சாலச்சுகம் 12

 

கனவுக்குத் தெரியாத முத்தம்


வயலட் என்பது நிறமல்ல
மழை என்பது நீர்மமல்ல
கார் இருக்க ஸ்கூட்டி
கவர்ந்து கிளம்புகையில்
ஜில்ரேய்ய்ய்ய்ய்ய்
என்று கூவுவதொன்றும்
அர்த்தமற்ற சொல்லாடல்
அல்லவே அல்ல
இரவின் நடுவில்
மழையின் பொழுதில்
ஒற்றை ஐஸ்க்ரீமை
அப்படியே
மொத்தமாய்
உதடுகளுக்குள்
இட்டபிற்பாடு
சொல்லேதுமற்ற
பேச்சுவார்த்தை
ஒன்றை நிகழ்த்தியபடியே
பாதிப் பனிக்கூழைப்
பெற்றுக் கொள்வதென்பது
ஆகச்சிறந்த ஆட்டங்களைவிட
எளிதானதல்ல
காதோர நரைக்குக் கண்மை கொண்டு
கருப்பெழுதிக்
கைவிரல்களில்
கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதைக்
கழுவுவதற்கான
நீரைக்
குழாயிலிருந்தல்ல
மழையிலிருந்து
மாத்திரமே
சேகரித்துக் கொள்ள வேண்டும்
என்பதொன்றும்
செயல்படுத்த முடியாத மந்திரமல்ல
முத்தத்திலிருந்து தொடங்கி
முத்தத்தில் முடித்த பிற்பாடு
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிற உன்
கனவுக்குத் தெரியாதபடி
நெற்றியோரத்தில்
தருகிற ஈரநிசப்த முத்தம்
கணக்கிலேறுவதல்ல
காதல் என்பதெது
ப்ராயம் மறந்து
காது கடிக்கும்
நாய்க்குட்டி.
போலவொரு
ஈரம்
சாலச்சுகம்