்னால் ஏற்றிக் கொண்டு “ட்ரையல் போயிட்டு வரேன்” எனத் தன் அசிஸ்டெண்ட் பாலாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் சபரி.

“எல்லாம் தரும் பிள்ளையார்” கோவில் சைடு சுவருக்கு வெள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள்.  திருவிழாவுக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன. நாகு கடைக்குப் பக்கத்தில் முத்து ஸ்கூலின் விளையாட்டுத் திடல் இருந்தது. அங்கே பசங்கள் விளையாடுவதால் அந்தப் பெயர், மற்றபடிக்கு அது ஒரு வெற்று வெளிதான். அதன் மேற்குப் புற மூலையில் ஒரு மொட்டை மரம் உண்டு. மரம் என்றால் கிளைகள் மாத்திரம்தான், துளியும் இலைகள் இல்லை. ஆனாலும் அந்த விஸ்தாரத்தின் நிழல் அதன் அடியில் அமர்ந்து திரும்பப் போதுமானதாக இருந்தது. பைக்கை வாகான இடம் பார்த்து நிறுத்தினான் சபரி. “வாடா” என்று மண்ணுக்குள் வேர் பாய்ந்திருந்த அந்த மரத்தடியில் அமர்ந்தான். சற்றுத் தள்ளினாற் போல், யாரோ எதையோ சமைப்பதற்கு வைத்திருந்த மூன்றில் ஒரு கல்லில் வாகாக அமர்ந்துகொண்ட சபாட்டினி அவனைப் பார்த்து சோகையாகச் சிரித்தான்.

ரஜினி, கமல், ஜெண்டில்மேன் படம், பிரபுதேவாவின் டான்ஸ், என எதையெதையோ பேசிவிட்டு, மறுபடியும் ஒரு மௌனத்தில் சற்று நேரம் நின்றார்கள். தன் பாண்ட் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தான் சபாட்டினி. அவன் நீட்டியதைப் பெற்றுக்கொண்ட சபரிக்கும் அவனே பற்றவைத்தான். (சட்டப்பூர்வமான எச்சரிக்கை: புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது, புகைப்பழக்கம் உயிரைக் கொல்லும்).

“சொல்றா, என்ன ஒரு மாதிரி இருக்கே?” என்று லீடு கொடுத்த சபரியிடம், “இல்ல மாப்ள, முனியாண்டி விலாஸுக்குப் பக்கத்துல இருக்கற லதா ஃபேன்ஸி ஸ்டோரு, அதுல ரெண்டு மாசமா பெருமாள்புரத்திலருந்து ஒரு பொண்ணு வேலைக்கு வருது, பாத்திருக்கியா? அது பேரு தேனு” என்றான் சபாட்டினி. புகையை எங்கோ வளையம் விட்டபடி, “ஆமா, தேன்மொழி, அதுக்கென்ன இப்ப?” என்றான். “இல்ல சபரி, பாத்தா பாக்குது, பேசுனா பேசுது, அந்தப் பிள்ளய எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குடா, அது எனக்குக் கெடச்சா என் வாழ்க்கை முழுசாயிரும்னு தோணுது. அதப் பாத்தாலே ஒரு மாதிரி சூடாயிடறேன், பேசுறதுக்கு நாக்கு வரமாட்டேங்குது, நிலா மோட்டார்ஸ் போன் நம்பரை அதுகிட்ட தந்து பேச சொல்லிருக்கேன். நாளைக்கு எனக்கு வார லீவு தான். பேசிச்சின்னா என்னையப் பிடிச்சிருக்கான்னு நேரா கேட்டுறலாம்னு இருக்கேன். என்ன சொல்றே..? என்று சபரியின் பதிலுக்கு எதிர்பார்த்தான்.

தன் கையிலிருந்த சிகரெட்டை சுண்டிவிட்டு எழுந்துகொண்டான் சபரி.  இவனும் எழுந்து நிற்க, அவன் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று அவன் கன்னத்தில் அறைந்த  சபரி. “மாப்ளன்னு ஒரு பேச்சுக்குக் கூப்பிட்டா மாப்ளயாகலாம்னு பார்க்குறியாடா குமரா? நாங்க என்ன ஆளுக, நீ என்ன ஆளுக? இந்த வேலையே வச்சுக்கிடாத.புரியுதா” என்று நடந்து போய் தன் வண்டியைச் சமீபித்து, அதில் ஏறிக் கிளம்பிப் போனான் சபரி.


குமுதத்தில் வெளியானது